
ரூ.500 கோடி செமிகண்டக்டர் உற்பத்தித் திட்டம் 2030-ற்காக தமிழ்நாடு சிப் வடிவமைப்பு, சோதனை மற்றும் உற்பத்திக்கான மையமாக மாநிலத்தை நிலைநிறுத்த புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பாக திங்கட்கிழமை சில அறிவிப்புகளைச் செய்த தமிழ்நாடு அரசு செமிகண்டக்டர் டிசைன் ஊக்குவிப்புத் திட்டத்திற்கு அனுமதி அளித்தது. இது Fabless நிறுவனங்களுக்கு மானியங்கள் மற்றும் முன்மாதிரி மானியங்களை வழங்கும். இதனுடன் அரசு நடத்தும் TIDCO-வின் கீழ் புதிய சிறப்பு மையங்கள் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து, ஆராய்ச்சி, சோதனை மற்றும் பயிற்சியை நடத்துவதற்கான புதிய சிறப்பு மையங்களை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.

தொழில்துறை செயலாளர் வி.அருண் ராய் இது தொடர்பாகக் கூறும்போது,
"டிசைன் நிறுவனங்களுக்கு மானியங்களை வழங்குவதோடு அதனுடன் உள்கட்டமைப்பு மற்றும் பூங்காக்களில் கூட்டு முதலீடுகள், ஒரு முன்னோடி உற்பத்தி வசதி மற்றும் ஒருங்கிணைந்த திறன் மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், நாங்கள் ஒரு தன்னிறைவு பெற்ற செமிகண்டக்டர் மதிப்புச் சங்கிலியை உருவாக்க முயற்சி செய்கிறோம்," என்றார்.
இந்த ஆண்டு மாநில பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு செமிகண்டக்டர் மிஷன் (TNSM) 2030, வடிவமைப்பு நிறுவனங்களை ஊக்குவித்தல், டெஸ்ட்டிங் உள்கட்டமைப்பை உருவாக்குதல், திறன் மையங்களை அமைத்தல், செமிகண்டக்டர் உபகரண உற்பத்தி பூங்காக்களை உருவாக்குதல் மற்றும் பணியாளர் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய ஐந்து தூண்களை அடிப்படையாகக் கொண்டது.
கோவையில் சூலூர் மற்றும் பல்லடத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இரண்டு குறைக்கடத்தி உபகரண உற்பத்தி பூங்காக்கள் ஏற்கனவே வளர்ச்சிநிலையில் உள்ளன. ஐஐடி மற்றும் தொழில்துறை கூட்டாளர்களுடன் இணைந்து ஃபேப்ரிகேஷன் யூனிட் ஒன்றை உருவாக்கவும் திட்டமிடப்பட்டு வருகின்றன. அது முன்மாதிரி உருவாக்கல் மற்றும் ஆராய்சி & மேம்பாடு மையமாகவும் செயல்படும்.
பணியாளர்கள் ஊக்குவிப்புப் பகுதியாக செமிகண்டக்டர் பணிக்குழு மேம்பாட்டுத் திட்டம் மற்றும் பிற தளங்கள் மூலம் 1,000 பொறியியல் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளது, அதே நேரத்தில், உற்பத்தி, சோதனை மற்றும் பேக்கேஜிங் ஆகியவற்றில் 4,500க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப வல்லுநர்களின் திறனை மேம்படுத்துகிறது.
இறக்குமதி மீதான சார்பைக் குறைக்கவும் உலகளாவிய செமிகண்டக்டர் முதலீட்டை ஈர்ப்பதற்கும் இந்தியாவின் பரந்த முயற்சியுடன் தமிழ்நாட்டின் இந்நடவடிக்கைகளும் இப்போது இணைந்துள்ளது. கர்நாடகா, குஜராத் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட இந்திய மாநிலங்களிடையே அதிகரித்து வரும் போட்டியின் மத்தியில், சிப் தயாரிப்பாளர்கள் மற்றும் உபகரண உற்பத்தியாளர்களை ஊக்கத்தொகை மற்றும் உள்கட்டமைப்பு உறுதிமொழிகளுடன் முதலீட்டாளர்களை ஈர்க்கும் தமிழகத்தின் திட்டம் வரவிருக்கிறது.
மாநில அரசுகள் செமிகண்டக்டர் முதலீடுகளை எவ்வாறு ஊக்குவிக்கின்றன?
குஜராத்:
மிகவும் தாராளமான மாநில அளவிலான முதலீட்டாளர்களுக்கான பேக்கேஜில் குஜராத் முன்னிலை வகிக்கிறது. அதன் செமிகண்டக்டர் கொள்கை மத்திய ஊக்கத்தொகைகளுக்கு மேல் 40% வரை மூலதன மானியங்களை வழங்குகிறது, இது ஒரு திட்டத்தின் செலவில் சுமார் 20%-ஐ உள்ளடக்கியது.
குஜராத் மாநிலம் "செமிகான் நகரத்தை" உருவாக்கி வரும் தோலேரா சிறப்பு முதலீட்டு பிராந்தியத்தில் முதல் 200 ஏக்கரில் 75% வரை நிலம் பெரிய அளவில் மானியமாக வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு கன மீட்டருக்கு ரூ.12 சலுகை விலையில் தண்ணீர் வழங்கப்படுகிறது, அதே நேரத்தில், பத்து ஆண்டுகளுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.2 என்ற விலையில் மின்சாரம் வழங்கப்படுகிறது, வரி விலக்குகளும் இணைக்கப்பட்டுள்ளன.
குஜராத் ஒற்றைச் சாளர அனுமதி அமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு ஆதரவு மூலம் இணக்கத்தை நெறிப்படுத்தியுள்ளது, இது ஃபேப்களுக்கான முதலீட்டில் மிகவும் கவர்ச்சிகரமான இடங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
உத்தரப் பிரதேசம்:
ரூ.919 கோடி மூலதன மானியம், ரூ.124 கோடி நில தள்ளுபடி மற்றும் மின்சார வரியில் 10 ஆண்டு தள்ளுபடி ஆகியவற்றை வழங்குகிறது. நொய்டாவின் தற்போதைய மின்னணு உற்பத்தி வலிமையை மேம்படுத்துவதற்காக உத்தரபிரதேசம் தனது செமிகண்டக்டர் கொள்கையை வடிவமைத்துள்ளது. ஆராய்ச்சியை ஊக்குவிக்க, இந்தக் கொள்கையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்களுக்கு ரூ.10 கோடி வரை நிதியுதவியும், சிறப்பு மையங்களுக்கு 50% நிதியுதவியும் (ரூ.10 கோடி வரை) அடங்கும்.
காப்புரிமை மீளப்பெறுதல் மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.3 கோடி திறன் மேம்பாட்டு மானியங்களும் கிடைக்கின்றன. இந்தியாவின் மின்னணு மையப்பகுதியாக உ.பி.யின் நிலையை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த நடவடிக்கைகள், ஏற்கனவே நாட்டின் மொபைல் போன் உற்பத்தியில் பாதிக்கும் மேலான பங்கை வகிக்கின்றன.
ஒடிசா:
புவனேஸ்வரின் இன்ஃபோ பள்ளத்தாக்கில், ரூ.4,009 கோடி மதிப்புள்ள இரண்டு குறைக்கடத்தி திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன, இதில் சுமார் 750 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் ஆர்ஐஆர் பவர் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தால் ரூ.618 கோடி மதிப்புள்ள சிலிக்கான் கார்பைடு ஃபேப் அடங்கும். ஒடிசா செமிகண்டக்டர் மற்றும் ஃபேப்லெஸ் கொள்கை 25% மூலதன மானியங்களை வழங்குகிறது, முத்திரை வரி மற்றும் மின்சார வரியிலிருந்து விலக்குகள், அத்துடன் மின் கட்டண திருப்பிச் செலுத்துதல் மற்றும் நீர் விநியோக சலுகைகளையும் வழங்குகிறது.

கர்நாடகா:
மத்திய உற்பத்தி-இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (PLI) திட்டத்தின் கீழ் வரி விலக்குகள் மற்றும் ஆதரவுடன் கூடுதலாக, 20% மூலதன முதலீட்டு மானியம் மற்றும் நிலச் செலவுகளில் (50 ஏக்கர் வரை) 25% வரை பணத்தைத் திருப்பிச் செலுத்துதல் ஆகியவற்றை கர்நாடகா வழங்குகிறது. பிப்ரவரி 2025ல், அமெரிக்க சிப் உபகரண தயாரிப்பாளரான ‘லாம் ரிசர்ச்’, கர்நாடகாவின் செமிகண்டக்டர் உற்பத்திச் சுற்றுச்சூழல் அமைப்பில் 1 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்தது.
அசாம்:
அசாம் மாநிலம் தன்னை ஒரு பேக்கேஜிங் மற்றும் டெஸ்ட்டிங் மையமாக நிலைநிறுத்திக் கொள்வதன் மூலம் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்க விரும்புகிறது. டாடா எலக்ட்ரானிக்ஸ் ஒரு அவுட்சோர்ஸ் செய்யப்பட்ட செமிகண்டக்டர் அசெம்பிளி மற்றும் டெஸ்டிங் (OSAT) வசதியை அமைக்க கிட்டத்தட்ட ரூ.27,000 கோடியை உறுதியளித்துள்ளது. டாடா யூனிட் மற்றும் அதன் கூட்டணி நிறுவனங்களை ஆதரிப்பதற்காக ஒரு பிரத்யேக செமிகண்டக்டர் பூங்காவிற்கு 175 ஏக்கர் நிலத்தையும் ஒதுக்கியுள்ளது.
மத்தியப் பிரதேசம்:
இது நீண்ட கால குத்தகைக்கு 30 ஹெக்டேர் வரை நிலத்தை இலவசமாக வழங்குகிறது, மேலும் ஒரு தசாப்தத்திற்கு மின்சாரம் மற்றும் நீர் மானியங்களை வழங்குகிறது. பயிற்சிச் செலவுகளில் ஐந்து ஆண்டுகளில் 10 மில்லியன் டாலர்கள் வரை செலவிட்டத் தொகையை மாநில அரசு திருப்பித் தருகின்றது. மூலதனச் செலவில் 15% வரை மாநிலம் ஏற்றுக் கொள்கிறது.
இப்போது இந்த வரிசையில் செமிகண்டர் தயாரிப்பு மையமாக தமிழகமும் போட்டியில் இறங்கி சலுகைகளையும் திட்டங்களையும் அறிவித்துள்ளது.