+

'புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவு பள்ளி' தொடங்கிய ஐஐடி மெட்ராஸ்!

(ஐஐடி மெட்ராஸ் ஆழ்ந்த தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்களைத் தொடங்க உலகத் தரம் வாய்ந்த சூழலை உருவாக்கும் வகையில், புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவுக்கான பள்ளியைத் தொடங்கியுள்ளது.

ஐஐடி மெட்ராஸ், ஆழ்ந்த தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்களைத் தொடங்க உலகத் தரம் வாய்ந்த சூழலை உருவாக்கும் வகையில், புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவுக்கான பள்ளியைத்  தொடங்கியுள்ளது.

தொழில்முனைவு பல்கலைக்கழகங்களின் உலகளாவிய வரைபடத்தில் இக்கல்வி நிறுவனத்தை இடம்பெறச் செய்வதை நோக்கமாகக் கொண்ட இப்பள்ளியை ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி தொடங்கி வைத்தார்.

ஐஐடி மெட்ராஸ் டீன் (முன்னாள் மாணவர்கள் மற்றும் நிறுவன உறவுகள்) பேராசிரியர் அஷ்வின் மகாலிங்கம், பல்துறைக் கல்விக்கான பள்ளியின் தலைவர் பேராசிரியர் அன்பரசு மணிவண்ணன், புதிய பள்ளியின் நிறுவனத் தலைவர் பேராசிரியர் பிரபு ராஜகோபால், இக்கல்வி நிறுவனத்தின் புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவு சுற்றுச்சூழல் அமைப்பின் இதர பங்குதாரர்கள், ஆசிரியர்கள், புத்தொழில் நிறுவனர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் ஆகியோர் முன்னிலையில் தொடக்க விழா நடைபெற்றது.

IIT Madras
ஐஐடி மெட்ராஸ் ஏற்கனவே ரூ.50,000 கோடிக்கும் (6 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) மேல் மதிப்புள்ள 475-க்கும் அதிகமான புத்தொழில் நிறுவனங்களுடன் இந்தியாவின் மிகப்பெரிய ஆழ்ந்த தொழில்நுட்ப புத்தொழில் சுற்றுச்சூழல் அமைப்பைக் கொண்டுள்ளது.

ஐஐடி மெட்ராஸ் தொழில் ஊக்குவிப்பு மையத்தில் பல்துறை சார்ந்த புத்தொழில் ஊக்குவிப்பு நிறுவனங்கள் உள்ளன. இந்த புத்தொழில் நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக 11,000-க்கும் மேற்பட்ட பணிகளை உருவாக்கியிருப்பதுடன், 700க்கும் மேற்பட்ட காப்புரிமைகளைப் பெற்றுள்ளன. அதுமட்டுமின்றி, ரூ.12,000 கோடி ரூபாய் அளவுக்கு இந்நிறுவனங்கள் முதலீடுகளை ஈர்த்துள்ளன.

புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவு பள்ளிக்கு சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது பெற்றவரும், தொடர் ஆசிரிய-தொழில்முனைவோரும், ஐஐடி மெட்ராஸ் இயந்திரப் பொறியியல் துறையின் மதிப்புமிகு ஆசிரியருமான பேராசிரியர் பிரபு ராஜகோபால் தலைமை தாங்குவார், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பள்ளி தொழில்முனைவுத் துறையில் குறுகிய காலப் படிப்பையும், எம்.எஸ் (தொழில்முனைவு) பட்டம் ஆகியவற்றை வழங்கும். மேலும், பி.எச்.டி. பாடத்திட்டத்தைத் தவிர பயன்பாட்டு ஆராய்ச்சிக்கு பங்களிக்கும் புதிய பாடத்திட்டங்களையும், தொழில்முனைவை தொழிலாகத் தொடர விரும்பும் நிபுணர்களை ஆதரிக்கும் வகையில் பிரத்யேக இல்லத் தொழில்முனைவோர் (குழுவையும் வழங்கும். இளங்கலை, முதுகலை மட்டங்களில் பயிற்சி சார்ந்த பட்டங்கள், தொழில்துறையில் வரையறுக்கப்பட்ட 'புத்தாக்க முனைவர் பட்டம்' ஆகியவையும் இதில் அடங்கும்.

தொடக்க மற்றும் அடுத்தடுத்த நிலைகளில் ஐஐடி மெட்ராஸ்-க்கு குறிப்பிட்ட நிதி செயல்பாடுகளை உருவாக்குவதையும் இந்தப் பள்ளி நோக்கமாகக் கொண்டிருக்கிறது. காப்புரிமைக்கு தாக்கல் செய்வதன் கருத்தை புரிந்து கொள்ளவும், அவர்களின் தயாரிப்புகளை காப்புரிமை பெற்ற தயாரிப்புகளாக மாற்றவும் உதவும் வகையில் ஐஐடிஎம்-மின் ஐபிஎம் பிரிவு ஐபி கிளினிகிஸ் மூலம் உதவிகளை வழங்கும்.

“கடந்த நிதியாண்டில் நாளொன்றுக்கு 1.2 காப்புரிமைகளை கிடைக்கப் பெற்றதுடன், 100-க்கும் மேற்பட்ட புத்தாக்க நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த அளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ள நிலையில், எமது புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவு முயற்சிகளை நிறுவனமாக்க வேண்டிய தருணம் இது. பி.டெக் திட்டத்தின் இரண்டாம் ஆண்டில், தொழில்முனைவு மற்றும் அமைப்பு உருவாக்கம் குறித்த பாடத்திட்டத்தை ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ளோம். தற்போது குறுகிய கால பாடத்திட்டம் ஒன்றும் உள்ளது. பிஎச்டி திட்டம் மிகவும் சுவாரஸ்யமானது. இது ஐஐடி மெட்ராஸின் மற்றொரு தனித்துவ விற்பனை முன்மொழிவாக இருக்கப் போகிறது," என்று ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி கூறினார்.

“முன்னாள் மாணவர்களிடமிருந்து ஐஐடிஎம் முன்னாள் மாணவர் நிதி’ ஏற்கனவே குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்துள்ளது, மேலும், கிட்டத்தட்ட ரூ.200 கோடி இலக்கிற்கான உறுதிமொழிகளைப் பெற்றுள்ளோம். ஐஐடி மெட்ராஸ்-தொழில் ஊக்குவிப்பு புத்தாக்க நிறுவனங்களுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும். உங்கள் அனைவரின் பங்குக்கு ஈடாக முதலீடு செய்து வளர்ச்சிபெற வழியாக இருக்கும். இந்த அற்புதமான பயணத்தில் விளைவை உருவாக்கும் ஆராய்ச்சியை தயாரிப்புகளாக மாற்ற முடியும்.” என்றும் கூறினார்.

IIT madras
"இந்தியாவின் மிகவும் துடிப்பான ஆழ்ந்த தொழில்நுட்ப சுற்றுச்சூழல் அமைப்பின் தாயகமாக ஐஐடி-மெட்ராஸ் இருந்துவருகிறது. பல்லாண்டு காலமாக நீடித்துவரும் ஊக்குவிப்பு நடவடிக்கைகள், பாடத்திட்ட ஆதரவு, புத்தாக்கம், தொழில் முன்ஊக்குவிப்புத் திட்டங்களை உள்ளடக்கிய சுற்றுச்சூழல் அமைப்பை நாங்கள் இயல்பாகவே வளர்த்துள்ளோம். இந்த தொடர்புகள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து, கருத்தாக்கத்திலிருந்து இறுதி பொதுப்பங்கு வெளியீடு (IPO) வரை சீரான முன்னேற்றத்தை உறுதி செய்யப்படும். எங்கள் புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவுப் பள்ளியின் கீழ் இவை அனைத்தையும் முறைப்படுத்துவதில் எங்களுக்கு மகிழ்ச்சி," என ஐஐடி மெட்ராஸ் டீன் (முன்னாள் மாணவர்கள் மற்றும் நிறுவன உறவுகள்), புத்தொழில் மற்றும் தொழில்முனைவுப் பள்ளியின் ஆலோசனைக் குழு உறுப்பினர் பேராசிரியர் அஷ்வின் மகா லிங்கம் கூறினார்.

Edited by Induja Raghunathan

facebook twitter