TCS – Anthropic கூட்டணி: நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டை வேகப்படுத்த புதிய முயற்சி!

04:22 PM Jun 12, 2026 | muthu kumar

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டிசிஎஸ், செயற்கை நுண்ணறிவுத் துறையில் முன்னணி நிறுவனமான Anthropic உடன் உலகளாவிய கூட்டாண்மையை அறிவித்துள்ளது. நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை விரிவாகவும் பாதுகாப்பாகவும் பயன்படுத்த உதவும் நோக்கில் இந்த ஒத்துழைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டாண்மையின் ஒரு பகுதியாக, ஆந்த்ரோபிக்-இன் Claude AI மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டு தொழில்துறை சார்ந்த தீர்வுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு நிபுணத்துவத்தை உருவாக்குவதற்காக டிசிஎஸ் தனிப்பட்ட வணிகப் பிரிவை அமைக்க உள்ளது. மேலும், பொறியியல், நிதி, சட்டம், சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிபுரியும் 50,000 டிசிஎஸ் ஊழியர்களுக்கு கிளாட் ஏஐ பயன்பாட்டை வழங்க நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இரு நிறுவனங்களும் இணைந்து நிதிச் சேவைகள், பொதுச் சேவைகள், உயிரியல் அறிவியல், சுகாதாரம், விமானப் போக்குவரத்து, தொலைத்தொடர்பு மற்றும் மருத்துவ தொழில்நுட்பம் போன்ற கடுமையான ஒழுங்குமுறை விதிமுறைகள் கொண்ட துறைகளுக்கான AI தீர்வுகளை உருவாக்க உள்ளன. மேலும், துறைக்கேற்ப பணிச்சூழல் மேம்பாடு, தொழில்நுட்ப நவீனமயமாக்கல் மற்றும் வாடிக்கையாளர் அனுபவ மாற்றம் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தப்படும்.

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான டேரியோ அமோடேய், இந்த கூட்டாண்மை இந்தியாவிற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்துவதாக தெரிவித்தார். இந்தியா தற்போது ஆந்த்ரோபிக்கின் இரண்டாவது பெரிய சந்தையாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் நிர்வாக இயக்குநருமான கே.கீர்த்திவாசன், நம்பகத்தன்மை, நிலைத்தன்மை மற்றும் ஒழுங்குமுறை கட்டுப்பாடுகள் முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் வாடிக்கையாளர்கள் AI பயன்பாட்டை விரைவாக செயல்பாட்டுக்கு கொண்டு வர இந்த கூட்டாண்மை உதவும் என்றார்.

இந்த ஒத்துழைப்பு டிசிஎஸ் நிறுவனத்தின் பல்வேறு தயாரிப்புகள் மற்றும் தளங்களுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. இங்கிலாந்தில் 2.2 கோடிக்கும் அதிகமான காப்பீடு மற்றும் ஓய்வூதிய வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கும் டிசிஎஸின் டிலிஜென்ட்டா நிறுவனம், Claude AI-யை பயன்படுத்தி வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. வங்கி, நிதி மற்றும் காப்பீட்டு துறைகளுக்கான தயாரிப்புகளில் Claude Code பயன்படுத்தப்பட்டு மென்பொருள் உருவாக்கம் மற்றும் தகவல் தொழில்நுட்ப செயல்பாடுகளில் உற்பத்தித்திறன் அதிகரிக்கப்படும்.

மேலும், ஆண்டுதோறும் இந்தியாவின் 1,500 நகரங்களில் 7.5 கோடிக்கும் அதிகமான தேர்வுகளை நடத்தும் டிசிஎஸ் iON தளம், Claude AI மாதிரிகளை அடிப்படையாகக் கொண்ட பயிற்சி மற்றும் சான்றிதழ் திட்டங்களை வழங்கி, எதிர்காலத்திற்குத் தயாரான AI திறன் கொண்ட பணியாளர்களை உருவாக்க உதவும். அதேசமயம், காப்பீட்டு கோரிக்கை மதிப்பீடு, கடன் ஆலோசனை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான திறன்கள் மற்றும் மென்பொருள் இணைப்புகளை உருவாக்குவதன் மூலம் Claude Code சூழலமைப்பை டிசிஎஸ் மேலும் வலுப்படுத்த உள்ளது. இந்த கூட்டாண்மை, நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டை விரைவுபடுத்துவதோடு, இந்தியாவில் AI திறன் மேம்பாட்டிற்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும், என எதிர்பார்க்கப்படுகிறது.