Zoho நிறுவனம் ONDC-யில் ரூ.70 கோடி முதலீடு!

08:03 PM May 13, 2026 | muthu kumar

மென்பொருள் சேவை நிறுவனமான ஜோஹோ நிறுவனம், இந்தியாவில் சுயாட்சி தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் Open Network for Digital Commerce (ONDC) அமைப்பில் ரூ.70 கோடி முதலீடு செய்துள்ளது.

சென்னை தலைமையகமாக செயல்படும் இந்த SaaS (Software as a Service) நிறுவனம், அனைத்து வணிகங்களுக்கும் தொழில்நுட்பத்தை எளிதாகவும் உள்ளடக்கமாகவும் மாற்றும் தனது உறுதியை இந்த முதலீடு மேலும் வலுப்படுத்தும் என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஜோஹோ உயரதிகாரியான சிவராமகிருஷ்ணன் ஈஸ்வரன் கூறுகையில்,

“இந்தியாவின் பொருளாதாரம் பெரும்பாலும் MSME நிறுவனங்களையே சார்ந்துள்ளது. ஆனால், பாரம்பரிய டிஜிட்டல் தளங்கள் விதிக்கும் பல்வேறு சவால்களை அவர்கள் எதிர்கொள்கிறார்கள். ONDC என்பது மிகச் சிறந்த முயற்சி. இது MSME நிறுவனங்களுக்கு அதிகாரத்தை மீண்டும் வழங்கி, வாடிக்கையாளர் அணுகலை விரிவுபடுத்தவும், நிலையான வளர்ச்சியை அடையவும் உதவுகிறது,” என்றார்.

இந்தியாவில் டிஜிட்டல் வர்த்தகத்தை ஜனநாயகமயமாக்கும் நோக்கில் திறந்த டிஜிட்டல் கட்டமைப்பை உருவாக்கி வரும் ONDC, இணக்கத்தன்மை, உள்ளடக்கம் மற்றும் செயல்திறனை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. பல்வேறு துறைகளில் டிஜிட்டல் வர்த்தக வளர்ச்சியை விரிவுபடுத்துவதுடன், சிறு மற்றும் நடுத்தர வணிகங்களும் சம வாய்ப்புடன் வளரக்கூடிய சூழலை உருவாக்க ONDC செயல்பட்டு வருகிறது.

FY 2025–26 நிதியாண்டில் ONDC தளத்தின் மூலம் 21.8 கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சில்லறை விற்பனை, லாஜிஸ்டிக்ஸ், மொபிலிட்டி மற்றும் நிதிசேவைகள் உள்ளிட்ட துறைகளில் ONDC-யின் திறந்த நெட்வொர்க் முறை புதிய வாய்ப்புகளை உருவாக்கி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஜோஹோ நிறுவனம் தனது Vikra seller app, Zoho ERP, Zoho Books, Zoho Inventory மற்றும் ஜோஹோ காமர்ஸ் போன்ற பயன்பாடுகள் மூலம் MSME நிறுவனங்களின் டிஜிட்டல் மாற்றத்தை ஊக்குவித்து வருகிறது. இத்தளங்கள் மூலம் சிறு வணிகர்கள் இந்திய சந்தையில் பரந்த அளவில் வணிக வாய்ப்புகளை பெற முடியும், என நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், ONDC DigiDukaan திட்டத்தின் மூலம் 10,000-க்கும் மேற்பட்ட கிறானா கடைகள் குறுகிய காலத்திலேயே இணைக்கப்பட்டுள்ளதாகவும், விவசாயிகள், கைவினைஞர்கள் மற்றும் கிராமப்புற தொழிலாளர்களின் ஆர்டர் அளவுகள் நிதியாண்டு 2025–26-ல் 11 மடங்கு உயர்ந்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.