
தென்கொரியாவின் உலகப்புகழ்பெற்ற மின்னணு நிறுவனமான சாம்சங் இந்தியாவில் தன் உற்பத்தியை விரிவாக்கம் செய்யவுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
உலகளவில், சாம்சங் இந்தியாவில் இரண்டாவது பெரிய மொபைல் போன் உற்பத்தி பிரிவைக் கொண்டுள்ளதோடு ஆப்பிளுக்குப் பிறகு நாட்டிலிருந்து இரண்டாவது பெரிய மொபைல் போன் ஏற்றுமதியாளராக உள்ளது.
"திறமை மற்றும் புதுமையால் இயக்கப்படும் சாம்சங், இந்தியாவில் அதன் மேம்பட்ட தொழில்நுட்ப சாதனங்களின் உற்பத்தியை தொடர்ந்து விரிவுபடுத்துகிறது. இந்தியாவில் அதன் ஆராய்ச்சிப் பிரிவில் 7,000க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் உள்ளனர்," என்று அஸ்வினி வைஷ்ணவ் சமூக வலைத்தளப் பதிவில் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் தன் எக்ஸ் தளத்தில், தென் மேற்கு ஆசிய சாம்சங்கின் தலைவர் மற்றும் தலைமைச் செயலதிகாரி ஜே.பி. பார்க் மற்றும் கார்ப்பரேட் துணைத் தலைவர் எஸ்.பி.சுன் ஆகியோருடனான சந்திப்பின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் தலைவரும் மொபைல் எக்ஸ்பீரியன்ஸ் (MX) வணிகத் தலைவருமான டி.எம்.ரோ, நிறுவனம் இந்தியாவில் லேப்டாகளைத் தயாரிக்கத் தயாராகி வருவதாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் விற்பனை செய்யும் அனைத்து ஸ்மார்ட்போன்களையும் நிறுவனம் தொடர்ந்து தயாரித்து வருகிறது, அவற்றில் சமீபத்திய முதன்மை ஸ்மார்ட்போன்களான கேலக்ஸி இசட் ஃபோல்ட் 7, ஒவ்வொன்றும் ரூ.1.74 லட்சம் முதல் ரூ.2.11 லட்சம் வரை விலையிலும், கேலக்ஸி இசட் ஃபிளிப் 7, ஒவ்வொன்றும் ரூ.1.09 லட்சம் முதல் ரூ.1.22 லட்சம் வரை விலையிலும் உள்ளன.
சாம்சங் மேலும் பல மொழிகளுக்கு ஜெமினி லைவ் அம்சத்தை விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளது. இதில் இந்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள் முக்கிய பங்கு வகிக்கும், என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் மின்னணு உற்பத்தித் துறையில் மொபைல் போன் மிகப்பெரிய பங்களிப்பை அளிக்கிறது, ஆப்பிள் மற்றும் சாம்சங் ஆகியவை நாட்டின் முன்னணி ஏற்றுமதியாளர்களாக உள்ளன. பெரும்பாலான ஐபோன்கள் சீனாவிலும், அதைத் தொடர்ந்து இந்தியாவிலும் தயாரிக்கப்படுகின்றன, அதே நேரத்தில், சாம்சங் இந்தியாவிற்குப் பிறகு வியட்நாமில் அதன் மிகப்பெரிய தொழிற்சாலையைக் கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
உதவி: பிடிஐ