‘வகுப்பறையில் இருந்து போர்களத்திற்கு...’ - 3 நண்பர்கள் தொடங்கிய பாதுகாப்பு ஆழ்நுட்ப நிறுவனம் ‘கலாம் லேப்ஸ்’

03:00 PM Dec 01, 2025 | YS TEAM TAMIL

'பிக்ஸல்' (Pixxel) போன்ற ஸ்டார்ட் அப்'கள் உருவான பிட்ஸ் பிலானி ஹாஸ்டல் அறைகளில், அகமது பராஸ், சஷக்த் திரிபாதி மற்றும் ஹர்ஷித் அஸ்வதி 2018ல் 'கலாம் லேப்ஸ்' ஸ்டார்ட்-அப்’பை துவக்கினர். சிறார்களுக்கு விண்வெளியை கேம் போல கற்றுத்தர துவங்கிய கல்விநுட்ப மேடை இப்போது இந்தியாவின் பாதுகாப்பு ஆற்றலை மறு வரையறை செய்யும் ஆழ்நுட்ப நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

More News :
“சூரிய மண்டலத்திற்கான மெட்டாவர்ஸ் போன்ற பலர் ஆடும் கேமை கொண்டிருந்தோம். இதில் சிறார்கள் கேமிங் பாத்திரங்களாக, விண்வெளி வழிகாட்டிகளுடன் இணைந்து பிரபஞ்ச உலாவில் ஈடுபட்டு, விண்வெளி தகவல்களை கற்றுக்கொள்ள முடியும்,” என்று அகமது பராஸ் கூறுகிறார்.

இந்த மூவர் அணிக்கு எல்லாம் சரியாக அமைந்திருந்தது. முதல் நான்கு மாதங்களில் இந்த ஸ்டார்ட் அப் ரூ.2 கோடி வருவாய் ஈட்டியது. ஓய் காம்பினேட்டர் ஆதரவுடன் 2 மில்லியன் டாலர் நிதி கிடைத்தது. பின்னர், எல்லாம் மாறியது. பி2பி சாஸ் மேடையில் இருந்து இந்த ஸ்டார்ட் அப் டிரோன் தயாரிப்பு விண்வெளி நுட்ப நிறுவனமாக மாறியது. விண்வெளி கற்றல் சேவையை கடந்து தங்கள் லட்சியம் அமைந்திருப்பதை மூவரும் உணர்ந்தனர். அவர்கள் தங்கள் சொந்த விண்வெளி திட்டத்தில் ஈடுபட விரும்பினர்.

“பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனுக்காக (அவரது திரைப்படம் பிளைட்டிற்கான விளம்பரம்) 2024 ஜனவரி 2026ல் விண்வெளியில் இந்திய தேசியக்கொடியை பறக்க விட்ட போது, எங்களுக்கான மாற்றம் நிகழ்ந்தது. கற்பித்தலுக்கு மேலாக செயல்பட விரும்பியதை இது உணர்த்தியது. தனித்தன்மை வாய்ந்த, தாக்கம் நிறைந்த தொழில்நுட்பத்தை உருவாக்க விரும்பினோம்,” என்று அவர் யுவர்ஸ்டோரியிடம் கூறினார்.

லக்னோவைச் சேர்ந்த ’கலாம் லேப்ஸ்’ (Kalam Labs) தற்போது 15 பேர் கொண்டு குழு, ஸ்டிராடோஸ்பியர் பகுதிக்கான (33,000 -1,64,000 அடி) பிரத்யேக டிரோன்களை தயாரிக்கிறது. வழக்கமான டிரோன்கள் அல்லது வெளி விண்வெளிக்கான ராக்கெட்களை விட அதிக உயரத்திற்கானது. தனது தலைமையகத்தில் சொந்த உற்பத்தி மற்றும் பரிசோதனை வசதி கொண்டுள்ளது.

“உலகின் அதி உயர யுஏவி ஓட்டத்திற்காக அமெரிக்க ஏரோனாடிக்ஸ் மற்றும் அஸ்ட்ரோனாடிக்ஸ் கழகம் எங்களை அங்கீகரித்துள்ளது,” என்கிறார் அகமது.

இந்நிறுவனம் கடல் மட்டத்திற்கு 9790 மீட்டருக்கு மேல் இந்த ஓட்டத்தை நிகழ்த்தியது.

கல்விநுட்பத்தில் இருந்து விண்வெளியை நோக்கி...

இணை நிறுவனர்களில் ஒருவரான அஸ்வதி, மற்றொரு இணை நிறுவனர் அகமதுவிடம் விண்வெளி விளிம்பு எனப்படும் கர்மான் கோடு பற்றி குறிப்பிட்ட போது, இக்குழு தங்களுக்கான யுரேகா தருணத்தை உணர்ந்தது. சர்வதேச ஏரோனாடிக் அமைப்பு அங்கீகரித்துள்ள கடல் மட்டத்திற்கு மேல் 100 கிமீயில் இந்த கோடு அமைகிறது. இந்த வாயு மண்டல பகுதி, யுஏவி வாகனம் இறக்கையை பயன்படுத்துவதற்கு பதிலாக நீள்வட்டப்பாதை விசையை நாடும் வகையில் மெலிதாகிறது.

“இந்த இடத்தில் ஈர்ப்பு விசையின் மேல் வரம்பை அடைகிறோம். விண்வெளியின் விளிம்பை அடைய எளிய மற்றும் செலவு குறைந்த வழி ராக்கெட்டுக்கு பதில் பலூன் என்பதை ஹர்ஷித் உணர்த்தினார்,” என்கிறார்.

2025 மார்ச்சில் இந்த ஸ்டார்ட் அப் இந்திய வானிலை ஆய்வு மையத்துடன் தனது முதல் திட்டத்தை மேற்கொண்டது. வானிலை ஆய்வு மையம் வானிலை கண்காணிப்பிற்காக அடிக்கடி வாயு மண்டல மேற்பகுதிக்கு பலூன்களை அனுப்புகிறது, என்கிறார் அகமது.

“பலூனை மீண்டும் கொண்டு வர முடியாததால் அவர்கள் ஒவ்வொரு முறையில் வானியல் ஆய்வு அமைப்பை இழந்து கொண்டிருந்தனர். இந்த அமைப்புடன், பலூனில் எங்கள் யுஏவி வாகனத்தை இணைத்து உதவினோம். தேவையான 30,000 மீட்டர் உயரத்தை அடைந்ததும் பலூன் தானாக விலகியது. வானிலை அமைப்பு தரவுகளை சேகரித்து யுஏவி வாகனம் மூலம் பூமிக்கு திரும்பியது,” என விளக்கம் அளிக்கிறார்.

இந்த வெற்றி இந்திய ராணுவத்தின் கவனத்தை ஈர்த்தது. ஏரியல் ரோபோ ஆய்வகமாகவும் விளங்கும் இந்த ஸ்டார்ட் அப், யுஏவி வாகனத்தை 3,000 மீட்டரில் கொண்டு சென்றது. ரபேல் போர் விமானம் செல்லக்கூடிய உயரத்தை விட இது இரு மடங்கு.

“கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளுக்காக யுஏவி வாகனத்தை பலூன்கள் மூலம் செலுத்தும் திட்டத்திற்காக ராணுவம் எங்களை தொடர்பு கொண்டது,” என்கிறார்.

Kalam Labs நிறுவனர்கள்

வான் போரில் புதிய உயரம்

ரஷ்யா – உக்ரைன் மோதல், ஆப்பரேஷன் சிந்தூர் போன்ற நவீன கால ராணுவ நடவடிக்கைகள், யுஏவி பயன்பாட்டை முக்கியமாக மாற்றியுள்ளன. ஆனால், வழக்கமான டிரோன்கள் டிரோன் எதிர்ப்பு அமைப்புகள் தாக்கத்திற்கு உள்ளாகக் கூடியவை.

“எங்கள் டிரோன்கள் ஸ்டிராடோஸ்பியர் பகுதியில் 1,00,000 அடியில் பறக்கின்றன. இந்த உயரத்தில் ஜாமிங், குறுக்கீடு போன்றவை இல்லை,” என்கிறார்.

கலாம் டிரோன்கள் தற்போது, இந்தியாவின் அணு ஆயுத சோதனை பகுதியான பொக்ரானில் செயல்படுகிறது. சீன கட்டுப்பாடு கோடு அருகிலும் செயல்படுகிறது. கண்காணிப்பிற்கான ஐஎஸ்.ஆர் யுஏவி, வானிலை ஆய்வுக்கான திரும்பி கொண்டு வரக்கூடிய அமைப்பு உள்ளிட்ட முக்கிய அமைப்புகளை கொண்டுள்ளது..

இந்திய சாதகம்

கலாம் லேப்சின் ஸ்டிராடோஸ்பியரிக் தன்மை அதன் வாகனங்கள் எதிரி கண்காணிப்பில் சிக்காமல் இருக்க வழி செய்து, எந்த இடத்திலும் கண்காணிப்பு மேற்கொள்ள வழி செய்கிறது. மேலும், போட்டி நிறுவனங்கள் செலவில் பத்தில் ஒரு பங்கில் இதை மேற்கொள்கிறது.

இந்த ஸ்டார்ட் அப் சூப்பர்சானிக் ராம்ஜெட் சார்ந்த யுஏவியை உருவாக்கி வருகிறது. அடுத்த 18 மாதங்களில் தயார் செய்ய திட்டமிட்டுள்ளது.

துடிப்பு மிக்க கண்காணிப்பு மற்றும் நிகழ்நேர வரைபடமாக்கத்திற்கான வாகனங்களையும் நிறுவனம் உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்திய கடற்படையுடனான கூட்டு முயற்சிக்கான பேச்சு வார்த்தையும் நடைபெற்று வருகிறது.

இந்தியாவின் லாக்ஹீட் மார்ட்டீன்

லைட்ஸ்பீட் வென்சர் பார்ட்னர்ஸ் தலைமையில் நிறுவனம் இது வரை 2 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளது. லைட்ஸ்பீடு நிறுவன பார்ட்னர் ஹேமந்த் மொக்பாத்ரா, கலாம் லேப்ஸ் நிறுவனர்களின் சிக்கலான பிரச்சனைகளுக்கு மூல தீர்வு காணும் தன்மை அவர்களை சற்றும் எதிர்பாராத மாற்றத்தை வெற்றிகரமாக மேற்கொள்ள வைத்துள்ளது, என்கிறார்.

ஆய்வு முயற்சிகளை விரிவாக்க நிறுவனம் ஆண்டு இறுதிக்குள் ஏ சுற்றில் 3-5 மில்லியன் டாலர் திரட்ட திட்டமிட்டுள்ளது. மும்பையின் ஐடியா ஃபோர்ஜ் மற்றும் சென்னையில் கருடா ஏரோஸ்பேஸ் உள்ளிட்ட ஸ்டார்ட் அப்களோடு போட்டியிடும் நிலையில், விண்வெளிக்கு அருகிலான யுஏவி, கலாம் லேப்சின் சாதகமாக அமைகிறது என்கிறார் அகமது.

நானோ யுஏவி மற்றும் ராணுவ ஒப்பந்தங்கள் மூலம் வரக்கூடிய ஒரு கோடி வருவாய் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது, என்கிறார்.

“இந்திய பாதுகாப்பு தொழில்நுட்ப சூழல் தற்போது மிகவும் ஆரோக்கியமாக உள்ளது. எல்லா நிறுவனங்களும் சந்தையில் நிலைத்து ஆயுதப்படையினருக்கான எங்கள் தனித்தன்மையை அளிக்க வேண்டியிருக்கிறது. கலாம் லேப்சில் நாங்கள் புதுமையாக்கத்தை தொடர்ந்து முன்னணிட்ல் இருக்க விரும்புகிறோம்,” என்கிறார்.

ஆங்கிலத்தில்: துனிர் பிஸ்வாஸ், தமிழில்: சைபர் சிம்மன்


Edited by Induja Raghunathan