நம்மில் பெரும்பாலோருக்கு பணத்தை எப்படி நிர்வகிப்பது என்று கற்பிக்கப்படவில்லை. விரைவாக ஓய்வு பெறுவது எப்படி என்று சொல்லப்படவே இல்லை. கடினமாகப் படிக்கவும், நிலையான வேலையைப் பெறவும், 60 அல்லது 65 வயதில் ஓய்வு பெறவுமே நாம் கற்பிக்கப்பட்டிருக்கிறோம். ஆனால், உண்மை இதுதான்:
நான்கு தசாப்தங்களாக இடைவிடாமல் உழைத்து, உடல் சோர்வடைந்து, ஆற்றல் குறைவாக இருக்கும்போது சில வருடங்கள் ஓய்வெடுப்பது என்பது கனவு அல்ல.
நீங்கள் இன்ஸ்டாகிராமில் மேயும்போது, செவ்வாய்க்கிழமை மதியம் இ-மெயிலிலேயே முடிய வேண்டிய ஒரு மீட்டிங்கில் அமர்ந்திருக்கும் நேரத்தில், உங்கள் வயதுடைய ஒருவர் ஐரோப்பாவில் பயணம் செய்வதையோ அல்லது, தனது சொந்த தொழிலையோ உருவாக்குவதையோ பார்க்கிறீர்கள். அவர்கள் அதிர்ஷ்டசாலிகள் அல்ல. அவர்கள் பொருளாதார ரீதியாக சுதந்திரமானவர்கள்.
நல்ல செய்தி என்னவென்றால் நீங்களும் அதை அடையலாம், அதுவும் 45 வயதிற்குள். நீங்கள் 20 வயதினராக இருந்தாலும் சரி, 30 வயதினராக இருந்தாலும் சரி, நிதி சுதந்திரத்திற்காக திட்டமிட இதுவே சரியான நேரம்.
சரி, ஏன் 45 வயது? ஏனென்றால், அது உங்களுக்கு ஆற்றல் மற்றும் நேரம் என்ற இரண்டு உலகங்களிலும் சிறந்ததைத் தருகிறது. 45 வயதிற்குள் நிதி ரீதியாக சுதந்திரமாக இருப்பது ஒரு குறிக்கோள் மட்டுமல்ல என்பதற்கான 7 கட்டாய காரணங்களை பார்க்கலாம்.
படம்: மெட்டா ஏஐ
1. முக்கியமான விஷயங்களுக்கு அதிக நேரம்
பெரும்பாலான மக்கள் தங்கள் சிறந்த ஆண்டுகளை மகிழ்ச்சிக்காக அன்றி, உயிர் வாழ்வதற்காகவே செலவிடுகிறார்கள். ஆனால், அந்த சூழ்நிலையை நீங்கள் மாற்ற முடிந்தால் எப்படி இருக்கும்? உங்கள் குழந்தையின் பள்ளி நிகழ்வுகளில் கலந்துகொள்வது, வயதான பெற்றோருடன் நீண்ட நேரம் செலவிடுவது அல்லது குற்ற உணர்ச்சியின்றி அமைதியாக ஒரு புத்தகத்தைப் படிப்பதை கற்பனை செய்து பாருங்கள்.
நேரம் என்பது ஒரு வரையறுக்கப்பட்ட வளமாகும். அது போய்விட்டால், அதை நீங்கள் திரும்பப் பெற முடியாது. 45 வயதிற்குள் நிதி சுதந்திரம் என்பது சம்பளத்தைத் நோக்கி ஓடுவது, ஆர்வங்களை துரத்துவது, உறவுகளை வளர்ப்பது மற்றும் முக்கியமானவர் நபர்களுக்கு நேரத்தை ஒதுக்குவது உள்ளிட்ட விஷயங்களை செய்ய உங்களை அனுமதிக்கிறது.
2. சோர்வு மற்றும் உடல்நலக் குறைவைத் தவிர்க்கவும்
40 வயதின் நடுப்பகுதியை அடையும் நேரத்தில், பலர் ஏற்கனவே முதுகுவலி, உயர் ரத்த அழுத்தம் முதல் நாள்பட்ட சோர்வு மற்றும் மன அழுத்தத்தால் ஏற்படும் பதற்றம் வரை உடல்நலப் பிரச்சினைகளுடன் போராடி வருகின்றனர். நீண்ட நேரம் வேலை செய்தல், மோசமான முதலாளிகள் மற்றும் வேலைப் பாதுகாப்பின்மை ஆகியவை எப்போதும் மாற்றியமைக்க முடியாத ஒரு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
உங்கள் வேலை உடல்நலத்திற்கு தீங்கு விளைவிப்பதாக இருந்தால் நீங்கள் அங்கு தொடர்ந்து பணிபுரிய வேண்டிய தேவையில்லை என்பதே நிதி சுதந்திரம் ஆகும். குற்ற உணர்ச்சியின்றி ஓய்வெடுக்கலாம், உங்கள் உடல் கேட்கும்போது இடைவெளி எடுக்கலாம், மன அழுத்தம் நிறைந்த வேலைகளை வேண்டாம் என்று சொல்லலாம்.
உங்கள் உடல்நலம் என்பது ஆடம்பரம் அல்ல. அதுவே உங்கள் எதிர்காலம். அதைப் பாதுகாக்கவும்.
3. கனவுத் திட்டங்களை விரைந்து தொடங்குங்கள்
பணம் ஒரு பிரச்சினையாக இல்லாவிட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? பெரும்பாலான மக்கள் தங்கள் ஆர்வங்களை ஒருபோதும் ஆராய்வதில்லை. ஏனெனில், அவர்கள் உயிர் வாழ்வதற்காகவே மிகவும் பிஸியாக வேலை செய்கிறார்கள். பொருளாதார சுதந்திரம் பரிசோதனைக்கான இடத்தை உருவாக்குகிறது.
படம்: மெட்டா ஏஐ
45 வயதில், அர்த்தமுள்ள ஒன்றை உருவாக்க உங்களுக்கு இன்னும் ஆற்றல், படைப்பாற்றல் உள்ளது. அது ஒரு நாவலை எழுதுவதாக இருந்தாலும் சரி, ஒரு முன்னெடுப்பை தொடங்குவதாக இருந்தாலும் சரி, அல்லது முழுநேர தன்னார்வத் தொண்டு செய்வதாக இருந்தாலும் சரி. இந்த சுதந்திரம் வருமானத்தை விட அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் ஒன்றை தேர்வுசெய்ய உங்களை அனுமதிக்கிறது.
4. ‘நோ’ சொல்லும் சுதந்திரம்
பெரும்பாலான மக்கள் தாங்கள் வெறுக்கும் வேலைகளிலோ அல்லது பணம் தேவைப்படுவதால் தங்களை துன்பகரமான சூழ்நிலைகளிலோ தள்ளுகின்றனர். நிதி சுதந்திரம் இந்தச் சங்கிலியை உடைக்கிறது. நீங்கள் இனி உங்கள் சம்பளத்துக்கோ அல்லது உங்கள் முதலாளியின் மனநிலைக்கோ பிணைக் கைதியாக இல்லை.
நல்ல ஊதியம் கிடைத்தாலும் உங்கள் உற்சாகத்தை உறிஞ்சும் ஒரு கடினமான வேலைக்கு ‘நோ’ என்று சொல்வதை கற்பனை செய்து பாருங்கள். வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே வேலை செய்வதற்கோ அல்லது விடுமுறை செல்வதற்கு ‘யெஸ்’ சொல்வதை கற்பனை செய்து பாருங்கள்.
நிதி சுதந்திரம் என்பது அதிக பணம் வைத்திருப்பது பற்றியது அல்ல. குறைவாகத் தேவைப்படுவது பற்றியதே அது. இனி நமக்கு பயன்படாத விஷயங்களில் இருந்து விலகிச் செல்வது பற்றி பார்ப்போம்.
5. பயணம் அல்லது இடம்பெயர்வதற்கான நெகிழ்வுத்தன்மை
கொரோனா தொற்று நமக்கு கற்றுக் கொடுத்தது என்னவென்றால், வாழ்க்கை கணிக்க முடியாதது என்பதே. 45 வயதிற்குள் பொருளாதார சுதந்திரம் என்பது, உலகை ஆராயவும், ஒவ்வொரு பருவத்திலும் வெவ்வேறு நகரங்களில் வாழவும் அல்லது உங்கள் கனவு இலக்கில் குடியேறவும் உதவும்.
அமைதியான மலை நகரமாக இருந்தாலும் சரி, கடலோர கிராமமாக இருந்தாலும் சரி, அல்லது ரோம் அல்லது கியோட்டோ போன்ற கலாச்சார தலைநகராக இருந்தாலும் சரி, நீங்கள் ஓய்வு பெறும் வரை காத்திருக்க வேண்டியதில்லை. நீங்கள் இளமையாக இருக்கும்போதே உங்கள் கனவு வாழ்க்கை முறையை வாழலாம்.
6. தலைமுறை செல்வத்தை உருவாக்குங்கள்
நிதி சுதந்திரம் என்பது உங்கள் பணத்தை அதிகரிப்பதை நிறுத்துவது என்று அர்த்தமல்ல. உண்மையில், இது நீண்ட கால செல்வத்தைத் திட்டமிட உங்களுக்கு அதிக நேரத்தை வழங்குகிறது. நீங்கள் முதலீடுகளில் கவனம் செலுத்தலாம், ரியல் எஸ்டேட் போர்ட்ஃபோலியோவை தொடங்கலாம் அல்லது ஆன்லைன் படிப்புகள், புத்தகங்கள் அல்லது வணிகங்கள் போன்ற டிஜிட்டல் சொத்துக்களை உருவாக்கலாம்.
இது உங்களுக்காக மட்டுமல்ல. இது உங்கள் குழந்தைகள், உங்கள் பெற்றோர் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கானது. நீங்கள் 45 வயதில் சுதந்திரமாக இருக்கும்போது, உங்கள் குழந்தைகளுக்கு ஆலோசனை மட்டுமல்லாமல், சொத்துக்களையும் பொருளாதார ஞானத்தையும் வழங்க முடியும்.
7. மன அமைதி மற்றும் நம்பிக்கை
உங்கள் கட்டணங்கள் செலுத்தப்பட்டுள்ளன, உங்கள் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கிறது, அவசரநிலைகள் உங்கள் வாழ்க்கையைத் தடம் புரள வைக்காது என்பதை அறிந்து கொள்வதன் மூலம் ஒரு மன அமைதி வருகிறது. இந்த அமைதி வங்கியில் உள்ள லட்சங்களை பற்றியது அல்ல. அது போதும் என்ற மனத்தை பற்றியது.
கட்டுப்பாட்டிலிருந்து நம்பிக்கை வருகிறது. உங்கள் நிதியை நீங்கள் கட்டுப்படுத்தும்போது, உங்கள் முடிவுகளை நீங்கள் கட்டுப்படுத்துகிறீர்கள். குறைவாக எதிர்வினையாற்றி, அதிக நோக்கத்துடன் இருக்கிறீர்கள். விரக்தியிலிருந்து அல்ல, தெளிவிலிருந்து முடிவுகளை எடுக்கிறீர்கள். அதுதான் உண்மையான செல்வம்.
நிதி சுதந்திரம் என்பது ஒரு கற்பனை அல்ல. அது ஒரு சூத்திரம். தீவிரமாக சேமியுங்கள். புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள். உங்கள் வருமானத்திற்குக் கீழே வாழுங்கள். வருமானத்தைப் பன்முகப்படுத்துங்கள்.
மிக முக்கியமாக, இன்றே தொடங்குங்கள். ஏனென்றால் நீங்கள் இதைப் படிக்கும்போதே, நேரம் நகர்ந்து கொண்டிருக்கிறது. அடுத்த 10 அல்லது 15 ஆண்டுகளில், நீங்கள் இப்போது விதைத்த விதை விருட்சமாக மாறும்.
45 வயதிற்குள் சுதந்திரம் என்பது முன்கூட்டியே ஓய்வு பெறுவது பற்றியது அல்ல. சிறப்பாக வாழவும், ஆழமான நேசிக்கவும், எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் வேலை செய்யவும் கூடிய மனநிலையை பற்றியது.
Edited by Induja Raghunathan