30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள Zoho - சர்வதேச அளவில் 150 மில்லியன் பயனாளிகளை அடைந்து சாதனை!

06:00 PM Feb 19, 2026 | cyber simman

முன்னணி சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் ஜோஹோ கார்ப்பரேஷன் இரண்டு முக்கிய மைல்கற்களோடு தனது 30வது ஆண்டு நிறைவை கொண்டாடுவதாக அறிவித்துள்ளது.

ஒரு மில்லயனுக்கும் மேலான கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்குறிய தொழில்நுட்ப சேவையாளராக விளங்குவதாகவும், உலக அளவில் 150 மில்லியன் பயனாளிகளை கொண்டுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜோஹோ கிளவு வர்த்தக தீர்வுகள், மேனேஜ் இஞ்சின், வர்த்தக செயல்முறை நிர்வாகத்திற்கான Qntrl மற்றும் மின் கற்றல் மேடை டிரைனர் செண்ட்ரல் உள்ளிட்டவற்றை ஜோஹோ உள்ளடக்கியுள்ளது. 2025ல் நிறுவனம், ஆண்டு அடிப்படையிலான 30 சதவீத வாடிக்கையாளர் வளர்ச்சி மற்றும் 20 சதவீத வருவாய் வளர்ச்சையை கண்டுள்ளது. இதற்கான் அறிவிப்பை, இந்தியா ஏஐ இம்பேக்ட் மாநாட்டில் நிறுவனம் வெளியிட்டது.

"சுயநிதியில், தனியாராக முற்றிலும் சொந்தமாக உருவாக்கப்பட்டது போட்டியாளர்களிடம் இருந்து ஜோஹோவை வேறுபடுத்துகிறது,” என இணை நிறுவனர் மற்றும் முதன்மை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார்.

"ஆனால், வெண்டர்களுக்கு எங்கள் உதவி தேவையில்லை, வர்த்தகங்களுக்கு தேவை என்பதால் தான், 30 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களுக்கு தேவையான பலனை அளித்து வருகிறோம். எந்த புதுமையாக்கத்திற்கும் முன்பாக, இது வர்த்தகத்திற்கு உதவுமா? என கேட்டுக்கொள்வதே எங்களை வழி நடத்துகிறது,” என்றும் அவர் கூறியுள்ளார்.

2005ம் ஆண்டு நிறுவப்பட்ட ஜோஹோ ஆய்வு மற்றும் மேம்பாடு, ஏஐ சார்ந்த, கிளவுட் அடிப்படையிலான தீர்வுகளை நவீன வர்த்தகங்களுக்கு வழங்கி வருகிறது. இதன் துறை சார்ந்த, நோக்கோடு மற்றும் குறைந்த கோடு திறன்கள் கொண்ட அம்சங்கள் உள்ள செயலிகள் பல வர்த்தக நிறுவனங்கள் தங்கள் செயல்முறையை சீராக்க உதவுகிறது. இந்த மேடை சார்ந்த உத்தி, மெர்சிடஸ் பென்ஸ் இந்தியா, ஜாய் ஆலுக்காஸ், யூனியன் வங்கி உள்ளிட்ட முன்னணி வர்த்தக நிறுவனங்களை வாடிக்கையாளர்களாக ஈர்த்துள்ளது. நிறுவனம், மேலும் பல முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது.

மேனேஜ் இஞ்சின் சேவை இதன் வர்த்தக நிறுவன தீர்வுகள் தொகுப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த தீர்வு, நிறுவனங்கள் ஏஐ உள்ளிட்ட தொழில்நுட்ப அலைகளை எதிர்கொள்ள உதவுகிறது. சாம்சங் எலக்ட்ரானிக்ஸ், ஒமேகா ஹெல்த்கேர், நாராயணா ஹெல்த்கேர் உள்ளிட்ட நிறுவனங்கள் இதை பயன்படுத்துகின்றன.

இந்தியா ஏஐ இம்பேக்ட் மாநாட்டில், இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு மென்பொருள் மற்றும் ஐடி துறையில் ஏஐ அலையை எதிர்கொள்வதற்கான வியூக நோக்கிலான அணுகுமுறையை பகிர்ந்து கொண்டார்.

"தற்போதைய ஏஐ கட்டம் வர்த்தக செயல்முறையில் சில அம்சங்களை தானியங்கிமயமாக்கும் என்றாலும், நீண்ட கால நிலைத்தன்மை என்பது வாடிக்கையாளர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண்பது மற்றும் வாடிக்கையாளர்களுக்கு நெருக்கமாக இருப்பதை சார்ந்து அமையும். டாட் காம் யுகம் போன்ற பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய தொழில்நுட்ப காலகட்டங்களில் பார்த்தது போல, துடிப்பான தன்மை மற்றும் மறு கண்டுபிடித்தல் முக்கியம்,” என்று அவர் குறிப்பிட்டார்.

”குறைந்த செலவிலான சோதனை முயற்சிகளை, பலன்கள் தொடர்பான பாகுபாடு இல்லாத வகையில் மேற்கொள்வதில் இருந்து துவங்கலாம். காலப்போக்கில் இந்த சோதனைகள் மற்றும் கருத்துகள் வர்த்தகத்தை இயக்கக் கூடிய தீர்மானமான முடிவுகளாகும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

"இந்தியாவின் இளம் மற்றும் நம்பிக்கை மிக்க மக்கள் தொகையால் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். மிகை அவநம்பிக்கையால் நாம் கவலைப்பட வேண்டியதில்லை, ஏனெனில் அது நம்மை சோதனைகள் செய்ய அனுமதிக்கிறது,” என்றும் அவர் கூறினார்.


Edited by Induja Raghunathan