யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று ஐஏஎஸ் அதிகாரியாகுவது அத்தனை எளிதல்ல. அதற்கு விடாபிடியான வைராக்கியமும், கடின உழைப்பும் தேவை.
ராஜஸ்தானைச் சேர்ந்த 25 வயது இளம் ஐஏஎஸ் அதிகாரியான நேஹா பைத்வால், இவற்றிற்கெல்லாம் ஒரு படி மேல் சென்று தேர்விற்கான பயிற்சி காலத்தில், 3 ஆண்டுகள் ஸ்மார்ட் போனுடன் ப்ரேக் அப் செய்து, சோஷியல் மீடியாக்களுக்கு பை சொல்லி, கனவை அடைந்துள்ளார்...
யார் இந்த நேஹா பைத்வால்?
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் நேஹா பைத்வால். அவரது தந்தை ஷ்ரவன் குமாரின் அரசு வேலை காரணமாக, அவரது குடும்பம் நீண்ட காலத்திற்கு ஒரு நகரத்தில் தங்கியதில்லை. இதன் காரணமாக அவர் அடிக்கடி பள்ளிகளை மாற்ற வேண்டியிருந்தது. ஜெய்ப்பூரில் ஆரம்பப் படிப்பை முடித்த நேஹா, பின்னர் போபாலிலும், சத்தீஸ்கரிலும் அவரது கல்வியை முடித்தார்.
அவருடைய வாழ்க்கையின் முதல் தோல்வி 5 ஆம் வகுப்புத் தேர்வில் தோல்வியடைந்தபோது ஏற்பட்டு உள்ளது. ஆனால், அந்தத் தேர்வின் முடிவுகளால் அவர் சோர்வடையவில்லை. ஒரு நேர்காணலில்,
"நேஹா அவர் குடும்பத்துடன் போபாலுக்கு ஷிப்ட் செய்தபோது, அங்கு புதிதாக சேர்ந்த பள்ளி ஆங்கிலவழி பள்ளி என்றும், அங்கு இந்தியில் பேசினால் அபராதம் விதிக்கப்படும்," என்றும் கூறினார்.
ஆனால், அவர் மொழியைக் கற்றுக்கொண்டார். படிப்பை முடித்த பிறகு ஒரு அரசு ஊழியரின் மகளாக, மூத்த வருமானவரித்துறை அதிகாரியான அவரது தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி சிவில் சர்வீசஸ் தேர்வை எழுத முடிவு செய்தார். ஆனால், இங்கும், அவர் மீண்டும் மீண்டும் தோல்விகளைச் சந்தித்தார். ஆனால், அது அவருக்கு புதிதல்ல என்பதால், விடாது முயன்றார்.
ஒரு முறை அல்ல, மூன்று முறை தேர்வில் தோல்வியடைந்தார். முதல் இரண்டு முயற்சிகளிலும் முதல்நிலைத் தேர்விலே தோல்வி. மூன்றாவது முயற்சியில், அவர் முதன்மைத் தேர்வை எழுதினார், மீண்டும் தோல்வியடைந்தார். மூன்று பின்னடைவுகளுக்குப் பிறகு,
அவரது ஸ்மார்ட் போனும், சோஷியல் மீடியாக்களும் பெரும் தடையாக மாறிவருவதை உணர்ந்தார். பின், ஸ்மார்ட்போனுடன் ப்ரேக் அப் செய்து முழுமூச்சாக தேர்விற்கு தயாராகுவதில் அவரை மூழ்கடித்தார். இப்படியாக, அவர் 3 ஆண்டுகளுக்கு ஸ்மார்ட் போனை பயன்படுத்தவேயில்லை.
ஸ்மார்ட் போனுடன் மட்டுமின்றி, மூன்று ஆண்டுகள், அவரது நண்பர்களிடமிருந்தும் குடும்பத்தினரிடமிருந்தும் கூட விலகியே இருந்தார். நாளொன்றுக்கு 17 முதல் 18 மணிநேரங்கள் படித்தார். எஸ்எஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றார். ஆனால் ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்று விருப்பத்தை நிறைவேற்ற கடினமாக உழைத்தார்.
இறுதியாக, அவருடைய கடின உழைப்பு பலனளித்தது. 2021ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில், 960 மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார். அவரது நான்காவது முயற்சியில் தேர்ச்சி பெற்று 24 வயதில் நாட்டின் இளம் ஐஏஎஸ் அதிகாரியானார்.
ஆனால், ஸ்மார்ட்போனையும், ப்ரெண்ட்ஸ் உடனான அவுட்டிங்கை சிவில் சர்வீஸ் தேர்வாளர்கள் துறப்பது தியாகமல்ல. அவர்களுக்காக அவர்களது பெற்றோர் எடுக்கும் முயற்சிகளே தியாகம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார் நேஹா.
"நாள் முழுவதும் வேலை செய்து வந்த டயர்ட்டிலும் என்னுடைய அப்பா, வீடு திரும்பிய 30 நிமிடங்களுக்குள், எனக்கு கணிதம் முதல் வரலாறு வரை பாடம் எடுப்பார். சிவில் சர்வீஸின் இறுதி கட்டமான இன்டர்வியூவில் தேர்ச்சி பெறுவதற்கு மொத்த குடும்பமும் ஒன்று சேர்ந்தது. எனது அண்ணன் முதல் அத்தை வரை எல்லோரும் இன்டர்வியூவை எதிர்கொள்ள என்னை தயார்படுத்தினர். இந்த பயணம் எங்களுக்கு கடின உழைப்பு, விடாமுயற்சி, வைராக்கியம், நேரத்தை எவ்வாறு தக்கவைத்து அதை நியாயமாகப் பயன்படுத்துவது என்பதை கற்றுக்கொடுத்தது," என்று கூறியுள்ளார்.
விவாதத்தை கிளப்பிய நேஹாவின் 'நோ போன்' உத்தி.!
ஐஏஎஸ் அதிகாரி நேஹா பைத்வாலின் யுபிஎஸ்சி தேர்வு ஆயத்த உத்தி ஆன, 'மொபைல் போன் பயன்படுத்தாமல் மூன்று ஆண்டுகள் கழித்தல்' என்பது சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, ஒரு வைரலான ஆன்லைன் விவாதமும் வெடித்துள்ளது.
யுபிஎஸ்சி தேர்வினை நேஹா அணுகிய முறையை பகிர்ந்த எக்ஸ் பயனர் ஒருவர்,
"யுபிஎஸ்சிக்கு தயாராகும் இம்முறை அகற்றப்பட வேண்டும் மற்றும் அழிக்கப்பட வேண்டும். 24*7 நேரமும் படித்து, தங்கள் படிப்பு அறைக்கு வெளியே இந்தியா எப்படி இயங்குகிறது என்பது பற்றிய எந்த யோசனையும் இல்லாத முழுமையான சோஷியோபாத்கள் இறுதியில் பொதுமக்களை ஆளத் தொடங்குகிறார்கள்..." என்று காட்டமாக கேப்ஷனிட்டு பகிர்ந்திருந்தார்.
கிட்டத்தட்ட, அப்பதிவு 1 மில்லியன் மக்களின் பார்வைக்கு சென்ற நிலையில், விவாதத்தை கிளப்பியது. இத்தகைய தீவிரமான தனிமைப்படுத்தல், நிஜ உலக புரிதலை விட மனப்பாட கற்றலை மதிக்கும் குறைபாடுள்ள யுபிஎஸ்சி தேர்வு மாதிரியை பிரதிபலிக்கிறது என்று விமர்சகர்கள் வாதிடுகின்றனர். மேலும், இம்மாதிரியான கற்றல் முறையானது, சேவை செய்யவுள்ள மக்களிடமிருந்து துண்டிக்கப்பட்ட அதிகாரிகளை உருவாக்குகிறது என்று குற்றம் சாட்டினர்.
பல்வேறு பயனர்கள் இந்த விமர்சனத்தை ஒட்டுமொத்த நிர்வாகப் படிநிலைக்கு எடுத்துச் சென்றனர். பெரும்பாலான ஐஏஎஸ் அதிகாரிகள் அவர்களின் கல்வி சாதனைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள், ஆனால் உண்மையான உலக அல்லது கள அனுபவம் இல்லை என்று கூறினர். இந்த அதிகாரிகள் நிர்வாகம் உண்மையில் எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் கற்றுக்கொள்வதற்குப் பதிலாக கோச்சிங் மெட்டீரியல்கள் மூலம் கற்பிக்கப்படுகிறார்கள் என்றும் விமர்சகர்கள் குறிப்பிட்டனர்.
நேஹா பைத்வாலுக்காக சிலர் குரலும் கொடுத்தனர். உலகின் மிகவும் சவாலான தேர்வுகளில் ஒன்றான இந்தத் தேர்வில் வெற்றி பெறுவதற்குப் பின்னால் உள்ள மிகப்பெரிய அழுத்தத்தையும் போட்டியையும் நினைவில் கொள்ளுமாறு எதர்மறைவிமர்சகர்களுக்கு கருத்து தெரிவித்தனர்.
யுபிஎஸ்சி கலாச்சாரத்தை உடைக்கும் திட்டத்திற்கு வேறொருவர் கிண்டலாக பதிலளிக்கையில், "இல்லையெல், யாரைப் பொறுப்பில் வைக்கவேண்டும், செல்வாக்கு செலுத்துபவர்களா?", போனுடன் தொடர்பு இல்லாமலிருப்பதால், நிகழ்தகவலுடன் தொடர்பில் இல்லை என்று அர்த்தமல்ல என்று கூறினர்.
நேஹா போன்ற தேர்வாளர்கள் நடப்பு நிகழ்வுகளை அறிய செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளுடன் புதுப்பித்த நிலையில் இருந்திருக்கலாம் என்று அவர்கள் சுட்டிக்காட்டினர்.
"அவர் தனது தொலைபேசியைப் பயன்படுத்தவில்லை, ஆனால் அன்றைய செய்திகளுக்கும், இந்தியாவில் என்ன நடக்கிறது, எப்படி செயல்படுகிறது என்பதை அறிய அவர் செய்தித்தாளைப் படித்துக்கொண்டிருக்கலாம்," என்று ஒரு ஆதரவாளர் குறிப்பிட்டுள்ளார்.