
இருசக்கர மின்வாகன தயாரிப்பு நிறுவனம் ஏத்தர் எனர்ஜி, வாடிக்கையாளர்களுக்கு சார்ஜிங் வசதி அணுகல் மூலம் மின்வாகன ஏற்பை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட முயற்சியில் முக்கிய மைல்கல்லாக தமிழ்நாட்டில் 430க்கும் மேற்பட்ட வேகமான சார்ஜிங் மையங்களை அமைத்துள்ளது.
இந்நிறுவனம் மாநிலத்தின் 39 மாவட்டங்களிலும் ஏத்தர் கிரிட் ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்களை நிறுவியுள்ளது. மேலும், 50 இடங்களில் எல்.இ.சி.சி.எஸ்., சார்ஜிங் அமைப்புகளும் நிறுவப்பட்டுள்ளன. ஏத்தர் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த எல்.இ.சி.சி.எஸ் அமைப்பு பரவலான ஏற்புக்கு திறந்தவெளி தன்மையோடு இருப்பதோடு, ஒரே சார்ஜிங் மையத்தை பல்வேறு பிராண்ட்கள் அணுகவும் வழி செய்கிறது.

தமிழ்நாடு நிறுவனத்தின் ஆரம்ப சந்தைகளில் ஒன்றாக திகழ்வதாக முதன்மை வர்த்தக அதிகாரி ரவ்னீத் சிங் போகெலா கூறினார். 2019ல் நிறுவனம் தமிழகத்தில் நுழைந்தது. நிறுவனம் நம்பகமான சார்ஜிங் வலைப்பின்னலில் முதலீடு செய்து வருவதாகவும் கூறினார்.
"சார்ஜிங் தான் முக்கிய தடைகளில் ஒன்றாக இருக்கிறது. துவக்கம் முதல் இதற்கு தீர்வு காண்பதில் கவனம் செலுத்துகிறோம். தமிழ்நாட்டில் 400 சார்ஜிங் மையங்களை கடந்திருப்பது இந்த உறுதியின் அடையாளம்,“ என்று நிறுவன அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.
"எங்களுடைய ரீடைல் வலைப்பின்னல் வளரும் நிலை சார்ஜிங் வலைப்பினலும் அதற்கேற்ப வளரும். இதன் மூலம் மின்வாகன பயன்பாடு சீராகும்,” என்றும் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில், நிறுவனம் 44 அனுபவ மையங்கள் மற்றும் 42 சேவை மையங்கள் கொண்டுள்ளது. நாடு முழுவதும் 3300க்கு மேலான சார்ஜிங் மையங்களை கொண்டுள்ளது.
செய்தி: பிடிஐ
Edited by Induja Raghunathan