‘தனிப்பட்ட சூப்பர் இன்டெலிஜென்ஸ் வளர்ச்சியால் 2026 Meta-விற்கு ஒரு 'பெரிய ஆண்டாக இருக்கும்’ - மார்க் ஸக்கர்பர்க்

03:12 PM Jan 29, 2026 | YS TEAM TAMIL

மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஸக்கர்பெர்க், 2026 ஆம் ஆண்டு “தனிப்பட்ட சூப்பர் இன்டெலிஜென்ஸ்” (personal superintelligence) வளர்ச்சியில் மிக முக்கியமான ஆண்டாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

2025 ஆம் ஆண்டில் மெட்டா வலுவான வணிக செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளதாகவும், செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான மேம்பாடுகள் வருவாயை அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார். 2026 ஆம் ஆண்டில் சூப்பர் இன்டெலிஜென்ஸ் லேப்ஸ் முயற்சிகளுக்காக பெரிய அளவில் மூலதன முதலீடு செய்ய மெட்டா திட்டமிட்டுள்ளது.

2025 நான்காவது காலாண்டு வருமான அறிக்கையில் பேசிய மார்க் ஸுக்கர்பெர்க்,

“எதிர்காலத்திற்கான உட்கட்டமைப்பை உருவாக்கவும், எங்கள் வணிகத்தை வேகமாக முன்னேற்றவும், தனிப்பட்ட சூப்பர் இன்டெலிஜென்ஸை வழங்கவும் 2026 ஒரு பெரிய ஆண்டாக இருக்கும்,” என்று கூறினார்.

அதே காலாண்டில் மெட்டாவின் வருவாய் 59.9 பில்லியன் டாலராக இருந்து, கடந்த ஆண்டை விட 23.8 சதவீதம் உயர்ந்தது. நிகர லாபம் 22.8 பில்லியன் டாலராக இருந்து, ஆண்டு அடிப்படையில் 9.3 சதவீத வளர்ச்சியை பதிவு செய்தது.

முழு நிதியாண்டு 2025 இல், மெட்டாவின் மொத்த வருவாய் 200.9 பில்லியன் டாலராக இருந்து, 22.2 சதவீத வளர்ச்சியை கண்டது. ஆனால் அதிக மூலதன செலவுகளால், நிகர லாபம் 3 சதவீதம் குறைந்து 60.4 பில்லியன் டாலராக அமைந்தது. 2025 ஆம் ஆண்டில் 72.22 பில்லியன் டாலரை மூலதன செலவாக செலவிட்ட மெட்டா, 2026ல் இதை 115 பில்லியன் முதல் 135 பில்லியன் டாலர் வரை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக நிதி தலைமை அதிகாரி சுசன் லி தெரிவித்தார். இது குறைந்தது 60 சதவீத உயர்வை குறிக்கிறது.

AI வளர்ச்சியால் கணினி சக்தி மற்றும் தரவு மையங்களின் தேவை அதிகரித்துள்ள நிலையில், கூகுள், மைக்ரோசாஃப்ட், அமேசான் போன்ற நிறுவனங்களும் தங்களின் மூலதன செலவுகளை கணிசமாக உயர்த்தி வருகின்றன. AI துறையில் குமிழி (bubble) உருவாகுமோ என்ற கவலைகள் இருந்தாலும், முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

2026 முதல் காலாண்டிற்கான வருவாய் 53.5 பில்லியன் முதல் 56.5 பில்லியன் டாலர் வரை இருக்கும் என்று மெட்டா எதிர்பார்க்கிறது. இது 2025 முதல் காலாண்டின் 42.3 பில்லியன் டாலருடன் ஒப்பிடுகையில் சுமார் 30 சதவீத ஆண்டு வளர்ச்சியாகும். இந்த வருவாய் முன்னறிவிப்பும், AI தொடர்பான வளர்ச்சிகளும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரித்து, பங்குச் சந்தையில் மெட்டா பங்குகள் பிந்தைய வர்த்தகத்தில் சுமார் 10 சதவீதம் உயர்ந்தன.

AI துறையில் பெரிய வேகமான வளர்ச்சி நடந்து வருவதாக குறிப்பிட்ட ஸக்கர்பெர்க், 2026ல் இந்த அலை இன்னும் பல துறைகளில் தீவிரமாகும் என்றார். வரவிருக்கும் மாதங்களில் புதிய மாடல்கள் மற்றும் தயாரிப்புகளை வெளியிட மெட்டா திட்டமிட்டுள்ளதாகவும், தொழில்நுட்ப எல்லைகளை தொடர்ந்து முன்னேற்றுவது குறிக்கோளாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மெட்டாவின் செயலிகளில் உள்ள பரிந்துரை அமைப்புகளுடன் பெரிய மொழி மாதிரிகளை (LLMs) இணைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், பயனர்களின் தனிப்பட்ட இலக்குகளை மையமாக வைத்து உள்ளடக்கங்களை தனிப்பயனாக்குவது நோக்கம் என்றும் அவர் கூறினார்.

AI மூலம் அதிக ஈடுபாடு மற்றும் தொடர்பு கொண்ட ஊடக அனுபவங்கள் உருவாகும் என்றும், பயனர்களை நன்கு புரிந்து கொண்டு அவர்களுக்கு ஏற்ற உள்ளடக்கங்களை உருவாக்கும் செயலிகளாக மாற்றுவதே மெட்டாவின் பார்வை என்றும் ஸக்கர்பெர்க் விளக்கினார். இந்த பார்வையின் இறுதி வடிவம் “கண்ணாடிகள்” (smart glasses) என அவர் கூறி, ரியாலிட்டி லேப்ஸ் முதலீடுகளில் பெரும்பகுதியை அணிகலன்கள் மற்றும் கண்ணாடிகள் மீது செலுத்த உள்ளதாக தெரிவித்தார்.

விளம்பர வணிகத்தில், மெட்டா 2025 நான்காவது காலாண்டில் 24.3 சதவீத ஆண்டு வளர்ச்சியை பதிவு செய்து, 58.1 பில்லியன் டாலர் விளம்பர வருவாயை ஈட்டியது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், த்ரெட்ஸ், மெசஞ்சர் ஆகிய செயலிகளை உள்ளடக்கிய மெட்டாவின் குடும்ப செயலிகள், 2025 டிசம்பரில் தினசரி 3.58 பில்லியன் பயனர்களை சராசரியாக பதிவு செய்து, ஆண்டு அடிப்படையில் 7 சதவீத உயர்வைக் கண்டன. விளம்பர காட்சிகள் 12 சதவீதம் அதிகரித்ததுடன், ஒரு விளம்பரத்தின் சராசரி விலையும் 9 சதவீதம் உயர்ந்தது.

இதற்கிடையில், மெட்டாவின் வர்ச்சுவல் மற்றும் விரிவாக்கப்பட்ட ரியாலிட்டி சாதனங்களை உருவாக்கும் ரியாலிட்டி லேப்ஸ் பிரிவு, 2025 நான்காவது காலாண்டில் 955 மில்லியன் டாலர் வருவாயை பதிவு செய்தது. இது கடந்த ஆண்டை விட 11.8 சதவீத குறைவு. இந்த பிரிவு 6 பில்லியன் டாலர் செயல்பாட்டு இழப்பை சந்தித்தது. 2026-லும் ரியாலிட்டி லேப்ஸ் இழப்புகள் கடந்த ஆண்டைப் போலவே இருக்கும் என ஸக்கர்பெர்க் கூறி, இது உச்ச கட்டமாக இருந்து பின்னர் சகஜமாக இழப்புகள் குறையும் என்ற நம்பிக்கையை தெரிவித்தார்.

2026 ஆம் ஆண்டில் மெட்டாவின் மொத்த செலவுகள் 162 பில்லியன் முதல் 169 பில்லியன் டாலர் வரை இருக்கும் என்று சுசன் லி கூறினார். இதில் பெரும்பங்கு உட்கட்டமைப்பு செலவுகளால் ஏற்படும் என்றும், தொழில்நுட்ப திறமை கொண்ட பணியாளர்களை நியமிப்பதற்கான ஊதிய செலவுகளும் முக்கிய காரணமாக இருக்கும் என்றும் அவர் விளக்கினார்.

2025 டிசம்பர் 31 நிலவரப்படி, மெட்டாவின் பணியாளர் எண்ணிக்கை 78,865 ஆக இருந்து, ஆண்டு அடிப்படையில் 6 சதவீத உயர்வைக் கண்டது. AI மற்றும் சூப்பர் இன்டெலிஜென்ஸ் துறைகளில் முன்னுரிமை அளித்து நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும், உலகளாவிய பயனர்களுக்கான புதிய அனுபவங்கள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கான பாதை வரைபடம் மெட்டாவுக்கு இருப்பதாகவும் அவர் கூறினார்.