இந்தியாவின் முன்னணி உணவுப் விநியோக நிறுவனங்களான ஸ்விக்கி மற்றும் ஜோமாட்டோ தற்போது தாங்கள் வசூலிக்கும் டெலிவரி கட்டணங்களுக்கும் ஜிஎஸ்டி (GST) கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இது வரை, டெலிவரி கட்டணம் ஒரு "கிரே ஸோன்" என்ற நிலைமையில் இருந்தது. டெலிவரி பணியாளர்கள் தனிநபர் ஒப்பந்ததாரர்களாக இருப்பதாலும், பெரும்பாலானோர் ஜிஎஸ்டிக்கு பதிவு செய்யப்படாத நிலையில் இருப்பதாலும், இந்த கட்டணங்கள் ஜிஎஸ்டிக்குள் வருவதில்லை என்று இத்தளங்கள் வாதிட்டன.
ஆனால் இப்போது, மத்திய ஜிஎஸ்டி சட்டத்தின் பிரிவு 9(5) படி, ஸ்விக்கி மற்றும் ஜோமாட்டோவை டெலிவரி சேவைகளின் ‘சப்ளையர்’ என வகைப்படுத்தி, டெலிவரி சேவைக்கு 18% ஜிஎஸ்டி வசூலித்து அரசுக்கு செலுத்தும் பொறுப்பு அவர்கள்மீது விதிக்கப்பட்டுள்ளது.
ரூ.40 டெலிவரி கட்டணத்திற்கு தற்போது ரூ.7.20 ஜிஎஸ்டி கூட சேர்க்கப்படும் – இதனால் மொத்த கட்டணம் ரூ.47.20 ஆகும். இந்த வரி சுமையை நிறுவனங்கள் தாங்காவிட்டால், வாடிக்கையாளர்களின் தலையில்தான் இந்த ஜிஎஸ்டி வரி விதிப்பு வந்து விடியும்.
’இனி தளங்கள் தான் டெலிவரி சேவைக்கு பொறுப்பு,’ என்பதாக இந்த விதிமுறை அமைகிறது. இந்த நடவடிக்கை மூலம், டெலிவரி சேவைகள் ஒரு சிறு அளவிலான, பதிவு செய்யப்படாத சேவையாக இல்லாமல், பெரிய டிஜிட்டல் தளங்கள் மூலம் வழங்கப்படும் வரிச்சுமை உள்ள சேவையாக மாற்றப்படுகிறது. இது தொடர்பாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் அமித்ராஜ் கௌஷல் கூறும்போது,
"இனி டெலிவரி பணியாளர்கள் பதிவு செய்துள்ளார்களா என்பதெல்லாம் முக்கியமல்ல – உணவு விநியோகத் தளமே ஜிஎஸ்டி விதிக்கப்படும் விநியோக சேவையாளராகக் கருதப்படுகிறது," என்று கூறியுள்ளார்.
உணவு விநியோகம் Vs துரித வணிகம் (Food Delivery vs. Quick Commerce)
இந்த நடவடிக்கை, உணவு விநியோகத் தளங்களை வேறு வகை ஆன்லைன் வணிகத்தளங்களிலிருந்து வேறுபடுத்துகிறது. க்விக் காமர்ஸ் அல்லது ஆன்லைன் ரீட்டெயில் தளங்களில் டெலிவரி என்பது பொருளின் துணைச் சேவையாகக் கருதப்படுகிறது. ஆனால், ஸ்விக்கி, ஜோமாட்டோவின் நிலை மாறுபட்டது – உணவுப் விநியோகமே இங்கு முதன்மை சேவையாக இருக்கிறது. இதேபோல், ஊபர், ஓலா போன்ற வாடகைச் சவாரி சேவைத் தளங்களுக்கும் இந்த வரிவிதிப்புப் பொருந்தும். ஏற்கனவே இது இவர்களுக்கு நடைமுறையில் உள்ளது – டிரைவர்களல்ல, தளங்களே ஜிஎஸ்டி கட்டுகின்றன.
லாபம், இணக்கம் மற்றும் நுகர்வோர் நிலை:
ஸ்விக்கி மற்றும் ஜோமாட்டோவுக்கு இது புதிய வரிச்சுமையைக் கொண்டு வருவதால், நிகர லாபங்கள் குறையும், பணப்புழக்கத்தில் சிக்கல்கள் ஏற்படலாம். ஒவ்வொரு ஆர்டருக்கும் ஜிஎஸ்டி வசூலிக்கும் புதிய பில்லிங் முறைமை தேவைப்படும்.
ஸ்விக்கி ஒன், ஜோமாடோ கோல்டு போன்ற சந்தா மாடல்களுக்கு உடனடியாக பாதிப்பு இருக்க வாய்ப்பில்லை. ஆனால் "இலவச டெலிவரி" என்று வரும் சலுகைகள் இனிமேல் வரி கண்காணிப்பில் சிக்கக்கூடும்.
அமித்ராஜ் கவுஷல் கூறியது போல,
"இந்த சட்ட மாற்றம், கிக் எக்கானமியில் நீண்ட காலமாக இருந்த வரி ஏமாற்றங்களை சரிசெய்கிறது. ஆனால், பொருளாதார பாதிப்புகள் தெளிவாகத் தெரியும் – தளங்கள் இந்த சுமையை வாடிக்கையாளர்களிடம் தள்ளிவைக்கலாம் அல்லது டெலிவரி பணியாளர்களின் ஊதியத்தில் மாற்றம் செய்யலாம்."
சுருக்கமாக, இந்த புதிய ஜிஎஸ்டி விதி மூலம், நீண்ட காலமாக வரிக் கண்காணிப்பு இல்லாமல் இருந்த உணவு விநியோகத் துறையை அரசு முறையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.
தமிழில்: முத்துகுமார்