கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள ஆவியூர் கிராமத்தை சேர்ந்தவர் மாணவர் திருமூர்த்தி. இவரது தந்தை வேலன் தனியார் பேருந்தில் ஓட்டுநராக பணி புரிந்து வருகிறார். ‘சரியாக படிக்காமல் நாம்தான் டிரைவராக வேலை பார்த்து வருகிறோம். தன் மகனாவது நன்றாக படித்து மருத்துவராக வேண்டும்,’ என ஆசைப்பட்டுள்ளார் வேலன்.
தந்தையின் இந்தக் கனவைத் தன் கனவாகவே உறுதி எடுத்துக் கொண்டு, தீவிரமாகப் படித்துள்ளார் திருமூர்த்தி. திருக்கோவிலூரில் உள்ள அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்த இவர், பின்னர் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் டூ வரை படித்துள்ளார். பள்ளியில் படித்துக் கொண்டே தனியார் பயிற்சி மையத்திலும் சேர்ந்து நீட் தேர்வுக்கான பயிற்சியை எடுத்துள்ளார் திருமூர்த்தி.
அதன் பலனாக, கடந்த மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வில், 720க்கு 572 மதிப்பெண்கள் பெற்றார். இதன் மூலம், அரசு பள்ளி மாணவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள 7.5 உள் இட ஒதுக்கீட்டீல் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.
நீட் தேர்வு முடிவுகள் வெளியான போதே, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், மாணவர் திருமூர்த்தியை நேரில் அழைத்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் மாணவர் திருமூர்த்தி வாழ்த்து பெற்ற தருணம்
எம்.எம்.சி-யில் சீட்
அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டிற்கான மருத்துவக் கலந்தாய்வு நேற்று தொடங்கியது. இதில் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான ஆணைகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாணவ, மாணவியருக்கு நேரில் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டு தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள மாணவர் திருமூர்த்திக்கு, சென்னை மருத்துவக் கல்லூரியில் (எம் எம் சி) சேர்வதற்கான ஆணை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் மாணவர் திருமூர்த்தியும், அவரது தந்தை வேலனும் பேசினார்கள்.
அப்போது செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த வேலன்,
“நான் தனியார் பேருந்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறேன். நான் தான் சரியாக படிக்கவில்லை. எனது மகனாவது நன்றாகப் படித்து டாக்டராக வேண்டும் என ஆசைப்பட்டேன். எனது மகனும் சிறுவயதில் இருந்தே நன்றாக படிப்பார். இரவும், பகலும் கஷ்டப்பட்டு படித்தார். பள்ளியில் எப்போதுமே முதலிடத்தில்தான் வருவார்,“ என்றார்.
தற்போது நீட் தேர்விலும் நல்ல மதிப்பெண்கள் பெற்று, மருத்துவப் படிப்பில் சேருவது பெருமையாக இருக்கிறது. எங்களை மாதிரி ஏழைகள் இந்தளவிற்கு படித்து முன்னுக்கு வருவார்கள் என நான் நினைத்துக்கூட பார்த்தது கிடையாது. இந்த நேரத்தில் 7.5% இட ஒதுக்கீட்டிற்கும் நான் நன்றி சொல்லியே ஆக வேண்டும்.
“தற்போது என் மகனுக்கு எம் எம் சியில் இடம் கிடைத்திருப்பது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது,” என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
பெற்றோருடன் மாணவர் திருமூர்த்தி
கூடுதல் நேரம் படித்தேன்!
வேலனைத் தொடர்ந்து பேசிய மாணவர் திருமூர்த்தி,
“7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் எம்.எம்.சி.யில் மருத்துவ சீட் பெற வேண்டும் என்பதுதான் எனது இலக்காக இருந்தது. ஆனால் மாநில அளவில் முதலிடம் பிடிப்பேன் என எதிர்பார்க்கவில்லை. பன்னிரண்டாம் வகுப்பில் இயற்பியல் மற்றும் வேதியியலில் கணக்குகளை சமன் செய்வது கொஞ்சம் சிரமமாக இருந்தது. இடையில் கொஞ்சம் உடல்நலப் பாதிப்புகளும் ஏற்பட்டது.
“தனியார் மையத்தில் நீட் தேர்வுக்கு தாமதமாகத்தான் சேர்ந்தேன். அப்போது பல பாடங்களை அவர்கள் எடுத்து முடித்து விட்டனர். எனவே, எனக்கு ஆரம்பத்தில் படிப்பது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. பிறகு கூடுதல் நேரம் ஒதுக்கிப் படித்து, அதனை சுலபமாக்கிக் கொண்டேன்,” என தன் வெற்றிக்கான தாரக மந்திரத்தை கூறினார்.
மேலும், “நீட் குறித்து யாரும் பயப்படத் தேவையில்லை.. மருத்துவராக வேண்டும் என முடிவு செய்து விட்டால், அதையே நினைத்து படித்தால் போதுமானது” என நீட் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு திருமூர்த்தி தனது அனுபவப் பாடத்தை அறிவுரையாக கூறியுள்ளார்.
'என் பொண்ணு தான் இன்ஸ்பிரேஷன்' - 49 வயதில் மருத்துவக் கனவை நினைவாக்கும் அமுதவல்லி!