பீகாரின் கிராமப்புற பகுதிகளில், மாதவிடாய் சுகாதாரம், குழந்தை திருமணம் மற்றும் இளம் பருவத்தினருக்கு ஏற்ற சுகாதார சேவைகளை அணுகுவது போன்ற முக்கியமான பிரச்சினைகளை நிவர்த்தி செய்கிறது இளைஞர் படை. 90க்கும் மேற்பட்ட குழந்தை திருமண வழக்குகளைத் தடுத்ததுடன், அனைவருக்கும் சானிட்டரி பேட் அணுகலை உறுதி செய்ய, 52 சானிட்டரி பேட் வங்கிகளை செயல்படுத்தியுள்ளனர்..
இளைஞர்களுக்காக இளைஞர்கள் முன்னெடுத்த இயக்கம்...
மாதவிடாய் என்பது பெண்களின் வாழ்க்கையில் இயல்பாக கடக்கவேண்டிய ஒரு கட்டமாகும். ஆனால், பல பருவப் பெண்கள் மாதவிடாய் காலத்தில் களங்கம், துன்புறுத்தல் மற்றும் சமூக ஒதுக்கீட்டை எதிர்கொள்கின்றனர். கிராமப்புற இந்தியாவில் மிகவும் அழுத்தமான மற்றும் புறக்கணிக்கப்பட்ட பிரச்சினைகளில் ஒன்று மாதவிடாய் சுகாதாரம். மாதவிடாய் தடைகளை நிவர்த்தி செய்வது என்பது மாதவிடாய் சுகாதார கல்வியை ஊக்குவித்தல் மற்றும் மாதவிடாய் காலங்களைச் சுற்றியுள்ள களங்கத்தை அகற்றுவதே என்பதை அறிந்த தன்னார்வ தொண்டு நிறுவனமான "இந்திய மக்கள்தொகை அறக்கட்டளை" (PFI), இளைஞர் படையை உருவாக்கி மாற்றத்தை முன்னெடுத்து வருகிறது.
அதன் "ஏக்தா கிஷோரி சமூஹ்" திட்டத்தின் கீழ், மாதவிடாய் மற்றும் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு பெற்ற 80 இளைஞர்களை அவர்களது சமூகத்தின் வழிகாட்டிகளாக மாற்றியுள்ளது. கிஷோரி சமூஹ்ஸின் உறுப்பினர்களாக தங்கள் பயணத்தைத் தொடங்கிய அவர்களில் பலர், இப்போது இனப்பெருக்க ஆரோக்கியம், மாதவிடாய் ஆரோக்கியம், குழந்தைத் திருமணங்களைத் தடுப்பது மற்றும் ஆரம்பகால கர்ப்பம் ஆகியவற்றிற்காக வாதிடுகின்றனர். அவர்களில் ஒருவர் தான் சானியா குமாரி.
பீகாரின் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில், 18 வயதான சானியா குமாரி வளர்ந்து வரும் இளைஞர் தலைமைத்துவ இயக்கத்தில் ஒரு மைய நபராக மாறியுள்ளார். சானியா அவரது முதல் கிஷிரி சமூஹ் கூட்டத்தில் பங்கேற்றபோது அவருக்கு வயது வெறும் 11. 2017ம் ஆண்டில் ஒரு இளம் பருவத்தினர் குழு மூலம் மாதவிடாய் சுகாதாரம் குறித்த எளிய அறிமுகமாகத் தொடங்கிய இந்த பயணம், அவரது சமூகத்தில் நூற்றுக்கணக்கான சிறுமிகளின் வாழ்க்கையை மாற்றியமைத்த ஒரு தலைமைத்துவப் பயணமாக உருவெடுத்துள்ளது.
2020ம் ஆண்டு வாக்கில் அவர், இளம் பருவப்பெண்கள் குழுவிற்குத் தலைமை தாங்கினார். மேலும், அவரது கிராமத்தில் உள்ள இளம் பருவப் பெண்களுக்கு பாதுகாப்பான மாதவிடாய் சுகாதாரப் பொருட்களை அணுகுவதற்காக ஒரு சானிட்டரி பேட் வங்கியைத் தொடங்கினார். கிராமப் பெண்களுக்கு அவர்களின் மாதவிடாய் சுழற்சிகள் பற்றிய அடிப்படை புரிதல்கள் இல்லை. மாதவிடாய் ஆரோக்கியம் பற்றிய உரையாடல்களும் வீடுகளிலோ அல்லது பள்ளிகளிலோ நடத்தப்படுவதில்லை.
"கூட்டங்களில் பங்கேற்பதற்கு கூட பெண்களை அவர்களது குடும்பத்தார் அனுமதிக்கவில்லை. கூட்டங்களில் பங்கேற்கும் பெண்களிடம் நேரடியாக சமூகத்தில் தடைச்செய்யப்பட்டதாக கருதப்படும் மாதவிடாய் குறித்து பேசுவதற்கு மாறாக, அவர்களின் பள்ளி அனுபவங்கள் மற்றும் அவர்களின் கனவுகள் பற்றி கேட்கத் தொடங்கினோம். பெண்களை பங்கேற்க வைக்க முதலில் அவர்களின் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதை புரிந்துகொண்டோம். எனவே, பெற்றோருடன் அமர்வுகளை நடத்தினர். இப்படித்தான் இயக்கம் வளர்ந்தது. பெண்கள் மாதவிடாயின்போது பழைய துணியைப் பயன்படுத்தினர். மேலும் அதை வெயிலில் உலர்த்துவதில்லை. ஏனெனில், இந்தத் துணியை சிறுவர்களும் ஆண்களும் பார்ப்பதை அவர்கள் விரும்பவில்லை. மாதவிடாய் பெண்ணுடன் தொடர்பு கொள்ளும் எதுவும் 'தூய்மையற்றது' என்ற மூடநம்பிக்கை பரவியிருந்தது," என்றார் சானியா.
மாதவிடாய் சுகாதரத்தை மேம்படுத்த சானிட்டரி பேட் வங்கி...
NFHS-5 இன் படி, பீகாரில் 58% பெண்கள் மட்டுமே சுகாதாரமான மாதவிடாய் பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். நவாடா மற்றும் தர்பங்கா ஆகிய மாவட்டங்களில் சுகாதாரப் பொருட்களின் பயன்பாட்டு விகிதம் முறையே 57% மற்றும் 65% ஆக பின்தங்கியுள்ளது. இதனை மாற்ற, யூத் சாம்பியன்ஸ் 52 சானிட்டரி பேட் வங்கிகளைத் தொடங்கியது. சமூகத்தால் நடத்தப்படும் இந்த வங்கிகளில், பெண்கள் கூட்டாக பங்குக் கொள்கின்றனர். நாளொன்றுக்கு 1 ரூபாய் பங்களித்து, சானிட்டரி பேட் வாங்க முடியாதவர்களுக்கு பேட்களை வாங்கி விநியோகிக்கிறார்கள். பேட் வங்கியின் யோசனை பெண்களிடமிருந்தே வந்தது.
"தேவை மற்றும் அவசியத்தால் பிறந்ததே இந்த முயற்சி. பீகாரின் தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு தரவுகள், அதிகப்படியான குழந்தை திருமணம் மற்றும் டீனேஜ் கர்ப்ப விகிதங்கள் மற்றும் இளம் பருவத்தினரிடையே அவர்களின் உடல்நலம் மற்றும் உரிமைகள் குறித்த மோசமான விழிப்புணர்வு இருப்பதை வெளிப்படையாகக் காட்டின. எனவே, இந்த இளம் பருவத்தினருக்கான விழிப்புணர்வை நாங்கள் அடிப்படையிலிருந்து உருவாக்க வேண்டியிருந்தது."
SRHR, டீனேஜ் தலைமைத்துவம் மற்றும் தகவல் தொடர்பு உத்திகளை உள்ளடக்கிய தீவிர பட்டறைகள் மூலம் இளைஞர் சாம்பியன்கள் திறன் பெற்றனர். இந்த இளம் தலைவர்கள் 204 க்கும் மேற்பட்ட கிஷோரி கிளப்புகளை உருவாக்கினர். ஒவ்வொன்றும் 10 முதல் 15 டீனேஜ் பெண்களைக் கொண்டவை" என்று விளக்கினார் PFI செய்தித் தொடர்பாளர் நிலான்ஷு குமார்.
குழந்தை திருமணங்கள் தடுப்பு;
COVID-19 தொற்றுநோய் காலத்தில், இளைஞர் சாம்பியன்கள் தடுப்பூசி இயக்கங்களைத் திரட்டினர். மாஸ்க்குகளை விநியோகித்தனர். அவர்கள் நவாடாவில் உள்ள கவகோல் மற்றும் ராஜௌலி தொகுதிகளிலும், தர்பங்காவில் உள்ள பஹேரி மற்றும் சிங்வாரா தொகுதிகளிலும் 90க்கும் மேற்பட்ட குழந்தை திருமண வழக்குகளைத் தடுக்கவும் உதவியுள்ளனர்.
"இளைஞர்கள் குடும்பங்களை எதிர்கொள்கிறார்கள். உள்ளூர் பஞ்சாயத்துகளை எச்சரிக்கிறார்கள். தேவைப்படும்போது காவல்துறையினரை ஈடுபடுத்துகிறார்கள். விஷயங்கள் அதிகரிக்கும் போது, நாங்கள் அவர்களுக்கு ஆதரவளிக்க முன்வருகிறோம். இதில் சவால்களும் நிறைந்திருக்கின்றன. திருமணங்களை நிறுத்த முயற்சிக்கும்போது அல்லது மாதவிடாய் மற்றும் கருத்தடை போன்ற தடைசெய்யப்பட்ட விஷயங்களைப் பற்றி பேசும்போது பல பெண்கள் சமூக பின்னடைவையும், அச்சுறுத்துதல்களையும் எதிர்கொள்கிறார்கள். குழந்தை திருமணங்களை நிறுத்தியதற்காக சானியாவும் அவரது குழுவினரும் அவர்களது குடும்பத்தினரிடமிருந்து விமர்சனங்களை எதிர்கொண்டனர், மேலும் தொடர்ச்சியான உரையாடல் மூலம் விடாமுயற்சியுடன் உள்ளூர் காவல்துறையினருடன் இணைந்து தங்கள் பணியைத் தொடர்ந்தனர்."
சில ஆண்டுகளுக்கு முன்பு குறைப்பிரசவத்தால் பல இளம் பெண்களை இழந்துள்ளோம். நாங்கள் தலையிடாவிட்டால், எங்களது சில நண்பர்கள் 15 வயதை அடைவதற்கு முன்பே திருமணம் செய்து வைக்கப்பட்டிருப்பார்கள்.
அவர்கள் அனைவரும் இப்போது கல்லூரிக்குச் செல்கிறார்கள், வேலைக்கு செல்ல ஆசைப்படுகிறார்கள். இப்போது, எங்கள் பிரச்சாரங்களில் ஆண்களுக்கான பாலியல் ஆரோக்கியமும் அடங்கியுள்ளது. இந்த விஷயங்களைப் பற்றி பேசுவதற்காக நாங்கள் கண்டிக்கப்படும்போதெல்லாம், நம்பிக்கையுடன் உரையாடல்கள் மூலம் அவர்களை இயல்பாக்குகிறோம்" என்றார் நிலான்ஷு குமார்.
இளைஞர்கள், குறிப்பாக இளம் பெண்கள், தலைமைத்துவத்தில் நம்பிக்கையுடன் இருக்கும்போது, அவர்களால் உள்ளூர் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். இளைஞர் சாம்பியன்ஸ் திட்டம் மற்ற மாநிலங்களுக்கு ஏற்ப மாற்றியமைத்துக்கொண்டாலும், அதன் மையப்புள்ளி மாற்றமில்லை. சானியாவும் அவரது சகாக்களும் ஒரு திட்டத்தின் பயனாளிகள் மட்டுமல்ல, கிராமப்புற இந்தியாவில் இனப்பெருக்க உரிமைகள், சமூகப் பராமரிப்பு எப்படி இருக்கிறது என்பதை மறுவடிவமைக்கின்றனர்.
தமிழில்: ஜெயஸ்ரீ