சுல்தான்பூரில் அமைந்துள்ள ஒரு சாதாரண ஜூஸ் கடை, புதிய பழச்சாறுகளை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கான இடமாக மாறியுள்ளது.
இந்தக் கடையை முகமது அனஸ் என்பவர் நடத்தி வருகிறார். அவர் கடையின் விற்பனையைக் கவனிப்பதோடு மட்டுமல்லாமல், தயாரிப்பு முறைகள் அனைத்தையும் நேரடியாக மேற்பார்வை செய்கிறார்.
கடையில் பழங்களும் விற்பனைக்காகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன; அதே பழங்களையே வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப ஜூஸ் தயாரிக்கவும் பயன்படுத்துகின்றனர். இது கடையின் செயல்பாட்டை எளிமையாகவும் வாடிக்கையாளர்களுக்கு வெளிப்படையாகவும் வைத்திருக்கிறது.
அனஸை பொறுத்தவரை, இந்தத் தொழில் புதுமைகளை விட தினசரி வழக்கமான நடைமுறையையே அடிப்படையாகக் கொண்டது. பழங்கள் மண்டியில் இருந்து பெறப்படுகின்றன; தரத்திற்காக அவரே நேரில் சென்று பழங்களைத் தேர்ந்தெடுக்கிறார்.
பின்னர், அவை கடைக்குக் கொண்டு வரப்பட்டு தரம் பிரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்படுகின்றன. அவருக்கு நன்கு தெரிந்த பொருட்களுடன் மட்டுமே கடையின் மெனு வரையறுக்கப்பட்டுள்ளது. இது செலவுகளைக் கட்டுப்படுத்தவும் சுவையில் ஒரு நிலைத்தன்மையைப் பராமரிக்கவும் அவருக்கு உதவுகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளாக அவர் இந்தக் கடையை நடத்தி வருகிறார். மெதுவாகத் தொழிலைக் கற்றுக்கொண்டு, காலப்போக்கில் வாடிக்கையாளர்களின் விருப்பங்களுக்கு ஏற்பத் தன்னை மாற்றிக்கொண்டுள்ளார்.
ஒரு பட்டதாரியின் முடிவு
இந்த கடையைத் தொடங்குவதற்கு முன், அனஸ் இந்த வேலையைப் பற்றி புரிந்துகொள்ள நேரம் ஒதுக்கினார். அவர் தனது பட்டப்படிப்பை முடித்த பிறகு, மற்ற இளைஞர்களைப் போலவே அடுத்தது என்ன செய்வது என்ற நிச்சயமற்ற நிலையை எதிர்கொண்டார்.
அவருக்குப் பொதுவான வேலை வாய்ப்புகளில் ஆர்வம் இல்லை; அதேசமயம், வீட்டில் சும்மா இருப்பது பயனுள்ளதாகத் தெரியவில்லை. ஜூஸ் தயாரிப்பில் ஏற்கெனவே அவருக்கு ஓரளவு பரிச்சயம் இருந்ததால், அதற்குப் பதிலாக ஒரு சிறிய கடையை நடத்தலாம் என்று அவர் முடிவு செய்தார்.
ஆரம்பக் கட்டம் அவருக்கு அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. குடும்ப அழுத்தமும் நிதி நெருக்கடியும் தொடர்ந்து அவருக்குச் சவாலாக இருந்தன; குறிப்பாக பழங்கள் மற்றும் அடிப்படை உபகரணங்களை வாங்குவதில் சிக்கல்கள் இருந்தன.
தொழிலைச் சிறிய அளவில் விரிவாக்கக்கூட பணம் தேவைப்பட்டது. ஆனால், அந்தப் பணத்தை நண்பர்கள் அல்லது உறவினர்களிடம் கடன் வாங்க அவர் விரும்பவில்லை. இந்தச் சங்கடமான சூழலில்தான், ஒரு நண்பர் மூலம் ‘முதலமைச்சர் யுவ உத்யமி விகாஸ் அபியான்’ திட்டம் பற்றி அறிந்தார். அதை ஒரு வாய்ப்பாக கருதி அவர் ஆராய்ந்தார்.
இந்தத் திட்டத்தின் கீழ் உதவி பெற்ற பிறகு, உடனடி நிதி அழுத்தம் குறைந்ததாக அனஸ் கூறுகிறார். யாரிடமும் தனிப்பட்ட முறையில்கடன் வாங்காமல் தேவையான சரக்குகளை வாங்கவும், அன்றாடச் செயல்பாடுகளை நிலைப்படுத்தவும் இந்த உதவி அவருக்குப் பெரும் துணையாக இருந்தது.
மேலும், ஒரு வணிகத்தை எப்படி நடத்துவது என்பது குறித்த அடிப்படை வழிகாட்டல்களையும் அவர் பெற்றார். இது கொள்முதல் திட்டமிடலுக்கும் பணப்புழக்கத்தை நிர்வகிக்கவும் அவருக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அவர் முதலமைச்சர் யுவ யோஜனாவைத் தனது பணியின் மையமாகப் பார்க்காமல், வெற்றியை நோக்கிய ஒரு கருவியாகவே கருதுகிறார்.
உழைப்புக்கு அர்த்தம்
பருவகால மாற்றங்கள் இந்தத் தொழிலில் ஒரு சவாலாகவே உள்ளன. கோடைக் காலத்தில் வாடிக்கையாளர் வருகை மற்றும் விற்பனை அதிகமாக இருக்கும்; அதேசமயம் குளிர்கால மாதங்களில் விற்பனை சற்று மந்தமாக இருக்கும். இருப்பினும், வாடிக்கையாளர்களின் நேர்மறையான வரவேற்பு அவரைத் தொடர்ந்து ஊக்கப்படுத்துகிறது.
“எங்கள் கடையின் ஜூஸ் மற்றும் ஷேக்குகளின் சுவையை வாடிக்கையாளர்கள் விரும்புகிறார்கள்; அதுதான் இந்த உழைப்பிற்கு ஓர் அர்த்தத்தைத் தருகிறது,” என்று அவர் கூறுகிறார்.
இன்று, பழங்கள் வாங்குவது முதல் பணியாளர்களை மேற்பார்வை செய்வது வரை கடையின் பெரும்பாலான விஷயங்களை அனஸே கவனித்துக்கொள்கிறார். இந்த வேலை கடினமானது என்றாலும், இப்போது அவருக்கு அது பழகிவிட்டது.
எதிர்காலத்தில் கடையை விரிவாக்கம் செய்வது குறித்து அவர் யோசித்தாலும், தற்போதைக்குக் கடையைச் சீராக நடத்துவதிலும் வழக்கமான தேவைகளைப் பூர்த்தி செய்வதிலுமே முழு கவனம் செலுத்தி வருகிறார்.
பட்டப்படிப்புக்குப் பிறகு இருந்த நிச்சயமற்ற நிலையிலிருந்து ஒரு நிலையான தொழிலை நடத்துவது வரையிலான அவரது பயணம், அதிரடியான மாற்றங்களை விடப் படிப்படியானதாகவே இருந்துள்ளது.
தினசரி ஒழுக்கம் மற்றும் எச்சரிக்கையான முடிவுகளால் உருவான இந்தக் கடையின் நிலைத்தன்மை, போராட்டக் காலத்திலிருந்து ஒரு சீரான வாழ்க்கை முறைக்கு அவர் மாறிய மெதுவான மாற்றத்தைப் பிரதிபலிக்கிறது.
Edited by Induja Raghunathan