புற்றுநோயுடன் சமூக நிராகரிப்பு, பாலினப் பாகுபாடையும் எதிர்த்து போராடும் பெண்கள்!

04:14 PM May 13, 2025 | YS TEAM TAMIL

இந்தியாவில் ஒரு பெண்ணுக்கு புற்றுநோயை கண்டறிதல் என்பது வெறும் உடல்நல சார்ந்த பிரச்சினையை வெளிப்படுத்துவது மட்டுமல்ல. அதன் வெளிப்பாடு உடல்நலம் தாண்டிய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. சமூகத்தால் நிராகரிப்பு, பாலின பாகுபாடு, பொருளாதார ரீதியாகவும் பிரச்சினை, என அவர்களது போராட்டம் நீள்கிறது...

பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் பெண்களது உடல்நலம் குறித்த முன்னுரிமை பின்னுக்கு தள்ளப்படுகிறது. 52 வயதில், முத்தம்மா பழனியும் இதேபோன்ற சூழ்நிலையில் இருந்தார். சேலத்தைச் சேர்ந்த அவர், மாதம் ஒருமுறை திண்டுக்கல்லில் இருக்கும் அவரது இரண்டு மகன்களும் மருமகளும் அனுப்பும் பணத்தைச் சார்ந்து வாழ்ந்து வந்தார்.

அது தவிர, அக்கம்பக்கத்தில் வீட்டு உதவியாளராக வேலை செய்து வாழ்க்கையை நடத்திவந்தார். அனைத்தும் நன்றாகவே சென்றது. அவருடைய 50 வயதில், முத்தம்மாக்கு இரத்த இருமல் வரத் தொடங்கியது. அத்துடனே, நாட்களை கடத்தி வந்தார். பிறகு, பரிசோதனை செய்தபோது அவருக்கு ஸ்டேஜ் 2 நுரையீரல் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.

"எனக்கு பள்ளிக்குச் செல்லும் வயதில் மூன்று பேரக்குழந்தைகள் உள்ளனர். அவர்களை கவனித்து கொண்டு, என் மகன்கள் எனக்கு பணம் அனுப்பிக் கொண்டே இருந்தனர். ஆனால், அதைத் தாண்டி அவர்களிடமிருந்து வேறு எதையும் நான் எதிர்பார்க்க முடியாது என்பது எனக்குத் தெரியும்," என்று முத்தம்மா வேதனைக் குரலில் ஹெர்ஸ்டோரியிடம் பகிர்ந்தார்.

இறுதியாக, அவரது முதலாளிகள் பரிசோதனைகள், கீமோதெரபி மற்றும் சிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்பு ஆகியவற்றில் அவருக்கு உதவ முன்வந்தனர். இருப்பினும், சிகிச்சையின் போது முத்தம்மா பெரும்பாலும் தனிமையில் இருப்பதாக உணர்ந்தார். மருந்து செலவு மற்றும் மருத்துவமனைக்கு சென்றுவரும் போக்குவரத்து செலவுகளை சரிசெய்ய அவர் தொடர்ந்து வேலைக்கு சென்றார்.

"எனக்கு புற்றுநோய் இல்லை என்று அறிவிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆகின்றன. எப்போது வேண்டுமானாலும் அந்நோய் மீண்டும் வரக்கூடும் என்பதை நான் அறிவேன். ஆனால், தனியாக இறக்கும் பயம் என்னை விட்டு விலகவில்லை. இது உலகின் மிகவும் பயங்கரமான உணர்வு," என்றார்.

சிகிச்சையை தாமதப்படுத்தும் சமூக நிரகாரிப்பு குறித்த பயம்...

இந்தியாவில் புற்றுநோய் நோயாளிகள் வழக்கமான பரிசோதனைகள் மற்றும் தடுப்பு பரிசோதனைகளுக்கான குறைந்த அணுகல் அடிப்படையில் சுகாதார சவால்களை எதிர்கொண்டாலும், பெண்கள் கூடுதலாக கடுமையான சமூகத் தடைகள் மற்றும் பொருளாதார கட்டுப்பாடுகளை கடந்து செல்ல வேண்டியிருக்கிறது.

புற்றுநோய் விழிப்புணர்வுயின்மை மற்றும் ஆரம்பகட்டத்திலே நோயை கண்டறியாததே சிக்கலை அதிகரிக்கிறது. மகாராஷ்டிராவின் வார்தா மாவட்டத்தில் உள்ள 1,000 கிராமப்புற பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், பதிலளித்தவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் மார்பகப் புற்றுநோயைப் பற்றி கேள்விப்பட்டதே இல்லை என்றும், கிராமப்புற மற்றும் அரை நகர்ப்புறப் பகுதிகளில் பத்து பெண்களில் ஒருவருக்கும் குறைவானவர்கள் மார்பக சுய பரிசோதனை பற்றி அறிந்திருந்தனர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

"சமூக நிராகரிப்பு குறித்த பயம் காரணமாக பெரும்பாலான பெண்கள் அவர்களது நோயறிதலைப் பகிர்ந்து கொள்ளத் தயங்குகிறார்கள். இதனால், மருத்துவச் சிகிச்சை தாமதமாகிறது. நாங்கள் சந்திக்கும் பெண்களிடையே மார்பக மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்கள் மிகவும் பொதுவானவையாக இருக்கின்றன. ஆனால், அவர்கள் பரிசோதனைகளுக்கு வருவதற்கு மிகவும் பயந்து வெட்கப்படுகிறார்கள்."

மார்பில் ஒரு கட்டியோ அல்லது உடல் வலியோ திடீரென்று ஏற்பட்டு, அவர்கள் நோய் அறிகுறிகளை உணர்ந்தாலும் யாரிடமும் சொல்லமாட்டார்கள். ஏன், அவர்களின் பெற்றோர், கணவர் அல்லது குழந்தைகளிடம்கூட பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். இறுதியாக, அவர்கள் சிகிச்சை பெறத் தொடங்கும் நேரத்தில், புற்றுநோய் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டிவிடுகிறது. மேலும், அக்கட்டத்தில் அவர்களின் குடும்பத்தினரால் அவர்களைப் பராமரிக்க முடியாதநிலையில், அவர்கள் மருத்துவமனையை விட்டு வெளியேறுகிறார்கள், என்று கூறினார் தேன்மொழி மெமோரியல் டிரஸ்டின் நிறுவனர் எம். அருண் குமார்.

சென்னையில் இயங்கும் 'தேன்மொழி மெமோரியல் டிரஸ்ட்' எனும் தொண்டு நிறுவனமானது, இந்தியாவில் பொருளாதாரரீதியாக பின்தங்கிய புற்றுநோய் நோயாளிகளுக்கான நிதி திரட்டுதல், மற்றும் தடுப்பு பரிசோதனை முகாம்கள் மூலம் ஆதரவளித்து வருகிறது. பெண்களுக்கு இலவச பரிசோதனைகளை நடத்துவதற்காக தேன்மொழி டிரஸ்ட் தமிழகம் முழுவதுமுள்ள நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் 'மேமோகிராம் பேருந்தை' இயக்குகிறது. இந்த முயற்சி 1,000க்கும் மேற்பட்ட பெண்களைச் சென்றடைந்துள்ளது, ஆனால், அது ஒரு சாதாரண எண்ணிக்கையே என்று கூறினார் அருண்.

பெண்களை தனிமையில் தள்ளும் புற்றுநோய்...

தேன்மொழி டிரஸ்டுடன் பணிபுரிந்த சில மூத்த பெண்கள், புற்றுநோய் குறித்த ஆழமான தவறான கருத்துக்களால் அவர்களது குடும்பத்தினரால் கைவிடப்பட்டனர். அவர்களில் சில பெண்களின் வீட்டார் புற்றுநோயை தொற்றுநோயாக கருதுகின்றனர். சிலர் உடல் தொடர்பு மூலம் பரவி, சமூக தனிமைப்படுத்தலுக்கு வழிவகுக்கும் என்று நம்பி அஞ்சினர். இதனால், ஒரு குற்றமும் புரியாத அப்பெண்கள் நோயால் பழியை எதிர்கொண்டனர்.

பெண்களின் புற்றுநோய் பயணங்களை மிகவும் தனிமையாக மாற்றும் காரணிகளில் பொருளாதார பாதிப்பும் ஒன்றாகும். புற்றுநோய் சிகிச்சையானது பெரும்பாலும் மருத்துவமனையில் சில நாட்கள் அனுமதிக்கப்பட்டு, பின்னர் கீமோதெரபி சுழற்சிகளை செய்வதன் மூலம் தொடங்குகிறது. இதற்காக, அவர்கள் கிராமங்களிலிருந்து அருகிலுள்ள நகரத்திலுள்ள ஒரு பெரிய அரசு மருத்துவமனைக்கு சில நாட்களுக்கு ஒருமுறை பயணிக்க வேண்டும். வேலைக்கு செல்லும் வீட்டு ஆண்கள் அலுவலகத்தில் விடுப்பு எடுக்க முடியாத நிலையில் சிக்கிக் கொள்ள, அப்பெண்களும் தனியாக பயணம் செய்ய மாட்டார்கள் என்பதாலே பலர் சிகிச்சையை எடுத்து கொள்ள விரும்ப மாட்டார்கள் என்று கூறினார் அருண்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, மேற்கு வங்காளத்தின் ஜல்பைகுரியைச் சேர்ந்த 39 வயதான சிங்கிள் பேரன்ட் துளசி சிங், மும்பையில் உள்ள டாடா மெமோரியல் மருத்துவமனையில் ஸ்டேஜ் 1 மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவமனைக்கு அருகிலுள்ள மானிய விலை விடுதியான காட்ஜ் மகாராஜ் தர்மசாலாவில் அவர் தங்கியிருந்தார்.

அப்பகுதியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஒரு வீட்டில் தங்கி ஒருவருக்கொருவர் உதவி செய்து, அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதைக் கண்டார். ஒரு தவறான திருமணத்தை விட்டு வெளியேறிய பிறகு அவரது வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பத் தொடங்கிய துளசிக்கு, அவர் கண்டறிந்த புதிய "குடும்பம்", 17 மாதங்கள் சிகிச்சை பெற்று வந்தபோது, ​​அவரது குழந்தையின் கல்வி மற்றும் பராமரிப்பு செலவுகளுக்கு உதவியது. தன்னைச் சுற்றியுள்ளவர்களின் போராட்டங்களைக் கவனித்த துளசிசிங், அவர்களுக்கு சத்தான உணவை சமைத்தார், மருந்துகளைப் பெற உதவ தொடங்கினார்.

"மருத்துவமனையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவளிக்கும் போது, மக்கள் இறப்பதை பார்த்திருக்கிறேன். பயந்து அல்லது தற்கொலை செய்து கொள்ளும் பெண்களை காண்கிறேன். ஏனென்றால், புற்றுநோய் எங்களை போன்ற பெண்களை தனிமைப்படுத்துகிறது. அவர்கள் உணரும் அவமானத்தை உடைத்து, அதை தாண்டிய உலகத்தை அவர்களுக்குக் காட்ட உறுதியாக இருக்கிறேன்."

பெண்களாக, நாம் எல்லாவற்றிலும் குற்ற உணர்ச்சி அடைய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். தங்கள் வாழ்க்கையின் இந்த மோசமான காலங்களை கடந்து செல்லும் பெண்களை, நோயுடன் எதிர்த்துப் போராட செய்து, அந்த குற்ற உணர்ச்சி, அவமானம் அனைத்தையும் விட்டுவிட்டு, சுதந்திரமான, பெருமைமிக்க பெண்களாக வலம்வரச் செய்ய வைப்பேன் என்று உறுதியாக இருக்கிறேன்" என்றார் துளசி சிங்.