பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா - ‘வரலாற்றுச் சாதனையில் அடியெடுத்து வைக்கிறோம்’ - பிரதமர் மோடி பெருமிதம்

03:12 PM Apr 16, 2026 | YS TEAM TAMIL

மக்களவைச் சிறப்பு கூட்டத் தொடர் ஏப்ரல் 16 முதல் 18 வரை நடைபெற உள்ளது. இதில் ‘நாரி சக்தி வந்தன் அதிநியம்’ (பெண்கள் ஒதுக்கீட்டு சட்டம்) அமல்படுத்துவதற்கான அரசியலமைப்பு திருத்தங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

இந்த மூன்று நாள் சிறப்பு கூட்டத் தொடரில், பெண்களுக்கு அதிகாரமளிப்பை முன்னெடுக்க அரசு உறுதியுடன் செயல்பட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

சிறப்பு கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன் அவர் கூறியதாவது,

“இன்று தொடங்கும் பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டத் தொடரில், பெண்கள் அதிகாரமளிப்பில் வரலாற்றுச் சாதனைக்குத் தயாராகியிருக்கிறது நமது நாடு. நமது தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு அளிக்கப்படும் மரியாதையே நாட்டிற்கான மரியாதையாகும். இந்த உணர்வோடு நாம் உறுதியுடன் முன்னேறி வருகிறோம்,” என்று அவர் தனது ‘X’ சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டார்.

Prime Minister Narendra Modi. Picture credit: PTI

மேலும், அவர் சமஸ்கிருத சுபாஷிதம் ஒன்றை மேற்கோள் காட்டினார்:

“ஒரு பெண் தனது அறிவின் ஒளியால் அறியாமையின் இருளை நீக்கி, உலகத்தை முழுவதும் ஒளிரச் செய்கிறாள். ஆகையால் வளமும் நற்குணங்களும் வேண்டுமென நினைப்பவர்கள் எப்போதும் பெண்களை மதித்து கௌரவிக்க வேண்டும்,” என்பதே அம்மேற்கோள்

அரசியலமைப்பு திருத்த மசோதாவின் படி, 2029ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தலுக்கு முன் பெண்கள் ஒதுக்கீட்டு சட்டத்தை செயல்படுத்துவதற்காக, தற்போதைய 543 இடங்களிலிருந்து மக்களவை இடங்கள் அதிகபட்சம் 850 ஆக உயர்த்தப்படும். இதற்கான தொகுதி மறுவரையறை (delimitation) சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.

மேலும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச சட்டமன்றங்களிலும் 33 சதவீத பெண்கள் ஒதுக்கீட்டை வழங்க இடங்கள் அதிகரிக்கப்படும்.

மக்களவை மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு ஒதுக்கப்படும் இடங்கள்,

“ஒரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தின் பல்வேறு தொகுதிகளுக்கு மாறி மாறி (rotation முறையில்) ஒதுக்கப்படும்,” என்று மக்களவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 16 முதல் 18 வரை நடைபெறும் இந்த சிறப்பு கூட்டத்தில், மத்திய அரசு ‘நாரி சக்தி வந்தன் அதிநியம்’ சட்டத்தில் திருத்தங்களை முன்மொழிய உள்ளது.

இதற்கு முன் செவ்வாய்க்கிழமை, 2029 மக்களவை மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்பாக பெண்கள் ஒதுக்கீடு முழுமையாக அமல்படுத்தப்பட்டால், இந்திய ஜனநாயகம் மேலும் வலுப்பெற்று உற்சாகமாக இருக்கும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பெண்களுக்கு எழுதிய கடிதத்தில், பல துறைகளில் பெண்கள் முன்னேற்றம் அடைந்து வருவதால், சட்டமன்றங்களில் அவர்களின் பிரதிநிதித்துவமும் அதிகரிக்க வேண்டியது அவசியம், என்று அவர் குறிப்பிட்டார். மேலும் அவர்,

“நாரி சக்தி வந்தன் அதிநியம் தொடர்பான திருத்தங்கள் இந்த மூன்று நாள் சிறப்பு கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட வேண்டும். இதை மேலும் தாமதப்படுத்துவது துரதிர்ஷ்டவசமானதோடு, இந்திய பெண்களுக்கு பெரிய அநீதியாக இருக்கும்,” என்று வலியுறுத்தினார்.

அவர் மேலும் கூறியதாவது: “2029 மக்களவைத் தேர்தல்களும், அதே ஆண்டில் நடைபெறும் மாநில சட்டமன்றத் தேர்தல்களும் பெண்கள் ஒதுக்கீடு முழுமையாக அமல்படுத்தப்பட்ட நிலையில் நடைபெற்றால், நமது ஜனநாயகம் மேலும் வலுவானதும் உயிர்ப்புள்ளதுமானதாக மாறும்.”

மத்திய சமூக ஆராய்ச்சி மையம் (Centre for Social Research) உள்ளிட்ட அமைப்புகள், இந்த மசோதாவை அமல்படுத்துவது,

“இந்தியாவின் நீண்டகால ஜனநாயக பிரதிநிதித்துவ குறையை சரிசெய்யும் வரலாற்றுச் செயலாகும், என்று தெரிவித்துள்ளன,” என்றார் பிரதமர் மோடி.

பிரஸ் கிளப் ஆஃப் இந்தியாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மையத்தின் இயக்குநரும் Women Power Connect அமைப்பின் தலைவருமான ரஞ்சனா குமாரி கூறியதாவது,

“அனைத்து அரசியல் கட்சிகளும், கருத்து வேறுபாடுகளை தாண்டி, இந்த முக்கியமான சட்ட மாற்றத்தை தாமதமின்றி செயல்படுத்த வேண்டும்,” என்றார்.

Women Power Connect, Joint Women Programme, CEQUIN, Action India உள்ளிட்ட பல அமைப்புகள் இந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றன.

இந்தியாவின் உயர்ந்த தீர்மான அமைப்புகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் இன்னும் குறைவாகவே உள்ளது. மக்களவையில் பெண்களின் பங்கு சுமார் 14 சதவீதம் மட்டுமே உள்ளது. இது உலக சராசரியான 27.2 சதவீதத்தை விட மிகவும் குறைவாகும் என அமைப்புகள் குறிப்பிட்டன.