
ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸுக்கு கோடிங் தெரியாது, அவரிடம் எந்தவொரு தொழில்நுட்பப் பட்டமும் இருந்ததில்லை. இருப்பினும், உலகின் மிகச் சிறந்ததும் மதிப்புமிக்கதுமான நிறுவனங்களில் ஒன்றை அவரால் கட்டமைக்க முடிந்தது.
ஒரு தொழில்நுட்ப மேதை அல்ல; பொறுமையற்றவர், அவருடன் பணிபுரிவது கடினம், அத்துடன் அவரிடம் பல குறைகளும் இருந்தன. ஆனால், எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருந்ததால் ஸ்டீவ் ஜாப்ஸ் உலகளவில் கொண்டாடப்படவில்லை.
தொடர்ச்சியான கற்றல், தோல்விகளை எதிர்கொள்ளும் துணிச்சல் மற்றும் தன்னைத் தானே சவாலுக்கு உட்படுத்தி முன்னோக்கி ஓடியதுதான் ஸ்டீவ் ஜாப்ஸை ஒரு சகாப்தமாக மாற்றியது.
ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கை நமக்குக் கற்றுத் தரும் 15 பாடங்கள் வெறும் வணிகம் சார்ந்தவை மட்டுமல்ல; அவை நமது மனநிலை, மனவலிமை மற்றும் சுய வளர்ச்சிக்கான மிக முக்கிய வழிகாட்டிகள்.
1. ஒரே சிந்தனைப் பாதையில் தேங்கி நிற்காதீர்கள்
நமது எண்ணங்கள் மூளையில் ஒரு குறிப்பிட்ட வடிவத்தை அல்லது பாதையை உருவாக்கி விடுகின்றன. பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்நாள் முழுவதையும் அந்தப் பாதையிலேயே கழித்துவிடுகிறார்கள். பழைய எண்ணங்களையே மீண்டும் மீண்டும் பிரதிபலிக்கிறார்கள். ஆனால் ஜாப்ஸ், உங்களது சொந்த யூகங்கள் உட்பட எல்லாவற்றையும் கேள்வி கேட்க வலியுறுத்தினார்.
புதிய கண்டுபிடிப்புகளுக்கு மன சுதந்திரமும், வழக்கமான சிந்தனைப் படிமங்களைத் தாண்டிப் பார்க்கும் திறனும் அவசியம் என்று அவர் நம்பினார்.
பாடம்: உங்கள் இயல்பான சிந்தனைகளுக்கு அடிக்கடி சவால் விடுங்கள். ஒரு நம்பிக்கை உங்களுக்கு மிகவும் பழகியதாக இருந்தால், அதை மறுபரிசீலனை செய்யுங்கள்.
2. காலத்தின் மதிப்பை உணர்ந்து தெளிவடைவீர்
வாழ்க்கையின் எல்லையற்ற தன்மையைப் பற்றி ஸ்டீவ் ஜாப்ஸ் அடிக்கடி சிந்திப்பார். வாழ்க்கை ஒருநாள் முடிவுக்கு வரக்கூடியது என்பதை உணர்வது, பயம் மற்றும் தயக்கங்களைக் கடந்து செல்ல அவருக்கு உதவியது. எது உண்மையிலேயே முக்கியமோ அதில் மட்டும் கவனம் செலுத்தவும், தேவையற்ற விஷயங்களில் ஆற்றலை வீணடிக்காமல் இருக்கவும் இது ஒரு நினைவூட்டலாக இருந்தது.
பாடம்:
‘இன்றுதான் என் வாழ்வின் கடைசி நாள் என்றால், நான் செய்ய நினைக்கும் காரியத்தை இப்படியே செய்வேனா?’ என்று உங்களைக் கேளுங்கள்.
3. தேவைகளை முன்கூட்டியே கணியுங்கள்; பின்தொடராதீர்கள்
வாடிக்கையாளர்களுக்கு ஒரு பொருள் கையில் கிடைக்கும் வரை, தங்களுக்கு என்ன வேண்டும் என்பதே பல நேரங்களில் தெரிவதில்லை. ஜாப்ஸ் யாருடைய அனுமதிக்காகவும் காத்திருக்கவில்லை. மக்களின் விருப்பங்களை முன்கூட்டியே கணித்து, அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு வடிவம் கொடுத்தார். அந்த மனநிலைதான் ஐபோன் மற்றும் ஐபேட் போன்ற புரட்சிகரமான தயாரிப்புகளை உருவாக்கியது.
பாடம்: உங்கள் வாடிக்கையாளர்கள் அல்லது உங்கள் துறைக்கு ஒரு படி முன்னதாகச் சிந்திக்கப் பழகுங்கள்.
4. நோக்கத்துடன் தொடங்குங்கள்... பணத்துக்காக அல்ல!
வெறும் பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துக்காக எந்தவொரு செயலையும் தொடங்க வேண்டாம் என்று ஆப்பிள் நிறுவனர் எச்சரித்துள்ளார். அவரைப் பொறுத்தவரை, நீங்கள் ஆழமாக நம்பும் ஒரு பொருளை உருவாக்குவதே முக்கியம். உங்களது நோக்கம் வலுவானதாக இருக்கும்போது, அதன் மூலம் கிடைக்கும் வெற்றியும் நிலையானதாக இருக்கும்.
பாடம்:
உங்களை யாரும் கவனிக்கவில்லை என்றாலும், இந்த வேலையை நீங்கள் இதே அர்ப்பணிப்போடு செய்வீர்களா என்று கேளுங்கள்.

5. உங்கள் ஆர்வமே வேலையை வழிநடத்தட்டும்
ஐபாட் என்பது வெறும் சந்தைக்காக உருவாக்கப்பட்ட தயாரிப்பு அல்ல. அது அவரைப் போன்ற இசைப் பிரியர்களுக்காக உருவாக்கப்பட்டது. உங்களுக்காக அல்லது நீங்கள் நேசிக்கும் ஒருவருக்காக ஒரு பொருளை உருவாக்கும்போது, இயற்கையாகவே தரம் உயரும் என்று ஸ்டீவ் நம்பினார். உங்கள் உள்ளார்ந்த ஆர்வம் உங்களைச் சாதாரண எல்லைகளைத் தாண்டி உழைக்கத் தூண்டும்.
பாடம்: உங்கள் சொந்தத் தயாரிப்பை நீங்கள் பயன்படுத்த மாட்டீர்கள் என்றால், மற்றவர்கள் அதை விரும்புவார்கள் என்று எதிர்பார்க்காதீர்கள்.
6. அனைத்தையும் எளிமையாக்குங்கள்
எல்லாவற்றையும் அதன் அத்தியாவசியத் தேவைகளுக்கு ஏற்பச் சுருக்குவதில் ஜாப்ஸ் வல்லவர். தேவையற்றவற்றை நீக்குவதன் மூலமே தெளிவு பிறக்கும் என்று அவர் நம்பினார்.
மிகச் சிறந்த யோசனைகளுக்கு வழிவகை செய்ய, நல்ல யோசனைகளுக்கு ‘இல்லை’ என்று சொல்வது அவசியமாகிறது.
பாடம்: அதிகபட்சமாக இரண்டு அல்லது மூன்று முன்னுரிமைகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். எளிமைதான் துல்லியமான செயல்பாட்டின் ரகசியம்.
7. மற்றவர்கள் நம்பும் வரை நீங்கள் நம்புங்கள்
ஜாப்ஸின் புகழ்பெற்ற ‘உண்மைச் சிதைவு மண்டலம்’ என்பது அவரது அசாத்திய ஈர்ப்புத்திறன் மற்றும் தீவிரமான ஈடுபாட்டின் கலவையாகும். சாத்தியமற்ற காரியங்களையும் சாத்தியமாக்க முடியும் என்று மக்களை நம்ப வைப்பதில் அவர் தேர்ந்தவர். ஒரு தெளிவான பார்வையின் முன்னால், யதார்த்தத்தை நமக்கு சாதகமாக வளைக்க முடியும் என்று அவர் கருதினார்.
பாடம்: உங்கள் நம்பிக்கை அசைக்க முடியாததாக இருக்கும்போது, மற்றவர்களும் உங்களோடு இணைந்து பயணிக்கத் தொடங்குவார்கள்.
8. தயாரிப்பு பேசட்டும்... விளம்பரம் அல்ல!
பல நிறுவனங்கள் வளர வளர, தரத்தை விட விற்பனைக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றன. ஜாப்ஸ் அதை கடுமையாக எதிர்த்தார். வடிவமைப்பு மற்றும் செயல்பாடுகள் சந்தைப்படுத்தல் உத்திகளை விட முக்கியம் என்ற ‘தயாரிப்பு - முதலில்’ என்ற சிந்தனையை அவர் கொண்டிருந்தார்.
பாடம்: உங்கள் தயாரிப்பு அசாதாரணமாக இல்லை என்றால், எந்தவொரு மார்க்கெட்டிங் உத்தியாலும் அதை உங்களால் காப்பாற்ற முடியாது.
9. யாரும் பார்க்காத இடத்திலும் தரத்தைக் காட்டுங்கள்
ஒரு அலமாரியின் பின்புறம் யாருக்கும் தெரியப் போவதில்லை என்றாலும், அங்கேயும் கைவினைத் திறன் துல்லியமாக இருக்க வேண்டும் என்று ஜாப்ஸ் கருதினார். கண்ணுக்குத் தெரியாத இந்தத் தரம் பெருமையின் அடையாளம், சுய விளம்பரம் அல்ல. அவரது பார்வை இதுதான்...
தரம் என்பது ஒரு வியூகம் அல்ல; அது ஒரு வாழ்க்கை முறை.
பாடம்: பாராட்டு வெளிச்சம் உங்கள் மீது விழாதபோதும் சிறந்த வேலையைச் செய்யுங்கள்.
10. சொல்ல வேண்டியதை நேரடியாகச் சொல்லுங்கள்
ஜாப்ஸ் தனது இரக்கமற்ற நேர்மைக்காக அறியப்பட்டவர். அவர் போலியான மரியாதைக்குப் பின்னால் மறைந்து கொள்ளவில்லை. அவரது நேரடிப் பேச்சு சில நேரங்களில் காயப்படுத்தினாலும், அது தெளிவையும், வேகத்தையும் தந்ததுடன் தரத்தையும் உயர்த்தியது.
பாடம்: மற்றவர்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால் உண்மையைச் சொல்லுங்கள். அன்பும் நேர்மையும் வெவ்வேறானவை அல்ல.
11. சிறந்த யோசனையைக் கண்டறிய விவாதியுங்கள்
அவர் ஆரோக்கியமான விவாதங்களை ஊக்குவித்தார். சில நேரங்களில், குழுவினரிடமிருந்து சிறந்த யோசனைகளை வெளிக்கொணர, ஜாப்ஸ் வேண்டுமென்றே மாற்று நிலைப்பாட்டை எடுத்து விவாதிப்பார். அவரது சிந்தனை இதுதான்:
கருத்து வேறுபாடு என்பது ஒரு கருவி... அது அச்சுறுத்தல் அல்ல!
பாடம்: எல்லாரும் மிக விரைவாக ஒரு விஷயத்தை ஒப்புக்கொள்கிறார்கள் என்றால், நீங்கள் இன்னும் ஆழமாகச் சிந்திக்கவில்லை என்று அர்த்தம்.

12. உங்களையே முந்திக்கொள்ளத் தயங்காதீர்கள்
உங்களது பழைய யோசனைகளை நீங்களே உடைத்து அடுத்த கட்டத்திற்குச் செல்லாவிட்டால், வேறு யாராவது அதைச் செய்வார்கள் என்று ஜாப்ஸ் நம்பினார். அவர் ஒருபோதும் கடந்த கால வெற்றிகளோடு ஒட்டிக் கொள்ளவில்லை. தொடர்ந்து தன்னை மறுவடிவமைப்பு செய்து கொண்டே இருந்தார். பரிணாம வளர்ச்சிக்கு அது கட்டாயம் தேவை.
பாடம்: உங்களது பழைய சாதனைகளைத் தாண்டி வளரத் தயாராக இருங்கள். பழையவற்றைப் பிடித்துக் கொண்டிருப்பது வளர்ச்சியை முடக்கும்.
13. அமைதிக்கான இடத்தை உருவாக்குங்கள்
ஜாப்ஸ் தனது மனதின் வேகத்தைக் குறைக்க தியானம் மேற்கொண்டார். அந்த அமைதியில் அவருக்குத் தெளிவும், கவனமும், புதிய யோசனைகளும் கிடைத்தன. இது வெறும் மன அமைதிக்காக மட்டுமல்ல, அவரது அசாத்திய செயல்திறனுக்கான ஒரு ரகசிய ஆயுதமாகவும் இருந்தது.
பாடம்: உங்களுக்கான அமைதியான நேரத்தைத் திட்டமிடுங்கள். தெளிவாகச் சிந்திக்க மூளைக்கு அமைதி தேவை.
14. குறுஞ்செய்திகளைத் தாண்டி நேரடியாகப் பேசுங்கள்
டிஜிட்டல் யுகத்திலும் ஜாப்ஸ் நேரடி உரையாடல்களையே மதித்தார். மின்னஞ்சல் அல்லது செயலிகள் மூலம் பேசிக்கொள்வதை விட, நேருக்கு நேர் பேசும் தற்செயலான உரையாடல்கள்தான் புதிய கண்டுபிடிப்புகளுக்கான பொறிமுறையை உருவாக்குகின்றன என்று அவர் நம்பினார்.
பாடம்: ஏதேனும் ஒரு காரியத்தில் தொய்வு ஏற்பட்டால், திரையை விட்டு விலகி நேரடியாகப் பேசித் தீர்வு காணுங்கள்.
15. பசித்திரு... முட்டாளாயிரு..!
தனது புகழ்பெற்ற ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக உரையில், மாணவர்களுக்கு இந்த மந்திரத்தை ஜாப்ஸ் விட்டுச் சென்றார்.
‘பசியோடு இருங்கள்’ என்றால் எப்போதும் புதிய இலக்குகளை நோக்கி ஓடுங்கள் என்று அர்த்தம். ‘முட்டாளாக இருங்கள்’ என்றால் ஒரு தொடக்கப் புள்ளியைப் போல எதையும் கற்றுக்கொள்ளும் ஆர்வத்துடனும், புதிய வழிகளைச் சோதிக்கும் துணிச்சலுடனும் இருங்கள் என்று அர்த்தம்.
பாடம்: கற்பதையும், உருவாக்குவதையும், கேள்வி கேட்பதையும் நிறுத்தாதீர்கள். வசதியான வாழ்க்கை ஆக்கப்பூர்வமான சிந்தனையைக் கொன்றுவிடும்.
ஸ்டீவ் ஜாப்ஸின் இந்தப் பாடங்கள் வெறும் தொழில்நுட்பத் துறையில் இருப்பவர்களுக்கானது மட்டுமல்ல; துணிச்சலாக வாழவும், புத்திசாலித்தனமாகச் சிந்திக்கவும், அர்த்தமுள்ள ஒரு மாற்றத்தை உருவாக்கவும் நினைக்கும் ஒவ்வொருவருக்குமானது.
இவற்றில் ஏதேனும் ஒரு கருத்தைத் தேர்ந்தெடுத்து உங்கள் வாழ்க்கையில் இன்று முதல் செயல்படுத்தத் தொடங்குங்கள். எப்போதும் தேடலோடும் துணிச்சலோடும் முன்னோக்கிப் பயணிக்க வாழ்த்துகள்.
மூலம்: ஆஸ்மா கான்
Edited by Induja Raghunathan