'இறக்குமதி சார்பை குறைக்க இந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்' – தொழில்துறைக்கு பியூஷ் கோயல் அழைப்பு!

04:02 PM May 20, 2026 | muthu kumar

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தொழில்துறையினருக்கு முக்கிய அழைப்பு விடுத்துள்ளார். இறக்குமதி பொருட்களின் மீது இந்தியாவின் சார்பை குறைக்கும் வகையில், நாட்டிலேயே அதிக அளவில் உற்பத்தி மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

உள்நாட்டு வர்த்தகர்களை சந்தித்து பேசிய அவர்,

“எந்த பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து அதிகமாக இறக்குமதி செய்யப்படுகின்றன என்பதை கவனிக்க வேண்டும். அவற்றை இந்தியாவில் தயாரிக்கும் வாய்ப்புகளை தொழில்துறையினர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,” என்றார்.

வர்த்தக அமைச்சகத்தின் வர்த்தகத் தரவுத் தளத்தை ஆய்வு செய்து, இறக்குமதி மாற்று உற்பத்தி (Import Substitution) செய்யக்கூடிய துறைகளை அடையாளம் காணுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் மேற்கு ஆசியப் பதற்றம் போன்ற உலகளாவிய பொருளாதார சவால்கள் இருந்தபோதிலும், 2025-26 ஆம் ஆண்டில் இந்தியாவின் ஏற்றுமதி 5 சதவீதம் உயர்ந்து 863.11 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளதாக கோயல் தெரிவித்தார்.

“இந்த ஆண்டுக்கான இலக்கு 1 டிரில்லியன் டாலர் ஏற்றுமதி. இது பெரிய இலக்கு. இதை அடைய அரசு மற்றும் தொழில்துறையினர் இணைந்து செயல்பட வேண்டும்,” என்று அவர் கூறினார். மேலும், தரம், போட்டித்திறன் மற்றும் உற்பத்தி அளவை உயர்த்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியை 2 டிரில்லியன் டாலராக உயர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தியா மேற்கொண்டுள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் (FTA) இந்திய தயாரிப்புகளுக்கு வெளிநாட்டு சந்தைகளில் சலுகை வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்றும், குறிப்பாக ஓமனுடன் செய்யப்பட்டுள்ள FTA ஒப்பந்தம் வரும் ஜூன் 1 முதல் அமலுக்கு வரக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

விவசாய ஏற்றுமதியில் மதிப்புக் கூட்டலை (Value Addition) அதிகரிக்க வேண்டும் என்றும், ஏற்கனவே அது ரூ.5 லட்சம் கோடியை கடந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், ஆகஸ்ட் 12 முதல் 15 வரை பாரத் மண்டபம் வளாகத்தில் நடைபெறவுள்ள “பாரதிய வியாபார் மஹோத்சவ்” நிகழ்ச்சிக்கான இணையதளத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

அந்த நிகழ்ச்சியில் ‘மேக் இன் இந்தியா’ பொருட்களையே காட்சிப்படுத்த வேண்டும் என்று வணிகர்களிடம் அவர் கேட்டுக் கொண்டார்.

“சுவதேசி” உணர்வை வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்திய கோயல், வெளிநாட்டு பொருட்களுக்கு அளிக்கப்படும் சிறிய முன்னுரிமையும் உள்நாட்டு தொழில்துறையை பாதிக்கக்கூடும் என்று எச்சரித்தார்.

மூலதனப் பொருட்கள் உள்ளிட்ட பல துறைகளில் இந்தியா இன்னும் வெளிநாடுகளின் மீது சார்ந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், ராஜ்கோட், ஜலந்தர், லூதியானா, பாட்லா மற்றும் புனே போன்ற தொழில்துறை மையங்கள் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.