+

தில்லி, மும்பை, பெங்களூருவில் சூப்பர் சார்ஜிங் மையம் அமைக்க டெஸ்லா திட்டம்!

எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா நிறுவனம் அண்மையில் இந்தியாவில் இரண்டாவது அனுபவ மையத்தை துவக்கிய நிலையில், சூப்பர் சார்ஜிங் மையங்களை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.

அமெரிக்க மின்வாகன தயாரிப்பு நிறுவனம் டெஸ்லா; இந்தியாவில் வாகன டெலிவரியை செப்டம்பரில் துவக்க உள்ள நிலையில், தில்லி-என்.சி.ஆர், மும்பை மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் தனது சூப்பர் சார்ஜிங் மையங்களை திறக்க திட்டமிட்டுள்ளதாக நிறுவன உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

தலைநகர் தில்லியில் ஏரோசிட்டியில் தனது இரண்டாவது அனுபவ மையத்தை துவக்கிய டெஸ்லா நிறுவனம், குருகிராம் மற்றும் நொய்டா தவிர சாகேத்தில் ஒரு சூப்பர் சார்ஜிங் மையம் அமைக்க இருப்பதாக, இங்கு நடைபெற்ற துவக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற தென்கிழக்கு ஆசியாவிற்கான பிராந்திய இயக்குனர் இசபெல் பேன் கூறினார்.

மாடல் ஒய் அறிமுகத்துடன் மும்பையில் நிறுவனம் கடந்த மாதம் தனது முதல் அனுபவ மையத்தை திறந்தது. இந்த கார் ரூ.59.89 லட்சம் விலையில் இருந்து கிடைக்கிறது. தில்லி மற்றும் மும்பை ஆகிய நகரங்கள் முன்னுரிமையில் இருப்பதாக கூறியவர், குருகிராமில் சூப்பர் சார்ஜிங் மையத்தை துவக்க இருப்பதாகவும் பின்னர், தெற்கு தில்லியின் சாகேத் மற்றும் நொய்டாவில் திறக்க இருப்பதாக கூறினார்.

tesla

மும்பையில், ஏற்கனவே பாந்த்ரா குர்லா வளாகத்தில் இருப்பது தவிர, கீழ் பாரேல், நவி மும்பை மற்றும் தானேவில் சூப்பர் சார்ஜிங் மையங்கள் அமைக்க இருப்பதாகவும் அவர் கூறினார்.

"மற்ற புதிய சந்தைகள், மாநிலங்களில்; பெங்களுருவை தவற விடமுடியாது என்றவர், எங்களால் நிறைவேற்ற முடியாத ஐந்தாண்டு திட்டத்தை குறிப்பிடுவதில்லை, எனவே உடனடியாக வரும் காலத்திற்கான தகவல்களை அளிக்கிறோம்," என்றார்.

மேலும், நிறுவனம் நடமாடும் சேவை மையம், சேவை மையம் மற்றும் டெஸ்லா அங்கீகரித்த கொலிஷன் மையத்தை இந்தியாவில் அமைக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

செய்தி: பிடிஐ, தமிழில்: சைபர் சிம்மன்


Edited by Induja Raghunathan

facebook twitter