பங்குச் சந்தைக்கு வருகிறது 'சத்யா ஏஜென்சீஸ்' - ரூ.600 கோடி மதிப்புள்ள IPO-க்கு செபி அனுமதி!

01:16 PM Jun 26, 2026 | muthu kumar

தென்னிந்தியாவின் மிகப்பெரிய நுகர்வோர் மின்னணு மற்றும் வீட்டு உபயோக மின்சாதன சில்லறை விற்பனை நிறுவனமாக விளங்கும் 'சத்யா ஏஜென்சீஸ் லிமிடெட்' நிறுவனத்தின் ₹600 கோடி மதிப்பிலான ஆரம்ப பொதுப் பங்கு வெளியீட்டிற்கு (IPO) பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையம் (SEBI) ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த ஐபிஓவில் ரூ.300 கோடி மதிப்பிலான புதிய பங்குகள் வெளியிடப்படுகின்றன. மேலும், நிறுவனத்தின் ப்ரோமோட்டர் குழுவினர் மேற்கொள்ளும் ரூ.300 கோடி மதிப்பிலான Offer for Sale (OFS) இடம்பெறுகிறது. இதில், ப்ரோமோட்டர்களான ஜான்சன் ஆசாரியா, ஜே.ஜான் சத்யா மற்றும் சார்லஸ் பக்கியராஜ் ஆகியோர் தலா ரூ.100 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்ய உள்ளனர்.

புதிய பங்குகள் மூலம் திரட்டப்படும் நிதியை, நிறுவனத்தின் சில கடன்களை அடைப்பதற்கும், அதன் துணை நிறுவனமான யூனிலெட் அப்ளையன்சஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை கையகப்படுத்துவதற்கான கொள்முதல் தொகையின் ஒரு பகுதியை செலுத்துவதற்கும், பொதுவான நிறுவனத் தேவைகளுக்கும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சத்யா ஏஜென்சீஸ் நிறுவனம்; ஏர் கண்டிஷனர்கள், தொலைக்காட்சிகள், வாஷிங் மெஷின்கள், ஸ்மார்ட்போன்கள், தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் சிறிய சமையலறை மின்சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு விலைப் பிரிவுகளில் நுகர்வோர் மின்னணு பொருட்களை விற்பனை செய்து வருகிறது.

2026 ஜனவரி 31 நிலவரப்படி, நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் இணைந்து தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 427 சில்லறை விற்பனை நிலையங்களை (392 மின்னணு சாதன விற்பனை நிலையங்கள் மற்றும் 35 மொபைல் விற்பனை நிலையங்கள்) நடத்தி வருகின்றன. இவற்றின் மொத்த விற்பனை பரப்பளவு சுமார் 19 லட்சம் சதுர அடி ஆகும்.

மேலும், 150-க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச உற்பத்தியாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்களுடன் நீண்டகால வர்த்தக உறவை இந்நிறுவனம் கொண்டுள்ளது. இதில் எல்.ஜி., சோனி, டைக்கின், வேர்ல்பூல், மற்றும் பானாசோனிக் போன்ற முன்னணி உலகளாவிய பிராண்டுகளும் இடம்பெற்றுள்ளன.