வீணாகும் பிளாஸ்டிக்கை லட்சங்கள் ஆக்கும் Artking கெளதம் - சுற்றுச்சூழல் பாதுகாப்போடு கல்வியுதவி செய்யும் ஆர்டிஸ்ட்!

06:51 PM Jun 10, 2026 | Journo Prasanth

நாம் பயன்படுத்திவிட்டு ரோட்டோரமோ, பீச் ஓரமோ வீசிச்செல்லும் பிளாஸ்டிக் பாட்டில், food containers-களால், தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகள் கல்விக்கு உதவ முடியுமென்றால் உங்களால் நம்ப முடிகிறதா? நாம் வீசும் பிளாஸ்டிக் கழிவுகளில் கலைப்பொருட்கள் தயாரித்து அதில் மாதம் லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டும் தொழிலாக மாற்ற முடியுமென்றால் நம்புவீர்களா?

இப்படியான சாதனைகளைச் செய்து வருகிறார் சென்னையைச் சேர்ந்த BE (Mechanical) பொறியாளர் Artking கெளதம். பெயரிலேயே Art சேர்த்தியிருக்கும் கெளதம், கழிவுகளில் தனது கலைப்படைப்பை ‘சக்ரா’ என்ற தொழில் மூலம் உருவாக்கியும், ‘walk for plastic’ என்ற திட்டத்தை செயல்படுத்தியும் சமூக மாற்றங்களை நிகழ்த்தி வருகிறார்.

சூழலை பாதுகாக்க வேண்டுமென்ற கெளதமின் முயற்சி ஒரு இயக்கமாக மாறியது எப்படி, தான் விரும்பிய கலை இன்று தொழிலாக தன்னை காப்பது எப்படி என, யுவர்ஸ்டோரி தமிழிடம் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார் அவர்.

Artking கெளதம்

கலையே வாழ்க்கை

‘‘நான் சென்னையில் பிறந்து வளர்ந்தவன். சிறு வயது முதலே எனக்கு ஓவியக்கலை என்றால் மிகவும் பிடித்தமான ஒன்று. சிறு வயது முதலே எதையாவது வரைவது, எழுதுவது என, பார்க்கும் அனைத்தையும் ஓவியரின் கண்ணோட்டத்தில் தான் பார்ப்பேன். அதிலும் குறிப்பாக சுவர் ஓவியம், 3D ஓவியம், மாற்றத்திற்கான ஓவியம் போன்றவை வரைவதில் அலாதி இன்பம்.

சென்னையில் பிறந்து இங்கேயே படித்து 2014ம் ஆண்டு BE (Mechanical) பொறியியல் படிப்பு முடித்தேன். ஆனால், எனக்கு பொறியியல் சார்ந்த வேலைகளுக்குச் செல்ல எந்த விருப்பமும் இல்லை.

”எனக்கு மிகவும் பிடித்த கலையான ஓவியத்தை வைத்து புதுவித டெக்னிக்களை வைத்து ஓவியராக வாழலாம், என நினைத்தேன். இது தான் என் வாழ்க்கையின் அனைத்திற்கும் தொடக்கம். பொறியியல் முடித்துவிட்டு உனக்கு ஏன் வீண் வேலை, இதை தேவையில்லாதது என்றெல்லாம் பலரும் சொன்னார்கள், ஆனாலும் விடாப்படியாக இந்தத்துறையை தேர்வு செய்தேன்,‘‘ என்கிறார் அவர்.

இயற்கையை மனிதர்களிடம் இருந்து பாதுகாக்க வேண்டுமென்ற தனது எண்ணம் தான் இன்று தன்னை ஓவியராக, தொழில்முனைவோராக மாற்றியதாகத் தெரிவிக்கிறார் கெளதம்.

அதை விளக்கிய அவர், ‘‘எப்போதும் எனக்கு இயற்கை என்றால் மிகவும் பிடிக்கும், இயற்கையை ரசிப்பது, இயற்கையான இடங்களுக்கு பயணிப்பது சிறு வயதிலிருந்தே பிடிக்கும். கல்லூரி முடியும் நேரத்தில் நான் சென்னையில் பயணித்த இடமெல்லாம் பிளாஸ்டிக் கழிவுகளால் நிரம்பியிருந்தது. இதைக் கண்டதும் பொறுப்பற்ற மனிதர்களை நினைத்து கடும் கோபம் ஏற்பட்டதுடன், மனிதர்களுக்கு தங்களின் நிலையை உணர்த்துவதுடன், இயற்கையை பாதுகாக்க வேண்டுமென நான் முடிவெடுத்தேன்.

”கலை தான் எப்போதும் சமூகத்தை இயக்கும் சக்தி, நமது தகவல்களையும், விழிப்புணர்வையும், மனித உணர்வுகளையும், நமது பண்பாட்டையும் அடுத்தடுத்த தலைமுறைக்கு கடத்திச் செல்வது கலைகள் தான். இதனை உணர்ந்த நான் ஓவியத்தை எனது கலை வடிவமாக தேர்வு செய்து ஓவியங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தத்துவங்கினேன்,” என்றார்.

வீணாக உள்ள அரசு மற்றும் பள்ளி சுவர்களில் மக்களுக்கு பயனுள்ள Concept-களை ஓவியமாக வரைவது, சுவர்களில் சித்திரங்கள் மூலம் தகவல் பரப்புவது, என ஆரம்ப காலத்தில் தன் வாழ்வாதாரத்திற்காக Commercial Wall Art செய்யத்துவங்கியுள்ளார் கெளதம்.

நாட்கள் செல்லச் செல்ல கழிவுகளாக நாம் வீசும் பிளாஸ்டிக் பொருட்களில் கலைப்பொருட்கள் தயாரிக்கலாம் எனவும், பிளாஸ்டிக் கழிவுகளில் பொம்மை மற்றும் பொருட்கள் தயாரித்து விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளார்.

"அப்போது, கொரோனா சமயம் வந்ததால் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் Plasterofparis உதவியுடன் போலீஸார் அணிந்திருக்கும் வகையிலான கொரோனா Helmet செய்தேன். இது தமிழ்நாடு மட்டுமின்றி தேசிய அளவில் கவனம் ஈர்த்தது. அதன்பிறகு, சுற்றுச்சூழல் தினம், இயற்கை பாதுகாப்பு போன்ற முக்கிய தினத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களை வைத்து மீன் போல செய்தேன்,’’ என்கிறார்.

பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் குழந்தைகளுக்கு கல்வி…

‘‘உலகத்தில் நாம் எதை ரசித்தாலும், அந்த இடத்தில் ஒரு பிளாஸ்டிக் கழிவாவது இருக்கும். நாம் சென்று கூட பார்க்க முடியாத காடுகள், கடலில் கூட, நாம் வீசும் பிளாஸ்டிக் கழிவுகள் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டு கிடக்கிறது. இதனைக்காணும் போது, மனிதன் தன் சுயநலத்திற்காக, எப்படி வேண்டுமானாலும் மனித குலம் வாழலாம், இயற்கையை அழிக்கலாம், என மக்கள் வாழும் வாழ்க்கையால், இயற்கை அழிந்து, காணுமிடமெல்லாம் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்துகிடக்கிறது. பிளாஸ்டிக்கை மறுசூழற்சி செய்வதும் கடினமான வேலை, அதை அழிக்கவும் முடியாது என்பதை ஒரு கட்டத்தில் உணர்ந்தேன், என்று தொடர்ந்து பேசிய கெளதம் தன் கவலையை வெளிப்படுத்தினார்.

அப்போது, தான் அடுத்த கட்டமாக வீணாகும் பிளாஸ்டிக் கழிவுகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும், அவை குப்பைக்கிடங்கிற்கு சென்று குவிந்து வீணாவதை தடுக்க வேண்டும், தீயில் கருகி அவை வீணாவதை தடுக்க வேண்டுமென சிந்தித்தேன்.

“ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து விற்பனை செய்து அதன் வருமானத்தில், தூய்மைப் பணி செய்யும் தொழிலாளர்களாக உள்ளவர்களின் குழந்தைகள் கல்விக்கு உதவ வேண்டுமென நினைத்தேன்.”

அதனால், 2019ம் ஆண்டு ‘walk for plastic’ என்ற சமூக இயக்கத்தை துவங்கி, என்னைப்போல சமூகத்தில் மீது அக்கரை உள்ளவர்களை ஒருங்கிணைத்தேன்.

”இன்று அந்தக்குழுவில், 1,350 தன்னார்வலர்கள், வாரந்தோறும் அவர்களின் குடியிருப்பு பகுதி, சுற்றுலா பகுதி, பீச் பகுதிகளில் சேரும் கழிவுகளை சேகரித்து அவற்றை ஒரு கிலோ 20 – 45 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறோம். இதில், கிடைக்கும் நிதியைக் கொண்டு ஏழைக் குழந்தைகள் கல்விக்கு உதவுகிறோம். இந்த முயற்சியால் தற்போது மாதம் குறைந்தபட்சமாக, 9000 – 15,000 ரூபாய் கிடைக்கிறது. இதன் மூலம், 22 குழந்தைகள் அரசு மற்றும் சிலர் தனியார் பள்ளிகளில் பயின்று வருகின்றனர்,’’ என்கிறார் அவர்.

Chakra business – மாற்றத்திற்கான தொழில்

இந்த நிதியில் எத்தனை பேரை படிக்க வைக்க முடியும்? அதிகம் பேரை படிக்க வைக்க வேண்டுமென்பதற்காக நான் எடுத்த முயற்சி தான் ‘chakra’, இந்த முயற்சிதான் என்னை தொழில்முனைவோராக மாற்றியது என்கிறார் கெளதம்.

‘Chakra’ குறித்து விளக்கிய கெளவுதம்,

‘‘ஓவியம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த நான், 2019ம் ஆண்டு முதல் கிடைக்கின்ற பிளாஸ்டிக் கழிவுகளுக்கு உருவம் கொடுத்து, அதில் ஓவியம் தீட்டி விழிப்புணர்வு ஏற்படுத்த துவங்கினேன். சிலருக்கு அந்த பொருட்களை விலைக்கு விற்பனை செய்யவும் செய்தேன். இப்படியே நாட்கள் செல்லச் செல்ல தான் ஒரு விஷயம் எனக்குத் தெரிந்தது.

”அனைத்து பிளாஸ்டிக் கழிவுகளும் recycle செல்ல வேண்டிய அவசியம் இல்லை, சிலவற்றிற்கு மதிப்பு உள்ளது. பல நேரங்களில் recycle செல்லும் பிளாஸ்டிக் கழிவுகளில் மிகவும் தரமற்ற குடம், டாய்ஸ், சேர் போன்ற உபயோக பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.”

இதில், கொடுமை என்னவென்றால் recycle செல்லும் பிளாஸ்டிக் கழிவுகளில் உருவாகும் தரமற்ற பிளாஸ்டிக் சார்ந்த பொருட்கள் சில மாதங்களிலேயே பயனற்றுப்போய் மீண்டும் கழிவுகளாக வெளியேறுகிறது. இது ஒரு சங்கிலித்தொடர் போல தொடர்ந்து கொண்டே இருக்கிறது, ஒவ்வொரு பொருட்கள் உற்பத்தியாகும் போதும் வீணாகும் போதும் கார்பன் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

”இதனால், ஒரு யோசனை தோன்றியது, அனைத்து பிளாஸ்டிக் கழிவுகளும் recycle செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவை recycle செய்வதற்கு பதிலாக upcycling செய்ய வேண்டுமென தீர்மானித்தேன். Upcycling என்றால் வீணாக உள்ள பிளாஸ்டிக் கழிவுகளில் ஓவியம் தீட்டி, அதில் Plasterofparis கலந்து அல்லது வர்ணம் கலந்து புதிய படைப்பாக ஒரு புதிய மதிப்புக்கூட்டப்பட்ட கலைப் பொருளாக மாற்றுவது தான். இதை நானே கற்றுக்கொண்டு கடந்த 9 மாதத்திற்கு முன்பு ஒரு நிறுவனத்தை தொடங்கி, Plastic Upcycling செய்யும் தொழில்முனைவோராக மாறியுள்ளேன்,’’ என்கிறார்.

கழிவுகளில் இருந்து கலை; மாதம் 1.5 லட்சம் வருமானம்!

இந்தத்தொழில் மூலம் மாதம் 1.5 லட்சம் ரூபாய்க்கு மேல் விற்பனையாவதாக தெரிவிக்கிறார் கெளதம் .‘‘நானாக பயிற்சி பெற்று, food grade பிளாஸ்டிக் கழிவுகளான பிளாஸ்டிக் bottles, food container, தொழிற்சாலைகளின் பிளாஸ்டிக் கழிவுள், இ–வேஸ்ட், பாட்டில்கள், பாட்டில் மூடிகள், plastic cardboard sheet சேகரிப்பேன்.

”இந்தக் கழிவுகளை வைத்து 3D அலங்கார பொருட்கள், சூழல் மேம்பாட்டை விரும்பும், இயற்கையை விரும்பும் நிறுவனங்களுக்கு பரிசுப்பொருட்கள், விருதுகள் தயாரித்துக் கொடுக்கத் துவங்கினேன். அந்த நிறுவனத்தின் நோக்கம், செயல்பாட்டை கருத்தில் கொண்டு, ஒரு icon விருது போல உருவாக்க துவங்கினேன்.”

ஒரு NGO நிறுவனத்திற்கு யானை போன்ற பரிசு உருவாக்கினேன். சென்னையின் கடலோரத்தில் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு, 5 கிலோ பிளாஸ்டிக் கழிவில் குட்டி யானையை உருவாக்கிக்கொடுத்தேன். இதற்கு 30,000 ரூபாய் பெற்றேன். இந்த 6 மாதத்தில், இயற்கையை விரும்பும் 26 கம்பெனிகள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு, Memento gifts, Awards போன்றவை உருவாக்கிக் கொடுத்துள்ளேன்.

சமீபத்தில் சென்னையின் VR Mall முகப்பு பகுதியில், 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சென்னையின் கடலோரத்தில் சேகரிக்கப்பட்ட கழிவுகள் மற்றும் மாலில் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் என, 250 கிலோ கழிவுகளில் சிவனின் கண் இருக்கும் வகையில், லிங்கம் வடிவில் installations செய்துள்ளேன். இதுபோல கார்ப்பரேட் கம்பெனிகள், NGO, அரசின் ஸ்டார்ட்அப் தமிழ்நாடு, MSME துறை போன்ற பலருக்கும் permanent installations செய்து கொடுத்து வருகிறேன்.

ஒவ்வொரு memento gift, giant installations, awardsகளுக்கு குறைந்தபட்சம் 2,500 முதல் 55,000 ஆயிரம் வரையில் charge செய்கிறேன். Installationகளுக்கு மினிமம் ஒரு லட்சம் ரூபாய் முதல் அளவை பொருத்து 10 லட்சம் வரையில் charge செய்கிறேன்.

”இந்தத்தொழில் மூலம் வீணாக recycle சென்று, மீண்டும் மக்கள் கையிலேயே தரமற்ற பொருளாக வந்து மீண்டும் வீணாக குப்பை கிடங்கிற்குச் செல்லும் பிளாஸ்டிக் கழிவுகளை, upcycling செய்து மாதம், 1.5 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டுகிறேன்,” என்று விரிவாக விளக்கினார்.

தற்போது மாதம், 100 – 150 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை upcycling செய்து இந்த வருமானத்தை ஈட்டுகிறார் கெளதம். இதை மாதம் 1 டன் அளவிற்கு உயர்த்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். மேலும், பிளாஸ்டிக் கழிவுகள் அதிகம் சேகரித்து விற்பனை செய்தும், Upcycling செய்தும் குறைந்தது 100 துப்புரவு தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு நல்ல தரமான கல்வி கிடைக்க உதவிட உழைத்துக் கொண்டிருப்பதாக மகிழ்ச்சியுட்ன் பகிர்கிறார் கெளதம்.

சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கவும், வீணான பிளாஸ்டிக் மூலம் ஏதுமற்ற எளியவர்களின் கல்விக்கு உதவ வேண்டுமென்ற கெளதமின் முயற்சியும், அவரின் தொழிலும் பாராட்டிற்குறியது. இது போன்ற பல தொழில்களுக்கு அரசும், வங்கிகளும் உதவிக்கரம் நீட்டினால், பல சமூக அக்கறையுள்ள தொழில்முனைவோர்கள் உருவாக வாய்ப்பாக அமையும்.