இந்திய நிறுவனம் ஒன்றின் HR ஒருவர் பதிவிட்ட லிங்க்டு இன் போஸ்ட் வைரலாகியுள்ளது. அதோடு அவர் அந்தப் பதிவில் கூறியுள்ள விஷயங்கள் சமூக ஊடகங்களில் கடும் விவாதங்களைத் தூண்டியுள்ளது. அதாவது, ஊழியர் ஒருவர் தன் முதல் மாத சம்பளத்தைப் பெற்ற 5-வது நிமிடத்தில் தன் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்ததுதான் இந்த மனிதவள பதிவரின் விவாதம் தூண்டும் பதிவுக்குக் காரணமாகும்.
ஒரு ஊழியரை தேர்வு செய்து அவருக்கான பயிற்சிகளை அளித்து, அவருடன் பேசி அவரை நிறுவனத்தின் கொள்கைகளைப் புரியச்செய்து, அவரது பொறுப்புகளையும் நிறுவனத்தின் விதிமுறைகளையும் சொல்லிக் கொடுத்து மேற்கொண்ட அனைத்துப் பணிகளும் விரயமாகி விடுவது பற்றியதுதான் அந்த ஹெ.ஆர். பதிவு பேசுகிறது.
நாம் தொழில்பூர்வ அறம் பற்றி பேசுவோம். நிறுவனம் உங்களை வரவேற்றது, உங்களை நம்பி பொறுப்பை ஒப்படைத்தது. நீங்கள் வளர்வதற்கான நடைமேடையை உருவாக்கித் தந்துள்ளது. பிறகு என்ன? ஆனால், நீங்கள் என்ன செய்கிறீர்கள், முதல் சம்பளம் வங்கிக் கணக்கில் வந்து விழுந்தவுடன் 5வது நிமிடத்தில் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பிக்கிறீர்கள். இது நியாயமா? இது தர்மமா? கடைசி நேர ராஜினாமா உங்களுடைய நோக்கமின்மை, முதிர்ச்சியின்மை, பொறுப்பின்மையைக் காட்டுகிறது.
உங்களுக்கு எதுவும் சரியெனப் படவில்லை எனில் நீங்கள் வெளிப்படையாகப் பேசியிருக்கலாம். நீங்கள் தெளிவு பெற்றிருக்கலாமே, அல்லது உதவி கோரியிருக்கலாமே.. நீங்கள் உணர்வுபூர்வமாக வெளியேறியுள்ளீர்கள், சவுகரியமான வெளியேற்றம் அல்ல. எந்த ஒரு பணியும் சுலபமல்ல, எந்த ஒரு பணியும் அர்ப்பணிப்பு, பொறுமை முயற்சி ஆகியவற்றைக் கோருவது. உங்களது முதல் சம்பளத்தினால் உங்களுக்கு வளர்ச்சி வந்து விடாது. வளர்ச்சி விடாமுயற்சியினால் வருவது.
ஆகவே ‘கல்ச்சர்’ மற்றும் ‘பொருத்தமற்ற வேலை’ என்று நீங்கள் குற்றம் சுமத்த உங்கள் விரல்களை நீட்டும் முன் சற்றே நிதானியுங்கள், யோசனை செய்யுங்கள், வெளிப்படையாகப் பேசுங்கள், ஏனெனில் உங்கள் தொழில்முறைத் தன்மை உங்கள் பதவியினால் அல்ல உங்கள் செயல்களினால் தீர்மானிக்கப்படுகிறது,” என்று அந்தப் பதிவு நீண்ட அறிவுரையை வழங்க நெட்டிசன்கள் இதற்கு கலவையான எதிர்வினைகளை ஆற்றியுள்ளனர்.
ஒரு லிங்க்டு இன் பயனர்,
‘அந்த நபர் தவறு செய்திருக்கலாம், ஆனால் ஹெ.ஆர். போன்ற பொறுப்பான பதவியில் இருந்து கொண்டு சோஷிய மீடியாவில் இப்படிப் பதிவு செய்யலாமா? இது ஹெ.ஆர்-இன் முதிர்ச்சியின்மையைக் காட்டுகிறது’ என்று பதிவிட்டுள்ளார்.
இன்னொரு பயனர்,
“என்னது பணி அறமா? சம்பளம் ஏற்கெனவே செய்த வேலைக்குத்தானே தவிர தான தர்மத்துக்காக அல்ல. முன் கூட்டிய அட்வான்சும் அல்ல. சம்பளம் வாங்கிய பிறகு ஒருவர் ராஜினாமா செய்கிறார் என்றால் அவர் அந்த மாதத்திற்கான தன் பணிக்கடமையை செய்து முடித்த பிறகே ராஜினாமா செய்கிறார். ஆனால் நாம் ஒன்றை மறந்து விட வேண்டாம்: நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்பதும் இருக்கிறது. ஆகவே, நிறுவனமும் கண்மூடித்தனமாகவோ, குறைத்து மதிப்பிட்டதாகவோ அர்த்தமல்ல. ஒரு நிறுவனம் வாழ்நாள் முழுதுமான விசுவாசத்தை ஊழியர்களிடமிருந்து எதிர்பார்த்தால் நியமனக் கடிதத்திற்குப் பதில் திருமணச் சான்றிதழ்தான் அளிக்க வேண்டும்,” என்று ஊழியர் தரப்பு எடுத்து வாதிட்டுள்ளார்.
மற்றொரு பயனர், ஒரு ஊழியர் வெளியேறியதால் நிறுவனம் ஒன்றும் அழிந்து விடாது, மாறாக நோட்டீஸ் எல்லாம் கொடுக்காமல் ஒரு ஊழியரை நிறுவனம் வெளியேற்றும் போது குடும்பங்கள் நடுத்தெருக்கு வருவதைத்தான் பார்க்கிறோம். எனவே, அந்தப்பார்வையில் இதை அணுகுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.