+

RIP Bhagyaraj - தமிழ் சினிமாவின் முடிசூடா ‘திரைக்கதை மன்னன்’ மறைந்தார்!

தமிழ் சினிமாவின் முடிசூடா திரைக்கதை மன்னனாகவும், ஹீரோக்கான இலக்கணங்களை உடைத்து புதிய பரிணாமம் கொடுத்தவருமான நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் காலமானார்.

தமிழ்த் திரையுலகின், ‘திரைக்கதை மன்னன்’ ஆக போற்றப்படும் இயக்குநர்ரும், நடிகருமான பாக்யராஜ் (73), சென்னையில் இன்று காலமானார்.

எளிமையான கதை, விறுவிறுப்பூட்டும் திரைக்கதை, காட்சிக்கு காட்சி நகைச்சுவை என தனக்கே உரித்தான பாணியில் அவர் இயக்கிய, இயக்கி நடித்த படங்கள் ஒவ்வொன்றும், திரையுலகிற்குள் நுழைய இருப்பவர்களுக்கு பாடம் என்று கூறினால் மிகையில்லை.

பெரும்பாலும் தன்னையே கதையின் நாயகனாக முன்னிறுத்தியே அவரது படைப்புகள் இருக்கும் என்றாலும், பெண்களின் கதாபாத்திரத்திரங்களுக்கும் வலிமை கொடுத்து வலுவூட்டி இருப்பது அவரது படைப்புகளின் சிறப்பம்சம் என்றே கூறலாம்.

50 ஆண்டு கால திரை வாழ்க்கையில், தமிழ் சினிமாவிற்கு எண்ணிலடங்காத காலத்தால் அழியாத படைப்புகளை வழங்கிய பாக்யராஜின் இந்த திடீர் மறைவு, திரையுலகினரை மட்டுமின்றி, அவரது ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Bhagyaraj


50 ஆண்டு கால திரைப்பயணம்

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே யுள்ள வெள்ளாங்கோயிலில் பிறந்தவர்தான் பாக்யராஜ். சினிமா மீது கொண்ட தீராக்காதலால், 1977ம் ஆண்டு இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக இணைந்தார். பாரதிராஜாவின் முதல் படமான '16 வயதினிலே'யே படத்தில்தான் பாக்யராஜும் தனது திரை வாழ்க்கையை துவக்கினார்.

பாரதிராஜாவின் இரண்டாவது படமான 'கிழக்கே போகும் ரயில்' திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியதோடு, ஒரு காட்சியிலும் நடித்தார். இயக்கத்தைக் கற்றுக் கொண்டே, இடையிடையே தனது நடிப்பையும் பட்டை தீட்டும் வேலைகளில் ஈடுபட்டார் பாக்யராஜ்.

பாரதிராஜாவின் மூன்றாவது படமான 'சிகப்பு ரோஜாக்கள்' படத்தில், அப்படத்திற்கு வசனம் எழுதியதோடு, அப்படத்தின் சில காட்சிகளிலும் தோன்றி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். பாக்யராஜின் நடிப்பு ஆர்வத்தைக் கண்ட பாரதிராஜா, தனது 'புதிய வார்ப்புகள்' படத்தில் அவரை நாயகனாக்கினார். நாயகனாக மட்டுமின்றி, 'கன்னிப் பருவத்திலே' படத்தில் வில்லனாகவும் மிரட்டினார்.

வெற்றிப்பட நாயகனாக உயர்ந்தபோதும், இயக்குநராகும் அவரது கனவு கரைந்து போகவில்லை. 1979ம் ஆண்டு சுவர் 'இல்லாத சித்திரங்கள்' என்ற படத்தை பாக்யராஜ் இயக்கினார். இப்படத்தில் அவர் கதாநாயகனாக நடிக்காத போதும், படத்திற்கு கனம் சேர்க்கும் குணச்சித்திர வேடத்தில் நடித்து பேசப்பட்டார்.

நகைச்சுவையும், சோகமும் கலந்த எளிய குடும்பப்பாங்கான இப்படத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து, 'ஒரு கை ஓசை' என்ற படத்தை இயக்கி, தயாரித்தார். இப்படத்தில் வாய் பேச இயலாதவராக அவர் நடித்திருந்த கதாபாத்திரம் மக்கள் மத்தியில் அவரை மேலும் பிரபலமாக்கியது.

தொடர்ந்து தனது ஒவ்வொரு படங்களையும் வெவ்வேறு வித்தியாசமான கதைக்களங்களில், விறுவிறுப்பான திரைக்கதையில் தரத் தொடங்கினார் பாக்யராஜ். இதனால், மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா, விடியும் வரை காத்திரு, அந்த 7 நாட்கள், தூறல் நின்னு போச்சு, முந்நானை முடிச்சு, சின்ன வீடு, எங்க சின்ன ராசா, இது நம்ம ஆளு, என அவரது ஒவ்வொரு படங்களுமே வெற்றிப்படமாக வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

Bhagyaraj

துரும்பையும் தூணாக்கும் வல்லவர்

துரும்பையும் தூணாக்கும் வல்லவர் பாக்யராஜ். அதற்கு ஒரு உதாரணம்தான் 'அவசர போலீஸ் 100' படம். 1977ம் ஆண்டு எம்ஜிஆர் முதலமைச்சர் ஆவதற்கு முன்பு, ‘அண்ணா நீ என் தெய்வம்’ என்ற படத்தில் சில காட்சிகளை மட்டுமே நடித்தார். பின்னர், அப்படம் பாதியிலேயே நின்றது. ஆனால், எம்ஜிஆர் மீது தீவிர அபிமானம் கொண்டிருந்த பாக்யராஜ், அவர் கடைசியாக நடித்த காட்சிகளை வீணாக்காமல், அந்த காட்சிகளை கருவாக வைத்து, அதன் மீது ஒரு கதைக்களத்தை உருவாக்கினார்.

‘அவசர போலீஸ் 100’ எனப் பெயர் வைத்து, அப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துக் கலக்கினார். அவர் எதிர்பார்த்தது போலவே அப்படமும் அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது.

தமிழைத் தவிர மற்ற மொழிகளில் அவ்வளவாக புலமை பெற்றிராதபோதும், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என மற்ற மொழிகளிலும் துணிந்து இயக்கி, அவற்றையும் வெற்றிப்படங்கள் ஆக்கினார். உதாரணத்திற்கு, நடிகர் கமல் நடித்த, ‘ஒரு கைதியின் டைரி’ படத்திற்கு பாக்யராஜ் தான் கதை, திரைக்கதை, வசனம் அமைத்திருந்தார். இந்தப் படத்தை, இந்தியில் அமிதாப்பச்சனை வைத்து, 'ஆக்ரி ராஸ்தா' என்ற பெயரில் பாக்யராஜ் இயக்கி, அதனையும் வெற்றிப்படமாக்கினார்.

 

‘இது நம்ம ஆளு’, திரைப்படத்திற்குப் பாக்யராஜே இசை அமைத்து, ஒரு பாடலையும் பாடியிருந்தார். மேலும், ஐந்து படங்கள் வரை இசையமைப்பாளராகவும் பணிபுரிந்தார்.

தமது குரு பாரதிராஜாவைப் போலவே, பாக்யராஜும் தனது படங்கள் மூலம் பல திறமையான நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குநர்களை அறிமுகப்படுத்தினார். அவரது அறிமுகங்களில் ஊர்வசி, பாண்டியராஜன், ரா.பார்த்திபன், லிவிங்ஸ்டன், வி.சேகர் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

Bhagyaraj

சாமர்த்தியமும், சமயோசிஜதமும் கொண்ட நாயகிகள்

அப்பாவித்தனமும், சாமர்த்தியமும் சம அளவில் கலந்த கதாபாத்திரங்களையே தன்னுடைய படங்களில் தனக்காக அவர் வடிவமைத்துக் கொண்டார். தன்னைத் தானே விமர்சித்து கேலி செய்து கொள்ளும் பண்பு அவரது குணச்சித்திரமாக படங்களில் வெளிப்பட்டு, அது ஒரு தனிப்பாணியாகவே உருவாக்கின. ஹீரோ என்றாலே எதற்கும் அஞ்சாவதாவராக, புத்திசாலியாகத்தான் இருக்க வேண்டும் என்ற கட்டுமானங்களை உடைத்து, நம் வீட்டில் ஒருவராக, நாம் சந்திக்கும் ஒருவராக யதார்த்தமான நாயகர்களை உருவாக்கியது பாக்யராஜின் தனிச்சிறப்பு.

பெரும்பாலும் கதைக்களம் அவரைச் சுற்றியே சுழல்வதாக அவரது படங்கள் இருந்தபோதும், தனது கதாநாயகிகள் மட்டுமின்றி, படத்தில் வரும் பெரும்பாலான பெண் கதாபாத்திரங்களையும் அவர் வலிமை படைத்தவர்களாகக் காட்டத் தவறவில்லை.

எளிய குடும்பப்பாங்கான கதைக்களமாக இருந்தபோதும், அதில், தன்னால் இயன்ற அளவில் புரட்சியும், வாழ்க்கைத் தத்துவங்களையும் தனது படங்களில் நயமாக வைத்திருப்பதில் வல்லவர் பாக்யராஜ். உதாரணத்திற்கு 'அந்த ஏழு நாட்கள்' படத்தில், தான் காதலித்த பெண், வேறொருவரின் மனைவியான பிறகு, அந்தக் கணவனே அப்பெண்ணைக் காதலனுடன் செல்ல அறிவுறுத்தும் போதும், ‘என்னுடைய காதலி உங்கள் மனைவியாகலாம்.. ஆனால் உங்கள் மனைவி எப்போதும் என்னுடைய காதலியாக மாற முடியாது’ என தன் வசனங்கள் மூலம் சமூகத்திற்கு கருத்து சொன்னவர் பாக்யராஜ். எளிய வசனம்தான் என்றாலும், அதன் வீரியம் இன்றளவும் இருப்பதை மறுக்க முடியாது.

அதேபோல், முந்தானை முடிச்சு படத்தில் வரும் நாயகி கதாபாத்திரத்தையும் கூறலாம். தன் கணவரின் முதல் மனைவி மூலம் பிறந்த குழந்தையை தான் தன்னுடைய குழந்தையாகவே பாவிப்பேன் என்பதை காட்ட, கருத்தடை செய்து கொள்ள முடிவெடுப்பதுபோல் காட்டியிருப்பார் பாக்யராஜ்.

பெரும்பாலும் அவருடைய நாயகிகள் வீரமானவர்களாகவும், விவேகமானவர்களுமாகவே இருப்பார்கள். உணர்வுப்பூர்வமாக மட்டுமின்றி, சமயோஜிதமாக செயல்படுவதிலும் வல்லவர்களாகவே அவர்களுடைய கதாபாத்திரங்களைப் படைத்திருப்பார் பாக்யராஜ். அதனால்தான், எப்போதும் குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும்படியான படங்களாக இப்போதும் அவரது படைப்புகள் விளங்குகின்றன.

Bhagyaraj

அரசியல் ஈடுபாடு

தனது படங்களில் தன்னை எம்.ஜி.ஆரின் ரசிகராக வெளிப்படுத்தி வந்த பாக்யராஜ், ஒரு கட்டத்தில் அதிமுகவில் இணைந்து நேரடி அரசியலில் இறங்கினார். ஆனால், குறுகிய காலத்திலேயே அக்கட்சியில் இருந்து வெளியேறிய அவர், 'எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றக் கழகம்' என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினார்.

1991ம் ஆண்டு கேரள சட்டசபைத் தேர்தலில் அக்கட்சி சார்பில் ஒரு வேட்பாளர் போட்டியிட்டார். ஆனால், அவருக்கு படுதோல்வியே கிடைத்தது. இதனால் அக்கட்சியைக் கலைத்த பாக்யராஜ், 2006ம் ஆண்டு திமுகவில் இணைந்தார். பின்னர், அக்கட்சியில் இருந்தும் விலகிய அவர், அதோடு தீவிர அரசியலில் இருந்தும் விலகிக் கொண்டார்.  

இலக்கியத்தின் மீது கொண்ட ஆர்வத்தால், பாக்யா என்ற வார இதழையும் பாக்யராஜ் நடத்தி வந்தார்.

Bhagyaraj

திரையுலகினரும், ரசிகர்களும் சோகம்

தொடர் வெற்றிகளால், தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்த பாக்யராஜ், தன்னுடன் நடித்த பிரவீணா என்ற நடிகையை முதலில் அவர் திருமணம் செய்து கொண்டார். ஆனால், சில ஆண்டுகளிலேயே அவர் உடல்நலக் குறைவால் இறந்துவிட, அதன் பிறகு முன்னணி நடிகையான பூர்ணிமாவை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

இந்தத் தம்பதிக்கு சாந்தனு என்ற மகனும், சரண்யா என்ற மகளும் உள்ளனர். தன் பிள்ளைகள் இருவரையுமே திரையுலகில் நடிகர்களாக பாக்யராஜ் அறிமுகப்படுத்தினார். சரண்யா தனது முதல் படத்தோடு நடிப்பதை நிறுத்திக் கொள்ள, சாந்தனு தொடர்ந்து நாயகனாக நடித்து வருகிறார்.

சென்னையில் குடும்பத்துடன் வசிந்து வந்த பாக்யராஜ், இன்று காலை திடீரெஅன் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவு திரையுலகிற்கு பெரும் இழப்பு. அவரது மறைவுச் செய்தி கேட்டு திரையுலகினரும், அவரது ரசிகர்களும் சோகமடைந்துள்ளனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உட்பட பல அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் தங்களது அஞ்சலியை நேரிலும், சமூகவலைதளப் பக்கங்கள் வாயிலாகவும் பாக்யராஜிற்கு தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

 

காலத்தால் அழியாத திரைப்படங்களைத் தந்த பாக்யராஜின் புகழ் என்றென்றும் ரசிகர்கள் மத்தியில் நிலைத்து நிற்கும். அவரது படைப்புகள் இனி வரும் படைப்பாளிகளுக்கு நிச்சயம் ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

facebook twitter