
இந்தியாவை மற்ற நாடுகளில் தனித்து காண்பிப்பதும், தற்போது உலக அரங்கில் உயர்த்துவதும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தான். இவற்றில் முத்தாய்ப்பாக யூனிகார்ன் நிறுவனங்கள் அமைந்திருக்கின்றன. யூனிகார்ன் நிறுவனங்களை நிறுவுவதில் இந்தியர்களுக்கு முன்னோடியாக இருந்தது தமிழர்கள் என்றால் மிகையல்ல.
இந்தியாவின் முதல் SaaS (software as a service) யூனிகார்ன் நிறுவனமான ஃப்ரெஷ்வொர்க்ஸ் (Freshworks)-ஐ நிறுவியவர் தமிழரான கிரிஷ் மாத்ருபூதம். பல இந்தியர்களை ஒரே இரவில் கோடீஸ்வரர்கள் ஆக்கியது இந்நிறுவனம்.
ஸ்டார்ட்அப் உலகின் இன்றைய சூப்பர் ஸ்டாராக இருக்கக் கூடிய கிரிஷ் மாத்ருபூதமை பின்பற்றி இதே SaaS பிளார்ட்பார்மில் இன்னொரு நிறுவனம் தமிழ்நாட்டில் இருந்து உதயமாகி உலகை ஆண்டு கொண்டிருக்கிறது.
ரூ.8000 வாடகை வீட்டில் சென்னையின் ஓர் மூலையில் தொடங்கி இன்று ஐரோப்பிய வணிகத்தில் கோடிகளை குவித்து வருகிறது அந்நிறுவனம். அதுதான் SaaS நிறுவனங்களில் மிக முக்கியமான நிறுவனமாக திகழும் சார்ஜ்பீ (Chargebee).
இன்றைய யூனிகார்ன் எபிசோடில் நாம் அலசப்போவது ஸ்டார்ட்அப் உலகில் சார்ஜ்பீ நிறுவனத்தின் அசுர வளர்ச்சியையும் அதனை நிறுவிய தமிழர்களையும்தான்.
சார்ஜ்பீ சாம்ராஜ்ஜியம்
ஒரு நிறுவனத்துக்குத் தேவையான சாஃப்ட்வேரைத் தயார் செய்து, அவற்றை அந்த நிறுவனத்திடம் விற்றுவிடாமல், மாதம்தோறும் எவ்வளவுக்கு பயன்படுத்துகிறார்களோ அதற்குரிய பணத்தை மட்டும் கட்டணமாக பெறுவதே இந்த சாஸ் (SaaS). இந்த தொழில்நுட்பத்தை முழுமையாக பயன்படுத்தி சப்ஸ்கிரிப்ஷன், ரெவன்யூ மேனேஜ்மென்ட் தொடர்பான மென்பொருளை வழங்கும் நிறுவனம்தான் இந்த ‘சார்ஜ்பீ’.
சென்னையை தலைமையிடமாக கொண்டு தொடங்கி இப்போது நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது ‘சார்ஜ்பீ’. 2011-ம் ஆண்டில் சென்னையில், ரூ.8,000 வாடகை வீட்டில் ஆரம்பித்து யூனிகார்ன் அந்தஸ்துக்கான ஒரு பில்லியன் டாலர் (ரூ.8,400 கோடி) என்கிற மதிப்பை எல்லாம் தாண்டி இன்று 3.50 பில்லியன் டாலர் மதிப்பில், அதாவது இந்திய மதிப்பில் ரூ.30,000 கோடி மதிப்பு கொண்ட நிறுவனமாக ‘சார்ஜ்பீ’ கொடிகட்டி பறக்கிறது.
இந்த உயரத்தை அடைய காரணம் ஒருவர் அல்ல நால்வர். ஆனால், ஃப்ரெஷ்வொர்க்ஸிற்கு கிரிஷ் மாத்ருபூதம் என்றால் சார்ஜ்பீ-க்கு கிரிஷ் சுப்ரமணியன். மாத்ருபூதம் ஸ்ரீரங்கத்துகாரார் என்றால், சுப்ரமணியன் அக்மார்க் சென்னை பையன். சார்ஜ்பீ தொடங்க முழுமுதற் காரணம் இந்த கிரிஷ் சுப்ரமணியன். இவர் தனது நண்பர்களான ராஜாராமன், கேபி சரவணன், தியாகு ஆகியோருடன் சேர்ந்து சார்ஜ்பீ நிறுவனத்தை கட்டமைத்தார்.
900 பேர் வேலை செய்யும் சார்ஜ்பீ நிறுவனத்தை கட்டமைத்த கிரிஷ் சுப்ரமணியன் பெரிய தொழில்முனைவு குடும்பப் பின்புலமோ, ஐஐடி போன்ற கல்விப் பின்புலமோ கொண்டவர் கிடையாது. சாதாரண பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் பிரிவில் பயின்று, மிகச் சிறிய ஐடி கம்பெனியில் தனது பயணத்தைத் தொடங்கியவர்தான்.
அதேபோல் தன்னுடைய 30-வது வயதில்தான் கிரிஷ் சுப்ரமணியன் நண்பர்களுடன் இணைந்து ‘சார்ஜிபீ’யை தொடங்கி, அதற்கு சிஇஓ-வாக பொறுப்பேற்றார். இந்த நண்பர்கள் கூட்டணி தொடங்கிய 10 ஆண்டுகளுக்குள்ளாகவே ‘சார்ஜ்பீ’-யை யூனிகார்னாக மாற்றிக்காட்டினர்.
கூட்டத்தில் ஒருவன்...
பொதுவாக ஸ்டார்ட்அப் பக்கம் திரும்பியவர்களின் கதைகளை பார்த்தால், அவர்கள் ஒன்று ஐஐடி போன்ற பெரிய கல்வி நிறுவனங்களில் பயின்றவர்களாக இருப்பார்கள். அல்லது சிறுவயது முதலே தொழில்முனைவு கனவு கொண்டிருந்தவர்களாக இருப்பார்கள். ஆனால், இந்த லிஸ்டில் எதிலும் வராத ‘கூட்டத்தில் ஒருவன்’ தான் கிரிஷ் சுப்ரமணியன்.

பள்ளி படிப்பில் டாப் ரேங்க் மாணவன் கிடையாது. கல்லூரியில் முதல் பென்ச் மாணவனும் இல்லை. ஆனால், எல்லா ஆசிரியர்களுக்கும் பிடிக்கும் வகையிலான பொறுப்பான மாணவன் கிரிஷ்.
தமிழகத்தின் பிற மாவட்டங்களை சேர்ந்த பலரும் கல்வி மற்றும் வேலைக்காக சென்னைக்கு வருவது வழக்கம். ஆனால், சென்னையில் பிறந்து வளர்ந்த கிரிஷுக்கு சென்னை கல்லூரிகளில் சீட் கிடைக்கவில்லை என்பதால் பிற மாவட்டங்களுக்குச் சென்றார்.
அப்படி, மயிலாடுதுறையில் உள்ள கல்லூரி ஒன்றில் சேர்ந்தவருக்கு கல்லூரியில் படிப்பை விடவும் சிம்போசியம், செமினார் என படிப்பு சார்ந்த மற்ற விஷயங்களில்தான் ஆர்வம். சிறுவயது முதலோ அல்லது கல்லூரி காலத்திலோ கிரிஷ் சுப்ரமணியனுக்கு தனித் திறனும் இருந்ததும் இல்லை, தொழில்முனைவோர் கனவும் கிடையாது.
ஆனால், கிரிஷ் சுப்ரமணியனை செதுக்கியதில் புத்தகங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. பள்ளிப் பருவத்திலேயே அவருக்கு வாசிப்புப் பழக்கம் இருந்தது. பாலகுமாரன், சுஜாதா, ரீடர்ஸ் டைஜ்ஸ்ட் என இலக்கியம் முதல் தொழில்நுட்பம் வரையில் கையில் கிடைக்கும் அனைத்து புத்தங்களை வாசிப்பது அவரின் வழக்கமாக இருந்தது. இந்த வாசிப்புதான் பின்னாளில் திறந்த மனதுடன் இந்த உலகை அணுகவும் உதவியது.
கிரிஷ் கல்லூரியை முடித்து 2001-ம் ஆண்டு சமயத்தில் ஐடி நிறுவனங்கள் சரிவில் இருந்தன. இதனால், அவருக்கு வேலை கிடைக்கவில்லை. எனினும், வாசிப்பை தொடர்ந்தார் கிரிஷ். பிரபலமான ‘அப்புசாமி - சீதாப்பாட்டி’ தொடரை எழுதிய பாக்கியம் ராமசாமி என்று பரவலாக அறியப்படும் ஜ.ரா. சுந்தரேசனின் சகோதரர் கிருஷ்ணமூர்த்தி க்ரிஷின் குடும்ப நண்பர். இந்த நட்பு காரணமாக, கிருஷ்ணமூர்த்தி வீட்டில் இருந்த பெரிய நூலகத்துக்கு சென்று புத்தகங்கள் வாசிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.
அப்படி ஒருநாள் அந்த நூலகத்தில் புத்தகம் வாசித்துக் கொண்டிருந்த சமயத்தில், சுந்தரேசனின் மகன் ஜெகன் வாசன், கிருஷ்ணமூர்த்தியைப் பார்ப்பதற்காக வந்திருந்தார். கிரிஷை கண்ட ஜெகன் அவரை பற்றி கிருஷ்ணமூர்த்தியிடம் விசாரிக்கத் தொடங்கினார். பின்னர் நேரடியாகவே கிரிஷிடம் படிப்பு பற்றிய விசாரித்த ஜெகன், ஒரு சிறிய அமைதிக்கு பின், “பெங்களூருவில் நான் ஒரு சிறிய ஐடி கம்பெனி நிறுவனம் நடத்திக் கொண்டிருக்கிறேன். வந்து சேர்ந்து கொள்கிறாயா?” என்று நேரடியாக கேட்டிருக்கிறார்.

பசியில் காத்திருந்தவனுக்கு பிரியாணி கிடைத்த கதையாக எந்த தாமதமும் இல்லாமல் ஜெகனிடம் ஓகே சொல்லியவர் மறுநாளே பெட்டியைக் கட்டிக் கொண்டு பெங்களூரு கிளம்பிவிட்டார். அரசின் டெண்டர்களில் வெளிப்படைத் தன்மையை கொண்டுவர முயற்சிகள் நடந்துக் கொண்டிருந்தது சமயம் அது.
அமெரிக்காவில் ஐடி கம்பெனியில் பணியாற்றிய அனுபவம் கொண்ட ஜெகன், பெங்களூருவில் சொந்த நிறுவனம் தொடங்கி, டெண்டர்களுக்கான சாஃப்ட்வேரை உருவாக்கி வந்தார். அவரின் நிறுவனத்தில் மொத்தமே 5 பேர் தான். சாஃப்ட்வேரை உருவாக்குவது முதல் அதை மார்க்கெட்டிங் செய்து வாடிக்கையாளரிடம் விற்று முதலாக்குவது வரை எல்லாவற்றையும் அவர்களே செய்ய வேண்டும்.
அப்படியான நிறுவனத்தில் கிரிஷின் சம்பளம் ரூ.3,000. மிகுந்த ஈடுபாட்டுடன் வேலை செய்யத் தொடங்கினார். சார்ஜ்பீயை வழிநடத்துவதற்கான தேவையான கற்றல் மட்டுமல்ல, இன்று கிரிஷ் மார்கெட்டிங்கில் சிறந்து விளங்க காரணம், ஜெகனின் நிறுவனம் தான். ஏனென்றால், ஜெகன் மார்க்கெட்டிங்கில் கில்லி. அவரிடமிருந்து கற்றுக்கொண்ட பாடம்தான் இன்றுவரை கிரிஷுக்கு வழிகாட்டி. ஓராண்டு ஜெகனுடன் இருந்த கிரிஷ் பிறகு, டிசிஎஸ் நிறுவனத்துக்கு மாறினார்.
ஸ்டார்ட்அப் எண்ணம்...
மயிலாடுதுறையில் கிரிஷ் உடன் பயின்ற நண்பன் ராஜாராமன். ஜோஹோ நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த இவர், அப்போது ஒரு SaaS தளத்தை வடிவமைத்து வந்தார்.
ஐடி சர்க்கிளில் பொதுவாக சர்வீஸ் நிறுவனங்களைவிட ப்ராடெக்ட் பேஸ்டு நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு சொந்தமாக ஸ்டார்ட்அப் தொடங்க வேண்டும் என்ற ஆசை ஈசியாக வருவதில் எந்த ஆச்சர்யமும் இருக்காது.
ஜோஹோ நிறுவனத்தில் வேலை பார்த்த ராஜாராமனுக்கும் சொந்த ஸ்டார்ட்அப் எண்ணம் இருந்தது. கல்லூரி நண்பர்களான கிரிஷ் ராஜாராமனும் அடிக்கடி சந்தித்துக் கொள்வது வழக்கம். இந்த சந்திப்புகளால் கிரிஷுக்கும் ஸ்டார்ட்அப் எண்ணம் பகிரப்பட்டது. 2005-ம் ஆண்டு சமயம், ஒருநாள் கிரிஷை சந்திக்க வந்த ராஜாராமன் “சீக்கிரமே ஏதாவது தொடங்க வேண்டும்” எனக் கூறினார் ஸ்டார்ட்அப் ஆசைக்கு விதைப்போட்டார்.
இருவருமே நன்றாக சம்பாதித்துக் கொண்டிருந்த நேரம். இதனால் இருவருமே ஒரு முடிவெடுத்தனர். அதாவது, அடுத்த 5 ஆண்டுகளுக்கு இருவருமே தாங்கள் சம்பாத்தியத்தில் 30 சதவீதத்தை சேமிக்க வேண்டும் என்பதே அந்த முடிவு. அந்த சேமிப்பை கொண்டு சூழல் அமையும்போது வேலையைவிட்டு ஸ்டார்ட்அப் தொடங்கலாம், அதுவரை ஸ்டார்ட்அப் நிறுவனத்தை நடத்த தங்களை தயார்படுத்திக் கொள்வது என தீர்மானித்தனர்.
ஆனால், டிசிஎஸ் சர்வீஸ் நிறுவனம் என்பதால், அதில் ப்ராடெக்ட் உருவாக்கம் சார்ந்து கிடைக்காது என்பதை உணர்ந்த கிரிஷ், ஸ்டார்ட்அப் நிறுவனத்தை நடத்த தேவையான மற்றத் திறன்களை வளர்த்துக்கொள்ள முடிவெடுத்தார்.
2006 - 2009 காலகட்டத்தில் அமெரிக்காவில் இருந்த அவர், ஒருநாள் தனது நிறுவனத்தில் சேல்ஸ் & மார்க்கெட்டிங்கில் பெரிய ஆளாக இருந்த ரிலேஷன்ஷிப் மேனேஜரிடம் சென்று, “இன்னும் சில ஆண்டுகளில் நான் டிசிஎஸில் வேலை பார்க்கமாட்டேன். ஸ்டார்ட்அப் தொடங்க போகிறேன். ஸ்டார்ட்அப் ஆரம்பிக்க வேண்டுமென்றால், அதற்கு ப்ராடெக்ட் உருவாக்கம் தவிர்த்து என்னென்ன திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்?” எனக் கேட்டுள்ளார்.
அதற்கு அவரோ, “ப்ராடெக்ட்டை உருவாக்குவது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு அதனை மார்க்கெட்டிங் செய்து விற்பதும் அவசியம். எனவே, நீ சேல்ஸ் & மார்க்கெட்டிங் கற்றுக்கொள்” என்றிருக்கிறார்.
இது கிரிஷுக்கு விழிப்புணர்வை தர, அடுத்த கற்றலாக எப்படி நிறுவனங்கள் இடையே விற்பனை நடக்கிறது, சென்னையில் இருந்துகொண்டு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு எப்படி சாஃப்ட்வேரை விற்பது என்பதை அந்த பெரிய ஆள் மூலமாகவே கற்றுக்கொண்டார்.
நண்பர்களின் கூட்டணி...
இந்த சமயத்தில், விசா ரெனியூவலுக்காக அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த கிரிஷ், வழக்கம் போல் நண்பன் ராஜாராமனை சந்திக்க சென்றிருக்கிறார். கிரிஷை பார்த்ததுமே ராஜாராம் சொன்னது, “ஜோஹோவிலிருந்து வெளியே வந்து கிரிஷ் மாத்ரூபூதம் ஸ்டார்ட்அப் தொடங்கிவிட்டார். நாமும் அதேபோல் நிறுவனம் தொடங்க வேண்டும். என்னுடன் ஜோஹோவில் பணியாற்றும் நண்பர்கள் கேபி சரவணனும், தியாகுவும் ஸ்டார்ட்அப் தொடங்கும் எண்ணத்தில் உள்ளனர். அவர்களுடன் சேர்ந்து செயல்படுவோமா?” என பரபரப்பாக கேட்டிருக்கிறார்.

ஆம், ‘சார்ஜ்பீ’ உருவாக்கத்தில் ஃப்ரெஷ்வொர்க்ஸ் கிரிஷ் மாத்ருபூதமின் தாக்கம் பிரதான காரணம். அவரை இன்ஸ்பிரேஷனாக கொண்டு கிரிஷ் சுப்ரமணியன் மற்றும் ராஜாராமுடன் இணைந்தவர்கள் தான் கேபி சரவணன், தியாகு. இருவருமே தமிழகத்தின் பிரதான நகரங்களான மதுரை போன்ற பகுதிகளை சேர்ந்தவர்கள் தான். இருவருமே ஜோஹோவில் டெக்னலாஜி டீமில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்தவர்கள். அந்த நண்பர்கள் கூட்டணி ஜோஹோவில் தங்கள் வேலையை உதறிவிட்டு ஸ்டார்ட்அப் எனும் அடுத்த பாய்ச்சலில் இறங்கினர்.
அந்த சமயத்தில்தான் கிரிஷ் சுப்ரமணியனின் மனைவி இன்போசிஸில் வேலை பார்த்து வந்தார். இதனால், அவரும் தைரியமாக வேலையை உதறி நண்பர்களின் ஸ்டார்ட்அப் அணியில் இணைந்தார். பிசினஸ் ரிஸ்க் என்பது பொதுவான பேச்சு. ஆனால், கிரிஷ் அன்ட் டீம் இந்த பிசினஸ் கனவுக்காக கடந்த சில ஆண்டுகளாகவே பக்காவாக திட்டமிட்டு அதற்கான பயிற்சியையும் எடுத்து வந்ததால் அது அவர்களுக்கு ஒரு டாஸ்க்காகவே தெரிந்தது.
பொதுவாக ஒரு தீவிரமான ஐடியா இருக்கும். அதன் அடிப்படையில்தான் ஸ்டார்ட்அப் பிசினஸ் தொடங்கப்படும். ஆனால், இவர்களின் பயணத்தில் ஐடியா மெயின் இல்லை. அவர்கள் ரசித்து வேலை பார்ப்பதற்கான ஒரு வீடாக அவர்கள் நிறுவனத்தை உருவாக்க விரும்பினார்கள். ஆளுக்கு மாதம் ரூ.1 லட்சம் சம்பளமாக கிடைக்க வேண்டும். அதிகபட்சம் 30 பேருக்கு மேல் கம்பெனியில் இருக்கக் கூடாது. மொத்தத்தில் ஜாலியான ஒரு ஸ்டார்ட்அப். இதுதான் அவர்கள் திட்டம்.
இந்த திட்டத்தை செயல்படுத்த ஒரு பிரச்சினையை அடையாளம் கண்டு அதற்கான தீர்வை உருவாக்க நினைத்தனர். அதன்படி, சவாலான பிரச்சினையான சப்ஸ்கிரிப்ஷன், ரெவன்யூ மேனேஜ்மென்ட் ஆகியவற்றில் உள்ள சிக்கலுக்கு தீர்வு வழங்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
இப்படித்தான் ‘சார்ஜ்பீ’-க்கான ஐடியா உருவானது. தீர்வை உருவாக்கி அதனை சாஸ் தொழிலநுட்பத்தில் விற்றனர். முதல் 5 ஆண்டுகள் தட்டுத்தடுமாறி சென்ற பிறகு வெளிநாடுகளில் சார்ஜ்பீ தயாரிப்புக்கான சந்தை கிடைக்க ஆரம்பித்தது. இதனால், புதிய உத்திகளை வகுத்து தீவிரமாக செயல்பட்டனர். 2018-ல் 15 மில்லியன் டாலர் நிதி கிடைக்க, அதன் பிறகு ‘சார்ஜ்பீ’ எதிர்பார்க்காத அசுர வேகத்தில் வளர ஆரம்பித்தது.
இதற்கிடையில் 2021-ல் டைகர் குளோபல் மற்றும் இன்சைட் வென்சர்ஸ் பார்ட்னர்ஸ், ஸ்டெட்வீயு கேபிடல் நிறுவனம் ஆகியோரின் முதலீடுகள் உதவியுடன் சார்ஜ்பீ 1.4 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் யூனிகார்ன் அந்தஸ்தை பெற்றது.
நிறுவனம் வளரவளர அதன் தன்மையும் மாறும். அந்த வகையில் சார்ஜ்பீ-யின் வாடிக்கையாளர்களில் 99% பேர் ஐரோப்பா, அமெரிக்காவைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். முதல் 10 ஆண்டுகள் இந்தியாவில் இருந்தே இதை சமாளித்தாலும், நிறுவனம் பெரிய அளவில் வளர்ந்து விட்டதால் வாடிக்கையாளர்களுக்கு அருகில் இருந்து செயல்பட வேண்டிய தேவை உண்டானது. எனவே, சென்னையில் இருந்த ‘சார்ஜ்பீ’-யின் தலைமையகம் நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமுக்கு மாறியது.
நமக்கு தெரியாத விஷயத்தை வெளியில் இருந்து பார்க்கும்போது அது மிரட்சியாகவும் புதிராகவும் இருப்பது இயல்பு. ஆனால், தைரியமாக அதனுள் இறங்கி, அடிப்படையை அலச ஆரம்பித்தால் அதன் மொத்த விஷயமும் நமக்கு புலப்படவும் ஆரம்பிக்கும். அதை கற்று தேறவும் முடியும். அதில் நம்மால் சிறப்பாக செயல்பட முடியும். இதுதான் ‘சார்ஜ்பீ’-யின் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.
கிரிஷ் அண்ட் டீமிடம் இருந்தது ஸ்டார்ட்அப் பிசினஸ் கனவு மட்டும்தான். அவர்களிடம் ஐடியா கூட இல்லை. ஆனால் அவர்கள் எதையும் மிரட்சியாக பார்க்கவில்லை. மாறாக, தைரியத்துடன் களத்தில் இறங்கினர். விளைவு, இன்று ஏஐ தொழில்நுட்ப நிறுவனம் உட்பட பல சிறிய கம்பெனிகளை கைப்பற்றி, ரூ.30,000 கோடி மதிப்பு கொண்ட நிறுவனமாக ‘சார்ஜ்பீ’ தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துவருகிறது.