+

‘என் அம்மா நகையை அடகு வைத்து கேரம் விளையாட அனுப்பினார்’ - மாலத்தீவில் தங்கம் வென்ற உலக சாம்பியன் கீர்த்தனா!

மாலத்தீவில் நடைபெற்ற கேரம் உலகக் கோப்பை போட்டியில் மூன்று பிரிவுகளில் தங்கப்பதக்கம் வென்று உலக சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார் சென்னையைச் சேர்ந்த கீர்த்தனா. சென்னை திரும்பிய அவர், விமான நிலையத்தில் வைத்து ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், ‘ஏழ்மையான சூழலில், அப்பா இல்லாத நிலையில், தனி மனுஷியாக வீட்டு

மாலத்தீவில் நடைபெற்ற கேரம் உலகக் கோப்பை போட்டியில் மூன்று பிரிவுகளில் தங்கப்பதக்கம் வென்று உலக சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார் சென்னையைச் சேர்ந்த கீர்த்தனா.

சென்னை திரும்பிய அவர், விமான நிலையத்தில் வைத்து ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், ‘ஏழ்மையான சூழலில், அப்பா இல்லாத நிலையில், தனி மனுஷியாக வீட்டு வேலைகள் செய்தும்,  தன் நகைகளை அடகு வைத்தும், தன் அம்மா தன்னை போட்டிகளுக்கு விளையாட அனுப்பியதாக,’ கண்ணீருடன் கூறியது நெகிழ்ச்சியாக இருந்தது.

keerthana


3 பிரிவுகளில் தங்கம் வென்ற கீர்த்தனா

7வது உலகக் கோப்பை கேரம் போட்டி, மாலத்தீவு நாட்டில் தலைநகர் மாலேவில் நடைபெற்றது. இந்தத் தொடரில் இந்தியா சார்பில் பங்கேற்ற அணியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகள் கீர்த்தனா, காசிமா மற்றும் மித்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் இந்திய அணி பல பிரிவுகளிலும் வெற்றியைக் குவித்தது. இதில், குறிப்பாக சென்னைக் காசிமேட்டைச் சேர்ந்த கீர்த்தனா, மகளிர் ஒற்றையர் பிரிவு, மகளிர் இரட்டையர் பிரிவு மற்றும் குழு போட்டி என மூன்று பிரிவுகளிலும் தங்கப்பதக்கம் வென்றார். ஒற்றையர் பிரிவில் பெற்ற வெற்றி மூலம் கேரம் உலக சாம்பியன் பட்டம் கீர்த்தனாவிற்குக் கிடைத்துள்ளது.

உலகக் கோப்பைத் தொடர் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கீர்த்தனா உள்ளிட்ட தமிழக வீராங்கனைகள் நேற்றிரவு சென்னை வந்தடைந்தனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Keerthana

அம்மா செய்த தியாகங்கள்

இந்த வரவேற்பு நிகழ்வில் சம்பந்தப்பட்ட வீராங்கனைகளின் குடும்பத்தார், உறவினர்கள் மற்றும் நண்பர்களும் கலந்து கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அப்போது சன் நியூஸ் தொலைக்காட்சிக்கு கீர்த்தனா அளித்த பேட்டியில், ‘வறுமையான சூழலில் தனது தாய் செய்த தியாகங்களால்தான் தன்னால் இந்தளவுக்கு வெற்றிகளைக் குவிக்க முடிந்ததாக’ கண்ணீருடன் கூறியது பார்ப்பவர்களை நெகிழ்ச்சி அடைய வைத்தது.

சென்னை காசிமேட்டில் வசித்து வருகிறார் 21 வயதான கீர்த்தனா. கடந்த 2017ம் ஆண்டு அவரது தந்தை மரணமடைந்ததைத் தொடர்ந்து, கீர்த்தனாவின் தாய் இந்திராணி தான், கீர்த்தனா, அவரது அண்ணன் மற்றும் தம்பி என மூன்று குழந்தைகளை, வீட்டு வேலை செய்து அதில் கிடைத்த வருமானத்தில் வளர்த்துள்ளார்.

சிறுவயதில் இருந்தே கேரம் விளையாட்டின் மீது கீர்த்தனாவிற்கு ஆர்வம் இருந்துள்ளது. காசிமேட்டைச் சேர்ந்த மற்றொரு வீராங்கனையான காஸிமா என்பவரின் தந்தை மெஹபூப் பாஷாவிடம் சென்று, கேரம் பயிற்சிகளைப் பெற்றுள்ளார் கீர்த்தனா.

keerthana

நகையை அடகு வைத்த அம்மா

வறுமையான குடும்ப சூழலிலும், தன் வெற்றி மட்டுமே தனக்கான அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும் என்பதில் கீர்த்தனா தெளிவாக இருந்துள்ளார். அதனால்தான், தன் திறமையை வெளிப்படுத்த தன்னோடு சேர்ந்து கஷ்டப்பட்ட தன் குடும்பத்தாரின் நிலையையும் மாற்ற வேண்டும் என நினைத்துள்ளார்.

“எனது அம்மா சிறிய வயதில் இருந்து ரொம்பவே கஷ்டப்பட்டுள்ளார்கள். நகையை எல்லாம் அடகு வைத்துத்தான் எனக்கு கேரம் விளையாட பணம் கொடுத்தார்கள். அவர் நகையைக் கழட்டி கொடுக்கும் போதெல்லாம் நான் நேரில் பார்த்துள்ளேன். மிகவும் மனதிற்குக் கஷ்டமாக இருக்கும். அழுகையாய் வரும். ஆனால் என் அம்மா, நகையைக் கழற்றி அடகு வைக்கிறோமே, எனக் கொஞ்சமும் கவலையே பட மாட்டார். நான் ஜெயித்தாலும், தோற்றாலும் அவர் வருத்தப்பட மாட்டார். மகளின் ஆசைக்காகச் செய்கிறோம் என்பது மட்டுமே அவரது ஒரே நோக்கமாக இருக்கும்.”

மற்ற வீடுகளில் பண வசதி இல்லையென்றால், பிள்ளைகளை விளையாட அனுமதிக்கவே மாட்டார்கள். ஆனால் என் வீட்டில் அப்படியில்லை. பணம் இல்லையென்றாலும் தொடர்ந்து எனது விளையாட்டிற்கு ஆதரவாக நின்றார்கள்.

“என் அம்மா என்னிடம் இதுவரை எதுவும் தனக்கெனக் கேட்டதில்லை. நம் வீட்டின் கஷ்டம் எல்லாம் உன்னால்தான் மாற வேண்டும். இந்தியாவிற்காக விளையாடி நீ வெற்றி பெற வேண்டும்,” என்று மட்டும் கேட்டுக் கொண்டார்.

அம்மாவின் ஆசைப்படியே தற்போது இந்தியாவிற்காக விளையாடி ஜெயித்து விட்டேன். எங்கள் வீட்டில் நாங்கள் நான்கு பேரும் படுப்பதற்குக்கூட போதுமான இடமில்லை. நான் வெற்றி பெற்று வாங்கிய பல கோப்பைகளை வீட்டில் வைக்க இடம் இல்லாமல், வெளி இடத்தில்தான் வைத்துள்ளேன்.

இந்த நேரத்தில் தமிழ்நாடு அரசிற்கு நான் வைக்கும் கோரிக்கை என்னவென்றால், எனக்குச் சொந்தமாக வீடு கட்ட உதவி செய்ய வேண்டும். அதோடு, எனக்கு அரசு வேலை கிடைக்கவும் உதவ வேண்டும். 

”என் போன்றோரின் வெற்றிதான், என்னைப் போன்று பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தில் இருந்து சாதிக்க நினைப்பவர்களுக்கு உத்வேகத்தை அளிக்கும்,” என கண்ணீர் தழுதழுக்க பேசியுள்ளார் கீர்த்தனா.
More News :
facebook twitter