
1970களில் குங்குமம் தயாரிக்கும் பிராண்ட்டாக அப்பா தொடங்கிய வணிகத்தை, இன்று பல தசாப்த உழைப்பால் அச்சிறிய உற்பத்திக்கூடத்தை, 350க்கும் மேற்பட்ட அழகுசாதனத் தயாரிப்புகளுடன் 'இன்சைட் காஸ்மெட்டிக்ஸ்' எனும் பெரும் பிராண்ட்டாக வளர்த்து, 2019-20 நிதியாண்டில் ரூ.73 கோடி வருவாயை ஈட்டியுள்ளார் தினேஷ் ஜெயின்.
1970-களின் பிற்பகுதியில், தினேஷ் ஜெயினின் தந்தை பஸ்திமல் ஜெயின், சிந்தூர், நெயில் பாலிஷ், டால்கம் பவுடர் போன்ற பொருட்களை தயாரிக்கும் ஒரு சிறிய அழகுசாதனப் பொருள் உற்பத்திப் பிரிவைத் தொடங்கினார். எம்பிபிஎஸ் டாக்டரான பஸ்திமல், தொழில்முனைவு பயணத்தில் ஈடுபட அவரது வேதியியலாளர் நண்பருடன் இணைந்து, மும்பையின் போரிவிலியில் வணிகத்தை தொடங்கினார்.
அப்போது, பள்ளிப்படிப்பை படித்து கொண்டிருந்தார் தினேஷ். பள்ளி முடிந்தததும் தினமும் தயாரிப்புக் கூடத்திற்கு வந்த தினேஷ், வணிகத்தினை உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கினார். பல ஆண்டுகளுக்கு பிறகு, 80களின் பிற்பகுதியில் கல்லுாரிப் படிப்பை முடித்த தினேஷ், முழுநேரமாக அப்பாவின் தொழிலை கவனிக்கத் தொடங்கினார்.
இன்று, 35 ஆண்டுகளுக்கு பிறகு, அந்த சிறிய உற்பத்திப் பிரிவு, 350க்கும் மேற்பட்ட தயாரிப்புகளுடன், இன்சைட் காஸ்மெட்டிக்ஸ் எனும் பெரும் பிராண்ட்டாக வளர்ந்து இந்தியா முழுவதும் 7,500க்கும் மேற்பட்ட கடைகளில் விற்பனைச் செய்யப்படுகிறது. மேலும், 2019-20 நிதியாண்டில் ரூ.73 கோடி வருவாயை ஈட்டியுள்ளது.

குங்குமத் தயாரிப்பு டு காஸ்மெட்டிக் பிராண்ட்டாக வளர்ச்சி!
"மருத்துவரான என் தந்தை பகுதிநேர அழகுசாதனத் தொழிலை நடத்தி வந்தார். அந்த சூழலிலே வளர்ந்ததால், வணிகத்தை நடத்துவதற்கும் அழகுசாதனத் துறையைப் புரிந்துகொள்வதற்கும் வேண்டிய அறிவை பெறுவது எளிதாகயிருந்தது. தொழிலுக்குள் வந்தபிறகு, வணிகம் நடத்தப்படும் விதத்தில் சில கட்டமைப்பைக் கொண்டுவர முயற்சித்தேன்," என்று SMBStory உடனான உரையாடலில் தினேஷ் பகிர்ந்தார்.
1994 ஆம் ஆண்டு, தினேஷ் இன்சைட் காஸ்மெட்டிக்ஸ் நிறுவனத்தின் கீழ் குங்குமம் மட்டும் தயாரித்து விற்பனை செய்யத் தொடங்கினார். இந்த தயாரிப்பு மயூரி குங்குமம் என்ற பிராண்ட் பெயரில் விற்கப்பட்டது. அந்த நேரத்தில் குங்குமம் பரவலாக தேவைப்பட்டது என்றும், அதை வெவ்வேறு வண்ணங்களில் பயன்படுத்தும் போக்கு மக்களிடம் அதிகரித்து வந்ததாகவும் அவர் தெரிவித்தார். சந்தையில் குங்குமத்திற்கு இருந்த டிமாண்ட்டை உணர்ந்த தினேஷ், அவரது சிறிய தொழிற்சாலை அமைப்பில் 11 வண்ணங்களில் குங்குமத்தை தயாரித்தார்.
"குங்குமத் தயாரிப்பு உடனடி வெற்றியை கொடுத்தது. மும்பை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தேவை மிகவும் அதிகரித்தது. ஒரு நாளைக்கு 10,000 பீஸ்களை உருவாக்கினோம். நிதிரீதியாக நல்ல லாபத்தை அளித்து, வணிகத்தை விரிவுபடுத்துவதற்கான நம்பிக்கையை எனக்குள் தூண்டியது," என்றார் தினேஷ்.
குங்குமத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து நிறுவனம் விரைவில் நெயில் பாலிஷ்களை உற்பத்தி செய்யத் தொடங்கியது மற்றும் 90-களின் பிற்பகுதியில் அவற்றை அறிமுகப்படுத்தியது.
தினேஷ் அவரது தயாரிப்புகளை முதலில் VOV இன்டர்நேஷனலின் கீழ் லேபிளிட்டார். பின், 2012ம் ஆண்டில், "இன்சைட் காஸ்மெட்டிக்ஸை" (Insight Cosmetics) ஒரு தனி பிராண்டாக அறிமுகப்படுத்தினார். இன்று, இன்சைட் காஸ்மெடிக்ஸ் பிராண்டின்கீழ், நெயில் பாலிஷ், லிப்ஸ்டிக், மஸ்காரா, ஐலைனர்கள், ஐ ஷேடோக்கள், ஃபவுண்டேஷன்கள், கன்சீலர்கள், லிப் கிளாஸ், ஹைலைட்டர் மற்றும் பல என சுமார் 350 வண்ண அழகுசாதனப் பொருட்கள் உள்ளன.
மும்பை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு தசாப்த காலமாக அதன் ஆப்லைன் இருப்பின் மூலம் வாடிக்கையாளர் தளத்தைப் பெற்ற பிறகு, குஜராத், ராஜஸ்தான் மற்றும் டெல்லியிலும் ஆப்லைன் விற்பனையைத் தொடங்கியது.
"முதன்முதலில் 2000-ம் ஆண்டில் ஏற்றுமதியையும் தொடங்கினோம். ஆனால், அந்த சமயத்தில் சீனா சந்தையை சீர்குலைத்து வந்தது. அவற்றுடன் போட்டியிடுவது பற்றி எங்களால் யோசிக்க முடியவில்லை, எனவே, நாங்கள் பின்வாங்கினோம்," என்கிறார் தினேஷ்.
தொற்றுநோய் காலத்தில் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட பல சிறு மற்றும் நடுத்தர வணிகங்களைப் போலவே, இன்சைட் காஸ்மெடிக்ஸ் நிறுவனமும் தொற்றுநோய் காலத்தில் நேரடி-நுகர்வோர் (D2C) பாதையை தேர்ந்தெடுத்தது. மேலும், இப்போது ஃபிளிப்கார்ட், அமேசான், நைகா, பர்ப்ளே மற்றும் பிற மின்வணிக தளங்களிலிலும் அதன் தயாரிப்புகளை விற்பனை செய்கிறது.
2019ம் ஆண்டு அதன் சொந்த இணையத்தளத்தையும் அறிமுகப்படுத்தியது. இன்சைட் காஸ்மெடிக்ஸின் தயாரிப்புகள் இப்போது மகாராஷ்டிராவில் உள்ள போயிசார், வாலிவ் மற்றும் வசாய் ஆகிய இடங்களில் அமைந்துள்ள மூன்று தயாரிப்புக் கூடங்களில் 400க்கும் மேற்பட்ட பணியாளர்களால் தயாரிக்கப்படுகின்றன.

சந்தைப்போட்டியும்; சந்திக்கும் சவால்களும்;
இந்தியாவில் அழகுசாதனத் துறை வேகமாக வளர்ந்து வரும் ஒன்றாகும். சந்தையில் முக்கியமாக இந்துஸ்தான் யூனிலீவர், கோல்கேட்-பாமோலிவ் இந்தியா மற்றும் லோரியல் இந்தியா போன்ற பெரிய நிறுவனங்களால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. ரெவ்லான், மேபெல்லைன், ஃபேசஸ் மற்றும் ஏவன் போன்ற பிராண்டுகள் பல தசாப்தங்களாக சந்தையில் நீடித்து இருக்கின்றன. அவற்றிற்கென ஒரு வாடிக்கையாளர் தளத்தையும் கொண்டுள்ளன.
இருப்பினும், அவற்றின் விலைகள் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தினேஷின் கூற்றுப்படி, ஒரு தயாரிப்பு மலிவு விலையில் வாடிக்கையாளர்கள் அணுகக்கூடியதாக இருக்கவேண்டும் எனில், அதன் மூலஆதாரங்கள் உள்ளூரிலிருந்தே சோர்ஸ் செய்ய வேண்டும்.
"செலவுகளைக் குறைக்க, நாங்களே பேக்கேஜிங் யூனிட்டை அமைத்தோம். வழக்கமாக, பிராண்டுகள் உள்ளூரில் பேக்கேஜிங்கை அவுட்சோர்ஸ் செய்கின்றன அல்லது பேக்கேஜிங்கை இறக்குமதி செய்கின்றன. இதுவே தயாரிப்பின் விலையை அதிகரிக்க செய்யும் முக்கிய காரணியாகும். இதை நாங்கள் மாற்றியமைத்தோம். எனவே, எங்கள் விலை எப்போதும் போட்டித்தன்மையுடன் இருக்கும். தரத்தில் சமரசம் செய்யாமல், ரூ.295க்கும் அதிகமான தயாரிப்புகள் மிகக்குறைந்த அளவிலே உள்ளன."
பெரிய அவுட்லெட்களில் விற்பனையை தொடங்குவது தயாரிப்புகளின் விற்பனை அளவை அதிகரிக்க உதவும் அதேவேளை, அவை செலவுகளையும் குவிக்கிறது. இன்சைட் காஸ்மெடிக்ஸ் தனித்த பெரிய அவுட்லெட்களில் அதன் இருப்பை வைத்திருப்பதை ஒருபோதும் நினைத்ததில்லை. மாறாக, மக்கள் அணுகக்கூடிய வகையில் பல பிராண்ட்கள் ஒரே இடத்தில் இருக்கும் அவுட்லெட்களில் இருப்பதையே அதிகமாக முன்னுரிமை கொடுக்கிறோம், என்றார்.
தினேஷ் குறிப்பிடும் முக்கிய சவால்களில் ஒன்று சீனாவின் போட்டி, உலகளாவிய சந்தைகளில் உற்பத்தி செய்து போட்டியிடுவதற்கான முழுமையான திறனை கொண்டுள்ளது. மற்றொரு முக்கியமான போட்டியாக, சந்தையில் பல பிராண்டுகள் அதன் தயாரிப்புகளை அவர்களே உற்பத்தி செய்யாமல், பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து, அவற்றை அவற்றின் லேபிளின் கீழ் மீண்டும் விற்பனை செய்கின்றன, என்றார்.
இன்சைட் காஸ்மெடிக்ஸின் வளர்ச்சி உத்தி பல தூண்களை அடிப்படையாகக் கொண்டது. ஐ ஷேடோ வரிசையில் மேலும் ஷேடுகளைச் சேர்க்கவும், ஹைலைட்டர்களில் புதிய ஷேடுகளை அறிமுகப்படுத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
"எங்கள் தயாரிப்பு போர்ட்ஃபோலியோ விநியோகத்தை விரிவுபடுத்துகிறோம். மேலும் டிஜிட்டல் மற்றும் மின்வணிக விற்பனையின் புதிய யுக சேனல்களை ஆராய்ந்து வருகிறோம். D2C வணிக மாதிரியை முழுமையாகப் பயன்படுத்துவதையும் ஆராய்ந்து வருகிறோம்," என்ற தினேஷ், வரும் ஆண்டில் அதன் உற்பத்தி திறனை 40 சதவீதம் விரிவுபடுத்தவும் இலக்கு வைத்துள்ளதாக தெரிவித்தார்.
தமிழில்: ஜெயஸ்ரீ
பதின்ம வயது பெண்களுக்கான காஸ்மெட்டிக்ஸ் ப்ராண்ட்: மாதம் 1.2 லட்சம் வருவாய் ஈட்டும் 13 வயது சிறுமி!