சாட்ஜிபிடி 2022ல் அறிமுகமான போது, மென்பொருள் உலகை மாற்றி அமைத்தது. இந்த ஏஐ சாட்பாட் நன்கறியப்பட்ட பெயராக மாறினாலும், இதன் மகத்தான எழுச்சிக்கான முந்தைய உருவாக்கமாக, GPT-3 அடிப்படையாகக் கொண்டிருப்பதை பலரும் அறியவில்லை.
முன் பயிற்சி அளிக்கப்பட்ட ஆக்கத்திறன் மாற்றியை குறிக்கும் ஜிபிடி 3 நவீன உரையாடல் ஏஐ நுட்பத்திற்கான அடிப்படையாக அமைந்து, பின்னணியில் இயங்கும் கண்ணுக்குத்தெரியாத சக்தியாக விளங்குகிறது.
இந்த அடித்தளத்தின் மையத்தில் முக்கியமாக இருந்தவர்களில் ஒருவர் சென்னையில் பிறந்து வளர்ந்த பொறியாளரான அரவிந்த் நீலகண்டன். கம்ப்யூட்டர்களை சிக்கலான செயல்களை செய்ய வைப்பதில் சிறு வயதிலேயே ஆர்வம் கொண்டிருந்தவர், நம் காலத்தின் முக்கிய நுட்பத்தின் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றினார்.
திருச்சி என்.ஐடியில் பொறியியல் பட்டம் பெற்று, அமெரிக்காவின் கொலம்பியா பல்கலையில் முதுகலை பட்டம் பெற்று பின்னர், கம்ப்யூட்டர் அறிவியலில் டாக்டர் பட்டம் பெற்றவர், கூகுள் பிரைன், மெட்டா மற்றும் ஓபன் ஏஐ நிறுவனத்தில் பணியாற்றும் வாய்ப்பை பெற்றார் அரவிந்த் நீலகண்டன்.
ஓபன் ஏஐ நிறுவனத்தின் ஆய்வு பிரிவு தலைவராக செயல்பட்டவர், ஜிபிடி-3 உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றினார். அதன் இயந்திர கற்றல் மற்றும் இயற்கை மொழியாக்கம் திட்டங்களை வழிநடத்தி ஜிபிடி-3 உருவாக்கத்திற்கு உதவினார்.
பெங்களூருவில் ஸ்கேலர் ஸ்கூல் ஆப் டெக்னாலஜியில் இன்ஸைடு தி மைண்ட் ஆப் ஏஐ நிகழ்ச்சியில் பேசியவர், யுவர்ஸ்டோரியிடம் பேசிய போது, ஜிபிடி-3 முதல் சாட்ஜிபிடி வரையான பாதை, பல்வேறு சோதனைகள் மற்றும் தொழில்நுட்ப சாதனைகளை உள்ளடக்கியது பற்றி பகிர்ந்து கொண்டார்.
யுவர்ஸ்டோரி [ஒய்.எஸ்]: நீங்கள் ஜிபிடி-3 ல் பணியாற்றினீர்கள். இதுவே சாட்ஜிபிடியாக உருவானது. இப்போது மிகவும் மேம்பட்ட மாதிரிகள் வந்து கொண்டிருக்கும் நிலையில், ஓரு ஆய்வாளராக இதன் பின்னணியில் நிகழ்பவை பற்றி எப்படி பார்க்கிறீர்கள்?
அரவிந்த நீலகண்டன்: வெளிப்படையாக சொல்வது என்றால், இதன் பின்னே இருப்பது கடினமான உழைப்பு மட்டும் தான். இந்த மாதிரிகள் மிகவும் பிரம்மாண்ட அளவில் செயல்படுவதால், ஒன்றை சரியாக செய்வதற்கு நிறைய பரிசோதனை முயற்சி தேவை. சிறிய அளவில் சோதனை செய்து, பின்னர் அவற்றை பெரிய அளவில் கொண்டு செல்லும் வழியை யோசித்து செயல்திறனோடு செயல்பட வைப்போம். இது மிகவும் எளிமையாக தோன்றினாலும், நுட்பமான விஷயங்களை சரியாக வரச்செய்வது தான் முக்கியம்.
ஆய்வின் ஆரம்ப நிலை மற்றும் பொருள் (பிராடக்ட்) ஒன்று போலவே இருந்தது. இங்கு ஏதோ ஒன்று இருக்கிறது என்பது தொடர்பான உத்தேச சித்திரம் உங்களுக்கு இருக்கும். அதை மிகவும் திடமாக மாற்றுவது கடினம். இந்த நிலையில் நீங்கள் சோதனைக்கு தயாராகி பல்வேறு முயற்சி செய்து, எது சரியாக வருகிறது என்று பார்ப்பீர்கள்.
ஆனால், ஜிபிடி-3 மற்றும் ஜிபிடி-4 போன்ற திட்டங்கள், சரியானவற்றை பெற தொழில்நுட்ப அம்சங்களை சரியாக பெறுவதில் மிகவும் கவனம் தேவைப்பட்டது. ஆழ் கற்றல் என்பது நேருணர்வு சார்ந்தது என்பதால், பலவற்றை செய்து பார்த்து சரியானவற்றை தேர்வு செய்ய வேண்டும். நுண் விவரங்கள் முக்கியம்.
ஒய்.எஸ்: அடிப்படை மாதிரிகள் பற்றி அதிகம் பேசப்படுகிறது. ஆனால் இந்த மாதிரிகள் இன்னமும் நமக்கு அதிகம் தேவையா? இல்லை எனில், நாம் நடைமுறை செயல்பாட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டுமா? குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளில் இது முக்கியமா மற்றும் நாம் உலக அளவில் எந்த இடத்தில் இருக்கிறோம்?
அரவிந்த் நீலகண்டன்: இதை உறுதியாக கூறுவது கடினம். ஆனால், இந்த துறையில் ஆரம்ப நிலையில் இருக்கிறோம். மாதிரி முறைகளை, கருவிகளை ஒருங்கிணைப்பது போன்றவற்றில் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறோம். எனவே, இன்னும் அதிக அடிப்படை பணிகள் தேவைப்படுகிறது. இந்திய ஏஐ பரப்பில் ஸ்டார்ட் அப்'கள் எந்த இடத்தில் இருக்கின்றன என்றுத்தெரியவில்லை. இந்த மாதிரிகளை நான் பயன்படுத்தியதில்லை. ஆனால், ஒரு ஐந்து மாத திட்டமாக எல்லாம் இதை செய்ய முடியாது. நீண்ட காலம் தேவை.
ஒய்.எஸ்: இந்திய ஸ்டார்ட் அப் அல்லது ஆய்வாளர்கள் மனதில் ஏஐ தொடர்பாக முக்கியமானது எது?
அரவிந்த் நீலகண்டன்: பல பிரச்சனைகள் இருக்கின்றன. அல்கோரிதம் முன்னேற்றம் மூலம், வளர்ச்சி சாத்தியத்தை மேலும் தட்டையாக்க முயற்சிப்பதை ஒரு இலக்காக கொள்ளலாம். இதை சிறிய அளவில் முயற்சித்து நிரல் எழுது கட்டுரை பதிப்பிக்கலாம். இதில் தான் நிறைய அர்த்தமுள்ள ஆய்வுகள் நிகழ்கின்றன. இதில் தான் ஆய்வாளர்களும் கவனம் செலுத்த வேண்டும்.
ஒய்.எஸ்: பெரிய மக்கள்தொகை பரப்பிற்கு ஏஐ சேவைகளை உருவாக்கும் போது, சமூக பழக்கவழக்கங்களை புரிந்து கொள்வது முக்கியம். பொறியாளர்கள் இதையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்களா?
அரவிந்த் நீலகண்டன்: பெரும்பாலான நிறுவனங்கள் அறம் சார்ந்த விஷயங்களை தீவிரமாக கருதுகின்றன. உருவாக்க நிலை மற்றும் பயிற்சியில் கவனம் செலுத்தப்படுகின்றன. இந்த பார்வை உதவும் என்றாலும், பல விஷயங்களில் இது ஒன்று. இதில் சிறந்து விளங்குவது பயனுள்ளது.
ஒய்.எஸ்: நீங்கள் சென்னையில் வளர்ந்தீர்கள், கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தீர்கள். இந்த துறையில் எப்படி ஆர்வம் வந்தது?
அரவிந்த் நீலகண்டன்: எனக்கு எப்போதும் கணிதம் பிடிக்கும். பத்தாவது படிக்கும் போது புரோகிராமிங் ஈடுபாடு உண்டானது. முறையான வழியில் வெளிப்படுத்தும் முறையில் ஆர்வம் கொண்டேன். கம்ப்யூட்டர்கள் மிகவும் ஈர்த்தன. இவற்றை சிக்கலான செயல்களை செய்ய வைக்கலாம் என்பது ஆர்வம் அளித்தது.
அதன் பிறகு, இளங்கலை படித்தேன். நிறைய சுவாரஸ்யமாக இருந்தது. பல விஷயங்களை கண்டறிவதில் ஈடுபட்டேன். பயிற்சி வாய்ப்புகளை தேடிப்பார்த்தேன். இரண்டாம் ஆண்டிலேயே ஆய்வில் ஈடுபாடு உண்டானது. ஐஐடி மெட்ராசில் பிஎச்டி மாணவர்களுக்கு உதவினேன். என்.ஐடியிலும் சில ஆய்வுத்தலைப்புகளில் உதவினேன். இதனால் ஆய்வு எப்படி இயங்குகிறது, அடிப்படைகள் ஏன் முக்கியம் மற்றும் அறிவின் அடிப்படை உருவாகும் விதத்தில் ஈடுபாடு உண்டானது.
உண்மையில் பார்த்தால் உலகம் அப்படியே இருக்கிறது, அறிவியல் முன்னேற்றத்தில் தான் மாற்றம் உண்டாகிறது எனத்தோன்றுகிறது. மிகவும் கடினமான தொழில்நுட்ப பிரச்சனையில் கவனம் செலுத்தினால் முற்றிலும் புதிய ஒன்று உருவாகும் எனும் எண்ணம் உண்டனாது.
ஆய்வில் ஈடுபாடு வளர்ந்தது. கம்பயூட்டர் கட்டமைப்பு மற்றும் ஏஐ தொடர்பாக சில ஆய்வு செய்தேன். ஏஐ எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இப்போது போல ஏஐ அப்போது பெரிதாக இல்லை. ஆனால் கம்ப்யூட்டரில் மனித அறிவுக்கு மாற்றை உண்டாக்குகிறார்கள் என்பது மிகவும் ஈர்த்தது.
ஒய்.எஸ்: ஓபன் ஏஐ பணி அனுபவம் உங்களை எப்படி வடிவமைத்தது?
அரவிந்த் நீலகண்டன்: அதை சுருக்கமாக சொல்வது கடினம். அதைப்போன்ற ஒரு மாற்றத்திற்கு உள்ளாவதே உங்கள் தன்னம்பிக்கையை வளர்க்கும். அது உங்கள் மனதை திறக்கும். பெரிய விஷயங்கள் நடக்கும். ஆனால் அவை நிகழ்வதற்கு முன் பெரிதாக தோன்றாது. அவை குழப்பமாக தோன்றலாம். சரியான விஷயங்களில் கவனம் செலுத்தி கடினமாக உழைத்தால் மகத்தானவை நிகழும்.
ஒய்.எஸ்: இந்த அளவு வளர்ச்சி மற்றும் ஓபன் சோர்ஸ் கூட்டு முயற்சி நிலவும் போது எப்படி நிறுவனங்கள் தங்கள் ரகசிய ஆற்றலை பாதுகாக்கின்றன?
அரவிந்த் நீலகண்டன்: இத்தகைய தன்மை தொழில்நுட்பத்தில் ஏற்கனவே இருக்கிறது. உண்மையில் பெரிய ஆழமான ரகசியம் எல்லாம் எதுவும் இல்லை. ஏஐ துறை துவக்கம் முதல் திறந்த தன்மை கொண்டதாக, கல்வி பின்னணி சார்ந்ததாக இருக்கிறது. ஆய்வாளர்கள் எல்லாவற்றையும் வெளிப்படையாக பதிப்பிக்கின்றனர். எனவே ரகசியம் எதுவும் இல்லை. ஆனால் திறந்த தன்மை கொண்ட கலாச்சாரம் இருக்கிறது.
ஒய்.எஸ்: எல்லா நிறுவனங்களும், குறிப்பாக ஸ்டார்ட் அப்கள், சாஸ் நிறுவனங்கள் ஏஐ முதல் நிறுவனமாக விரும்புகின்றன. நாம் மிகை சுழற்சி நோக்கி செல்கிறோமா?
அரவிந்த் நீலகண்டன்: ஒரு சில நிறுவனங்கள் இப்படி இருக்கலாம். ஆனால், இந்த அளவுக்கு வேகமாக உலகை மாற்றிய வேறு தொழில்நுட்பம் இதற்கு முன் இருந்ததாக நினைக்கவில்லை. ஆனால் இந்த பரபரப்புக்கு வெளியே சில நிறுவனங்கள் தான் செயல்படுகின்றன, அவை பற்றி பேச சில ஆண்டுகள் ஆகும்.
ஒய்.எஸ்: அண்மை எம்.ஐ.டி ஆய்வு ஏஐ மக்களை மந்தமாக ஆக்குவதாக தெரிவிக்கிறது. இது நிகழும் என்று நினைக்கிறீர்களா? குறிப்பாக அடிப்படைகளில் ஆற்றல் இல்லாத இளம் பொறியாளர்கள் உருவாவார்களா?
அரவிந்த் நீலகண்டன்: நான் ஏஐ நுட்பத்தை குறிப்பாக கோடிங் செய்ய அதிகம் பயன்படுத்துகிறேன். ஆனால் அடிப்படைகளை கற்காமல் ஒருவர் இதை பயன்படுத்தினால் சிக்கல் தான். முந்தைய தலைமுறையின் தேர்வுகள் பயனற்று இருந்தது போலவும், அதில் மாற்றம் தேவைப்பட்டது போலவும் தான் இதுவும் என நினைக்கிறேன். ஏனெனில் பணியில் நுழையும் போது ஏஐ நுட்பத்தை பயன்படுத்துவது செயல்திறன் மிக்கது. ஏஐ உங்கள் உற்பத்தி திறனை பெருக்கும்.
ஒய்.எஸ் : ஏஐ ஆய்வாளர்களுக்கு இன்று சிறந்த வாய்ப்பு மற்றும் கடினமான சவால் எது?
அரவிந்த் நீலகண்டன்: வாய்ப்புகள் அளவில்லாதவை. 2012ல் பங்கேற்ற மாநாடு நினைவுக்கு வருகிறது. அந்த மாநாட்டில் கல்வியாளர்கள் யாரும் அறியாத தரவு தொகுப்பு பற்றி பேசிக்கொண்டிருப்பதை பார்க்கலாம். செயல்திறனை 50ல் இருந்து 50.5 சதவீதமாக உயர்த்துவது பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.
இப்போது உலகமே உங்கள் கூடு எனத்தோன்றுகிறது. இது அற்புதமானது. ஆனால் சவால் என்ன எனில், அர்த்தமுள்ள நீண்ட கால பணி செய்வது கடினம் ஏனெனில் சுற்றிலும் ஒரே பரபரப்பும், இறைச்சலுமாக இருக்கிறது.
ஒய்.எஸ்: ஆப்பிள் அண்மையில், சிந்திப்பதன் மாயை எனும் ஆய்வுகட்டுரையை வெளியிட்டது. மொழி மாதிரிகள் நன்றாக சிந்திப்பது போல தோன்றினாலும், அவை சிக்கலான செயல்களில் திணறுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலை எத்தனை ஆபத்தானது?
அரவிந்த் நீலகண்டன்: ஒரு முடிவில் சிக்கிக்கொண்டிருப்பதாக இது அமைகிறது. ஓராண்டுக்கு முன், மாதிரிகளின் இப்போதைய ஆற்றல் குறித்து பேசுவது நம்ப முடியாமல் இருக்கும். ஆனால் இப்போது அவை வியக்க வைக்கின்றன. இருப்பினும் அவை தவறுகள் செய்கின்றன. ஆனால் காலப்போக்கில் மாதிரிகள் மேலும் திறன் பெற்று இந்த சிக்கல்களுக்கு தீர்வு காணும் என்பதே எதிர்பார்ப்பு. தற்போதைய சிக்கல்கள் குறித்து பேசலாம் தான். ஆனால் இது பிரதான கதை அல்ல.
ஆங்கில கட்டுரையாளர்: புவனா காமத், தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan