இந்தியாவிலேயே முதன்முறையாக, சென்னையில் மெட்ரோ ரயில், புறநகர் ரயில், பேருந்து, வாடகை கார் மற்றும் ஆட்டோ போன்ற பொது போக்குவரத்துகளை ஒருங்கிணைத்து மக்கள் பயன்படுத்தும் வகையில், ‘சென்னை ஒன்’ (Chennai One) என்ற மொபைல் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
ரூ.8 கோடி செலவில், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பான கும்டா உருவாக்கியுள்ள இந்த செயலியை, கடந்த திங்களன்று முதல்வர் ஸ்டாலின் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தினார். நம்ம யாத்ரி செயலியை நிர்வகித்து வரும், மூவிங் டெக் இன்னோவேஷன் லிமிடெட் (Moving Tech Innovations Limited) நிறுவனம் இந்த 'சென்னை ஒன்' செயலியை ஐந்து ஆண்டுகள் நிர்வகிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
Chennai One செயலி
தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து வேலை, கல்வி, மருத்துவம் என பல்வேறு காரணங்களுக்காக தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் சென்னை வந்து செல்கின்றனர். இது தவிர, இங்கேயே சுமார் 48 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தினசரி ஓர் இடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை போன்ற பெருநகரங்களில் வேலை உட்பட வெளி வேலைகளுக்காக பொது போக்குவரத்துகளைப் பயன்படுத்துவதில் மக்கள் பல்வேறு சிக்கல்களை சந்திக்க வேண்டி உள்ளது. இந்தச் சிக்கல்களைக் குறைக்கும் வகையில் இந்த சென்னை ஒன் ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் மெட்ரோ ரயில், புறநகர் ரயில் மற்றும் பேருந்து போன்றவற்றில் பயணிக்க ஒரே நேரத்தில் டிக்கெட்டுகளைப் பதிவு செய்ய இயலும்.
இதனால், ஒரு தடத்தில் பல பொது போக்குவரத்து வாகனங்களைப் பயன்படுத்த வேண்டியவர்கள், இனி தனித்தனியாக டிக்கெட்டுகளை எடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. இது பயணிகளின் நேரத்தை மட்டுமல்லாது, பயணத் திட்டமிடல் சுமையையும் குறைக்கும். அரசு சார்ந்த பொது போக்குவரத்து மட்டுமின்றி, ஆட்டோ மற்றும் வாடகை கார் போன்றவற்றையும் இந்த செயலி மூலம் மக்கள் எளிதாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.
பயணச் சுமையைக் குறைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலிக்கு சென்னை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. முதல்நாளிலேயே, இந்த செயலியை சுமார் 1.3 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். சுமார் 4 ஆயிரம் பேர் இந்த செயலியில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர்.
என்னென்ன சிறப்பு வசதிகள்?
சென்னை நகரத்தில் மக்கள் பொதுப் போக்குவரத்திற்காக, 621 வழித்தடங்களில் 3,436 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இது தவிர மெட்ரோ ரயில் மற்றும் புறநகர் ரயில் என ரயில் வழித்தடங்களும் பொதுப் போக்குவரத்திற்காக உள்ளன.
ஆனால், புறநகர்களின் விரிவாக்கம் மற்றும் போக்குவரத்து மாற்றங்களால், சென்னையில் பல ஆண்டுகளாக வசித்து வருவோருக்கே, ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு தினசரி பயணம் மேற்கொள்வது என்பது சிரமம்தான். அதிலும் பொதுப் போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்துவோரைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். இவர்களுக்கே இப்படி என்றால், புதிதாக சென்னைக்குள் வருபவர்களுக்கு பொதுப் போக்குவரத்து என்பதே மலைப்பான விசயம்தான். ஆனால் இந்த சிரமங்கள் இனி இருக்காது.
தற்போது தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ள சென்னை ஒன் செயலி மூலம் பேருந்து, புறநகர் ரயில் மற்றும் மெட்ரோ என அனைத்திற்கும் ஒரே இடத்தில் சுலபமாக டிக்கெட் பதிவு செய்து கொள்ளலாம்.
ஒரே நாளில் 1.3 லட்சம் பதிவிறக்கம்
Chennai One செயலி அறிமுகம் செய்யப்பட்ட முதல்நாளிலேயே, இதனை சுமார் 1.3 லட்சம் பேர் இதனை பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த செயலி மூலம் ஒரே நாளில் 4,394 டிக்கெட் பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. அதில், அதிகபட்சமாக 53% பேர், அதாவது பேருந்துகளுக்கு மட்டும் 2,304 பேர் டிக்கெட் பதிவு செய்துள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக, புறநகர் மற்றும் பறக்கும் ரயில்களுக்கு, 1,110 பேரும், மெட்ரோவிற்கு 976 பேரும் டிக்கெட் பதிவு செய்துள்ளனர். இது முறையே 25% மற்றும் 22% ஆகும்.
இந்த செயலியின் மூலம் சம்பந்தப்பட்ட பேருந்து எங்கே இருக்கிறது என்பதை ஜிபிஎஸ் வாயிலாக தெரிந்து கொள்ள முடியும். அதோடு, அருகில் என்னென்ன பேருந்து நிறுத்தங்கள் இருக்கின்றன என்பதையும் தெரிந்து கொள்ளலாம். நேரலையில் வழித்தடங்கள் மற்றும் அட்டவணையையும் இந்த செயலி துல்லியமாகக் காட்டும்.
கூடுதலாக ஓர் இடத்தில் இருந்து நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு எந்தெந்த பேருந்து மற்றும் ரயில் வழித்தடங்கள் மூலம் செல்லலாம் என்ற வழித்தடங்களையும், விருப்பங்களையும் இந்த செயலி மூலம் தெரிந்து கொள்ளலாம்.
யுபிஐ வசதி
யுபிஐ மூலம் டிக்கெட் பதிவு செய்யலாம் என்பது இந்த செயலியின் கூடுதல் அம்சம். ஆன்லைனில் டிக்கெட்டை பதிவு செய்து கொண்டு, டிக்கெட்டை ஸ்கேன் செய்தால் போதுமானது. ஒரு நாள் முழுவதும் இந்த டிக்கெட்டுகள் செல்லுபடியாகும்.
மெட்ரோ, புறநகர் ரயில் மற்றும் எம்டிசி பேருந்துகள் என அனைத்தும் ஒரே செயலியில் கிடைப்பதால், மக்கள் சிரமமின்றி, அனைத்து டிக்கெட்டுகளையும் ஒரே நேரத்தில் பதிவு செய்து கொள்ள இயலும்.
இது தொடர்பாக கும்டா உறுப்பினர் -செயலாளர் ஜெயக்குமார் கூறுகையில்,
“அரசு சாராத 1,500க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளையும் இந்த ஆப்’இல் கொண்டு வர பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இது தவிர, ரயில்களில் ரிட்டர்ன் பாஸ் எடுப்பது தொடர்பான தொழில்நுட்பமும் எங்களிடம் தயாராக உள்ளது. ரயில் நேரங்கள் குறித்த பேச்சுவார்த்தையை ரயில்வேயுடன் மேற்கொண்டு வருகிறோம். பேருந்துகளில் மாதாந்திர பாஸ்களை பெறும் வசதியையும் விரைவில் சென்னை ஒன் செயலியில் இணைக்க உள்ளோம்,” என்றார்.
இது தவிர, ஓலா மற்றும் ஊபர் நிறுவனங்களையும் இதில் இணைக்க திட்டமிட்டுள்ளோம். பெண்களின் விடியல் பயணம் இலவச பேருந்து வசதி மற்றும் பள்ளி, கல்லூரி பாஸ் வசதிகளும் இணைக்கப்பட்டுள்ளன. மக்களிடம் இருந்து தொடர்ந்து கருத்துக்களை பெற்று வருகிறோம். தரக் கட்டுப்பாட்டு குழு தொடர்ந்து அப்டேட்களை செய்து வருகிறது, எனத் தெரிவித்துள்ளார்.
நம்ம யாத்ரியுடன் கூட்டு
ஆட்டோ மற்றும் வாடகை கார்களுக்கு, சென்னை ஒன் செயலியில் இருந்து, Namma Yatri ஆட்டோ செயலியில் பதிவு செய்யும் வசதி உள்ளது. நம்ம யாத்ரி செயலியில் சுமார் ஒரு லட்சம் ஓட்டுநர்கள் பதிவு செய்திருப்பதால், ஓலா, ஊபர் மற்றும் ரேபிடோ போன்று இதன் மூலம் உடனடியாக ஆட்டோக்களை புக் செய்ய முடியும்.
இப்போதைக்கு இந்த செயலியில் சில குறைகள் இருப்பதாக மக்கள் சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்தாலும், இது சென்னை மக்களின் பயணத்தை எளிதாக்கி இருப்பதாகவே பலரும் பாராட்டி வருகின்றனர்.