"மாயநதி இன்று மார்பில் வழியுதே துாயநரையிலும் காதல் மலருதே..." என்ற வரிகளை வாழ்க்கையாக்கி நரைத்தட்டி, தள்ளாடும் வயதில் காதலர்களாகி கரம்பிடித்துள்ளனர் 71 வயதான பத்மேஸ்வர் மற்றும் 65 வயதான ஜெயபிரபா ஜோடி.
ஆதரவற்ற இல்லத்தில் வாழ்ந்து வரும் அறுபதை கடந்த முதியவர்களிடம் பூத்த காதலை அறிந்த, ஆதரவற்ற இல்லத்தை சேர்ந்தோர் உட்பட 4,000 பேர் ஒன்றுதிரண்டு சடங்கு, சம்பிராதயங்களுடன் திருமணம் செய்து வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் உள்ள மத்காரியா பகுதியில் உள்ள ப்ரோமோட் தாலுக்தார் நினைவு முதியோர் இல்லத்தில் வசித்து வருகிறார்கள் ஜெயபிரபா போரா (65) மற்றும் பத்மேஸ்வர் கோலா (71). அசாமின் போககாட்டைச் சேர்ந்த பத்மேஸ்வர், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதியோர் இல்லத்தில் சேர்த்து விடப்பட்டார். அதுநாள் வரை அவர் ஒரு குடும்பத்தில் வீட்டு உதவியாளராகப் பணிபுரிந்தார்.
ஆனால், அவ்வீட்டின் உரிமையாளரின் மரணத்திற்குப் பிறகு, உரிமையாளரின் மகன்கள், அவரை முதியோர் இல்லத்தில் சேர்த்துள்ளனர். மறுபுறம், தேஜ்பூரைச் சேர்ந்த ஜெயபிரபாவின் சகோதரர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறந்த பிறகு, அவரது மகன் அவரது அத்தையான ஜெயபிரபாவை முதியோர் இல்லத்தில் சேர்த்துள்ளார். இந்நிலையிலே, கடந்த ஓராண்டு காலமாக இருவரும் இல்லத்தில் ஆதரவு வார்த்தைகளையும், அக்கறையையும் பகிர்ந்து கொண்டு, முதுமையில் ஒருவருக்கொருவர் அன்புடன் பழகி வந்துள்ளனர்.
வாழ்க்கையின் அந்தி ஆண்டுகள் வரை தனிமையிலே கழித்த இருவருக்கும் முதியோர் இல்லத்தில் காதல் மலர்ந்துள்ளது. அதனை அறிந்த முதியோர் இல்லத்தார், இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தனர். அம்முடிவிற்கு இருவரும் சம்மதம் தெரிவிக்கவே, 4,000 பேர் ஒன்றுக்கூடி மணமக்களாக இருவரும் ஜொலிக்க, சடங்கு, சம்பிரதாயங்களுடன் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்து உள்ளது.
"பிஹு பாடல்கள் உட்பட அசாமிய பாடல்களை பத்மேஸ்வர் பாடுவது ஜெயபிரபாவிற்கு பிடித்தமான ஒன்றாகியது. முதியோர் இல்லத்தில் ஜெயபிரபாவை பத்மேஸ்வர் கவனித்துக்கொண்டது அவர்களுக்குள் பந்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இருவரும் ஒருவரையொருவர் நேசிக்கிறார்கள் என்று தெரிந்ததும், இருவரிடம் திருமணம் செய்து கொள்வதை பற்றி பேசினோம். அதற்கு இருவரும் சம்மதித்தனர். பின்னர், அவர்கள் இருவரையும் முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்ட அவர்களது பாதுகாவலர்களிடம் விஷயத்தை தெரித்தோம்," என்று கூறினார் முதியோர் இல்லத்தின் செயலாளர் உத்பால் ஹர்ஷபர்தன்.
சக முதியோர் இல்லத்துவாசிகளின் கூற்றுப்படி, இருவரும் ஆரம்பத்தில் இருந்தே ஒருவருக்கொருவர் நல்ல அக்கறையுடன் இருந்துள்ளனர். பின்னர் அசாம் மரபுகளின்படி, கடந்த மாதம் ஜூரோன் (அஸ்ஸாமிய திருமணத்திற்கு முந்தைய திருமண சடங்கு) ஏற்பாடு செய்யப்பட்டது.
"இது எங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான சந்தர்ப்பம் மற்றும் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர்," என்றார் உத்பால்.
திருமணத்திற்கு முன் இருவரும் ஒரே இடத்தில் தங்க முடியாது என்பதால், திருமணத்திற்காக, முதியோர் இல்ல அதிகாரிகள் ஜெயப்பிரபாவை நகரத்தில் உள்ள மற்றொரு முதியோர் இல்லமான மேட்ரி நிவாஸுக்கு அவரது டி-டேக்கு சில நாட்களுக்கு முன் மாற்றினர். திருமண தினத்தன்று, பத்மேஸ்வர், மணமகன் உடையணிந்து, திருமண அலங்காரத்தில் காத்திருந்த ஜெயபிரபாவை காண மாத்ரி நிவாஸுக்குச் சென்றார்.
திருமணம் மாத்ரி நிவாஸில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பரமேஸ்வரும் ஜெயபிரபாவும் பிரமோத் தாலுக்தார் முதியோர் இல்லத்திற்கு புதுமண தம்பதியினராகத் திரும்பினர். திருமணத்தை ஆதரித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த உத்பால், தம்பதியருக்கு முதியோர் இல்லத்தில் அறை ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
"சந்தோஷமாக இருக்கிறது. அதே சமயம் கொஞ்சம் பயமாக இருக்கிறது. ஜெயபிரபாவை இங்கு தான் சந்தித்தேன். என் பாடல்களால் மயங்கிவிட்டார். முதியோர் இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாடும் போது உத்பல் அடிக்கடி என்னைப் பாட வைத்தார். என் பாடல்கள் அவரது மனதைத் தொட்டது," என்றார் மகிழ்ச்சியுடன் பத்மேஸ்வர்.
"இன்று மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஒவ்வொரு பெண்ணும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கனவு காண்பர். பத்மேஸ்வரிடம் உண்மையான காதல் கிடைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன்," என்று வெட்கத்துடன் தெரிவித்தார் ஜெயபிரபா.