
கன்னட எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான பானு முஷ்டாக் எழுதி, தீபா பாஸ்தியால் மொழிபெயர்க்கப்பட்ட சிறுகதைத் தொகுப்பான 'ஹார்ட் லாம்ப்' உலகின் மிகவும் மதிப்புமிக்க இலக்கிய விருதுகளில் ஒன்றான ‘சர்வதேச புக்கர் விருது’ வென்று, ரூ.57 லட்சம் பரிசுத் தொகையையும் பெற்றுள்ளது.
‘சர்வதேச புக்கர் விருது’ வென்ற முதல் சிறுகதை தொகுப்பு என்ற வரலாற்றை 'ஹார்ட் லாம்ப்' படைத்துள்ளது. மேலும், இந்த விருதை பெறும் முதன் கன்னட எழுத்தாளர் என்ற பெருமையை அடைந்துள்ளார் பானு முஷ்டாக்.
உலகின் மிகவும் மதிப்புமிக்க இலக்கிய விருதான புக்கர் விருது, ஆண்டுத்தோறும் ஆங்கிலத்தில் வெளியாகும் சிறந்த நுாலுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதானது, கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, சிறந்த புனைக்கதைகளுக்கு அங்கீகாரம், வெகுமதி மற்றும் உலகளாவிய பிரபலத்தையும், வாசகர்களையும் பெற்று தந்துவருகிறது.
புகழ்பெற்ற எழுத்தாளரான அருந்ததிராய் உட்பட ஐந்து இந்திய எழுத்தாளர்கள் இவ்விருதை பெற்றுள்ளனர். இதில் மற்றொரு பிரிவாக 2005-ம் ஆண்டு தொடங்கி சர்வதேச புக்கர் பரிசு, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகும் சிறந்த புத்தங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
2022-ம் ஆண்டில் சர்வதேச புக்கர் விருதை, முதன் முதலில் இந்திய எழுத்தாளரான கீதாஞ்சலி ஸ்ரீ பெற்றார். இந்தி மொழியில் எழுதி பின் மொழிபெயர்க்கப்பட்ட அவருடைய 'டோம்ப் ஆஃப் சாண்ட்' எனும் படைப்பிற்காக இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்தியாவில் இரண்டாவதாக, நடப்பாண்டுக்கான இவ்விருதை பானு முஷ்டாக் வென்றுள்ளார்.

‘ஹார்ட் லாம்ப்’-ன் வெற்றிக்கு பின்னானுள்ள இரு பெண்கள் யார்?
இலக்கிய அங்கீகாரத்தை நோக்கிய பானு முஷ்டாக்கின் பயணம் எளிதானது அல்ல. 76 வயதான பானு முஷ்டாக் ஒரு வழக்கறிஞர், எழுத்தாளர், பத்திரிகையாளர் மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த பெண்கள் உரிமை ஆர்வலர் ஆவார். சாதி அமைப்பை விமர்சித்த 'பந்தயா சாகித்ய இயக்கம்' தலித் மற்றும் முஸ்லிம் எழுத்தாளர்களை உருவாக்கியது. அவர்களில் பானுவும் ஒருவர்.
''பந்தயா இயக்கம்" என்பது சமூக நீதி, சாதி ஒடுக்குமுறை, ஆணாதிக்க மனப்பான்மை மற்றும் பிற சமூக பொருளாதார அநீதிகளுக்கு எதிராக இலக்கியம் மூலம் போராடும் ஒரு இலக்கிய இயக்கமாகும். குறிப்பாக, கன்னட இலக்கியத்தில் இது ஒரு முக்கியமான இயக்கமாக இருந்தது.
கர்நாடகாவின் ஹசீனா நகரத்தில் ஒரு முஸ்லிம் பகுதியில் பிறந்து வளர்ந்த அவர், உருது மொழியில் குர்ஆனைப் படித்தார். பின், அவரது தந்தையின் முடிவால் எட்டு வயதில் கன்னட மொழிவழி கற்பிக்கும் பள்ளியில் சேர்க்கப்பட்டார். ஆனால், அந்த முடிவு அவரது வாழ்க்கைப் பாதையை வடிவமைக்கும் என அவர் அன்று எண்ணவில்லை. கன்னடம் அவரது தாய்மொழியாக இல்லாவிட்டாலும், அதையே அவரது கருத்துகளையும், எண்ணங்களையும் எழுத்து வடிவத்திற்கு மாற்றத் தேர்ந்தெடுத்தார்.
பானு முஷ்டாக் அவரது டீன்ஏஜ் பருவத்திலிருந்து எழுதத் தொடங்கினார். பி.எஸ்சி மற்றும் எல்.எல்.பி பட்டங்களைப் பெற்ற பிறகு, மோதல்களும், பிரச்னைகளும் நிறைந்த காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு அவரது முதல் கதை 1974ம் ஆண்டில் "பிரஜாமாதா" என்ற பருவ இதழில் வெளியாகியது. அப்போது அவருக்கு வயது 26.
1981 மற்றும் 1990ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், கவிஞரும் எழுத்தாளருமான பி.லங்கேஷால் தொடங்கப்பட்ட லங்கேஷ் பத்திரிகையில் நிருபராகப் பணியாற்றினார். முஸ்லிம் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகள், ஆழமான ஆணாதிக்க சமூகத்தால் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை எழுத்து வடிவில், விவாதங்களை முன்னெடுக்கும் சக்திவாய்ந்த கட்டுரைகளை எழுதினார். 10 ஆண்டுகள் பத்திரிகையாளராக பணியாற்றிய பிறகு, பத்திரிகைத் துறையை விட்டுவிட்டு, அவரது குடும்பத்தை ஆதரிப்பதற்காக வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார்.
எழுத்தாளராகிய பின் பல நேர்காணல்களில், பானு முஷ்டாக் திருமணத்திற்கு பிறகு, வீட்டு வேலைகளை மட்டுமே செய்த காலம், பிரசவத்திற்குப் பிந்தைய மனச்சோர்வு மற்றும் திருமணத்தின் உணர்ச்சி ரீதியான தனிமை ஆகியவற்றைப் பற்றி நினைவுக்கூர்ந்து வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். குறிப்பாக விரக்தியில், அவர் தீக்குளிக்க முயற்சித்ததாக பகிர்ந்திருந்தார். ஆனால், கடைசி நிமிடத்தில் அவரது கணவர் தடுத்து நிறுத்தி காப்பாற்றியதாகத் தெரிவித்தார்.
ஒரு சிறந்த எழுத்தாளரான பானு, அவரது ஆறு தசாப்த கால எழுத்து வாழ்க்கையில் 60க்கும் மேற்பட்ட கதைகளை எழுதியுள்ளார். அவரது கதைகள் ஆறு தொகுப்புகளில் வெளியிடப்பட்டுள்ளன. பின்னர், அவருடைய கதைகளைக் கொண்டு கன்னட திரைப்படங்களும் வெளியாகின. அவரது கதைகள் ஆங்கிலம் தவிர மலையாளம், தமிழ், பஞ்சாபி மற்றும் உருது மொழிகளிலிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவரது படைப்புகளுக்காக, 1999ம் ஆண்டு கர்நாடக மாநில சாகித்ய அகாடமி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
முன்னதாக, அவரது சிறுகதைகளின் தொகுப்பான "ஹசீனா அண்ட் அதர் ஸ்டோரிஸ்" இன் ஆங்கில மொழிபெயர்ப்பு 2024ம் ஆண்டிற்கான "THE ENGLISH PEN" விருதை வென்றது. அதையும் தீபா பாஸ்தியே மொழிபெயர்த்தார்.
குடகுவைச் சேர்ந்த தீபா பாஸ்தி, எழுத்தாளர் மற்றும் கலாச்சார விமர்சகராவார். அவர் இதற்கு முன்பு சில முக்கிய கன்னட படைப்புகளை மொழிபெயர்த்துள்ளார். ஹார்ட் லாம்ப் மூலம், சர்வதேச புக்கர் பரிசை வென்ற முதல் இந்திய மொழிபெயர்ப்பாளர் என்ற பெருமையைப் பெற்றார். இலக்கிய வட்டாரத்தில் பானு முஷ்டாக்கின் எழுத்து நகைச்சுவை உணர்வு, நெகிழ்ச்சி மற்றும் உணர்ச்சி ரீதியான தீவிரம் கொண்டதாக அறியப்படுகிறது. அதனால், மொழிபெயர்ப்பாளர் தீபா, பானுவின் வார்த்தைகளிலிருந்த உணர்வுகளை ஆங்கிலத்தில் தக்கவைக்க கடுமையாக உழைத்துள்ளார்.

சமூகத்தை தட்டியெழுப்பிய எழுத்துகளும்; பானுமீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களும்:
"நான் எப்போதுமே எழுத விரும்பினேன். ஆனால் எழுத எதுவும் இல்லை. ஏனென்றால் திடீரென்று, ஒரு காதல் திருமணத்திற்குப் பிறகு, பர்தா அணிந்து வீட்டு வேலைகளில் என்னை அர்ப்பணிக்கச் சொன்னார்கள்" என்று அவர் வோக் இந்தியாவிடம் கூறினார். தி வீக்' இதழில், வீட்டின் நான்கு சுவர்களுக்குள் எப்படி அடைப்பட்டுக் கிடக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்பதையும் அவர் விவரித்திருந்தார். இந்தச் சுவர்களை உடைத்து, அக்கட்டமைப்பிற்கு எதிராக எழுந்தபோதே 'ஹார்ட் லாம்ப்' பிறந்தது.
1981ம் ஆண்டு அவருக்கு 3-வது பெண் குழந்தை பிறந்திருந்தது. அந்த நேரத்தில், ஒரு சம்பவம் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது. பிஜாப்பூரைச் சேர்ந்த உயர்நிலைப் பள்ளி ஆசிரியை ஒருவர் தியேட்டருக்குச் சென்றதற்காக ஒரு முஸ்லிம் இளைஞர் குழுவால் துன்புறுத்தப்பட்டார். பெண்கள் சினிமாவுக்குச் செல்லக்கூடாது என்று அந்தக் குழு ஒரு தார்மீகக் கட்டளையை பிறப்பித்தது. இந்த அநீதி பானு முஷ்டாக்கை கோபப்படுத்தியது.
‘முஸ்லிம் ஆண்களுக்கு மட்டுமே பொழுதுபோக்கு உரிமை இருப்பதாக ஏன் பார்க்கப்படுகிறது?’ என்று அவரது பிறந்த குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு, கேள்வி எழுப்பி ஒரு சக்திவாய்ந்த கட்டுரையை எழுதினார். அதை லங்கேஷ் பத்திரிக்கைக்கு அனுப்பினார், சில நாட்களுக்குள் அது வெளியிடப்பட்டது. அந்த தருணம், "சிலிர்ப்பூட்டும்" தருணம் என்றும், அவரது பொது எழுத்துப் பயணத்தின் தொடக்கம் அதுதான் என்றும் அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து, மசூதிகளில் பெண்களும் பிரார்த்தனை செய்வதற்கு ஆதரவாக பகீங்கரமாக குரல் எழுப்பினார். அதற்காக, அச்சுறுத்தும் தொலைப்பேசி அழைப்புகள் வந்தன. மேலும் அவருக்கு எதிராக ஒரு ஃபத்வா பிறப்பிக்கப்பட்டது. ஃபத்வா என்பது இஸ்லாத்தில் ஒரு தகுதிவாய்ந்த அறிஞரால் பிறப்பிக்கப்பட்ட ஒரு மத தீர்ப்பு அல்லது கருத்து. ஒரு முறை கொலை முயற்சிக்கும் ஆளாகியுள்ளார். ஒரு நபர் அவரை கத்தியால் தாக்க முயன்றதாகவும், ஆனால் அவரது கணவர் அதை முறியடித்ததாகவும் அவர் கூறினார்.
உலகிற்கு ‘ஹார்ட் லாம்ப்’ கூறுவதென்ன?
மூன்று தசாப்த கால எழுத்துப் பயணத்தை உள்ளடக்கிய "ஹார்ட் லாம்ப்", தென்னிந்தியாவில் உள்ள பெண்களின் அன்றாட வாழ்க்கை, போராட்டங்கள் மற்றும் உள் உலகங்களை ஆழமாகப் பிரதிபலிக்கும் 12 சிறுகதைகளைக் கொண்டுள்ளது. பேச்சு வழக்கு கன்னட பாணியில் எழுதப்பட்ட இந்தக் கதைகள், துணிச்சலான பாட்டிகள், பிரச்சனைக்குரிய தாய்மார்கள், உறுதியான மகள்கள் மற்றும் அவர்களைக் கட்டுப்படுத்த முயற்சிக்கும் சகோதரர்கள் போன்ற அடக்குமுறை நபர்களை சித்தரிக்கின்றன.
"எனது கதைகள் பெண்களைப் பற்றியவை. மதம், சமூகம் மற்றும் அரசியல் எவ்வாறு அவர்களிடமிருந்து கேள்விக்கிடமில்லாத கீழ்ப்படிதலைக் கோருகின்றன, மேலும் அவ்வாறு செய்வதன் மூலம், அவர்கள் மீது மனிதாபிமானமற்ற கொடுமையைச் செலுத்தி, அவர்களை வெறும் கீழ்ப்படிந்தவர்களாக மாற்றுகின்றன. ஊடகங்களில் பதிவாகும் அன்றாட சம்பவங்களும், நான் அனுபவித்த தனிப்பட்ட அனுபவங்களும் எனக்கு உத்வேகமாக இருந்தன. இந்த பெண்களின் வலி, துன்பம் மற்றும் ஆதரவற்ற வாழ்க்கை, எனக்குள் ஒரு ஆழமான உணர்வுபூர்வமான பதிலை உருவாக்க துாண்டியது. நான் விரிவான ஆய்வுகளில் ஈடுபடுவதில்லை; என் இதயமே எனது படிப்புத் துறையாகும்" என்று முஷ்டாக் கூறினார்.

இந்திய இலக்கியத்திற்கு ஒரு முக்கியமான தருணம்!
இந்த வெற்றி ஆனது பல மட்டங்களில் முக்கியமானது மற்றும் கவனிக்கப்பட வேண்டியது. ஏனெனில், 65 மில்லியனுக்கும் அதிகமான மக்களால் பேசப்பட்டாலும், பெரும்பாலான முக்கிய இந்திய இலக்கிய உரையாடல்களில் கவனிக்கப்படாத ஒரு கன்னட மொழிப் படைப்பு வென்றிருப்பது இதுவே முதல் முறை. இதன் மூலம், மிகவும் அற்புதமான இலக்கியங்களில் சிலவை ஆங்கிலத்திலோ அல்லது இந்தியிலோ மட்டும் உருவாக்கப்படுவதில்லை மாறாக, அவை பிராந்திய மொழிகளிலிருந்தும் வருகின்றன என்பதை உணர்த்துகிறது.
கூடுதலாக, சிறுகதைப் பிரியர்களுக்கு இது ஒரு மகத்தானத் தருணம். ஏனெனில், நாவல்களைவிட குறைவான தீவிரம் கொண்டதாகப் பார்க்கப்படும் சிறுகதைகளும், இதயங்களை நெகிழ வைக்கும், விவாதங்களுக்கு அஸ்திவாரமிடும், உலகளாவிய அங்கீகாரத்தைப் பெறும் என்பதை இவ்வெற்றி நிரூபித்துள்ளது.
மேலும், ஹார்ட் லாம்ப் மூலம், பானு முஷ்தாக் அரிதான ஒன்றைச் சாதித்துள்ளார். அவர் ஆழ்ந்த தனிப்பட்ட சொந்தக் கதைகளை உலகளாவிய இலக்கியமாக மாற்றியுள்ளார். அவரது கதாபாத்திரங்கள் இப்போது உலகின் மிகவும் மதிப்புமிக்க இலக்கிய நிலைகளில் ஒன்றின் மையத்தில் நிற்கின்றன.
இந்த வெற்றி பானு முஷ்டாக் மற்றும் பாஸ்திக்கு கிடைத்த வெற்றி மட்டுமல்ல. இது சிறுகதை, கன்னட இலக்கியத்திற்கு கிடைத்த வெற்றி. மேலும், இவ்வங்கீகாரம் ஒவ்வொரு பிராந்திய மொழி எழுத்தாளருக்கும், ஒவ்வொரு மொழிப் பெயர்ப்பாளர்களுக்கும், தனது கதையை சொல்லப்பட்ட மற்றும் சொல்லப்படாத ஒவ்வொரு பெண்ணுக்கும் நம்பிக்கையை அளிக்கிறது.
Edited by Induja Raghunathan