
‘யுனிக்’ கதை 47: CRED
கடந்த சில ஆண்டுகளாக புதிய நிறுவனங்கள் நிதிச் சந்தையில் நுழைந்து கலக்கி வருவதால், ஃபின்டெக் எனப்படும் நிதி சார்ந்த தொழில்நுட்பத் துறை புதுமையிலும் வளர்ச்சியிலும் மாபெரும் எழுச்சியைக் கண்டுள்ளது. இந்தத் துறையை சூறாவளியாய் தாக்கிய அத்தகைய ஒரு நிறுவனம்தான் ‘கிரெட்’ (CRED).
யுபிஐ செயலிகளின் வருகைக்கு முன்னால் ‘ஃப்ரீசார்ஜ்’ என்ற தளம் நம்மில் பலருக்கும் பரிச்சயமாக இருந்திருக்கும். ஆன்லைனில் செல்போன்களுக்கு ரீசார்ஜ் சேவையை வழங்கிக் கொண்டிருந்த தளம் அது. இதன் நிறுவனர் குணால் ஷா. இதே குணால் ஷாவால் 2018-ம் ஆண்டு பெங்களூருவில் தொடங்கப்பட்ட நிறுவனம்தான் ‘கிரெட்’.
2015-ம் ஆண்டு ஃப்ரீசார்ஜ் தளத்தை அப்போது இந்தியாவில் பிரபலமாக இருந்த ஸ்னாப்டீல் இ-காமர்ஸ் நிறுவனம் வாங்கியது. அதன்பிறகு, ஃப்ரீசார்ஜ் தளத்திலிருந்து வெளியேறிய குணால் ஷா, கிரெடிட் கார்டு பயனர்கள் சரியான நேரத்தில் பணம் செலுத்துவதற்கு சலுகைகளை வழங்கும் ஒரு தளத்துக்கு சந்தையில் ஒரு வெற்றிடம் இருப்பதை உணர்ந்தார்.
கிரெடிட் கார்டு நிறுவனங்கள் சலுகைகளையும் வெகுமதிகளையும் ஏற்கெனவே வழங்கினாலும், அவை பெரும்பாலும் கடுமையான விதிகளை கொண்டிருந்தன. இதனால் பயனர்கள் பணத்தை மீட்பது (Redeem) கடினமான ஒன்றாக இருந்தது. இந்த செயல்முறை எளிதாகவும் ஊக்கமளிப்பதாகவும் இருக்கும் என்று நம்பினார். அதிக மதிப்புள்ள வெகுமதிகளுக்கான தளத்தை உருவாக்குவதே அவரது நோக்கமாக இருந்தது.

கிரெட் நிறுவனத்தின் தனித்துவமான வணிக மாதிரி மற்றும் பயன்படுத்த எளிமையான செயல்முறை கிரெடிட் கார்டு பயனர்களிடையே விரைவாக பிரபலமடைந்தது. தொடங்கப்பட்ட ஓர் ஆண்டிலேயே 10 லட்சத்துக்கும் அதிகமான பயனர்களை ஈர்த்தது. மேலும், முதலீட்டாளர்களிடம் இருந்து 146 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியையும் திரட்டியது.
விரைவிலேயே கிரெட் நிறுவனம் அமேசான், ஃபிளிப்கார்ட் மற்றும் உபெர் போன்ற முன்னணி பிராண்டுகளுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து, பயனர்களுக்கு பிரத்யேக சலுகைகள், கேஷ்பேக்கை வழங்கத் தொடங்கியது. தொடங்கப்பட்ட மூன்றே ஆண்டுகளில் யூனிகார்ன் அந்தஸ்தை பெற்றது கிரெட். அதாவது, ஒரு பில்லியன் அல்லது அதற்கு மேற்பட்ட நிகர மதிப்பை தொடும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் யுனிகார்ன் நிறுவனங்கள் என்று அழைக்கப்படும்.
CRED வழங்கும் சேவைகள் என்னென?
> கிரெடிட் கார்டு சேவைகளுக்காக மட்டுமே தொடங்கப்பட்ட கிரெட், பின்னர் பல்வேறு நிதித் துறைகளில் தனது கரங்களை விரிவுபடுத்தியது.
> 15 மில்லியன் பயனர்களை கொண்டுள்ள கிரெட் நிறுவனம் உங்கள் அனைத்து கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளையும் ஒரே செயலியில் நிர்வகிக்க உதவுகிறது.
> இந்த செயலி உங்கள் கிரெடிட் கார்டு கட்டண விவரங்கள் மற்றும் அதன் காலக்கெடு தேதிகள் தொடர்பான தொடர் அறிவிப்புகளை உங்களுக்குத் தருகிறது.
> பரிவர்த்தனை செய்யும் அனைத்து பயனர்களுக்கும் கேஷ்பேக் மற்றும் வெகுமதிகளை வழங்குகிறது.
> பரிவர்த்தனை முடிந்ததும் பயனர்களுக்கு கிரெட் காயின்'கள்பாயின்ட்களை வழங்குகிறது.
> தொந்தரவு இல்லாத கட்டண முறைகளே கிரெட் சேவைகளின் சிறப்பம்சம்.
> காப்பீடு, வாடகை, கல்வி மற்றும் அனைத்து விதமான அதிக மதிப்புள்ள தவணை பரிவர்த்தனைகள் சேவைகளையும் வழங்குகிறது.

வருவாய் எப்படி கிடைக்கிறது?
‘கிரெட்’ மற்ற ஸ்டார்ட்அப்களில் இருந்து சற்று வித்தியாசமானது. பயனர்களுக்கு ஓலா, ஜொமேட்டோ, கிளியர்ட்ரிப் மற்றும் பல பிராண்டுகளின் பிரத்யேக வெகுமதிகள் மற்றும் சலுகைகளை அணுக இது சுலபமாக அனுமதிக்கிறது. ‘கிரெட்’ மூலம் செய்யப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் பிராண்டுகளிடம் இருந்து கமிஷன் வசூலிப்பதன் மூலம் இந்நிறுவனம் பணம் ஈட்டுகிறது.
இந்நிறுவனம், அதன் சமீபத்திய நிதியிலிருந்து திரட்டப்பட்ட பணத்தை புதிய சந்தைகளில் விரிவுபடுத்தவும், பிராண்டுகளுடன் அதிக பார்ட்னர்ஷிப்புகளை உருவாக்கவும், அதிகமானவர்களை வேலைக்கு அமர்த்தவும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
‘தனக்காக சுயநல நோக்கத்துடன் சம்பாதிப்பவர்களை விட பிறரைப் பணம் சம்பாதிக்க வைப்பதை நேசிப்பவனே கூடுதல் வருவாய் பெறுகிறான்!’
குணால் ஷாவின் இந்த வெற்றி மந்திரம்தான் ‘கிரெட்’ நிறுவனத்தின் பிசினஸ் மாடலுக்கு அச்சாரம்.

CRED-ன் பிசினஸ் மாடல்
கிரெட் நிறுவனம் ‘ஹோல் அண்ட் ஹூக்’ (Hole and Hook model) மாதிரியை அடிப்படையாகக் கொண்டு இயங்குவதாக ஸ்டார்ட்-அப் ஆய்வு கட்டுரை ஒன்று குறிப்பிட்டுள்ளது. அதாவது, பெரும்பாலான கிரெடிட் கார்டு பயனர்கள் தங்களது நிலுவை தொகையை சரியான நேரத்தில் செலுத்துவதில்லை. சரியான நேரத்தில் பணம் செலுத்தும் கிரெடிட் கார்டு பயனர்களுக்கு இந்நிறுவனம் சலுகைகளை வழங்குகிறது. பலன்கள் மதிப்புமிக்க வெகுமதிகள் வடிவில் வழங்கப்படுகின்றன.
கிரெடிட் கார்டு கட்டண முறையில் ஒரு ‘ஹோல்’ (துளையை) அமைத்து வாடிக்கையாளர்களை ஈர்க்க வெகுமதிகளில் ஒரு ‘ஹூக்’கை (கொக்கியை) வைக்கிறது. இது அவர்களின் நம்பகத்தன்மையை அதிகரிக்கும் ஒரு சிறந்த உத்தியாக பார்க்கப்படுகிறது.
அதேபோல், கிரெடிட் கார்டுகளில் மறைந்திருக்கும் கட்டணங்களை அப்பட்டமாகக் காட்டிக் கொடுத்து, உரிய தொகையை சரியான நேரத்தில் செலுத்தச் சொல்லி, மறைமுகக் கட்டணங்களில் இருந்து பயனர்களை மீட்கும் வேலையேயும் செய்கிறது கிரெட்.
குணால் ஷாவின் போராட்டங்களும் வெற்றியும்
கிரெட் நிறுவனர் குணால் ஷா, கல்லூரி காலம் முதலே தொழில்நுட்பம் குறித்து எப்போதும் ஆர்வம் கொண்டவர். தனது குடும்பத்தின் பொருளாதார நெருக்கடி காரணமாக டெலிவரி பாய் ஆகவும், டேட்டா என்ட்ரி ஆபரேட்டராகவும் பணியாற்றினார். சவால் மிகுந்த இந்த சூழலே அவரை ஃப்ரீசார்ஜ் மற்றும் கிரெட் போன்ற வெற்றிகரமான நிறுவனங்களை தொடங்குவதை நோக்கி உந்தித் தள்ளியது.
கிரெடிட் கார்டுகளை நிர்வகிப்பதற்கும், பயனர்கள் தங்கள் கிரெடிட் ஸ்கோரைக் கண்காணிப்பதற்கும் எளிதான தீர்வை வழங்க வேண்டியதன் அவசியமே அவருக்கு ஊக்கமாக மாறியது. இதன் மூலம், அவர் உருவாக்கிய செயலிதான் இன்று பல ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கும் முன்மாதிரியாக மாறியிருக்கும் ஒரு வெற்றிக் கதையாக திகழ்கிறது.

கிரெட் நிறுவனத்தைத் தொடங்குவதற்கு முன்பு, குணால் ஷா ஒரு கடுமையான தடுமாற்றத்தை எதிர்கொண்டார். அவர் Sequoia Capital of India நிறுவனத்தில் ஆலோசகராக இருந்தார். ஆனால், முதலீட்டாளராக மாறுவதற்கு பதிலாக தானே ஒரு சொந்த நிறுவனத்தைத் தொடங்கும் முடிவை துணிச்சலுடன் எடுத்தார் குணால் ஷா. தனது வெற்றிக்கான திறவுகோல் பற்றி குணால் கூறியது இதுதான்:
“ஒரு சிறந்த தயாரிப்பை உருவாக்குவதிலும் சிறந்த பயனர் அனுபவத்தை வழங்குவதிலும் நாங்கள் தனித்து கவனம் செலுத்தியதுதான் போட்டியாளர்களிடம் இருந்து தனித்து நிற்க எங்களுக்கு உதவியது என்று நான் நினைக்கிறேன். நாங்கள் எதை அடைய விரும்புகிறோம் என்பது பற்றிய தெளிவான பார்வையும் எங்களுக்கு இருந்தது; அதை நனவாக்குவதில் நாங்கள் மிகவும் ஆர்வமாக இருந்தோம்.”
தங்கள் கிரெடிட் ஸ்கோரைக் கண்காணிக்கவும், கிரெடிட் கார்டுகளை நிர்வகிக்கவும் விரும்பும் பயனர்களுக்கு இந்த செயலி தற்போது ஒரு பிரபலமான தேர்வாக மாறியுள்ளது என்பது வெறும் அதிர்ஷ்டத்தால் மட்டுமே நிகழ்ந்த ஒன்றல்ல. அதற்கு பின்னால் கடின உழைப்பும், திறன் மிகுந்த கூட்டு முயற்சியும் உள்ளது.
ஒரு நிறுவனத்தின் வெற்றிக்கு அதில் பணிபுரியும் ஒவ்வொரு தனி நபரின் உழைப்பும் முக்கியம் என்பதை குணால் ஷாவின் இந்த கூற்று நிரூபிக்கிறது:
“எனது தொலைநோக்குப் பார்வையைப் பகிர்ந்து கொள்ளும் திறமையான ஒரு குழுவைப் பெற்றதில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. மேலும், கிரெட் நிறுவனத்தை வெற்றிபெறச் செய்வதில் என்னைப் போலவே அவர்களுக்கும் ஆர்வம் அதிகம். அவர்கள் இல்லாமல், இந்த வெற்றி சாத்தியமில்லை.”
இந்நிறுவனம் விரைவில் தனது சேவைகளை விரிவுபடுத்தவும், பயனர்கள் தங்கள் நிதி ஆரோக்கியத்தை மேம்படுத்துவதை இன்னும் எளிதாக்கவும் திட்டமிட்டுள்ளது. இதற்காக உலகம் முழுவதும் உள்ள முன்னணி முதலீட்டாளர்களிடமிருந்து இதுவரை சுமார் 942 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளதாக tracxn தகவல் தெரிவிக்கிறது.

குணால் ஷாவின் தனித்துவமான அணுகுமுறையெ ‘கிரெட்’ எனும் ஃபின்டெக் கோட்டைக்கு அடித்தளம். கிரெடிட் கார்டு பயனர்களின் நேர்மையான நிதி நடவடிக்கைகளுக்கு வெகுமதி அளித்து, அவர்கள் பணத்தைச் சேமிக்க உதவும் இந்தத் தளம் ‘மற்றவர்களைப் பணம் சம்பாதிக்க வைப்பதும் தொழிலின் வெற்றிக்கு வித்திடும்’ என்பதை நிரூபித்துள்ளது.
குணால் ஷாவின் இந்த புதிய அணுகுமுறை என்பது வர்த்தகம், முதலீடுகள் குறித்த நம் எண்ணப் போக்குகளையும் மாற்றியமைக்க வல்லது. மற்றவர்களின் நிதி ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி அவர்களது அசையா நம்பிக்கையை முதலீடாக பெற்று விட்டால் நமது பொருளாதார வளமும் உயர்வடையும் என்பது சாத்தியமே.
வெற்றிக்கு ஒரே ஒரு பாதை மட்டுமே இல்லை என்பதற்கு கிரெட் ஒரு சிறந்த உதாரணம். ஓர் இளம் தொழில்முனைவோரின் கனவிலிருந்து சிறிய தொழிலாக தொடங்கப்பட்ட இந்த ஃபின்டெக் நிறுவனம் இப்போது எதிர்காலத்திற்கான பெரிய திட்டங்களுடன் ஒரு செழிப்பான வணிக கோட்டையாக மாறியுள்ளது.
யுனிக் கதைகள் தொடரும்...
#100UNICORNS | ‘யுனிக்’ கதை 46: Chargebee - தமிழர்களுக்கு பெருமிதம் தரும் ‘Saas’ சம்பவம்!