இலவசமாக ஒரு ‘பீரியட் டிராக்கிங் ஆப்’ - ஈராவின் ‘அசன்’ முன்முயற்சி!

11:33 AM Jan 11, 2025 | jayashree shree

வாழ்க்கையின் பெரும் பகுதியை பீரியட் நாட்களாகவே கழிக்கும் பெண்களில் எண்ணற்றோருக்கு மாதவிடாய் குறித்த முழுமையான விழிப்புணர்வே இல்லை. ஏன், டெக் மயமான உலகிலும் மாதவிடாய் காலத்தில் பெருவாரியான பெண்கள் துணிகளையே பயன்படுத்துகின்றனர் என்கின்றன தரவுகள். அதற்கு அடுத்தப்படியாகவே நாப்கின்கள் இருக்கின்றன. ஆனால், அவை சுழலுக்கு ஏற்படுத்தும் தீங்கோ அலாதி.

சமூகத்திற்கு நன்மை அளிக்கும் விதத்திலும், பெண்களின் மாதவிடாய் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்திலும் மென்சுரல் கோப்பைகளை விற்கும் வணிகத்தையும், பீரியட் டிராக்கிங் ஆப் ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளார் ‘அசன்’ நிறுவனர் ஈரா குஹா.

மாதவிடாய் கால வறுமையை (மாதவிடாய் கால வறுமை என்பது மாதவிடாய் கால சுகாதார தயாரிப்புகள், கல்வி மற்றும் மாதவிடாயை நிர்வகிப்பதற்கான சுகாதார வசதிகள் இல்லாதாகும்.) எதிர்த்து போராடி வரும் ஈரா, 2021-ம் ஆண்டு மாதவிடாய் கோப்பையை தயாரிக்கும் அசன் எனும் நிறுவனத்தை தொடங்கினார்.

மெடிக்கல் தர சிலிகான் மூலம் தயாரிக்கப்பட்ட மாதவிடாய் கோப்பை, மற்ற கோப்பைகளை விட எளிதாக பயன்படுத்துவதற்கு ஏதுவாக ஒரு தனித்துவமான நீக்குதல் வளையத்தைக் கொண்டுள்ளது.

ஒவ்வொரு அசன் கோப்பையும் 10 ஆண்டுகளுக்கு மீண்டும் பயன்படுத்தக் கூடியது. ஒரு மாதவிடாய் கோப்பை 6,500 சானிட்டரி நாப்கின்களுக்கான மாற்றாகும். இந்த பிராண்ட் "ஒன்று வாங்கவும், ஒன்றை நன்கொடையாக வழங்கவும்" என்ற திட்டத்தை வடிவமைத்து சமூகத்தில் தாக்கத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

இதன்மூலம், விற்கப்படும் ஒவ்வொரு கோப்பைக்கான, நன்கொடை கோப்பையானது வருமான ரீதியாக பின்தங்கிய பின்னணியிலிருக்கும், மாதவிடாய் சுகாதாரம் தேவைப்படும் ஒரு பெண்ணுக்கு வழங்கப்படுகிறது.

இதுவரை அசன் நிறுவனம், 1,00,000 கோப்பைகளுக்கு மேல் விற்பனை செய்துள்ளது. மேலும் ஆசியா, ஆப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் 12 நாடுகளில் அதன் தயாரிப்புகள் கிடைக்கின்றன.

இந்நிலையில், மாதவிடாய் கோப்பை தயாரிப்புகளுடன் கூடுதலாக, அசன் சமீபத்தில் ‘அசன் பீரியட் டிராக்கர்’ செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது. The App Store மற்றும் Google Play-இல் கிடைக்கும் இந்த ஆப், பெண்களின் மாதவிடாய் சுழற்சியைக் கண்காணிக்கவும், உடல்நலப் பிரச்சினைகளை குறிக்கும் அறிகுறிகளைக் கண்டறியவும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உயரிய நோக்கங்களில் செயல்படும் நிறுவனத்தை பாராட்டும் விதமாக, கடந்த ஆண்டு சமூக தாக்கத்திற்கான கார்டியர் மகளிர் முன்முயற்சி பரிசு மற்றும் புதுமை யுகே அன்லாக்கிங் பொட்டன்ஷியல் விருது ஆகிய இரண்டு விருதுகள் வழங்கப்பட்டன.

பெங்களூருவின் கனகபுராவில், அசன் அதன் செயலியை அறிமுகப்படுத்தியபோது 10 கிராமங்களை தத்தெடுத்தது. இப்போது 100 கிராமங்கள் மற்றும் 30,000-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் பீரியட் கோப்பையை பயன்படுத்துகின்றனர். இது உலகின் மிகப் பெரிய மாதவிடாய் கோப்பை தத்தெடுப்பு திட்டமாகும்.

ஒரு பெண்ணின் வாழ்நாளுக்குமான ஆரோக்கியம் காட்டி!

குழந்தைகளைப் பெற நினைக்கும் வரை, மாதவிடாய் ஒழுங்காக இருக்கிறதா அல்லது மாதவிடாய் வலி இயல்பானதா என்பதைப் பற்றி ஒரு பெண் சிந்திப்பதில்லை. ஏன், குழந்தை பிறந்த பிறகும் கூட, வெகு சிலரே மெனோபாஸ் பற்றி பேசுகிறார்கள்.

"பீரியட் ட்ராக்கிங் ஆப்களில் கூட, கர்ப்பமாகுவதற்கு உங்கள் மாதவிடாயை எப்படிக் கண்காணிப்பது, ஓவுலேசன் நேரம் எப்போது என அனைத்தும் கருவுறுதலைச் சுற்றியே வடிவமைக்கப்பட்டுள்ளது. நாங்கள், பெண்களுக்கு அவர்களின் மாதவிடாய் காலம் என்பது அவர்களின் வாழ்நாள் முழுவதிற்குமான ஆரோக்கியத்தின் குறிகாட்டி என்பதை உணர்த்த விரும்பினோம். எங்களது பீரியட் ட்ராக்கிங் ஆப், மாதவிடாய் சுழற்சியின் அனைத்து கட்டங்களின் போதும், பயனர்கள் அவர்களது மனநிலை மற்றும் உடல் அறிகுறிகளைக் கண்காணித்து கொள்ள முடியும். ஒழுங்கற்ற மாதவிடாயினை எளிதாக கண்டறிய முடியும்" என்றார் ஈரா.

பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதை மட்டுமே நோக்கமாக கொண்ட அசன் பீரியட் டிராக்கர் செயலி 100 சதவீதம் இலவச பகுப்பாய்வு மற்றும் நுண்ணறிவுகளை வழங்குகிறது. கட்டணம் வசூலிக்கும் மற்ற ஆப்களைப் போலில்லாமல் அசன் இலவச சேவையை வழங்குகுகிறது.

பயனர்களிடமிருந்து பெறப்படும் தரவுகள் மூன்றாம் தரப்பினருக்கு பகிரப்படுவதோ அல்லது விற்கப்படுவதோ இல்லை. மேலும் செயலியில் விளம்பரம் எதுவும் இல்லை என்பதையும் ஈரா குறிப்பிட்டு கூறினார்.

பயனர்கள் எப்போது வேண்டுமானாலும் அவர்களது அக்கவுண்ட்டை டெலிட் செய்து கொள்ளலாம். ஆப்பின் மற்றொரு முக்கிய அம்சம், செயலியில் உள்ள சுற்றுச்சூழல் டிராக்கர் மூலம் பெண்கள் அவர்களது பீரியட் தயாரிப்புகளின் கார்பன் தடத்தையும் கண்காணித்து கொள்ள முடியும்.

"நீங்கள் நாப்கின்கள் அல்லது டம்பான்கள் பயன்பாட்டிலிந்து அசன் பீரியட் கோப்பைக்கு மட்டுமல்ல, துணி பேட்கள், பீரியட் உள்ளாடைகள் அல்லது மாதவிடாய் சுகாதாரத்திற்கான நிலையான மாற்றுத் தீர்வு எதற்கு மாறினாலும், ஆப்பில் நிகழ்நேரத்தில் உங்கள் கார்பன் தடயத்தைக் கண்காணிக்க முடியும். மேலும், நாப்கின்கள் அல்லது டாம்பான்கள் கழிவுகளாக நிலப்பரப்புகளுக்குச் செல்வதை நீங்கள் எவ்வளவு தடுத்துள்ளீர்கள்? எவ்வளவு பணம் சேமிக்கப்பட்டுள்ளது? எவ்வளவு கார்பன் உமிழ்வுகள் தவிர்க்கப்பட்டன என்பன போன்ற தகவல்களையும் செயலியில் தெரிந்து கொள்ளலாம்" என்று அவர் விவரித்தார்.

பெண்களால் பெண்களுக்காக பெண்களே உருவாக்கிய அசன் ஆப் !

மென்பொருள் வடிவமைப்பாளர்கள், முன்-இறுதி டெவலப்பர்கள் முதல் பின்-இறுதி டெவலப்பர்கள் வரை இச்செயலியை உருவாக்கிய முழுக் குழுவும் பெண்கள் மட்டுமே. அசன் கோப்பையின் பயனர்கள் சமூகத்தை செயலியின் முதல் பயனர்களாக மாற்றுவதை அவர்கள் நோக்கமாகக் கொண்டுள்ளனர்.

தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே, ஆப் 1,000 பதிவிறக்கங்களைத் தாண்டியுள்ளது. பயனர் அனுபவத்தை மேம்படுத்த, கோப்பையின் ஒவ்வொரு புதிய பயனருக்கும் பயன்பாட்டிற்கான பதிவிறக்க இணைப்புடன் மின்னஞ்சல் அனுப்பப்படுகிறது.

"இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஷாப்ஸி மற்றும் அமேசான் வணிகத் தளத்தில் விற்பனை செய்து வருகிறோம். பீரிட்ஸ் கோப்பையை கிருமி நீக்கம் செய்ய மாதவிடாய் கோப்பை சுத்தப்படுத்தியை அறிமுகப்படுத்தினோம். தவிர, டீன் ஏஜ் பெண்கள் கோப்பையை எளிமையாக பயன்படுத்த ஒரு லூப்ரிகண்டையும் அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்த வரிசையில் மற்ற தயாரிப்புகளையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்" என்கிறார் ஈரா.

சர்வதேச அளவிலும் அதன் வணிகத்தில் வளர்ச்சிக் கண்டுவரும் அசன் சமூக தாக்கத்திலும் கவனம் செலுத்தி வருகிறது. அதாவது "ஒன்றை வாங்குங்கள், ஒன்றை நன்கொடையாக கொடுங்கள்" என்ற கொள்கையை கடைப்பிடிக்கிறது. அதன்படி, வாடிக்கையாளர் ஒருவர் அசனின் பீரியட் கோப்பையை வாங்கும்போது, அதற்கான நன்கொடை கோப்பையை மாதவிடாய் சுகாதார வசதியை பெற முடியாத நிலையில் இருக்கும் ஒரு பெண்ணுக்கு வழங்கப்படுகிறது. ஆனால், அது போதாது என்று கூறுகிறார் ஈரா. ஏனெனில், உலகம் முழுவதும் மாதவிடாய் சுகாதாரம் பெற முடியாத நிலையில் மில்லியன் கணக்கான பெண்கள் உள்ளனர்.

"அதிக அளவிலான பெண் தொழிலாளர்களைக் கொண்ட லாப நோக்கமற்ற நிறுவனங்கள் மற்றும் உற்பத்தி நிறுவனங்களிடம் கோரிக்கை வைத்து, மானிய விலையில் அவர்களது தொழிலாளர்களுக்கு பீரியட் கோப்பையை மொத்த விற்பனை செய்தோம். இதன் ஒரு பகுதியாக மாதவிடாய் கல்வி மற்றும் பயிற்சி நிகழ்ச்சிகளையும் நடத்துகிறோம்.

எங்களது செயலியை, மாதவிடாய் கல்வி மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஒரு கருவியாக பார்க்கிறோம். உலகளவில் நிலவும் பீரியட் வறுமையை ஒழிப்பதற்கான எங்கள் பணியில் கவனம் செலுத்தி வருகிறோம். விரைவில் அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியிலும் அதன் தயாரிப்புகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது" என்று கூறி முடித்தார் ஈரா.


Edited by Induja Raghunathan