
இந்தியா மீது அமெரிக்கா விதித்த 50% இறக்குமதி வரி (tariff) ஆகஸ்ட் 27 புதன் கிழமை முதல் அமலுக்கு வந்தது. இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் சுமார் 48.2 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பொருட்கள் மீது இந்த புதிய வரிக்கட்டணங்கள் பாயும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இந்த புதிய வரிவிதிப்பினால் ஆயத்த ஆடை வர்த்தகம் ரூ.3.000 கோடி அளவுக்குப் பாதிக்கும் என்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது. இதனையடுத்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்துள்ளார்.
இந்தியாவின் முக்கியமான ஏற்றுமதியை நம்பியிருக்கும் தொழில்துறையில் வருவாய் இழப்பு ஏற்பட்டு இதனால் வேலைகள் பறிபோகும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வந்திருக்கின்றனர்.

எஃகு, அலுமினியம், தாமிரம், ஆயத்த ஆடை உற்பத்தித் துறைகள் டிரம்பின் இந்த வரிவிதிப்பினால் கடும் பாதிப்புக்குள்ளாகவிருக்கின்றன. தமிழ்நாட்டின் ஆடை உற்பத்திச் சங்கிலியில் திருப்பூர் ஆயத்த ஆடை தயாரிப்பகங்கள் முக்கியமான பங்கு வகிக்கின்றன.
ஆண்டொன்றுக்கு திருப்பூரிலிருந்து மட்டும் ரூ.12,000 கோடிக்கான ஆடைகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் கே.எம். சுப்பிரமணியன் இது தொடர்பாகக் கூறும்போது,
திருப்பூரின் வருடாந்திர ஜவுளி உற்பத்தி - ரூ.70,000 கோடி. ஒட்டுமொத்த உற்பத்தியில் ஏற்றுமதியின் பங்கு - ரூ.40,000 கோடி. ஏற்றுமதியில் அமெரிக்க சந்தையின் பங்கு (30%) அதாவது, ரூ.12,000 கோடி மதிப்புள்ளதாகும்.
திருப்பூர் ஜவுளி உற்பத்தி பொருட்களின் பெரிய இறக்குமதியாளராக அமெரிக்கா உள்ளது என்கிறார் சுப்ரமணியன்.
"திருப்பூரிலிருந்து பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டாலும் அமெரிக்கா தான் மிகப்பெரிய சந்தையாக உள்ளது," என்கிறார் சுப்பிரமணியன்.
அமெரிக்கா அறிவித்த 50% வரி காரணமாகக் கடந்த 20 நாட்களாக ஏற்றுமதிக்கான ஆடைகளை நிறுத்தி வைத்திருந்ததாக சுப்பிரமணியன் கூறினார். இந்த வரிவிதிப்பினால் இன்னும் 4 மாதங்களுக்கு ஆயத்த ஆடை ஏற்றுமதியில் தேக்க நிலையே நீடிக்கும், என்று கூறப்படுகிறது.

ரூ.3,000 கோடிக்கு வர்த்தக பாதிப்பு ஏற்படும் என்கிறார் சுப்பிரமணியன். ஆனாலும், இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான ஆடை ஏற்றுமதிக்கு வரி இல்லை என்பதால் இந்த இழப்பை ஈடுகட்ட முடியும் என்கிறார் அவர்.
இருப்பினும், மத்திய அரசு சில சலுகைகளை வழங்க அவர் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக,
”டியூட்டி டிராபேக் சதவீதத்தை அதிகரிக்கவும் தொழில் கடனுக்கான வட்டி மானியத்தை உயர்த்தவும் கொரானா காலக்கட்டத்தில் வழங்கியது போல் அவசரகாலக் கடனை ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கவும் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் மத்திய அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளது.”
இதனிடையே, முதலமைச்சர் ஸ்டாலினும் தன் எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்காக தனது பதிவில்,
“அமெரிக்க வரிவிதிப்பு தமிழக ஏற்றுமதித் தொழிலை கடுமையாகத் தாக்கியுள்ளது. குறிப்பாக திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு பாதிப்பு அதிகம். ரூ.3,000 கோடி வரை பாதிப்பு ஏற்படும். இதனால் ஆயிரக்கணக்கானோர் வேலையை இழக்க நேரிடும். எனவே, மத்திய அரசு உடனடி நிவாரணம் அறிவிக்க வேண்டும். தொழிற்துறையையும், தொழிலாளர்களையும் காப்பாற்ற அமைப்புசார் சீர்த்திருத்தங்களை மேற்கொள்ளவும் மத்திய அரசுக்குக் கோரிக்கை வைக்கிறேன்,” என்று பதிவிட்டுள்ளார்.