80-களின் நடுப்பகுதியில், தமிழ்நாட்டின் சிறுதொழில்துறை நகரமான கோவில்பட்டியில், பொறியாளரிலிருந்து தொழில்முனைவோராக மாறிய வி.கோவிந்தராஜன், தனது டாக்டர் மனைவியுடன் சேர்ந்து, 20 படுக்கைகள் கொண்ட ஒரு சிறிய பாலிகிளினிக்கை நடத்தி வந்தார். இந்த மருத்துவமனை நகர மக்களுக்கு மட்டுமல்ல, மாநிலத்தின் பிற சிறு நகரங்கள் மற்றும் நகரங்களில், குறிப்பாக திருநெல்வேலி மற்றும் நாகர்கோவிலில் இருந்து வருபவர்களுக்கும் அடிப்படை வெளிநோயாளி சிகிச்சையை வழங்கிவந்தது.
அப்படி நோயாளிகளுக்கு சேவை செய்தபோதுதான், MRI மற்றும் CT ஸ்கேன்களுக்காக, அவர்கள் தங்கள் சொந்த ஊரிலிருந்து நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருப்பதை கோவிந்தராஜனும், அவரது மனைவியும் கவனித்தனர்.
"எங்களது பகுதியில் அப்போது CT அல்லது MRI ஸ்கேன் மையம் எதுவுமே இல்லை," என அந்தக் காலத்தை நினைவு கூர்கிறார் கோவிந்தராஜன்.
ஆர்த்தி ஸ்கேன்ஸ் அண்ட் லேப்ஸ் நிறுவனர் கோவிந்தராஜன்
தமிழ்நாட்டின் சிறிய நகரங்கள் தங்களது சுகாதார உள்கட்டமைப்பில், குறிப்பாக மேம்பட்ட நோயறிதல் இமேஜிங்கிற்கான அணுகலில், மிகவும் பின்தங்கி இருப்பது கோவிந்தராஜனை கவலையடையச் செய்தது. எனவே, அதற்காக ஏதாவது செய்ய வேண்டும் என அவர் விரும்பினார்.
ஆனாலும், அவர் தனது முதல் நோயறிதல் மையத்தை திருநெல்வேலியில் நிறுவ, அவருக்கு 15 வருடங்கள் ஆனது.
“எனது சொந்த ஊர் கோவில்பட்டிதான் என்றாலும், திருநெல்வேலியில்தான் எனது முதல் நோயறிதல் மையத்தைத் தொடங்கினேன். ரூ.5 கோடி முதலீட்டில் அப்போது அது ஆரம்பிக்கப்பட்டது. அந்த முதல் மையம் மிகவும் நன்றாக செயல்பட்டது,” என்கிறார் கோவிந்தராஜன்.
ஒருங்கிணைந்த நோயறிதல் முறை
தன் மகளின் பெயரில் அவர் ஆரம்பித்த, 'ஆர்த்தி ஸ்கேன் & லேப்ஸ்' மையமானது, எக்ஸ்ரே, ரத்த பரிசோதனைகள் மற்றும் எம்ஆர்ஐ போன்ற நோயறிதல் சேவைக்கான தேவையில் இருந்த மக்களை கூட்டமாக ஈர்த்தது.
தற்செயலாக அல்வாவிற்கு பேர் போன பிரபலமான இடமான திருநெல்வேலியில், 2000ம் ஆண்டில், சுமார் 8,000 சதுர அடியில் இந்த மையத்தை அவர் தொடங்கியிருந்தார். தனது சொந்தப் பணத்தில் லாபகரமான நோயறிதல் நெட்வொர்க்கை அப்போது உருவாக்கத் தொடங்கினார் கோவிந்தராஜன்.
தொடர்ந்து வந்த ஆண்டுகளில், தமிழ்நாட்டில் மதுரை, சென்னை, தஞ்சாவூர் போன்ற பெருநகரங்களில் மட்டுமல்லாமல், கோவில்பட்டி, தென்காசி மற்றும் ராஜபாளையம் போன்ற சிறிய நகரங்களிலும் ஆர்த்தி ஸ்கேன் & லேப்ஸ் விரிவடைந்தது. தமிழ்நாட்டைத் தாண்டி புதுச்சேரி, விசாகப்பட்டிணம், திருவனந்தபுரம், பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, கொல்கத்தா, புனே மற்றும் அகமதாபாத், என மற்ற மாநிலங்களிலும் அதன் சேவை சென்றடைந்தது.
ஆர்த்தியின் முக்கிய சேவைகளான கதிரியக்கவியல் மற்றும் நோயியல் ஆகியவை மூலம், ‘ஒருங்கிணைந்த நோயறிதல்’ என கோவிந்தராஜன் குறிப்பிடும், இரத்த பரிசோதனைகள், ஸ்கேன்கள் மற்றும் மரபணு அறிக்கைகளை போன்ற சேவைகளை இணைத்து, தெளிவான மற்றும் விரைவான நோயறிதல் சேவைகளை வழங்கி வருகிறது.
பரிசோதனை முடிவுகளை தனித்தனியாகப் பார்ப்பதற்குப் பதிலாக, முழுவதையும் புரிந்துகொண்டு சிறந்த சிகிச்சையைத் தேர்வுசெய்ய மருத்துவர்கள் இணைந்து பணியாற்றுகிறார்கள், குறிப்பாக புற்றுநோய் போன்ற சிக்கலான நோய்களுக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
கடந்த இருபத்தி ஐந்து ஆண்டுகளில், சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட ஆர்த்தி ஸ்கேன்ஸ் & லேப்ஸ், நாட்டின் மிகப்பெரிய நோயறிதல் மையங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. 10 நகரங்களில் 70-க்கும் மேற்பட்ட நோயறிதல் மையங்கள் மற்றும் 30 மாதிரி சேகரிப்பு மையங்களுடன், இந்நிறுவனம் ரூ.305 கோடி வருவாயையும், 27% EBITDA லாபத்தையும் ஈட்டி சாதனை புரிந்துள்ளது.
சொந்த முதலீட்டில் பிரமாண்ட வளர்ச்சி
நோயறிதல் மையங்கள் என்பவை முழுமையான ஆய்வகங்கள் ஆகும். அவை அனைத்து சோதனைகளையும் ஒரே இடத்தில் மேற்கொண்டு, அதன் முடிவுகளையும் அங்கே தருகின்றன. ஆனால், மாதிரி சேகரிப்பு மையங்கள் என்பவை இவற்றில் இருந்து மாறுபட்டவை. அவை மாதிரிகளைச் சேகரித்து, அவற்றை மத்திய ஆய்வகத்திற்கு அனுப்புகின்றன. நோயறிதல் மையங்கள் அதிக சேவைகளை வழங்கினாலும், மாதிரி சேகரிப்பு மையங்கள் சிறியதாகவும், செலவு குறைந்ததாகவும், விரிவுபடுத்துவதற்கு எளிதாகவும் இருக்கின்றன.
இந்த நிறுவனத்தின் வளர்ச்சியில் தமிழ்நாடே அதன் முக்கிய கோட்டையாக உள்ளது. மொத்தமுள்ள 70 மையங்களில் 21 மையங்கள் இங்குதான் அமைந்துள்ளன. நிறுவனத்தின் மொத்த வருவாயில் கிட்டத்தட்ட பாதி தமிழ்நாட்டில் இருந்துதான் கிடைக்கிறது.
ஆர்த்தி ஸ்கேன் & லேப்ஸ் வளர்ச்சியில் முக்கியமாக கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம், இந்த நிறுவனம் வெளி முதலீட்டாளர்களின் உதவியின்றி, தன் சொந்த முதலீட்டைக் கொண்டு இந்த பிரமாண்ட வளர்ச்சியை எட்டியுள்ளது என்பதுதான். இருப்பினும், வெளி முதலீட்டைப் பெறுவதில் அவர்களுக்கு தயக்கம் இருந்ததில்லை. கடந்த 2022ம் ஆண்டு டாடா கேப்பிடல் குரோத் ஃபண்டின் மூலதன நிதியிலிருந்து ரூ.200 கோடி முதலீட்டைப் பெறுவதற்காக ஒப்பந்தம் கடைசி நேரத்தில் கைவிடப்பட்டது.
இது குறித்து கோவிந்தராஜன் கூறுகையில்,
“சில விஷயங்களில் ஒத்துப் போகவில்லை, அதனால் நாங்கள் அந்த டீலை தொடர்ந்து எடுத்துச்செல்ல விரும்பவில்லை,” என்கிறார். ஆனால், இதை ஒரு வாய்ப்பை இழந்ததாகக் கருதாமல், தன் நிறுவனத்தின் சுய-சார்பு மாதிரிக்கு கிடைத்த அங்கீகாரமாக பார்ப்பதாகவே அவர் கூறுகிறார். இதன் மூலம் தங்களது நிறுவனத்தின் சொந்த நிதிப்பாய்ச்சலைக் கொண்டே விரிவாக்கத்தை ஊக்குவிக்க முடியும், என அவர் நம்புகிறார்.
அடுத்த தலைமுறையினர் தந்த புதிய வளர்ச்சி
ஆர்த்தி ஸ்கேன் & லேப்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சி முதல் 15 ஆண்டுகளுக்கு சீராக இருந்தபோதும், அதில் பழமைவாதம் அதிகமாக இருந்தது. அதனால்தான், 2015ம் ஆண்டு வரை, அதனால் வெறும் 17 மையங்களை மட்டுமே அமைக்க முடிந்தது.
ஆனால், 2015-ல் கோவிந்தராஜனின் மகன், மகள் மற்றும் மருமகன் ஆகியோர் நிறுவனத்தில் இணைந்தபோது இந்த நிலை அதிரடியாக மாறியது. அனைவரும் தகுதிவாய்ந்த கதிரியக்க வல்லுநர்கள் (radiologists) என்பதால் இந்த மாற்றம் சாத்தியமானது. இந்த அடுத்த தலைமுறைத் தலைவர்கள், வணிகத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கான புதிய அணுகுமுறைகளையும், அனுபவ அறிவையும் தங்கள் நிறுவனத்திற்குள் கொண்டு வந்தனர்.
“2015க்குப் பிறகு, என் மகன், மகள் மற்றும் மருமகன் வருகைக்கு பிறகு, நாங்கள் அதிக வேகத்தில் மையங்களைத் திறக்கவும், புதிய பகுதிகளுக்குள் நுழையவும் தொடங்கினோம். நிலையான வளர்ச்சி என்ற நிறுவனத்தின் அடிப்படைக் கொள்கையை அவர்கள் நிலைநிறுத்திக்கொண்டே, விரிவாக்கத்தை வேகப்படுத்தினார்கள்,” என்கிறார் கோவிந்தராஜன்.
விரிவாக்கத்தைப் பொறுத்தவரை, ஆர்த்தி ஸ்கேன் & லேப்ஸ், ஒவ்வொரு சந்தையிலும் ஆழமாகப் பரவவே விரும்புகிறது. அதனால்தான், பல புதிய நகரங்களில் ஆங்காங்கே மையங்களைத் திறப்பதற்குப் பதிலாக, ஒரே நேரத்தில் பல மையங்களைத் திறப்பதன் மூலம் அந்தச் சந்தையில் போதுமான பிராண்ட் விழிப்புணர்வை உருவாக்க முடியும் என்ற வியாபார நுணுக்கத்தை அவர்கள் பின்பற்றுகின்றனர்.
“எப்போது ஒரு புதிய இடத்திற்குள் நுழைந்தாலும், அங்கே ஒரே நேரத்தில் மூன்று அல்லது நான்கு மையங்களைத் திறக்கிறோம். உதாரணமாக, 2021-ல் மும்பையில் ஆறு மாதங்களுக்குள் ஐந்து நோயறிதல் மையங்களைத் திறந்தோம்,” என்கிறார் கோவிந்தராஜன்.
மகன், மகள் மற்றும் மருமகனுடன் கோவிந்தராஜன்
தொழில்நுட்பப் புரட்சி
மையங்களை விரிவாக்குவது மட்டுமின்றி, அடுத்த தலைமுறைத் தலைவர்களின் கீழ், ஆர்த்தி ஸ்கேன்ஸ் நிறுவனம் தொழில்நுட்பத்திலும், குறிப்பாக செயற்கை நுண்ணறிவு (AI) துறையிலும் முன்னணியில் இருக்க முயற்சி செய்து வருகிறது.
கோவிந்தராஜனின் மகன் டாக்டர் அருண்குமார் கோவிந்தராஜன், நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு முயற்சிகளை வழிநடத்துகிறார். மார்பு எக்ஸ்ரே, மூளை சிடி ஸ்கேன் மற்றும் கால்சியம் ஸ்கோரிங் போன்றவற்றுக்கு AI-ஆற்றல் பெற்ற கருவிகளைப் பயன்படுத்தி, நிறுவனம் தொழில்நுட்ப ரீதியாக போட்டித்தன்மையுடன் இருக்க உதவுகிறார்.
ஆர்த்தி நிறுவனம் AI-ஐ பயன்படுத்தி எக்ஸ்ரே மற்றும் சிடி ஸ்கேன்களுக்கு ஆரம்பநிலை அறிக்கைகளை உருவாக்கும், சிறுநீரகம், சிறுநீர்க் குழாய்கள் மற்றும் கற்களின் முப்பரிமாண காட்சிப்படுத்தலை செய்யும், மேலும் ஒருவருக்கு எந்த வகையான மறதி நோய் (dementia) உள்ளது என்பதைக் கண்டறிய மூளையின் அளவை ஆய்வு செய்யும்.
“அறிக்கையின் தரத்தை மேம்படுத்தவும், உடனடியாக அறிக்கை தேவைப்படும் அவசரகால நோயாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கவும், மருத்துவர்களுக்கு புதிய தகவல்களை வழங்கவும் நாங்கள் AI-ஐ பயன்படுத்துகிறோம். இந்த தொழில்நுட்பம் இல்லாமல் இவை சாத்தியமில்லை,” என்கிறார் கோவிந்தராஜன்.
லாபத்தில் கவனம்
ஆர்த்தி நிறுவனத்தின் தனித்துவமான உத்தி, அவர்கள் நோயாளிகளுடன் நேரடியாக அணுக முடிவதுதான். இது வெளி மூலதனம் இன்றி பல ஆண்டுகளாக லாபகரமானதாகவும், நிலைத்தன்மையுடனும் இருக்க உதவியுள்ளது.
பெரும்பாலான நோயறிதல் நிறுவனங்கள் மருத்துவர்களின் பரிந்துரையை மட்டுமே நம்பி இருக்கின்றன. இதனால் அதிக செலவை ஏற்படுத்தும் பெரும் பரிந்துரை கட்டணங்களை அவைகள் செலுத்த வேண்டியதாகி விடுகிறது. ஆனால், ஆர்த்தி நிறுவனம் பழைய பாணியிலான நாளிதழ் விளம்பரங்கள் மற்றும் புதிய யுக சமூக ஊடக உத்திகள் மூலம் நேரடியாக வாடிக்கையாளர்களை அணுகுகிறது.
“ஆரம்பகட்டத்திற்குப் பிறகு, வாடிக்கையாளர்களிடமிருந்து வாய்வழிப் பரிந்துரைகள் எங்களுக்குப் பெரிதும் உதவுகின்றன. சென்னை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தில் எட்டு ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் இருப்பதால், அங்கு 60% அப்பாயின்ட்மென்ட்கள் வாய்வழிப் பரிந்துரைகள் மூலமே வருகின்றன,” என்கிறார் கோவிந்தராஜன்.
மேலும், ‘நாங்கள் பரிந்துரை கட்டணம் கொடுப்பதில்லை’ என உறுதியாகக் கூறும் அவர், ‘அதற்குப் பதில், அந்த தள்ளுபடி வாடிக்கையாளர்களுக்குச் சென்று விடுகிறது. அதோடு, எங்கள் கட்டணம் போட்டியாளர்களை விட 50% குறைவாக உள்ளது என்றும், இந்த குறைந்த விலை, போட்டியை முறியடித்து, ஆரோக்கியமான லாப வரம்புகளைப் பராமரிக்க நிறுவனத்திற்கு உதவுகிறது, என்றும் அவர் கூறுகிறார்.
இந்நிறுவனம் விற்பனையாளர்களுடன், குறிப்பாக சீமன்ஸ் போன்ற உபகரண விநியோகஸ்தர்களுடன், 11 மாதங்கள் வரை ஒத்திவைக்கப்பட்ட பணம் செலுத்தும் ஏற்பாடுகளைச் செய்து கொள்கிறது. இது நிறுவனத்தின் ஆரம்ப முதலீட்டை சேமிக்கவும், பணப் பாய்ச்சலை திறமையாக நிர்வகிக்கவும், புதிய நோயறிதல் மையங்களை உடனடியாக நிதிச்சுமை இல்லாமல் தொடங்கவும் உதவுகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட கையகப்படுத்துதல்கள்
நிறுவனத்தின் வளர்ச்சிக்கு இயற்கையான விரிவாக்கமே முக்கிய உந்துதலாக இருந்தாலும், புதிய சந்தைகளில் கால் பதிக்க, ஏற்கனவே உள்ள நோயறிதல் மையங்களை கையகப்படுத்தத் தேவையான முயற்சிகளையும் ஆர்த்தி தொடர்ந்து செய்து வருகிறது. அதன்படி, ஹைதராபாத்தில், ’மெக்சான் டயக்னாஸ்டிக்ஸ்’ என்ற உள்ளூர் சங்கிலி நிறுவனத்தின் ஐந்து மையங்களை ஆர்த்தி வாங்கியுள்ளது.
“மெக்சானின் மற்ற ஐந்து மையங்கள் ஏற்கனவே உள்ள எங்களின் மையங்களுக்கு மிக அருகில் இருந்ததால், அவற்றை நாங்கள் வாங்கவில்லை,” என்கிறார் கோவிந்தராஜன்.
இது ஒவ்வொரு கையகப்படுத்துதலின் பின்னணியிலும் உள்ள கவனமான திட்டமிடலைக் காட்டுவதாக உள்ளது. குறிப்பாக, அனைத்து கையகப்படுத்துதல்களும் சொத்து மதிப்பு மற்றும் வருவாயின் அடிப்படையிலேயே செய்யப்படுகின்றன. பொதுவாக தனியார் மூலதன ஒப்பந்தங்களில் பயன்படுத்தப்படும் EBITDA multiples அடிப்படையில் அல்ல.
பணியாளர் பற்றாக்குறை நிவர்த்தி
தரத்தைப் பராமரிப்பது மற்றும் தகுதியான ஊழியர்களைக் கண்டுபிடிப்பதுதான், பல மாநிலங்களில் நோயறிதல் வணிகத்தை விரிவு படுத்துவதில் பெரிய சவாலாக உள்ளது. ஆனால் இதற்கும் தங்கள் ஸ்டைலில் ஒரு தீர்வை ஏற்படுத்தி வைத்திருக்கிறது. அதாவது, கதிரியக்க பயிற்சித் திட்டத்தை சொந்தமாக வழங்குவதன் மூலம் இந்த சிக்கல்களை அது தீர்த்து வருகிறது. இது ஒரு திறமையான பணியாளர் குழுவை உருவாக்குகிறது.
சென்னையில், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்துடன் இணைந்த கதிரியக்க அறிவியலில் இளங்கலை பட்டப்படிப்பை (BSc radiology) 20 இடங்களுடன் நடத்துகிறது. இந்த நான்கு வருடப் படிப்பில் ஒரு வருட இன்டர்ன்ஷிப்பும் அடங்கும். இது DNB கதிரியக்கத் திட்டத்தையும் நடத்துகிறது.
“எம்ஆர்ஐ ஸ்கேன் செய்யக்கூடிய கதிரியக்க வல்லுநர்கள் ஐந்து வருடங்களுக்கு முன்பு கூட அரிதானவர்களாக இருந்தனர். பெரும்பாலான கதிரியக்க வல்லுநர்கள் எக்ஸ்ரே மற்றும் சிடி ஸ்கேன்களை மட்டுமே சிறப்பாக செய்வார்கள். ஆனால், எம்ஆர்ஐ-க்கு உடற்கூறியல் மற்றும் இயற்பியலில் தீவிர பயிற்சி தேவை. எங்கள் BSc கதிரியக்க படிப்பில், எக்ஸ்ரே, சிடி, எம்ஆர்ஐ என மூன்று முறைகளிலும் பயிற்சி அளிக்கிறோம்,” என்கிறார் கோவிந்தராஜன்.
உள்நாட்டுப் பயிற்சி, தகுதியான தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் கதிரியக்க வல்லுநர்களின் தட்டுப்பாட்டை நீக்க இந்தப் பயிற்சி உதவியாக உள்ளது. இந்த பயிற்சி பெற்ற பட்டதாரிகள், படிப்பை முடித்தவுடன் நாடு முழுவதும் உள்ள, ஆர்த்தி மையங்களில் பணி அமர்த்தப்படுகிறார்கள். இதனால் வெளிப்புற பணியாளர் நியமனத்தை நிறுவனம் நம்பியிருப்பது குறைகிறது.
அடுத்த கட்ட வளர்ச்சி
நாட்டின் நோயறிதல் சந்தை சுமார் $13 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த சந்தையில் டாக்டர் லால் பாத் லேப்ஸ், தைரோகேர் மற்றும் மெட்ரோபோலிஸ் ஹெல்த்கேர் போன்ற பெரிய நிறுவனங்கள் உள்ளன.
இந்த போட்டி நிறைந்த சந்தையில், ஆர்த்தி ஸ்கேன்ஸ் & லேப்ஸ், ஒரு ஒருங்கிணைந்த நோயறிதல் நிறுவனமாக சிறந்து விளங்கி வருகிறது. தரம் மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் தனித்துவமான நேரடி-நோயாளி அணுகுமுறையைக் கொண்டுள்ளது அதன் சிறப்பு அம்சமாக உள்ளது.
ஆர்த்தி ஸ்கேன் & லேப்ஸ், தென் மற்றும் மேற்கு இந்தியாவில் வலுவான இருப்பை நிலைநிறுத்தியுள்ளது. அதன் கடனில்லா இருப்புநிலை, நிலையான லாபம் மற்றும் நிலைத்த வளர்ச்சிக் கொள்கை, உடனடி லாபத்தை விட சந்தைப் பங்கையும் மதிப்பையும் முன்னுரிமை அளிக்கும் பல வெளி நிதியுதவி பெற்ற நிறுவனங்களுக்கு முற்றிலும் மாறுபட்டது.
குறைந்த மேல்நிலை செலவுகளைப் பராமரிப்பது, பரிந்துரை கட்டணங்களைத் தவிர்ப்பது, லாபத்தை மீண்டும் முதலீடு செய்வது போன்ற காரணிகள் மூலம், வெளி ஆதரவின்றி மீள்திறன் கொண்ட வணிக மாதிரியை ஆர்த்தி உருவாக்கியுள்ளது. மேலும், இது அடுத்த கட்ட வளர்ச்சிக்குத் தயாராக உள்ளதாகக் கூறுகிறார் கோவிந்தராஜன்.
“இந்த ஆண்டு 20% வருவாய் வளர்ச்சியை எதிர்பார்க்கிறோம்,” என நம்பிக்கையுடன் அவர் கூறுகிறார்.
ஒரு சிறிய நகரத்தில் ஒரு சிறிய கிளினிக்கை நடத்துவதில் ஆரம்பித்து, இன்று இந்தியா முழுவதும் ஒரு பெரிய நோயறிதல் மையச் சங்கிலியை வழிநடத்துவது வரை, கோவிந்தராஜன் கடந்து வந்த பாதை நீண்ட தூரம் கொண்டது. அவரது திறமையான வழிகாட்டுதலின் கீழும், அடுத்த தலைமுறையின் லட்சியத்துடனும், ஆர்த்தி நிறுவனம் இப்போது அடுத்த கட்ட வளர்ச்சிக்கு தன்னைத் தயார்படுத்தி வருகிறது.
எதிர்காலத்தில் லக்னோ போன்ற புதிய நகரங்களில் தங்களது நோயறிதல் மையத்தை விரிவாக்கம் செய்து, அடுத்த நான்கு ஆண்டுகளில் மேலும் 30 புதிய மையங்களை அமைக்க ஆர்த்தி திட்டமிட்டு வருகிறது. மேலும், சாத்தியமான பொதுச் சந்தை பட்டியல் மற்றும் மூலோபாய முதலீட்டாளர் பங்கேற்பு போன்ற புதிய எல்லைகளையும் அது ஆராய்ந்து வருகிறது.
’வெளி நிதி என்பது ‘தேவை’ அல்ல.. அது ஒரு ‘விருப்பம்’ மட்டுமே என்பதை அழுத்தமாக வலியுறுத்தும் கோவிந்தராஜனின் வெற்றித் தொழில் பயணம் ஒரு புதிய பாடத்தை நம் அனைவருக்கும் கற்றுக்கொடுக்கிறது.
ஆங்கிலத்தில்: அனுஜ் சுவர்னா, தமிழில்: ஜெயஸ்ரீத்ரா