எலான் மஸ்கின் தோல்விகளும், ஸ்டார்ட்அப் நிறுவனர்களுக்கான வாழ்நாள் பாடங்களும்!

04:45 PM May 22, 2026 | Jai s

எலான் மஸ்க் என்றாலே நம் நினைவுக்கு வருவது விண்வெளியை நோக்கிப் பாயும் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டுகளும், உலகப் பணக்காரர் பட்டியலில் முதலிடம் வகிக்கும் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளும்தான். அவர் நினைத்ததை சாதிக்கும் ஒரு மந்திரவாதி போல உலக ஊடகங்களால் சித்தரிக்கப்படுகிறார்.

ஆனால், இந்த பிரம்மாண்ட வெற்றிகளுக்குப் பின்னால், அவமானங்கள் நிறைந்த ஒரு நீண்ட தோல்விப் பட்டியல் ஒளிந்திருக்கிறது. கைவிட்டுப் போன நிறுவனங்கள், நடுவானில் வெடித்துச் சிதறிய ராக்கெட்டுகள், தவறவிட்ட காலக்கெடு என அவரது பாதை முட்கள் நிறைந்தது.

ஒரு புதிய தொழிலைத் தொடங்கும் நிறுவனர்களுக்கு மஸ்கின் வெற்றிக் கதைகளை விட அவரது தோல்விகள்தான் அதிகப் பாடங்களைக் கற்றுத்தரக் கூடியவை. தலைப்புச் செய்திகளுக்குப் பின்னால் இருக்கும் அந்த உண்மைகளும், அதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களும் இதோ:

1. பறிபோன அதிகாரம்

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களுக்கு முன்பாக மஸ்க் ‘சிப்2’ (Zip2) என்ற நிறுவனத்தைக் கட்டமைத்தார். அது பின்னர் சுமார் 300 மில்லியன் டாலருக்கு விற்பனையானது. வெளியில் இருந்து பார்ப்பதற்கு இது ஒரு பெரிய வெற்றியாகத் தோன்றலாம். ஆனால், உண்மை நிலை வேறு. நிறுவனத்தின் முதலீட்டாளர்களுக்கு அதிகக் கட்டுப்பாடுகளை மஸ்க் வழங்கியதால், அவர் தலைமை நிர்வாக அதிகாரி பதவியிலிருந்து நீக்கப்பட்டார். மஸ்க்கிற்கு ஒரு நிறுவனத்தை வழிநடத்தும் முதிர்ச்சி இல்லை என்று அதன் இயக்குநர்கள் குழு கருதியது.

இதேபோன்ற ஒரு கசப்பான சூழல் எக்ஸ்.காம் நிறுவனத்திலும் நடந்தது. இதுதான் பின்னர் PayPal ஆக மாறியது. நிறுவனத்தின் தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் தலைமைத்துவ பாணி குறித்து உள்நாட்டில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் காரணமாக, மஸ்க் ஒருமுறை விடுமுறையில் சென்றிருந்தபோது, அவரது சி.இ.ஓ பதவி பறிக்கப்பட்டது.

பாடம்: ஆரம்பக்கட்ட முதலீடுகளைப் பெறும்போது நிறுவனத்தின் பங்குகளை எப்படிப் பிரிக்கிறோம், இயக்குநர்கள் குழுவை எப்படிக் கட்டமைக்கிறோம் என்பது மிக முக்கியம்.

ஆரம்பக்கட்டப் பணத்திற்காகக் கட்டுப்பாட்டு அதிகாரத்தை மிக வேகமாகத் தாராளமாக வழங்கிவிட்டால், நிறுவனத்தின் எதிர்காலப் பாதையைத் தீர்மானிக்கும் உரிமையை நிறுவனர்கள் இழக்க நேரிடும்.

எனவே, வாக்குரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். குறுகிய கால லாபத்தை மட்டும் பார்க்காமல், உங்கள் நீண்ட காலக் கனவோடு ஒத்துப்போகும் முதலீட்டாளர்களைத் தேர்ந்தெடுங்கள்.

2. டெஸ்லாவில் நிலவிய குளறுபடிகள்

டெஸ்லா நிறுவனத்தின் ஆரம்பக் காலங்கள் அதீதமான வாக்குறுதிகளாலும், தவறவிடப்பட்ட காலக்கெடுவாலும் நிறைந்திருந்தன. அதன் ரோட்ஸ்டர் கார் உற்பத்தியில் ஏற்பட்ட தாமதம் மற்றும் கூடுதல் செலவுகள் காரணமாக, முன்பதிவு செய்து பணத்தை முன்கூட்டியே செலுத்திய வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டிய கட்டாயத்திற்கு மஸ்க் தள்ளப்பட்டார்.

அதேபோல், மாடல் எக்ஸ் காரை உருவாக்கியபோது பேட்டரி சவால்கள், உதிரி பாகங்கள் வழங்குநர்களின் பற்றாக்குறை உள்ளிட்டவை காரணமாக உற்பத்தி மிகவும் மந்தமானது. ஒரு தயாரிப்பின் முதல் பதிப்பிலேயே அளவுக்கு அதிகமான அதிநவீனத் தொழில்நுட்பங்களைப் புகுத்தியதே தான் செய்த மிகப் பெரிய தவறு என்று மஸ்க் பிற்காலத்தில் ஒப்புக்கொண்டார்.

பாடம்: உங்கள் லட்சியங்கள் வரிசைப்படுத்தப்பட வேண்டும். ஒரு தயாரிப்பின் முதல் பதிப்பிலேயே அத்தனையையும் கட்டமைக்க முயல்வது ஆபத்தை அதிகரிக்கும்.

நிறுவனர்கள் எப்போதும் குறைவாக வாக்குறுதி அளித்து, நிறைவாகச் செய்து முடிக்க வேண்டும்.

சிக்கலான தொழில்நுட்பங்களை அடுக்கிக் கொண்டே போகாமல், முதலில் எளிமையான, சந்தைக்குத் தேவையான அடிப்படைத் தயாரிப்பை உருவாக்குங்கள். எதிர்காலத் தயாரிப்புகளை விட, தடையின்றி சந்தைக்குச் செல்லும் ஒரு நம்பகமான தயாரிப்பே வணிகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்.

3. ஸ்பேஸ்எக்ஸ் - மரணப் போராட்டம்

2006 மற்றும் 2008-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 1 ராக்கெட் தொடர்ச்சியாக மூன்று முறை விண்ணில் வெடித்துச் சிதறியது. ஒவ்வொரு தோல்வியும் நிறுவனத்தின் மூலதனத்தைக் கரைத்ததுடன், ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்லா ஆகிய இரண்டு நிறுவனங்களையுமே திவால் நிலையின் விளிம்பிற்குத் தள்ளியது. நான்காவது முறை ஏவப்பட்ட ராக்கெட் மட்டுமே வெற்றிகரமாகப் பயணித்தது.

மிகச் சமீபத்தில் கூட, அவர் தோற்றுவித்த ஸ்டார்ஷிப் சோதனை ஓட்டங்கள் தொழில்நுட்பக் கோளாறுகளால் நடுவானில் வெடித்துச் சிதறின. ஆனால், மஸ்க் மற்றும் அவரது குழுவினர் இந்தத் தோல்விகளை ஒரு பொது அவமானமாகக் கருதாமல், அடுத்த கட்டத்திற்கான தரவுகளாகவே பார்த்தனர்.

பாடம்: ‘மீண்டும் மீண்டும் முயற்சிப்பது’ என்பது ஏதோ ஒரு கவர்ச்சியான வார்த்தை அல்ல; அது ஒரு ஸ்டார்ட்அப் உயிர்வாழ்வதற்கான வழி. ஒரு தோல்வி உங்களுக்கான கற்றலை நிறுத்தும்போது மட்டும்தான் அது மரண அடியாக மாறும்.

மஸ்கின் குழுவினர் ஒவ்வொரு ராக்கெட் வெடிப்பையும் ஒரு பொறியியல் பின்னூட்டமாகவே எடுத்துக் கொண்டனர்.

நீங்கள் எவ்வளவு வேகமாகத் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்கிறீர்களோ, அவ்வளவு வேகமாக மீண்டு வர முடியும்.

ரகசியமாக நீண்ட காலம் ஒரு பொருளைக் கட்டமைத்துக் கொண்டிருக்காமல், விரைவாகச் சந்தையில் சோதித்து, திருத்தங்களை மேற்கொள்ளுங்கள்.

4. டோஜோ சூப்பர் கம்ப்யூட்டர் திட்ட முடக்கம்

டெஸ்லாவின் செல்ப் டிரைவ் அமைப்புகளுக்குப் பயிற்சி அளிப்பதற்காக ‘டோஜோ’ என்ற பிரத்யேக ஏஐ சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்கும் திட்டத்தை மஸ்க் தொடங்கினார். அதன் லட்சியம் மிகப் பெரியது. பிரத்யேக டி1 சிப்புகள், எக்சாஃப்ளாப் அளவிலான கணினித் திறன், முழுமையான ஹார்டுவேர் - சாப்ட்வேர் ஒருங்கிணைப்பு எனப் பல கோடிகள் முதலீடு செய்யப்பட்டன.

ஆனால், கடுமையான முதலீடுகள், முக்கியத் திறமையாளர்களின் வெளியேற்றம் மற்றும் இலக்குகளை அடைய முடியாத சூழல் ஆகியவற்றிற்குப் பிறகு, அந்தத் திட்டம் முற்றிலுமாக முடக்கப்பட்டது. மஸ்க் உடனடியாகத் தனது பிடிவாதத்தைக் கைவிட்டு, என்விடியா (Nvidia) போன்ற வெளி நிறுவனங்களின் சிப்புகளைப் பயன்படுத்தும் வியூகத்திற்கு மாறினார்.

பாடம்: நாம் எடுக்கும் எல்லா அதிரடி முடிவுகளும் வெற்றியைத் தருவதில்லை. எப்போது தொடர்ந்து போராட வேண்டும், எப்போது மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது ஒரு நிறுவனருக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

அதிக ஆபத்துள்ள கண்டுபிடிப்புகளில் ஈடுபடும்போது எப்போதும் ஒரு மாற்றுத் திட்டம் கையில் இருக்க வேண்டும்.

நமது சுயபெருமை அல்லது கௌரவம் ஒரு வியூக மாற்றத்தைத் தடுத்துவிடக் கூடாது. வீணாகிப்போன ஒரு திட்டத்தை பாதியிலேயே கைவிடுவது பலவீனம் அல்ல; அது ஒரு ஒழுக்கமான நிர்வாகத்தின் அடையாளம்.

தோல்விகளுக்குப் பின்னால் சில பொதுவான அம்சங்கள்:

எலான் மஸ்கின் இந்த அத்தனை பின்னடைவுகளையும் கூர்ந்து கவனித்தால், அதில் ஒரு பொதுவான வடிவம் இருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அவை:

> ஆரம்பக் காலத் தயாரிப்புகளிலேயே காட்டிய அதீத லட்சியம்

> இயக்குநர்கள் குழுவுடன் ஏற்பட்ட அதிகார முரண்பாடுகள்

> கடுமையான பணப்புழக்க நெருக்கடி

> தொழில்நுட்பக் கணக்கீடுகளில் ஏற்பட்ட தவறுகள்

ஆனால், இவை அனைத்தையும் தாண்டிய இரக்கமற்ற மாற்று வியூகங்கள் எலான் மஸ்கின் கதை என்பது எந்தத் தவறுமே செய்யாத ஒரு துல்லியமான நிர்வாகப் பயணம் அல்ல. அது அசாத்தியமான மனவலிமை மற்றும் சூழ்நிலைக்கு ஏற்பத் தன்னை மாற்றியமைத்துக் கொள்ளும் குணத்தின் கலவையாகும்.

ஒவ்வொரு நிறுவனரும் வெற்றிக் கதையை மட்டுமே விரும்புகிறார்கள், தவறுகளைப் பற்றி யாரும் பேசுவதில்லை. எலான் மஸ்க் தனது நிறுவனங்களின் கட்டுப்பாட்டை இழந்தார், ராக்கெட்டுகள் வெடித்தன, தயாரிப்புகள் தாமதமாயின, ஒட்டுமொத்த திட்டங்களும் முடக்கப்பட்டன. ஆனால், எதுவுமே அவரை நிறுத்தவில்லை.

பாடம் மிகவும் எளிமையானது. ஒரு திட்டம் வேலை செய்யவில்லை என்றால், அதை மாற்றுங்கள்.

திட்டம் தோல்வியடைந்தால், அதைவிடச் சிறந்த ஒன்றை உருவாக்குங்கள். ஸ்டார்ட்அப் களத்தில் வெல்பவர்கள் தவறுகளே செய்யாதவர்கள் அல்ல; தவறுகளை விரைவாகத் திருத்திக்கொண்டு, நீண்ட கால இலக்கை நோக்கித் தொடர்ந்து ஓடுபவர்கள் மட்டுமே.

மூலம்: ஆஸ்மா கான்


Edited by Induja Raghunathan