இந்தியாவில் அவசரகால மருத்துவச் சேவையின் அணுகுமுறை குறித்த கேள்விகள் நீண்ட காலமாகவே இருக்கின்றன. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.5%-க்கும் குறைவாகவே சுகாதாரத்துக்காக செலவிடப்படும் சூழலில், உயிர் காக்கும் அவசரகால உதவிகள் பல சமயங்களில் எட்டாக்கனியாகவே இருக்கின்றன.
கிராமப்புறங்களில் ஆம்புலன்ஸ் வந்து சேரவே 10 முதல் 30 நிமிடங்கள் அல்லது அதற்கு மேலும் ஆகலாம். ஒருவருக்கு மயக்கம், மூச்சுத் திணறல், தீக்காயம் அல்லது எலும்பு முறிவு ஏற்படும்போது, இந்தத் தாமதம் உயிருக்கும் உடனடி சிகிச்சைக்கும் இடையே உள்ள தூரத்தை குறைத்து விடுகிறது.
இந்த இடைவெளியில்தான், விபத்து நடந்த முதல் சில நிமிடங்களில் கிடைக்கும் உடனடி உதவியே, ‘பொன்னான நிமிடங்களை’ (கோல்டன் மினிட்ஸ்) உயிர்ப்பிக்கும் முதல் உதவியாக மாறுகிறது. இந்த அவசியத்தை உணர்ந்து, ஒரு மாணவரின் புதுமையான சிந்தனை இன்று பல உயிர்களைக் காக்கும் இயக்கமாக மலர்ந்திருக்கிறது.
ஒரு துயரச் சம்பவமும், திருப்புமுனையும்:
அந்த மாணவர் பிரசேதஸ் யேரி. 2022 மார்ச் மாதம், தனது கண் முன்னே நடந்த ஒரு துயரச் சம்பவத்தை அவரால் மறக்க முடியவில்லை. அவர் வசித்த பகுதியின் நடைபாதையில் ஒரு முதியவர் திடீரெனச் சரிந்து விழுந்துள்ளார். அங்கிருந்த அனைவரும் பதறிப்போய் ஆம்புலன்ஸை அழைத்தனர். ஆனால், அது வந்து சேரவே 30 நிமிடங்கள் ஆனது. அந்த முதியவர் மருத்துவமனையை அடைவதற்கு முன்பே துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் பிரசேதஸ் யேரியை உலுக்கிவிட்டது. மாரடைப்பு, மூச்சுத்திணறல், அல்லது ஒரு சிறு காயத்துக்குக்கூட முதலுதவி செய்யத் தெரியாமல், மக்கள் உதவியற்றுப் பீதியுடன் நிற்பதை அவர் கண்டார். சிபிஆர் உள்ளிட்ட அடிப்படையான முதலுதவி குறித்த தெளிவு கூட பொதுமக்களிடம் இல்லை என்ற கசப்பான உண்மையை அவருக்கு உறைத்தது. இந்தத் துயரமே, ‘எமர்ரெடி’ (EmerReady - emerready.org) என்ற அமைப்புக்கு வித்திட்டது. பள்ளிச் சிறார்களுக்கு முதல் உதவி அறிவை வழங்குவதே இதன் நோக்கம்.
‘எமர்ரெடி’யின் ஆரம்பம் இன்னும் சுவாரஸ்யமானது. கோவிட்-19 பரவலின்போது, ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்களின் கவனச்சிதறலைக் கண்டறியும் ஒரு ‘பைத்தான்’ புரோகிராம் உருவாக்க ஒரு சிறிய மாணவர் குழு முயன்றது. மாணவர்களின் முகத்தில் உள்ள 18 உணர்ச்சிப் புள்ளிகளை ஆராய்ந்து, ஒரு மாணவன் சோர்வாக இருக்கிறானா, ஆர்வமாக இருக்கிறானா என்பதைக் கணிக்கும் தொழில்நுட்பம் அடிப்படையிலான செயலி அது. இந்த ஆரம்பகட்ட தொழில்நுட்பம், ஒரு முக்கியமான புரிதலை அளித்தது. அது:
தொழில்நுட்பத்தின் மூலம் மனித உணர்வுகளைப் படிக்க முடியும் என்றால், அதை ஏன் அவசரகால தேவைகளுக்குப் பயன்படுத்தக் கூடாது?
ஆம்புலன்ஸில் இருக்கும் நோயாளியின் வலி, உணர்வுகளை தெரிந்துகொண்டு, மருத்துவமனைக்குத் தரவுகளை அனுப்பினால் 'பொன்னான நிமிடங்களில்' உடனடி முதல் உதவிக்குத் தயாராகலாமே என்ற சிந்தனையே, பிரசேதஸ் யேரியை, தொழில்நுட்பத்தை மக்களின் அடிப்படைத் தேவைக்காக பயன்படுத்த தூண்டியது. புதிய ஒன்றை கண்டுபிடிப்பதை விட, ஏற்கெனவே உள்ளதை மனிதத் தேவைக்குப் பயன்படுத்துவதே உண்மையான கண்டுபிடிப்பு என்ற தத்துவத்தை அவர் ஏற்றுக்கொண்டார்.
எமர்ரெடியின் செயல்பாடு:
எமர்ரெடியின் முக்கிய நோக்கம், வசதி குறைந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு முதலுதவி அறிவையும், அவசர காலங்களில் பதற்றப்படாமல் செயல்படும் நம்பிக்கையையும் அளிப்பதாகும். இந்த மாணவர்கள் அவசரகாலத்தில் உடனடியாக செயல்படுபவர்களாக மாற வேண்டும் என்பதே அதன் இலக்கு.
இதற்காக, எமர்ரெடி அரசுப் பள்ளிகள் மற்றும் உள்ளூர் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது. அவர்களின் அணுகுமுறை எளிமையானது, ஆனால், சக்தி வாய்ந்தது.
பிராந்திய மொழி பயிற்சி: முதலுதவிக் கருத்துகள் கன்னடம், இந்தி மற்றும் மராத்தி போன்ற பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுப் பயிற்றுவிக்கப்படுகின்றன.
ஊடாடும் கற்றல் (Interactive Learning): வெறும் புத்தகப் பாடம் அல்லாமல், கதை சொல்லுதல், வீடியோக்கள் மற்றும் நேரடி செயல் விளக்கங்கள் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. காயங்கள், தீக்காயங்கள், எலும்பு முறிவுகள், விலங்குக் கடி மற்றும் மயக்கம் போன்ற பொதுவான அவசர நிலைகளைக் கையாளும் முறைகள் இதில் அடங்கும். இந்த நடைமுறைப் பயிற்சி, மாணவர்கள் எந்தச் சூழலிலும் தயக்கமின்றிச் செயல்பட உதவுகிறது.
பாதுகாப்பான முதலுதவிப் பெட்டகங்கள் (Compact First-Aid Kits): குழந்தைகளுக்குப் பாதுகாப்பான, கூர்மையான பொருட்கள் இல்லாத, புத்தகப் பைக்குள் எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய சிறிய முதலுதவிப் பெட்டகங்கள் வழங்கப்படுகின்றன. மாணவர்கள் இவற்றைப் பள்ளிக்கும், வீட்டிற்கும், விளையாடச் செல்லும் இடங்களுக்கும் எடுத்துச் சென்று, தேவைப்படும்போது பயன்படுத்த முடியும்.
சர்வதேச அங்கீகாரம்: எமர்ரெடி ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் அளப்பரியது. இதுவரை, 8 பள்ளிகளில் 1,150-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 750-க்கும் மேற்பட்ட தனிப்பட்ட முதலுதவிப் பெட்டகங்களும், 6 தொழில்முறை தரத்திலான பெட்டகங்களும் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இந்த முதலுதவிப் பெட்டகங்கள் மூலம், விளையாட்டின்போது ஏற்பட்ட சிறு காயங்கள், மயக்கம் காரணமாகச் சரிந்து விழுந்த சக மாணவர்களுக்குத் தாங்களாகவே உதவி செய்திருக்கிறார்கள் என்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். சில சமயங்களில், இந்தச் சிறிய உதவிகள் உயிரிழப்பை கூட தடுத்திருக்கின்றன. குழந்தைகள் தங்கள் கைகளில் கிடைக்கும் கருவிகள் மூலம் உயிரைக் காப்பவர்களாக மாற்ற முடியும் என்பதை இது நிரூபிக்கிறது.
இந்தச் சமூகப் பணி தேசிய அளவிலும், உலக அளவிலும் அங்கீகாரம் பெற்றுள்ளது. நிறுவனர் பிரசேதஸ் யேரி, நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் ECOSOC இளைஞர் செயல்பாட்டு உச்சி மாநாட்டில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். பள்ளிக் கல்வித் திட்டங்களில் முதலுதவிப் பயிற்சியை இணைக்க வேண்டும் என்று அவர் உலக அரங்கில் வலியுற்த்தினார்.
எதிர்கால நம்பிக்கை:
பிரசேதஸ் யேரியின் எதிர்கால நோக்கம் மிகவும் தெளிவாக உள்ளது. அது:
மாணவர்கள் அவசரகாலங்களில் பீதியடையாமல் நம்பிக்கையுடன் செயல்பட அவர்களைத் தயார் படுத்துவது. அவரது எதிர்காலத் திட்டங்களில், இந்தியா முழுவதும் உள்ள அதிக பள்ளிகளுக்கு இந்தத் திட்டத்தை விரிவுபடுத்துதல், ஆன்லைனில் சுயமாகக் கற்றுக்கொள்ள உதவும் வீடியோ பயிற்சி தொகுப்புகளை வெளியிடுதல் மற்றும் பரந்த அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தன்னார்வத் தொண்டர்களின் பிணைப்பை உருவாக்குதல் ஆகியவை அடங்கும்.
ஆன்லைன் வகுப்புகளில் கவனச்சிதறலைக் கண்டறியும் ஒரு ஹேக்கத்தான் முயற்சியாகத் தொடங்கியது, இன்று உயிர்களைக் காப்பாற்றும் சமூக இயக்கமாக மாறியுள்ளது. இது குறித்து பிரசேதஸ் யேரி, கூறும்போது,
“நான் எதைக் கட்டியெழுப்ப முடியும்?” என்பதை விட, “எது கட்டியெழுப்பப்பட வேண்டும்?” என்ற கேள்விதான் உண்மையான கண்டுபிடிப்புக்கு வழி வகுக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இரக்கம், புதுமை ஆகியவற்றில் வேரூன்றி இருக்கும் இந்தச் சமூகத் தொழில்முனைவு, இந்தியக் குழந்தைகளுக்கு ஒரு புதிய நம்பிக்கையையும், அவசர காலங்களில் செயல்படும் திறனையும் அளிக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
Edited by Induja Raghunathan