
‘யுனிக்’ கதை 49: Groww
பங்குச் சந்தையில் முதலீடு என்பது இப்போது பெரும்பாலோனோருக்கு தெரிந்ததாகவும், பெரும்பாலோனோர் எளிதாக அணுகக் கூடியதாகவும் மாறியிருக்கிறது. அதற்கான நிறைய வழிகளும் ஏற்பட்டுள்ளன. கையில் கொஞ்சம் பணம், ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால் போதும், முதலீடு செய்வது எளிது என்கிற நிலை உருவாகியிருக்கிறது. ஆனால், 10 வருடங்களுக்கு முன்பு முதலீடு செய்வது என்பது அப்படி இல்லை. வங்கிகளில் விண்ணப்பித்து நீண்ட காகித வேலைக்கு பிறகு பல நாட்களுக்கு பிறகே அதனை செய்ய முடியும்.
அதைத் தாண்டி செல்லும்போது முகவர்கள் உள்ளிட்ட பல சிக்கல் இருப்பதால், பங்குச் சந்தை அனுபவம் என்பது அப்போதெல்லாம் ஒரு கனவாகவே இருந்தது. தற்போது அந்த சிக்கல்களை எல்லாம் தீர்த்து இந்தியர்களின் முதலீட்டு சந்தையை ஃபின்டெக் நிறுவனங்கள் மாற்றி வருகின்றன. அவற்றில் முன்னணியில் இருக்கும் நிறுவனம்தான் இந்த அத்தியாயத்தின் யூனிகார்ன் கதை.
லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு முதலீட்டை எளிதாக்கிய நிறுவனம் Groww. இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் ஃபின்டெக் களத்தில், மில்லியன் கணக்கான முதல் முறை பயனர்களுக்கு முதலீட்டை எளிதாக்கும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தியாக அந்நிறுவனம் உருவெடுத்துள்ளது. அதன் வளர்ச்சியும் மாற்றத்தை ஏற்படுத்திய கதையும்தான் இந்த யூனிகார்ன் எபிசோடு. அந்நிறுவனம் தான் 'க்ரோவ்’ (Groww).

கோலோச்சிய பங்குத் தரகு செயலி Groww
2022-ம் ஆண்டு வெளியான ஒரு செய்தி, ‘இந்திய ஃபின்டெக் ஸ்டார்ட்அப் நிறுவனமான க்ரோவ்-வில் முதலீடு செய்திருக்கிறார் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா’ என்பதுதான். அதற்கடுத்த இரண்டு ஆண்டுகளில் வெளியான செய்தி இது...
கொரோனா பெருந்தொற்று காலகட்டத்துக்குப் பிறகு இளம் தலைமுறையினர் பலர், ஆப் மூலமாக அதிக அளவில் பங்குச்சந்தை சார்ந்த முதலீடுகளில் முதலீடு செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். குறிப்பாக, பலரும் ‘க்ரோவ்’ அப்ளிகேஷனை பயன்படுத்தி முதலீடு செய்கிறார்கள். பயன்படுத்தவும், பங்கு மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை எளிதாக கையாளும் வகையிலும் இந்த ஆப் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் அதற்கு காரணம். இதனை நாங்கள் சொல்லவில்லை, 2024 ஜூன் மாதம் வந்த என்.எஸ்.இ தரவுகள்.
NSE ரிப்போர்ட்டில் வெளிவந்த விஷயம் இதுதான்: ‘க்ரோவ்’ செயலியின் தனிப்பட்ட வாடிக்கையாளர் குறியீடு (Unique Client Code) 1.36 கோடி என்பதே. அதாவது, மொத்த தனிப்பட்ட வாடிக்கையாளர் குறியீட்டு எண்ணிக்கை 4.14 கோடி தான். அதில் கால் பகுதியை க்ரோவ் செயலி கொண்டிருப்பது தான் அந்த ரிப்போர்ட்டின் ஹைலைட். ஆக்டிவ் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் அதிகம் என்கிற இந்த மைல்கல்லை எட்டிய நாட்டின் முதல் பங்குத் தரகு செயலியும் ‘க்ரோவ்’ மட்டுமே.

மூலவர்களாக நால்வர்
இந்தியா போன்ற நாட்டில் பங்குச் சந்தை முதலீட்டில் இத்தனை பெரிய மக்களை திரட்டுவது என்பது சாதாரண காரியமல்ல. அதனை ‘க்ரோவ்’ அசால்ட்டாக செய்திருக்கிறது என்பதன் பின்னணியில் அதன் காரணகர்த்தக்களாக, அதன் மூலவர்களாக இருக்கும் நால்வர்தான். அவர்களில் முதன்மையானவர் லலித் கேஷரி. மற்ற மூவர் ஹர்ஷ் ஜெயின், இஷான் பன்சால், நீரஜ் சிங் ஆகியோர் தான்.
லலித் கேஷரி: க்ரோவ் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி இவர். ஐஐடி பாம்பேயில் பி.டெக் மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் முடித்தவர். படிப்பில் படுசுட்டி.
ஹர்ஷ் ஜெயின்: க்ரோவ் நிறுவனத்தின் இணை நிறுவனர், சிஓஓ ஹர்ஷ். ஐஐடி டெல்லியில் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். இதுதவிர, UCLA ஆண்டர்சன் மேலாண்மைப் பள்ளியில் தயாரிப்பு மேலாண்மை மற்றும் சந்தைப்படுத்தல் தொழில்நுட்பத்தில் எம்பிஏ பட்டமும் பெற்றிருக்கிறார்.
இஷான் பன்சால்: க்ரோவ் நிறுவனத்தின் மற்றொரு இணை நிறுவனர் இஷான். பிட்ஸ் பிலானியில் பிடெக் மெக்கானிக்கல் இன்ஜினியரிங், சிஎஃப்ஏ நிறுவனத்தில் முதுகலை பட்டம், ஜாம்ஷெட்பூரில் எக்ஸ்எல்ஆர்ஐ கல்வி நிறுவனத்தில் எம்பிஏ முடித்த இஷான் பன்சாலுக்கு ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ், நாஸ்பர்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவமும் உண்டு.
நீரஜ் சிங்: க்ரோவ் நிறுவனத்தின் இணை நிறுவனர் என்பதை தாண்டி அதில் சிடிஓ ஆகவும் செயல்படுபவர்தான் நீரஜ். குவாலியரில் உள்ள ITM பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பம் படித்த இவர், அடிப்படையில் ஒரு சாப்ட்வேர் இன்ஜினீயர். Ivy Computech போன்ற நிறுவனங்களில் அட்வான்ஸ் கம்ப்யூட்டிங் உள்ளிட்ட பிரிவுகளில் பணிபுரிந்திருக்கிறார்.
இந்த நால்வரும் வெவ்வேறு பின்னணியை கொண்டவர்கள். ஆனால், இவர்கள் அனைவரும் இணைந்துதான் ‘க்ரோவ்’ நிறுவனத்தை வளர்த்தெடுத்துள்ளனர். அதற்கு இவர்களை இணைத்த மைய புள்ளி யார்? அதனை தெரிந்துகொள்ள லலித் கேஷரியின் கதையில் இருந்து தொடங்குவோம்.

Groww நிறுவனத்தை நிறுவிய நால்வர் படை!
கல்விதான் ஆயுதம்...
மத்தியப் பிரதேசத்தின் கார்கோன் மாவட்டத்தின் லெபா என்னும் சிற்றூர் தான் லலித் கேஷரியின் சொந்த ஊர். லலித்தின் தந்தை அடிப்படையில் ஒரு விவசாயி. ஆனால், கல்வியின் மதிப்பை நன்கு உணர்ந்தவர். அதனால், தனது மகனின் அறிவு தேடலை ஒருபோதும் ஊக்குவிக்க தவறவில்லை. தங்கள் ஊரில் கல்விக்கான அடிப்படை வசதி இல்லை என்பதால் அவரது தாத்தா, பாட்டியின் ஊரில் இருக்கும் ஆங்கில பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார். படிப்பில் படுசுட்டியாக இருந்தாக லலித் பள்ளிப்படிப்பை சிறப்பாக முடித்தார்.
அந்தக் குக்கிராமத்தில் தன்னை சுற்றியுள்ளவர்களுக்கு ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்கள் தெரியாத போதிலும் அதற்கான தேடலை தொடங்கிய லலித் நுழைவுத் தேர்வுகளில் வெற்றிபெற்று மதிப்புமிக்க ஐஐடி பாம்பேயில் சேர்ந்தார். லலித் ஐஐடியில் சேர்வதில் தமிழகம் முக்கியப் பங்கு வகித்தது என்பதுதான் இதில் சுவாரஸ்யம் தரக்கூடிய செய்தி. ஆம், சென்னையில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தின் உதவியுடன்தான் ஐஐடியில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வை லலித் வென்றுள்ளார்.
1999, 2000, 2001 ஆகிய ஆண்டுகளில் மும்பையில் பொதுவாக தொழில்முனைவோர் மனப்பான்மை அதிகரித்து வந்தது. எல்லோரும் ஸ்டார்ட்அப்கள், டாட்-காம்கள் போன்றவற்றைத் தொடங்கினர். அதே காலகட்டத்தல் தான் லலித்தும் அங்கே இருந்தார். அந்த நேரத்தில், பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யலாம் என்பதையும் அறிந்துகொண்டார் அவர். நிறைய புத்தகங்களைப் படிக்கும் பழக்கம் கொண்ட அவருக்கு அதன்மூலம் பங்குச் சந்தை பற்றிய அறிவையும் தேடிக்கொண்டார்.
பங்குச் சந்தை தெரிந்துகொண்டால் அதனை ஒரு வணிக வாய்ப்பாக மாற்றும் எண்ணம் அப்போது அவருக்கு இல்லை. மாறாக, ஒரு மாணவனாக மருத்துவ தொழில்நுட்ப சாதனங்கள் தொடர்பான ஸ்டார்ட்அப்பை தொடங்கினார். தனக்கு இருந்த சொந்த பிரச்சினையை மையமாக வைத்து இந்த ஸ்டார்ட்அப்பை அவர் தொடங்கியிருக்கிறார். உடம்பில் இருக்கும் அலர்ஜியை கண்டுபிடிக்கும் கருவி இந்த ஸ்டார்ட்அப்பின் கான்செப்ட். ஐஐடி புராஜெக்ட்டின் ஒரு பகுதியாக இதனை தொடங்கிய லலித்தின் அடுத்த ஸ்டார்ட்அப் இதேபோன்ற ஒரு சிக்கலை தீர்க்க முற்பட்டபோது உருவானது.

அப்போது ஒரு சிறிய நகரத்தில் இருந்த லலித், அங்கு போதுமான பயிற்சி வகுப்புகள் இல்லை என்பதை உணர்ந்து, மாணவர்கள் கல்வித் தேவையை இன்டர்நெட் மூலம் தீர்க்க நினைத்து தொடங்கியது தான் Eduflix எனப்படும் ஸ்டார்ட்அப். தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் Bijus-ன் அதே கான்செப்ட் தான் இந்த Eduflix. Bijus-க்கு முன்னோடியாக அப்போதே வீடியோக்கள் மூலம் அனைவருக்கும் கல்வியை வழங்கும் ஐடியாவை செயல்படுத்திக் காட்டிவிட்டார் லலித்.
ஆனால், இன்டர்நெட் பெரிதாக மக்களிடம் சென்று சேராத அக்காலகட்டத்தில் லலித்தின் Eduflix ஸ்டார்ட்அப் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. எனவே, அதனை இழுத்துமூடிவிட்டு முதலீட்டாளர்களின் முதலீட்டை திருப்பி கொடுத்துவிட்டார்.
மையப்புள்ளியாக ஃபிளிப்கார்ட்
அடுத்து என்ன? ஒன்று, எதாவது MNC கம்பெனிக்கு சென்று பணிபுரிவது அல்லது புதிய ஐடியாக்களை செயல்படுத்தி பார்ப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தார் லலித். அப்போது தான் ஃபிளிப்கார்ட், இந்தியாவில் வேகமாக வளர்ந்து வந்தது. தனக்கு இருந்த முதல் ஆப்ஷன்படி ஃபிளிப்கார்ட்டில் சேர்ந்தார்.
அந்த தருணத்தில்தான் ஃபிளிப்கார்ட் சில்லறை விற்பனையில் இருந்து சந்தைக்கு மாறிக்கொண்டிருந்தது. அதனை செய்த மேலாளர்களில் ஒருவராக லலித் இருந்தார். மேலும், புது புது மாற்றங்களுக்கு தயாராகிக் கொண்டிருந்த ஃபிளிப்கார்ட்டுக்கு அதனை செய்து கொடுக்கத் தொடங்கினார். அப்படி, ஃபிளிப்கார்ட் குயிக் போன்ற ஐடியாக்களை செயல்படுத்திய லலித், அந்நிறுவனத்தில் சந்தித்தவர்கள்தான் ஹர்ஷ் ஜெயின், இஷான் பன்சால், நீரஜ் சிங். ஆம், இந்த நால்வரையும் இணைத்த மைய புள்ளி ஃபிளிப்கார்ட். ஒரே நேரத்தில் அவர்களும் அங்கே தான் பணிபுரிந்தனர். ஆனால், வெவ்வேறு பிரிவை கையாண்டு கொண்டிருந்தனர்.
ஃபிளிப்கார்ட்டில் சந்தித்து நண்பர்களாக மாறிய இந்த நால்வருக்கும் இருந்த பொதுவான எண்ணம் பிசினஸ். அதற்கு விதை போட்டது லலித். ஆம், நால்வரிடம் சென்று “நான் ஏதாவது ஒன்றைத் தொடங்குவது பற்றி யோசித்து வருகிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டதும் லலித் தான். என்ன செய்யலாம் என தெரியாமல் இருந்தவர்களுக்கு ஃபின்டெக் நிறுவனம் ஒன்றைத் தொடங்கலாம் என்கிற யோசனை வருகிறது. தொழில்நுட்பத்தில் நல்ல அறிவுக்கொண்டிருந்த நீரஜ் அதற்கு தைரியம் கொடுத்தார். நிதித்துறையில் நல்ல அனுபவம் கொண்ட இஷான் இன்னும் அந்த ஐடியாவை மெருகேற்றினார்.
“இ-காமெர்ஸ் வணிகம், டாக்ஸி முன்பதிவு மற்றும் உணவு விநியோகம் உள்ளிட்ட துறைகளில் நுகர்வோர் அனுபவம் அடிப்படையில் மாறிக்கொண்டிருந்தது. இருப்பினும், நிதி சேவைகள் இன்னும் பழைய பாணியிலேயே இருந்தன,” - லலித்
லலித்தின் இந்தக் கூற்றுதான் ஃபின்டெக் தொடங்க வேண்டும் என்கிற யோசனையை கொடுத்தது. அதற்கு இன்னும் வலுசேர்த்தது, 2016-ல் இந்தியாவில் நடந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை.
‘க்ரோவ்’ உருவானது எப்படி?
இந்திய ஃபின்டெக் களத்தில் இது ஒரு மைல்கல் தருணம். பணமதிப்பிழப்புக்கு பின் பணப் பரிவர்த்தனைகள் அனைத்தும் ஆன்லைன் பரிவர்த்தனைகளாக மாறத் தொடங்கின. இந்தியா முழுவதும் 'UPI' பேச்சாக இருந்தது. UPI இந்தியாவில் நுகர்வோர்கள் தங்களது பணத்தை எவ்வாறு கையாளுகிறார்கள் என்பதில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
பழைய தலைமுறையினர் ரியல் எஸ்டேட் மற்றும் தங்கம் போன்றவற்றில் முதலீடு செய்ய விரும்பினாலும், மில்லினியல்கள் பங்குச் சதையில் அதிக நாட்டம் கொண்டிருந்தனர். ஆனால், பங்குச் சந்தை முதலீடு என்பது நீண்ட நெடிய செயல்முறையாக இருந்தது. லலித் போன்ற பங்குச் சந்தையை நன்கு அறிந்திருந்தவர்களும் இந்த செயல்முறைகளால் பிரச்சினைகளை எதிர்கொண்டனர். அதுதான் அவர்களை யோசிக்க வைத்தது.
இந்தியாவில் சிக்கலாக இருக்கும் முதலீடு செயல்முறையை தீர்க்க நினைத்தனர். இந்தியாவில் முதலீடு செய்யக்கூடிய வருமானம் கொண்ட சுமார் 200 மில்லியன் மக்கள் இருந்தாலும் 20 மில்லியன் மக்கள் மட்டுமே முதலீடு பக்கம் இருந்ததை அறிந்த லலித்தின் நண்பர்கள் குழு 180 மில்லியன் மக்களை முதலீடு செய்ய வைக்க வேண்டும், என தீர்மானித்தனர். அதற்கான எளிய வழியை தேடுவது தான் தாங்கள் தொடங்க நினைத்த பின்டெக் நிறுவனம் என்றும் முடிவெடுத்தனர்.

அப்படியாக 2016-ல் பெங்களூருவை தளமாகக் கொண்டு Groww என்ற ஆன்லைன் முதலீட்டு தளம் உதயமானது. மக்களுக்குத் தேவையான தகவல்கள், வளங்களை வழங்குவதும், முடிந்தவரை முதலீட்டை எளிமைப்படுத்துவதும் தான் ‘க்ரோவ்’ நிறுவனத்தின் ஒரே நோக்கம். இந்த ஸ்டார்ட்அப் 2016-ல் தொடங்கப்பட்டாலும், அதன் முதலீடு செய்ய ஏதுவாக அதன் செயலி மற்றும் வலைத்தளம் டிசம்பர் 2017ல் தான் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது.
முதலில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கான தளமாக ‘க்ரோவ்’ தொடங்கப்பட்டது. ஏற்கெனவே பிளே ஸ்டோரில் 30 அல்லது 40 செயலிகள் இருந்தன. அவற்றில் இருந்த சிக்கல்கள், இல்லாத வசதிகள் ஆகியவற்றை தீர்த்து ‘க்ரோவ்’ முன்னணி செயலியாக தொடங்கப்பட்டது. மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு தளமாக இருந்து பின்னர் ஸ்டாக், IPO, டிஜிட்டல் கோல்டு மற்றும் ETF ஆகியவை அனைத்திலும் முதலீடு செய்வதற்கு ஏற்ற ஒரே தளமாக கேபிடல் மார்க்கெட்டில் புதிய அடியெடுத்து வைத்தது.
2016-ல் தொடங்கிய உடன் ‘க்ரோவ்’ இமாலய வளர்ச்சியை பெறவில்லை. லலித் நண்பர்களின் இடைவிடாத முயற்சி, கடந்த கால தவறுகளில் இருந்து கற்றுக்கொண்ட பாடம் ஆகியவை இமாலய வளர்ச்சியை பெறாவிட்டாலும் அதலபாதாளத்துக்கு செல்வதில் இருந்து ‘க்ரோவ்’ நிறுவனத்தை காப்பாற்றியது. ஃபிளிப்கார்ட் போன்ற கடந்த கால நிறுவனங்களில் இருந்த தங்களுக்கு இருந்த அனுபவத்தை வைத்து மெல்ல மெல்ல ‘க்ரோவ்’ நிறுவனத்தை முன்னேற்றினர். தங்களின் ஒரே நோக்கமான முதலீட்டை எளிமையாக்குவதை முதலில் செய்துகாட்டினார்.
இதன்பின், தொடங்கிய முதல் 3 ஆண்டுகளில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு தளமாகவே செயல்பட்ட ‘க்ரோவ்’ அடுத்து வாடிக்கையாளர்களின் தேவையை உணர்ந்து ஸ்டாக், IPO, டிஜிட்டல் கோல்டு மற்றும் ETF என அடுத்தடுத்து நிறுவனத்தை விரிவாக்கியது. இன்டர்நெட்டின் வளர்ச்சியால் பங்குச் சந்தை முதலீடுகளை நோக்கி இந்தியர்கள் முன்னேற, பயன்படுத்துவதில் எளிமை உள்ளிட்ட காரணங்களுடன் 'க்ரோவ்' நிறுவனமும் முன்னேறியது. இதனால் முதலீடுகளும் குவிந்தன.

செக்கோயா கேப்பிடல் இந்தியா, Y காம்பினேட்டர், ரிப்பிட் கேப்பிட்டல், டைகர் குளோபல் மற்றும் ஐகானிக் க்ரோத் ஆகிய முதலீட்டு நிறுவனங்கள் 'க்ரோவ்'-வில் முதலீடு செய்ய துணிந்தன. இதனால் இந்திய மதிப்பில் சுமார் 1,800 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டது. இதன்பின், விளம்பர உத்தி, புதுமையான வசதிகள் என அடுத்தடுத்து தனது தளத்தை 'க்ரோவ்' விரிவாக்கிக் கொண்டே செல்ல 2021-ல் யூனிகார்ன் அந்தஸ்தையும் எட்டிப் பிடித்தது.
ஒருகட்டத்தில் அதீத வளர்ச்சியை கண்ட ‘க்ரோவ்’ நிறுவனத்தை மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா போன்ற தொழில்துறை ஜாம்பவான்களும் தேடிவந்தனர்.
இதனால், தொடங்கப்பட்ட ஏழு ஆண்டுகளில் நாட்டின் மிகப் பெரிய பங்குத் தரகு நிறுவனம் என்ற பெயருடன் எந்த நிறுவனத்திலும் இல்லாத வகையில் 1.5 கோடி (தற்போதைய நிலவரப்படி) பயனர்களை கொண்ட இந்திய பங்குச் சந்தை வரலாற்றில் தனிபுரட்சி செய்து வருகிறது ‘க்ரோவ்’ நிறுவனம்.
ஜெரோதா, ஏஞ்சல் ஆகிய நிறுவனங்கள் எல்லாம் ‘க்ரோவ்’ நிறுவன பயனர்களின் எண்ணிக்கையில் பாதியைக் கூட தொடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
“ஒரு தொழில்முனைவோருக்கு, அவர்கள் தீர்க்கும் பிரச்சினையில் ஆர்வமாக இருப்பது மிகவும் முக்கியம். முதலீடு செய்வது எங்கள் அனைவருக்கும் மிகவும் ஆர்வமாக இருந்தது. கல்லூரியில் முதல் வருடத்திலிருந்தே நான் முதலீடு செய்யத் தொடங்கினேன். அதுதான் இந்த அனைத்துக்கும் தொடக்கம்” - லலித்
ஆரம்பம் முதல் தற்போது வரை பெரிதளவு எந்த சிக்கலும், பிரச்சினையும் இல்லாமல் சீராக பயணித்து வருகிறது ‘க்ரோவ்’. இதன் அப்ளிகேஷனில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படுகிறது என்கிற ஒரே ஒரு குற்றச்சாட்டுதான். இந்த தொழில்நுட்ப சிக்கல்களை தீர்க்க தீவிரமாக செயலாற்றி வரும் ‘க்ரோவ்’ அடுத்து 8 பில்லியன் டாலரை இலக்காக கொண்டு ஐபிஓ வெளியிட போவதாக சத்யா நாதெல்லா அண்மையில் அறிவித்திருக்கிறார்.
யுனிக் கதைகள் தொடரும்...

#100UNICORNS | ‘யுனிக்’ கதை 48: PharmEasy - ஐவர் படையுடன் தொடங்கிய ‘சவாலே சமாளி’ கதை!