Astra Zeneca தமிழ்நாட்டில் ரூ.176 கோடி முதலீடு - உலகத்தர நவீன தொழில்நுட்ப மையம் விரிவாக்கம்!

02:04 PM Sep 06, 2025 | muthu kumar

முன்னணி மருந்து நிறுவனமான 'அஸ்ட்ரா செனகா' (AstraZeneca), இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மூன்றாவது முறையாக ரூ. 176 கோடி முதலீட்டை அறிவித்தது. இந்த முதலீடு, சென்னையில் உள்ள அதன் உலக புதுமை மற்றும் தொழில்நுட்ப மையமான Global Innovation & Technology Centre (GITC)-இன் வசதிகளையும் திறன்களையும் மேம்படுத்துவதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது, என நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய முதலீட்டின் மூலம், இந்தியாவிலும் உலகளாவிய ரீதியிலும் அஸ்ட்ரா செனகாவின் சுகாதார புதுமைத் திறனை வலுப்படுத்தும் வகையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. இது உயர் மதிப்புள்ள வேலை வாய்ப்புகளை உருவாக்குவதோடு, தமிழ்நாடு மற்றும் இந்தியாவிலுள்ள உள்ளூர் திறமைகளை பெரிதும் பயன்படுத்தும் வாய்ப்பையும் உருவாக்கும்.

அஸ்ட்ரா செனகா இந்தியா பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சிவா பத்மநாபன் கூறுகையில்,

"இந்த புதிய முதலீடு நவீன தொழில்நுட்பங்களை நமது பணியில் முழுமையாக ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஒரு முக்கியக் கட்டமாகும். சென்னை நகரம் தற்போது ஒரு முக்கிய புதுமை மையமாக வளர்ந்து வருகிறது. இந்த முதலீடு மாநிலத்தின் திறமைமிக்க பணிச்சூழலை மீண்டும் உறுதிப்படுத்துகிறது," என்று தெரிவித்தார்.

இந்த மையத்தின் விரிவாக்கம், செயற்கை நுண்ணறிவு டேட்டா அனலிட்டிக்ஸ், இயந்திர பயில்வு, விநியோகச் சங்கிலி பகுப்பாய்வு உள்ளிட்ட துறைகளில் நிபுணர்களை உருவாக்குவதற்கும், கூட்டு ஆராய்ச்சி மற்றும் சிக்கலான சுகாதாரச் சவால்களுக்கு தீர்வுகளை உருவாக்குவதற்கும் வழிவகை செய்யும்.

மாநில முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த முயற்சியை வரவேற்கும் வகையில் கூறும்போது,

"அஸ்ட்ரா செனகா; சுகாதாரத்துடன் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்கும் புதிய சூழலை உருவாக்க முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்த முதலீடு தமிழ்நாடு உலக நவீனத்துறை மையமாக இருப்பதை நிரூபிக்கிறது. இது திறமையான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதோடு, அறிவு பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் மற்றும் எதிர்காலத்திற்குத் தயாரான தொழில்நுட்ப வளர்ச்சிக்கு வழிவகுக்கும்," என்றார்.

இந்த புதிய முன்னேற்றம், நவீன மருந்துகளை வேகமாகக் கொண்டுவரும், டிஜிட்டல் மாற்றத்தை நோக்கிய பயணத்தை விரைவுபடுத்தும் மற்றும் இந்தியா முழுவதும் நோயாளிகளுக்கு மேம்பட்ட பராமரிப்பை வழங்கும் முயற்சிகளை வலுப்படுத்தும்.

தற்போது AstraZeneca, இந்தியாவில் 5,000-க்கும் மேற்பட்டோர் பணியாற்றும் நிலையில், அதன் GITC மையம் உட்பட தொழில்நுட்பம், ஆராய்ச்சி, மற்றும் உலகளாவிய வணிக சேவைகள் ஆகிய துறைகளில் முன்னணி மையமாக இயங்கி வருகிறது.

இந்த முதலீடு இந்தியாவின் சுகாதாரத் துறையில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.