டி.வி-யில் ஐபிஎல் பார்ப்பவர்களின் எண்ணிக்கை சரிவு: டிஜிட்டல் ஸ்ட்ரீமிங்கின் எழுச்சியா, ரசிகர்கள் சோர்வா?

05:00 PM May 13, 2026 | muthu kumar

ஐபிஎல் 2026 சீசனின் முதல் பாதியில் தொலைக்காட்சி பார்வையாளர்கள் கணிசமாகக் குறைந்துள்ளதாக புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், டிஜிட்டல் தளங்களில் பார்வையாளர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதோடு ஈடுபாடும் அதிகரித்துள்ளது.

BARC India மற்றும் TAM Sports வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த சீசனின் முதல் பாதியில் டிவி ரேட்டிங் 18.8% குறைந்துள்ளது. 2025-ல் 4.57 இருந்த ரேட்டிங், 2026-ல் 3.71 ஆக சரிந்துள்ளது.

சராசரி பார்வையாளர்கள் எண்ணிக்கையும் 26% குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 10.6 மில்லியன் பார்வையாளர்கள் இருந்த நிலையில், இந்த ஆண்டு அது 7.84 மில்லியனாக குறைந்துள்ளது. மேலும், லினியர் டிவி வழியாக ஐபிஎல் சென்றடைந்த மொத்த பார்வையாளர்கள் எண்ணிக்கையும் 123.96 மில்லியனில் இருந்து 113.61 மில்லியனாக குறைந்துள்ளது.

டிஜிட்டல் ஸ்ட்ரீமிங்கின் அதிவேக வளர்ச்சி

டிவி பார்வையாளர்கள் குறைந்தாலும், டிஜிட்டல் தளங்களில் ஐபிஎல் மீது ஈடுபாடு அதிகரித்துள்ளது.

Reliance-Disney இணைப்புக்கு பிறகு ஐபிஎல் ஒளிபரப்பு மற்றும் ஸ்ட்ரீமிங் உரிமையை வைத்துள்ள ஜியோஸ்டார் (JioStar), 2026 சீசன் தொடக்க வார இறுதியில் மட்டும் டிஜிட்டல் ரீச் 515 மில்லியனை எட்டியதாக தெரிவித்துள்ளது. மேலும், மொத்தமாக 32.6 பில்லியன் நிமிடங்கள் பார்வை நேரமாக பதிவாகியுள்ளதாக கூறியுள்ளது.

டெலிவிஷன் மற்றும் டிஜிட்டல் தளங்களை சேர்த்து மொத்த திரை பார்வை 1.06 பில்லியனை கடந்துள்ளதாகவும், இது கடந்த ஆண்டை விட 7% அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளம் தலைமுறை ரசிகர்கள் முழு நான்கு மணி நேர போட்டியை பார்க்காமல், ஹைலைட்ஸ் மற்றும் மொபைல் ஸ்ட்ரீமிங்கை அதிகம் விரும்பத் தொடங்கியுள்ளனர்.

பிராண்ட் மற்றும் வணிக ஆலோசகர் ஹரிஷ் பிஜூர் இதுகுறித்து கூறுகையில்,

“முன்பு போல் முழு போட்டியையும் பார்க்கும் கலாசாரம் இப்போது இல்லை. மக்கள் தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது மட்டும் போட்டியின் சில பகுதிகளை பார்க்கிறார்கள். அந்த வகை பார்வைக்கு மொபைல் மற்றும் டிஜிட்டல் தளங்களே மிகவும் ஏற்றவை,” என்றார்.

Connected TV பயன்பாடும் இந்த சீசனில் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

விளம்பர வருவாயில் தாக்கம்

இந்த சீசனில் ஐபிஎல் ஒளிபரப்புடன் இணைந்துள்ள பிராண்டுகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

2025-ல் 65-க்கும் மேற்பட்ட பிராண்டுகள் இருந்த நிலையில், இந்த ஆண்டு அது சுமார் 45 ஆக குறைந்துள்ளது. மொத்தம் 44 பிராண்டுகள் விலகியுள்ளன; புதிதாக 24 பிராண்டுகள் மட்டுமே இணைந்துள்ளன.

முன்னதாக ஐபிஎல் விளம்பரங்களில் ஆதிக்கம் செலுத்திய Dream11, My11Circle போன்ற ஃபேண்டஸி கேமிங் நிறுவனங்கள் இந்த ஆண்டு இல்லாதது முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறது. இந்திய அரசு ஃபேண்டஸி ஸ்போர்ட்ஸ் செயலிகளை சூதாட்டமாக வகைப்படுத்தி தடை செய்ததால், அவை விளம்பர சந்தையில் இருந்து விலகியுள்ளன.

இதனால், விளம்பர இடங்கள் முழுமையாக நிரம்பவில்லை; குறைந்த மதிப்புள்ள விளம்பர பிரிவுகள் அவற்றை நிரப்புகின்றன. மேலும், ஃபேண்டஸி அணிகளை கண்காணிக்க போட்டிகளை பார்த்த ரசிகர்கள் குறைந்துள்ளனர்

“ஐபிஎல் ஓவர்டோஸ்” ஆகிவிட்டதா?

ஒருகாலத்தில் தனித்துவமான T20 லீக்காக இருந்த ஐபிஎல், தற்போது உலகம் முழுவதும் உருவாகியுள்ள பல லீக்குகளின் நடுவில் உள்ளது.

SA20, Big Bash League, Major League Cricket போன்ற தொடர்கள் காரணமாக ரசிகர்கள் ஆண்டு முழுவதும் T20 கிரிக்கெட்டை பார்க்கிறார்கள். இதுவும் ஐபிஎல் மீதான புதுமை உணர்வை குறைத்திருக்கலாம், என நிபுணர்கள் கருதுகின்றனர்.

மேலும், இந்தியா T20 உலகக்கோப்பையை வென்ற 20 நாட்களுக்குப் பிறகே ஐபிஎல் தொடங்கியது. ரசிகர்களுக்கு இடைவெளி இல்லாததால் “கிரிக்கெட் சோர்வு” ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

74 போட்டிகள், 10 அணிகள், இரண்டு மாத நீளமான அட்டவணை ஆகியவை கூட பார்வையாளர்களை சோர்வடையச் செய்திருக்கலாம்.

அதிக ரன்கள் ‘பிட்ச்’களினால் ரசிகர்கள் சோர்வு?

இந்த சீசனில் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான பிட்ச்கள் அதிகம் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

220 ரன்களுக்கு மேல் அடிப்பது சாதாரணமாக மாறியுள்ளதால், போட்டிகளில் பதற்றமான தருணங்கள் குறைந்துவிட்டதாக சில ரசிகர்கள் கருதுகின்றனர். கடைசி ஓவர் திரில், நெருக்கமான முடிவுகள் போன்றவை குறைந்ததால், பலர் போட்டியை பாதியிலேயே நிறுத்திவிடுகின்றனர். இருப்பினும், டிவி பார்வை குறைவு ஐபிஎலின் மொத்த மதிப்பை பாதிக்கவில்லை.

ஐபிஎல் இன்னும் உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக வருமானம் தரும் T20 லீக்காகவே உள்ளது. மொத்த பார்வை ஒரு பில்லியனை கடந்துள்ளதாக ஜியோஸ்டார் தெரிவித்துள்ளது.

ஹரிஷ் பிஜூர் இது குறித்து கூறுகையில்:

“ஐபிஎல் என்பது மிகப்பெரிய பிராண்ட். மக்கள் அதை பல்வேறு வடிவங்களில் பார்க்கப் போகிறார்கள். மைதான அனுபவம் தனி ஒன்று. டிவி அனுபவம் அதைவிட குறைவு. இறுதியில், மொபைல் வழி தனிப்பட்ட பார்வையே மிக அதிகமாக இருக்கும்,” என்றார்.

2027 வரை நீடிக்கும் தற்போதைய மீடியா உரிமை ஒப்பந்தம் மற்றும் அடுத்த சீசனுக்கான மினி ஏலம் நெருங்கி வரும் நிலையில், பார்வையாளர்களின் பழக்க மாற்றத்தை ஒளிபரப்பாளர்கள் மற்றும் விளம்பரதாரர்கள் மிக நெருக்கமாக கவனித்து வருகின்றனர்.

ஐபிஎலின் எதிர்காலம் டிவியில் அல்ல, டிஜிட்டல் திரைகளில்தான் இருக்கலாம் என்பதே தற்போதைய கணிப்பாக உள்ளது.