
மருத்துவர் அல்லது பொறியாளர் ஆக வேண்டும் என்ற கனவுகளுடன், நீட் மற்றும் ஜேஇஇ போன்ற நுழைவுத் தேர்வு எழுதி நினைத்த கட்ஆஃப் பெறவில்லை. இந்த நிலையில் இருக்கும் பலருக்கும் “எல்லா வாய்ப்புகளும் முடிந்துவிட்டது” என்றே எண்ணத் தோன்றும். ஆனால், சஞ்சய்க்கு, இது தான் புதிய வாழ்க்கையின் தொடக்கம்.
மூன்று முறை நீட் தேர்வில் தோல்வியடைந்தது, ஜேஇஇ-யில் ரேங்க் கிடைக்காதது, கணினி அறிவே இல்லாதது போன்ற பல தடைகளைத் தாண்டி, இன்று அவர் புனேவில் உள்ள Synerga என்கிற ஒரு முன்னணி நிறுவனத்தில் டேட்டா சயின்டிஸ்டாகப் பணியாற்றி வருகிறார். ஐஐடி மெட்ராஸின் ஆன்லைன் படிப்பு, அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.

சஞ்சய்
தோல்விகளில் இருந்து மீண்ட பயணம்
மருத்துவராக வேண்டும் என்ற தனது கனவுக்காக மூன்று முறை நீட் தேர்வை எழுதினார் சஞ்சய். ஆனால், கட் ஆஃப் மதிப்பெண்களைப் பெற முடியவில்லை. பின்னர், ஜேஇஇ நுழைவுத் தேர்விலும் அவருக்கு ரேங்க் கிடைக்கவில்லை. இந்தக் காலகட்டத்தில், பல மாணவர்களைப் போல, தனக்கு அனைத்து வாய்ப்புகளும் முடிந்துவிட்டதாக அவர் கருதவில்லை. மாறாக, இது ஒரு புதிய பயணத்தின் தொடக்கம் என நம்பிக்கையுடன் நினைத்தார்.
ஐஐடி மெட்ராஸின் ஆன்லைன் படிப்பு தந்த நம்பிக்கை
ஐஐடி மெட்ராசில் என்ஜினியரிங் படிப்புகளை படிக்கவே ஜேஇஇ தேர்ச்சி பெற வேண்டும். என்ஜினியரிங் அல்லாத படிப்புகள் படிக்கவும் ஐஐடி-யில் சேரலாம் என்பதை அறிந்து சஞ்சய் அதனை முயற்சி செய்தார். IIT மெட்ராஸ் வழங்கும் "BS in Data Science and Applications" என்ற ஆன்லைன் பட்டப்படிப்பில் சேர்ந்தார். அப்போது அவருக்கு கோடிங் பற்றி எதுவுமே தெரியாது.
ஆனால், ஐஐடி மெட்ராஸ் வழங்கிய சுய-கற்றல் மாதிரிகள், வீடியோக்கள் மற்றும் பயிற்சிகள் அவருக்குக் கோடிங் உலகில் ஒரு புதிய கதவைத் திறந்தன. தமிழக அரசு கொடுத்த லேப்டாப்பை கொண்டு, அவர் பைதான், ஜாவா, SQL, மெஷின் லேர்னிங் போன்றவற்றை படிப்படியாகக் கற்றுக் கொண்டார்.

வேலை, படிப்பு இரண்டும் ஒருசேர
18 வயதிலிருந்தே வேலைக்குச் சென்று வந்த சஞ்சய், SBI Cards, Kotak Mahindra Bank போன்ற நிறுவனங்களில் விற்பனை மற்றும் குழுத் தலைவராகப் பணியாற்றியுள்ளார். வேலைக்குச் சென்றாலும், அதுவே போதும் என்று அவர் படிப்பை கைவிடவில்லை. ஒரே நேரத்தில், ஐஐடி மெட்ராஸின் டேட்டா சயின்ஸ் பட்டப்படிப்பையும், University of the People-ல் ஹெல்த் சயின்ஸ் பட்டப்படிப்பையும் படித்தார். வேலை செய்துகொண்டே படிப்பது கடினமாக இருந்தாலும், தன் சகோதரியின் உதவியால் படிப்பில் முழு கவனம் செலுத்தியதாக அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
புதிய திட்டங்கள், புதிய வாய்ப்புகள்
ஐஐடி மெட்ராஸின் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெறுவதோடு மட்டுமல்லாமல், அவர் பல புதிய திட்டங்களையும் உருவாக்கினார். AI அடிப்படையிலான பயன்பாடுகள், RAG System, GoodWill AI, மற்றும் Tea Franchise Optimisation போன்றவை அவற்றில் குறிப்பிடத்தக்கவை. இந்தத் திட்டங்கள், அவருக்கு CII Institute of Logistics-ல் இன்டர்ன்ஷிப் வாய்ப்பையும், பின்னர், புனேவில் உள்ள Syngenta நிறுவனத்தில் Associate Data Scientist பணியையும் பெற்றுத் தந்தன.
சஞ்சயின் கதை தரும் பாடம்
சஞ்சயின் இந்த வெற்றிப் பயணம், நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு ஒரு முக்கியமான பாடத்தை உணர்த்துகிறது:
எந்த ஒரு தோல்வியும் வாழ்க்கையின் முடிவு அல்ல. புதியவற்றைக் கற்றுக்கொள்ளவும், மாறிவரும் சூழலுக்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொள்ளவும் தயாராக இருந்தால், வெற்றி நிச்சயம், என்பதே.
ஐஐடி மெட்ராஸ் போன்ற கல்வி நிறுவனங்கள் வழங்கும் புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டால், கணினி அறிவு இல்லாதவர்கள்கூட டேட்டா சயின்ஸ் போன்ற துறைகளில் சிறந்து விளங்க முடியும் என்பதற்கு சஞ்சயின் கதை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.