
கடல் மட்டத்திலிருந்து 5895 மீட்டர் உயரத்தில், கிளிமஞ்சாரோ மலையை வெற்றிகரமாகிய ஏறியதுடன், அத்தனை உச்சியில், உறைபனியில் புடவையை அணிந்து நின்று, நமது பராம்பரிய உடையின் வலிமையை உணர்த்தி, தமிழர்களுக்கு பெருமைச் சேர்த்துள்ளார் சென்னை பெண் இசா பாத்திமா ஜாஸ்மின்.

யார் இந்த இசா பாத்திமா?
சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவரான இசா பாத்திமா ஜாஸ்மின், ஒரு சமூக ஆர்வலர். 'தி பப்ளிக் பவுண்டஷேன்' எனும் அமைப்பை தொடங்கி சமூக சேவையில் தன்னை ஈடுப்படுத்தி வருகிறார். அதன் ஒரு முயற்சியாக உணவு விரயத்தை கட்டுப்படுத்துவதற்காகவும், பசியால் வாடும் மக்களுக்கு உதவி செய்வதற்காகவும், 'அய்யமிட்டு உண்' எனும் இயக்கத்தை முன்னெடுத்தார்.
மலைகளும், மலையேற்றமும் அவருக்கு விருப்பமான ஒன்று. கடந்த 4 ஆண்டுகளாக, நண்பர்கள் மற்றும் மலையேற்ற குழுவினருடன், சிறு சிறு மலையேற்றங்களை தொடர்ந்து கொண்டிருந்துள்ளார். மலையேற்றத்தின் மீதான ஆர்வம் பெருக்கெடுக்க, ட்ரெக்கிங் செய்பவர்களுக்கே உரித்தான கனவான 7 கண்டங்களில் உள்ள 7 சிகரங்களை அடைய வேண்டும், என்ற இலக்கை இசாவும் நிர்ணயித்தார்.
"மலைகள் என்றால் எனக்கு பிரியம். வருடத்திற்கு ஒருமுறையேனும் மலைகளின் உச்சிக்கு சென்று, அதன் நிசப்த அழகை ரசித்துவிடுவேன். மலையேற்றத்தின் போது ஆங்காங்கே டென்ட் போட்டு கொண்டு, ஒரு நடோடி போன்று வாழ்வதில் உள்ள ஆனந்தம் அலாதியானது. போன், மெசஜே் எதுவுமில்லாமல், நம்முடைய சுயசிந்தனையில் திளைக்க முடியும். மலையின் அமைதி அளிக்கும் ஆசுவாசம் வேறெதிலும் கிடைக்காது. அப்படி தொடங்கியது தான் ட்ரெக்கிங் பயணம்," என்று யுவர்ஸ்டோரி தமிழிடம், அவரது மலையேற்ற பயணத்தை பகிர்ந்தார்.

சிறுசிறு ட்ரெக்கிங்கிற்கு பிறகு, அனுபவம் வாய்ந்த மலையேற்ற வீரர்களால் மட்டுமே ஏற கூடிய உத்ரகாண்டில் உள்ள சவாலான மலையேற்றமான, பாலிபாஸ் ட்ரெக்கினை சிறப்பாக முடித்தார். அதனையடுத்து, அவரது கனவு சிகரங்களை அடைவதற்கான இலக்கை வைத்தார். அதன் முதல் படியாய், எவரெஸ்ட் சிகரத்தின் அடித்தள முகாமை நிறைவு செய்தார். இம்முறை அவரது இலக்கு ஆப்ரிக்காவின் தான்சானியாவில் உள்ள கிளிமஞ்சாரோ சிகரம்.
கடல்மட்டத்திலிருந்து 19 ஆயிரத்து 341 அடி உயரத்தில் உள்ள கிளிமஞ்சாரோ சிகரம், மலையேறக் கூடியது என்றாலும், அதன் கடுமையான குளிரால் பெரும் சவாலானது. எவரெஸ்ட்டின் அடித்தள முகாமை விட, அதிக உயரம், அதிக குளிர், அதிக கடினமான கிளிமஞ்சாரோவை அடைய அவரது மென்டல் மற்றும் ஃபிஸிக்கல் திறனை பலப்படுத்துவதற்கான பயிற்சியில் இறங்கினார்.
கிளிமஞ்சாரோ சிகரத்தை ஏற எண்ணிய அவர், அதன் உச்சியின் சேலை அணிந்து நமது பராம்பரிய ஆடைக்கு இருக்கும் வலிமையை உணர்த்த திட்டமிட்டார். அதன்படி, மைனஸ் 14டிகிரி செல்சியஸ் உறைப்பனியில் புடவையை மாற்றிக் கொண்டு, கிளிமஞ்சாரோவில் தமிழர்களின் கலச்சாரத்தை பறைச்சாற்றி பெருமைப்படுத்தியுள்ளார்.
"புடவை பெரும்பாலும், அழகியலுடன் தொடர்புப்படுத்துவதுடன், பலவீனமான ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது. நமது புடவைக்கு வலிமையுண்டு. புடவை அணிந்து கொண்டு எதையும் செய்ய முடியும். சமீப ஆண்டுகளில், மேற்கத்திய ஆடைகளுக்கான முக்கியத்துவம் மக்கள் மத்தியில் அதிகரித்து கொண்டே வருகிறது.
வருங்கால தலைமுறையினருக்கு புடவை என்பது வலிமையின் அடையாளம் என்பதை உணர்த்துவதற்காக, கிளிமஞ்சாரோ சிகரத்தை அடைந்த பிறகு புடவையை மாற்றிக் கொள்ள திட்டமிட்டேன்.
"ஆனால், அது அவ்வளவு எளிதல்ல. மைனஸ் 14டிகிரி செல்சியஸ் உறைப்பனியில், புடவை அணிவது சவாலானது. புடவை மாற்றிகொள்வதற்கு முன்புவரை, குளிரை தாங்க 7 அடுக்கு உடை அணிந்திருந்தேன். ஆனால், அந்த உயரத்தை அடைந்தவுடன் எனக்குள் ஏற்பட்ட ஒரு உணர்வு, வேக வேகமாக புடவையை மாற்றி கொண்டேன். மற்ற ட்ரெக்கர்களே ஒரு நிமிடம் திகைத்தனர். இதில், இன்னொரு விஷயம் என்னவென்றால், அங்கு சேலை அணிந்து கொண்டு புஷ்அப் செய்தேன்," என்று புன்னகைத்து கொண்டே கூறினார் அவர்.

இதுவரை 7 கண்டங்களில் உள்ள 2 சிகரங்களில் மலையேறியுள்ள நிலையில், மீதமுள்ள 5 சிகரங்களையும் ஏறி முடிக்க வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டுள்ளார். காலம், ஃபிட்னஸ், நிதி ஆகியவற்றை பொருத்து அடுத்தடுத்த திட்டங்களை முன்னோக்கி எடுத்து செல்ல வேண்டும் என்று கூறி முடித்தார்.