+

உங்கள் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை சிதைக்கவல்ல 5 தவறுகள் - ஓர் அலர்ட் பார்வை!

மிகச் சிறந்த யோசனைகள் சரியாகச் செயல்படுத்தப்படாததே தோல்விக்குக் காரணமாகிறது. அவ்வாறு வலுவான ஸ்டார்ட்-அப்களைக் கூட அமைதியாகக் கொல்லும் 5 முக்கிய நிறுவனத் தவறுகள் இங்கே...

ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் என்பவை ஒரு பெரிய திருப்பத்துடன் திடீரெனத் தோற்றுப்போவதில்லை. மாறாக, அவை மிகவும் அமைதியான முறையில், முன்கூட்டியே தடுத்திருக்கக் கூடிய சிறு சிறு தவறுகளின் மூலமாகவே வீழ்ச்சியடைகின்றன.

பெரும்பாலான நிறுவனர்கள் ஒரு யோசனை பலவீனமாக இருப்பதாலோ அல்லது முதலீடு கிடைக்காததாலோதான் தோல்வி ஏற்படுவதாக கருதுகின்றனர். ஆனால், உண்மையில் பல நம்பிக்கைக்குரிய ஸ்டார்ட்-அப்’கள் ஆரம்பத்திலேயே எடுக்கப்பட்ட, மீண்டும் மீண்டும் செய்யப்பட்ட சில தவறான முடிவுகளாலேயே நிலைகுலைந்து போகின்றன.

இங்கு சோகம் என்னவென்றால், மோசமான யோசனைகள் தோல்வியடைவதில்லை; மிகச் சிறந்த யோசனைகள் சரியாகச் செயல்படுத்தப்படாததே தோல்விக்குக் காரணமாகிறது.

அவ்வாறு வலுவான ஸ்டார்ட்-அப்’களைக் கூட அமைதியாகக் கொல்லும் 5 முக்கிய நிறுவனத் தவறுகளை இங்கே விரிவாகப் பார்ப்போம்.

startup

1. தவறான சிக்கலைத் தேர்ந்தெடுத்தல்

மிகவும் ஆபத்தான தவறு என்பது ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்துக்கான முதல் குறியீடு எழுதப்படுவதற்கு முன்பே தொடங்கிவிடுகிறது. நிறுவனர்கள் பெரும்பாலும் சந்தையில் பெரிய அளவில் தேவைப்படும், அவசரமான மற்றும் விரிவுபடுத்தக்கூடிய சிக்கல்களைத் தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக, தங்களுக்கு சுவாரஸ்யமாகத் தோன்றும் சிக்கல்களையே துரத்துகிறார்கள்.

ஒரு தயாரிப்பு என்பது ஒரு புத்திசாலித்தனமான சிக்கலைத் தீர்க்கலாம், ஆனால் அதைப் பற்றி ஆழமாகச் சிந்திக்கும் மக்கள் குறைவாக இருந்தால், அதன் வளர்ச்சி என்பது ஒரு கட்டத்தில் முடங்கிவிடும்.

சந்தை எப்போதும் பொருத்தத்தையும், அதன் தேவையையும் மட்டுமே அங்கீகரிக்கிறது. தீர்க்கப்பட வேண்டிய சிக்கல் மிகவும் சிறியதாகவோ அல்லது அது விருப்பத்திற்குரிய ஒன்றாகவோ இருந்தால், வெற்றியின் உச்சத்தை எட்டுவதற்கு முன்பே வீழ்ச்சி வந்துவிடும்.

வலுவான ஸ்டார்ட்-அப்கள் பலருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் முக்கிய சிக்கல்களிலிருந்தே தொடங்குகின்றன. இதற்கு குவிபி (Quibi) ஒரு சிறந்த உதாரணம். பிரீமியம் தரத்திலான குறுகிய வீடியோக்களை உருவாக்க அந்த நிறுவனம் 1.75 பில்லியன் டாலர்களைத் திரட்டியது. ஆனால், ஏற்கெனவே யூடியூப் மற்றும் டிக் டாக் போன்ற தளங்களில் இலவச வீடியோக்கள் இருந்ததால், ‘குவிபி’ தீர்க்க முயன்ற சிக்கல் மக்களுக்குப் பெரிய பாதிப்பாகத் தெரியவில்லை. விளைவு, தொடங்கிய ஆறு மாதங்களிலேயே அது மூடப்பட்டது.

2. தெளிவான தொலைநோக்குப் பார்வை இன்றிச் செயல்படுதல்

பல நிறுவனங்கள் ஒரு நோக்கத்தை வரையறுக்கும் முன்பே அதன் அம்சங்களை உருவாக்கத் தொடங்கிவிடுகின்றன. ஒரு தெளிவான ‘ஏன்’ என்ற கேள்விக்கான பதில் இல்லாமல் எடுக்கப்படும் முடிவுகள் வெறும் தற்காலிக எதிர்வினைகளாகவே அமையும். இதனால் குழுவினரிடையே ஒருங்கிணைப்பு குறைகிறது, வாடிக்கையாளர்களும் அந்தத் தயாரிப்பின் நீண்டகால மதிப்பைப் புரிந்துகொள்ளத் தடுமாறுகிறார்கள்.

ஒரு தெளிவான தொலைநோக்குப் பார்வை என்பது ஒரு திசைகாட்டி போன்றது. இது பணியமர்த்தல் முதல் தயாரிப்புத் திட்டங்கள் வரை அனைத்தையும் வழிநடத்தும்.

இதற்கு 'வீஒர்க்' (WeWork) நிறுவனத்தை உதாரணமாகச் சொல்லலாம். ஒரு நிலையான மைய அடையாளம் இல்லாமல் பள்ளிகள், வீடுகள் எனப் பல துறைகளில் அது ஆக்ரோஷமாக விரிவடைந்தது. இந்த மங்கலான தொலைநோக்குப் பார்வையின் காரணமாகவே முதலீட்டாளர்கள் சந்தேகம் அடைந்தனர், இறுதியில் 2019-ல் அதன் ஐபிஓ முயற்சியும் தோல்வியில் முடிந்தது.

3. நிறுவனர்களுக்கு இடையிலான தீர்க்கப்படாத மோதல்கள்

இணை நிறுவனர்களுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகள் ஸ்டார்ட்-அப் தோல்விக்கான மிக முக்கியமான காரணங்களில் ஒன்று.

ஆரம்பத்தில் சாதாரணமாகப் பேசப்பட்ட சமப் பங்குப் பகிர்வு, தெளிவற்ற பொறுப்புகள் போன்றவை பின்னர் அழுத்தமான சூழலில் பெரிய பிரச்சனைகளாக உருவெடுக்கின்றன.

தொடக்கத்தில் ஒரு சிறிய விரிசலாகத் தெரிவது, பின்னர் அந்த நிறுவனத்தின் கட்டமைப்பையே தகர்த்துவிடும். கடினமான உரையாடல்களை ஆரம்பத்திலேயே பேசித் தீர்க்காமல் தவிர்ப்பது, பின்னாளில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே, நிறுவனம் வளர்ச்சிப் பாதையில் செல்வதற்கு முன்பே பொறுப்புகளையும் உரிமைகளையும் தெளிவாக வரையறுப்பது அவசியம்.

4. மிக முன்னதாகவே பணியாளர்களை நியமித்தல்

ஆரம்பக் கால நிதி உதவி கிடைப்பது, வேகம் என்பது வளர்ச்சியாகும் என்ற மாயையை உருவாக்குகிறது. தயாரிப்பு - சந்தை பொருத்தம் உறுதி செய்யப்படுவதற்கு முன்பே நிறுவனர்கள் பணியாளர்களை நியமிக்க அவசரப்படுகிறார்கள். இது நிர்வாகத்தில் தேவையற்ற சிக்கல்களை உருவாக்குவதுடன் பணப்புழக்கத்தையும் பாதிக்கிறது.

mistakes

ஆரம்பக் கால ஸ்டார்ட்அப்கள் ஆட்களின் எண்ணிக்கையை விட கவனக் குவிப்பு மூலமே வெற்றி பெறுகின்றன. இதற்கு‘டன்சோ’ (Dunzo) ஒரு சிறந்த உதாரணம். நிதி அதிகமாகக் கிடைத்த காலத்தில் பல நகரங்களில் வேகமாக விரிவடைந்த அந்த நிறுவனம், பின்னர் மூலதனத் தட்டுப்பாடு வந்தபோது செலவுகளைக் குறைக்க முடியாமல் ஆட்குறைப்பு மற்றும் செயல்பாட்டு அழுத்தத்திற்கு உள்ளானது.

5. தேவையை உறுதிப்படுத்தும் முன் விரிவாக்கம் செய்தல்

வாடிக்கையாளர் தேவையை முறையாக உறுதிப்படுத்துவதற்கு முன் செயல்பாடுகளை விரிவாக்குவது என்பது மூலதனத்தை அழிப்பதற்கான மிக வேகமான வழியாகும்.

போதுமான வாடிக்கையாளர் ஈர்ப்பு இல்லாமல் ஆக்ரோஷமாகச் சந்தைப்படுத்துதல் அல்லது உள்கட்டமைப்பை உருவாக்குதல் என்பது நிலைத்தன்மை இல்லாத வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

விரிவாக்கம் என்பது ஏற்கெனவே சிறப்பாகச் செயல்படும் ஒரு விஷயத்தைப் பெரியதாக்க வேண்டுமே தவிர, செயல்படாத ஒன்றைச் சரிசெய்ய முடியாது.

உதாரணமாக, ‘டைனி அவுல்’ (Tiny Owl) நிறுவனம் நிலையான லாபத்தை உருவாக்கும் முன்பே பல நகரங்களில் விரிவடைந்தது. அதன் அதிகப்படியான செலவு விகிதம் காரணமாக, ஆரம்பத்தில் நல்ல வரவேற்பு இருந்தபோதிலும் இறுதியில் நிறுவனம் மூடப்பட்டது.

startup

இந்த தவறுகள் ஏன் தொடர்ந்து நடக்கின்றன?

இந்த தவறுகள் நிறுவனர்களின் கவனக்குறைவால் நடப்பவை அல்ல; மாறாக, முறையான கட்டமைப்பு இல்லாத லட்சியங்களாலும், ஒழுக்கம் இல்லாத வேகத்தாலுமே ஏற்படுகின்றன. நிறுவனர்கள் இயல்பிலேயே எதையும் உருவாக்க விரும்புபவர்கள், ஆனால் தெளிவு இல்லாமல் உருவாக்குவது திசைமாற்றத்தை ஏற்படுத்தும். ஒருமித்த இலக்கு இல்லாமல் விரிவாக்கம் செய்வது சோர்வை உருவாக்கும்.

உயிர் வாழ்வதற்கும் வீழ்ச்சிக்கும் இடையிலான வித்தியாசம் என்பது வெறும் கண்டுபிடிப்பு மட்டுமல்ல, அது செயல்படுத்துவதில் உள்ள ஒழுக்கத்திலுமே அடங்கியுள்ளது.

ஒரு நல்ல ஸ்டார்ட்-அப் தோல்வியடைவதைத் தடுத்திருக்க முடியும். ஒரு விரிவுபடுத்தக் கூடிய சிக்கலைத் தேர்ந்தெடுங்கள், நோக்கத்தைத் தெளிவாக வரையறுங்கள், இணை நிறுவனர்களுடன் இணக்கமான சூழலை உருவாக்குங்கள், தேவைப்பட்டால் மட்டுமே பணியாளர்களை நியமியுங்கள், எல்லாவற்றுக்கும் மேலாகத் தேவையை உறுதிப்படுத்திய பிறகு விரிவாக்கம் செய்யுங்கள். இவை அனைத்தும் சாதாரணமாகத் தோன்றினாலும், இதுவே ஒரு நிறுவனத்தின் வெற்றிக்கும் தோல்விக்கும் இடையிலான மெல்லிய கோடு.

- மூலம்: ஆஸ்மா கான்


Edited by Induja Raghunathan

facebook twitter