
ஆப்பிரிக்காவின் தான்சானியாவில் உள்ள கிளிமஞ்சாரோ மலையை ஏறிய ‘மிக வயதான இந்தியப் பெண்மணி’ என்ற பெருமையை பெற்றுள்ளார் சென்னையைச் சேர்ந்த 72 வயதான வித்யா சிங்.
கிளிமஞ்சாரோ சிகரத்தின் அடித்தள முகாமில் இருந்து 8 நாட்களில் கிட்டத்தட்ட 6,000 மீட்டர் உயரமான மலையை ஏறி சிகரத்தை அடைந்தார். மலையேறுபவர்கள் ஏற கனவு காணும் 7 கண்டங்களில் உள்ள ஏழு சிகரங்களில் கிளிமஞ்சாரோவும் ஒன்றாகும்.
யார் இந்த வித்யா சிங்?
வடக்கு ஆந்திராவில் உள்ள விஜயநகரத்தின் அரச குடும்பத்தில் பிறந்த வித்யாவின் வாழ்க்கை சாதாரணமானது அல்ல. சென்னையில் வளர்ந்த அவர், சர்ச் பார்க் மற்றும் ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரிகளில் பயின்றார். அவரது தந்தை கோல்ஃப், டென்னிஸ் மற்றும் குதிரை சவாரி விளையாட்டு வீரராவார். அவரது தாய் ஒரு சிறந்த டென்னிஸ் வீராங்கனை.
வித்யாவுக்கு ஸ்போர்ட்ஸ் என்பது ரத்தத்திலே ஊறியிருந்தது. குழந்தை பருவத்திலே அறிமுகப்படுத்தப்பட்டது. அவருடைய 13 அல்லது 14 வயதுகளில் டென்னிஸ் போட்டிகளில் அவரது தாயுடன் இணைந்து பங்கேற்றார்.
"என் தந்தையின் மூத்த சகோதரர் சுதந்திரத்திற்கு சற்று முன்பு 1945-ம் ஆண்டில் முடிசூட்டப்பட்ட கடைசி மகாராஜாவாக இருந்தார். தாய் - மகள் கூட்டணியாக டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்று வெற்றியை கைப்பற்றினோம். அப்போது அது பெண்கள் இரட்டையர் பிரிவில் போட்டியை வென்ற தாய் - மகள் அணி என தலைப்புச் செய்திகளாகவும் வெளியாகின" என்று பெருமையுடன் ஆரம்பக்கால வாழ்க்கையை நினைவுகூர்ந்தார் வித்யா.
மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் படித்து கொண்டிருந்த சமயத்தில், பல்கலைகழத்தின் மகளிர் டென்னிஸ் அணியின் தலைவராக இருந்தார். மாஸ்டர்ஸ் நீச்சல் சாம்பியன்ஷிப்பில் பதக்கங்களை வென்றுள்ளார்.
ஒவ்வொரு வார இறுதியிலும் சைக்கிள் ஓட்டும்குழுவான ‘தி ஸ்போக்ஸ்பர்சன்ஸ்’ உடன் இணைந்து 50-60 கி.மீ சைக்கிள் ஓட்டிவந்துள்ளார். மாரத்தான்களிலும் ஓடினார். குதிரை சவாரி செய்வதை விரும்பினார். இப்படியாக, அவரது விளையாட்டு பயணம் எக்காலத்திலும் ஓய்வடையாமல் தொடர்ந்து கொண்டேயிருந்துள்ளது.
விளையாட்டுகளுக்கு அப்பால், வித்யா அவரது நேரத்தையும் முயற்சியையும் பெண்கள் அமைப்புகள் மற்றும் தொண்டுக்காக அர்ப்பணித்துள்ளார். சர்வதேச மகளிர் சங்கத்தின் தலைவராக பணியாற்றுகிறார். மேலும் FICCI FLO, சொரோப்டிமிஸ்ட் இன்டர்நேஷனல் ஆகியவற்றில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
ஆதரவற்ற மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான கருணை பள்ளியின் புரவலராகவும் உள்ளார். இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக, அவரது கூட்டாளியான ரேகா ரங்கராஜுடன் ஒரு வெற்றிகரமான திருமணம் மற்றும் நிகழ்வு திட்டமிடல் வணிகத்தையும் நடத்தி வருகிறார்.
விளையாட்டு வாழ்க்கை, சமூகச் சேவை, தொழில்முனைவு என பன்முகத்தன்மையுடன் விளங்கும் அவர், 2013-ம் ஆண்டு முதல் மலையேற்றத்தில் ஆர்வம் கொண்டார். பல ஆண்டுகால விளையாட்டுகளின் மீதான ஆர்வமும், அவரது தொடர்ச்சியான பிட்னஸ் முயற்சிகளும், அவரை உலகத்தின் உச்சியில் நின்று பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டியுள்ளது.
ஒரு தசாப்தங்களுக்கும் மேலாக மலையேற்றத்தில் தீவிரமாக ஈடுப்பட்டு வரும் அவர், இதுவரை இந்தியா, பூட்டான் மற்றும் தென் அமெரிக்கா முழுவதுமுள்ள 19 உயரமான சிகரங்களில் ஏறியுள்ளார். அவற்றில், ஏழு மலையேற்ற சிகரங்களில் ஒன்றான மென்டோக் காங்ரி மற்றும் யூனாம் சிகரங்களும் அடங்கும். இருப்பினும், கிளிமஞ்சாரோ மலையேற்றம் இன்னும்கூட ஸ்பெஷல்.
கடந்த மார்ச் மாதம் 13-ம் தேதி அன்று கடல் மட்டத்திலிருந்து 5,895 மீட்டர் உயரத்தில், வித்யா சிங் கிளிமஞ்சாரோ மலையை ஏறிய வெற்றிகரமாக ஏறி, கிளிமஞ்சாரோ மலையேற்றத்தை முடித்த இந்தியாவின் மிக வயதான பெண்மணி என்ற பெருமையை அடைந்தார். மலையேறுபவர்கள் ஏற கனவு காணும் 7 கண்டங்களில் உள்ள ஏழு சிகரங்களில் கிளிமஞ்சாரோவும் ஒன்றாகும் என்பது கவனிக்கத்தக்கது.

72 வயதில் கிளிமஞ்சாரோ மலையேற்றம்...
கிளிமஞ்சாரோ ஒரு ‘மலையேற்றக்கூடிய சிகரம்’ என்றாலும், அதன் தீவிரமான நிலைமை கடுமையான அபாயங்களை ஏற்படுத்தக்கூடும் என்று வித்யா சுட்டிக்காட்டுகிறார். அர்ஜுன் கிருபால் சிங் தலைமையிலான சென்னையைச் சேர்ந்த மலையேற்ற நிறுவனமான கெட் அப் அண்ட் கோவுடன் மலையேற்றம் செய்வதே அவரது வழக்கம். கிளிமஞ்சாரோ பயணத்திற்காக, வித்யாவுடன் சேர்த்து 10 மலையேற்றக்காரர்கள், வழிகாட்டிகளின் ஆதரவுடன் மலையேற்றத்திற்கு தயாராக இருந்தனர்.
கிளிமஞ்சாரோ வழக்கமாக எட்டு நாள் மலையேற்றமாகும். 6-ஆம் நாள் இரவு சிகரத்திற்கான தொடக்கம் தொடங்கியது. பயணத்தின் மிகவும் வேதனையான பகுதி 5-ஆம் நாள் பாரன்கோ சுவரில் ஏறுவதே என்று நினைவுகூர்ந்தார் வித்யா.
பாரன்கோ சுவர் என்பது கிளிமஞ்சாரோ மலையின் ஒரு பகுதியான கிபோவின் தெற்கு சரிவில் அமைந்துள்ள ஒரு முக்கிய பாறையாகும். இது 900 அடி செங்குத்தான பாறை. பாரன்கோ சுவரில் இரண்டரை மணி நேர ஏறுதல் வித்யாவின் உடல் மற்றும் மன வலிமையின் ஒவ்வொரு வரம்பையும் சோதித்தது.
"நாங்கள் முகாமை அடைந்த மாலைபொழுதில் பாரன்கோ சுவரைப் பார்த்தோம், 'ஐயோ கடவுளே, இந்த பாறையில் எப்படி ஏறப் போகிறோம்?' என்று நாங்கள் நினைத்தோம். இது உண்மையில் மிகவும் சவாலானது, ஆனால் ஆச்சரியப்படும் விதமாக, நாங்கள் ஒவ்வொருவரும் அதை ரசித்தோம். ஏனென்றால், குறுகிய பாறைகளில் ஏறி அடுத்த இடத்திற்கு ஏறும் சவாலை நாங்கள் உண்மையில் ரசித்தோம்" என்றார்.
6-ஆம் நாள் இரவு 10.30 மணிக்கு மலையேற்றம் தொடங்கியது, மலையேறுபவர்கள் வழிகாட்டிகளைப் பின்தொடர ஹெட்லேம்ப்கள் மட்டுமே பாதையை ஒளிரச் செய்தன. பல மணிநேர கடுமையான இரவு மலையேறுதலுக்குப் பிறகு, விடியல் நெருங்கும்போது குழு ஸ்டெல்லா பாயின்டை அடைந்தது. பின்னர் கிளிமஞ்சாரோவின் உண்மையான சிகரமான உஹுரு சிகரத்தை அடைய மேலும் 45 நிமிடங்கள் நடைபயணம் மேற்கொண்டது.
"பாதைகள் குறுகலாகவும் வளைவாகவும் இருந்தன. அவை கிட்டத்தட்ட ஒரு ஜிக்ஜாக் போல செல்கின்றன. இது உயரத்தில் ஏறுவதை எளிதாக்குகிறது. சிகரத்தின் உச்சியிலிருந்து அடிவானத்தில் பகல் பொழுது விடிவதை பார்ப்பது நம்பமுடியாத அழகான காட்சி. வார்த்தைகளில் விவரிக்க இயலா அற்புதக் காட்சி அது. ஆனால் மைனஸ் 12 டிகிரி வெப்பநிலையிலும், சிகரத்தின் உச்சியை அடைய, அதிகமான மலையேறுபவர்கள் காத்துகொண்டிருப்பதால் அங்கே நீண்ட நேரம் இருப்பது கடினம்" என்று விவரித்தார் வித்யா.

"வயது ஒரு சாக்குப்போக்கு அல்ல..."
வயது எப்போதும் அவருக்கு தடையாக இருந்ததில்லை. ஏனெனில், பிட்னஸ் என்பது அவரது வாழ்வின் ஒரு அங்கம். எந்த காலக்கட்டத்திலும், அவர் உடற்பயிற்சி செய்வதை நிறுத்தியதே இல்லை. வாரத்திற்கு இரண்டு முறை வெயிட் லிப்டிங், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சைக்கிளிங், வாரத்திற்கு இரண்டு முறை ஸ்விம்மிங், ஒவ்வொரு முறையும் ஜிம்மில் உள்ள ஏணியைப் பயன்படுத்தி 30 நிமிட ஏறுதல் என அவரது பிட்னஸை சீராக கொண்டு செல்கிறார்.
ஒவ்வொரு மலையேற்றத்திற்கு முன்பும், ஐந்து வாரங்களுக்கு, சென்னையில் உள்ள செயிண்ட் தாமஸ் மவுண்ட் மற்றும் திருசூலம் மலைகளில் ஏறுகிறார். பெரும்பாலும், மன ஒழுக்கத்திற்காக அப்பயிற்சிகளை மேற்கொள்கிறார்.
"நீங்கள் ரிஸ்க் எடுக்க முடியாத இடம் இது. நீங்கள் ஒவ்வொரு அடியையும் கவனிக்க வேண்டும். விழுந்து எலும்பு உடைவது அல்லது சில கடுமையான காயங்கள் ஏற்படுவது என்பது மிகவும் எளிதானது. ஒவ்வொரு நாளும் ஆபத்து நிறைந்தது. அதனால், நீங்கள் ஏறும் போது விழிப்புடனும் கவனமாகவும் இருக்க வேண்டும்" என்று அவர் வலியுறுத்துகிறார்.
வித்யாவைப் பொறுத்தவரை, மலைகள் ஒரு ஆன்மிக தொடர்பையும் ஏற்படுத்துகின்றன.
"நீங்கள் மலைகளில் அதிகமாக இருக்கும்போது, அவை உங்கள் ஆன்மாவுக்குள் ஊடுருவுகின்றன, அங்கே உங்களுக்குள் ஏதோ நடக்கிறது. இயற்கையின் அழகின் நடுவில் மனிதர்களாக நாம் எவ்வளவு அற்பமானவர்கள் என்பதை நீங்கள் உணர்கிறீர்கள்" என்றார்.
கிளிமஞ்சாரோ சிகரத்தை வெற்றிகரமாக ஏறிய நிலையில், அடுத்ததாக ஐரோப்பாவின் மிக உயரமான சிகரமான எல்ப்ரஸ் மற்றும் ஃபுஜி மலைகளில் இப்போது அவரது பார்வைகள் பதிந்துள்ளன. எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவது குறித்து கேட்டபோது, 40 ஆண்டுகளுக்கு முன்பு மலையேற்றத்தைத் தொடங்கியிருந்தால், அதைச் செய்வதற்கான உந்துதல் தனக்கு இருந்திருக்கும், ஆனால் இப்போது அது அவரால் எட்ட முடியாதது என்று அவர் ஒப்புக்கொள்கிறார்.
பெண்களை வயதின் அடிப்படையில் மட்டுப்படுத்தப்படக் கூடாது என்று அவர் வலியுறுத்துகிறார். ஒவ்வொரு பெண்ணும் எழுந்து மலை ஏற வேண்டும் என்று அவர் பரிந்துரைக்கவில்லை என்றாலும், உடற்பயிற்சி செய்யவும், வலிமையை வளர்க்கவும், எதிர்ப்பு சக்தியை வளர்க்கவும் மற்றும் கார்டியோ ஃபிட்னஸைப் பயிற்சி செய்வதில் எந்தத் தவறுமில்லை என்று அவர் கூறுகிறார்.
"வயது ஒரு சாக்குப்போக்கு அல்ல. நீங்கள் செய்ய விரும்பும் எதையும் செய்வதிலிருந்து அது உங்களைத் தடுக்கக்கூடாது. நீங்கள் மலையேற்றத்தைத் தொடங்கியதும், நீங்கள் அதற்கு அடிமையாகிவிடுவீர்கள். உங்கள் மலையேற்றத்தின் பாதியிலேயே, உங்களது அடுத்த திட்டத்தைத் திட்டமிடத் தொடங்குவீர்கள்" என்று அவர் கூறி முடித்தார்.
Edited by Induja Raghunathan