ஜன ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியில் பங்குகளை வாங்க TVS VENU நிறுவனம் ஒப்பந்தம்!

05:48 PM May 19, 2026 | muthu kumar

டிவிஎஸ் நிறுவனத்தின் தலைவர் சுதர்ஷன் வேணு தலைமையிலான TVS VENU, ’Jana Small Finance Bank’-ல் சிறிய அளவில் பங்குகளை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. முதன்மை வாரண்ட் வெளியீடும், இரண்டாம் நிலை பங்கு கொள்முதலும் இணைந்த இந்த ஒப்பந்தத்தின் மூலம், முழுமையாக நீர்த்தளிக்கப்பட்ட அடிப்படையில் அதிகபட்சம் 9.9 சதவீத பங்குகளை TVS VENU பெறவுள்ளது. இதில் 4.9 சதவீத பங்கு TVS Motor Company நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும். இந்த ஒப்பந்தம் தேவையான ஒழுங்குமுறை அனுமதிகளுக்கு உட்பட்டது.

இந்திய நிதிச் சேவை துறையில் நீண்டகால அனுபவம் கொண்ட TVS VENU, தனது TVS Credit Services நிறுவனத்தின் மூலம் நாடு முழுவதும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு நுகர்வோர் மற்றும் சில்லறை கடன்களை வழங்கி வருகிறது. மேலும், PGIM India Asset Management நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை வாங்குவதற்கான உறுதியான ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டுள்ளது. ஜனா வங்கியில் செய்யப்படும் இந்த முதலீடு, வங்கியின் நீண்டகால வளர்ச்சிக்காக பல்வேறு துறைகளில் இணைந்து செயல்பட உதவும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jana Small Finance Bank வங்கி, மக்கள் அடிப்படையிலான சில்லறை மற்றும் MSME வங்கிச் சேவைகளில் வலுவான இருப்பைக் கொண்டுள்ளது. பாதுகாப்பான கடன் வழங்கலில் வேகமான வளர்ச்சியையும், நாடு முழுவதும் விரிந்த கிளை வலையமைப்பையும் கொண்டுள்ளது. 2026 மார்ச் 31 நிலவரப்படி, 1.2 கோடியே அதிகமான வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கி வரும் இந்த வங்கிக்கு, 23 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் 822 கிளைகள் உள்ளன. மேலும், ரூ.35,000 கோடியை கடந்த முன்பணம் மற்றும் வைப்புத் தொகைகளுடன், இந்தியாவின் கடன், சேமிப்பு மற்றும் முதலீட்டு வளர்ச்சியில் நீண்டகால பங்கேற்புக்கான வலுவான தளமாக வங்கி திகழ்கிறது.

இதுகுறித்து சுதர்சன் வேணு கூறுகையில்,

“இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கிய இயக்க சக்தியாக நிதிச் சேவை துறையின் விரிவாக்கம் இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். நாடு முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட சேவை மையங்கள் வழியாக 4.4 கோடி வாடிக்கையாளர்களுக்கு நிதிச் சேவைகளை வழங்கி வருகிறோம். இந்தியாவின் வளர்ந்து வரும் டிஜிட்டல் நிதி சூழலுக்கு சேவை செய்யும் உயர்தர நிறுவனங்களுக்கு ஆதரவு அளிப்பதே எங்களின் நீண்டகால நோக்கம். ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, இந்தியாவின் கடன், சேமிப்பு மற்றும் முதலீட்டு வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் வலுவான வங்கி அமைப்பாக உருவெடுத்துள்ளது,” என்றார்.

மேலும், TPG Capital நிறுவனத்திற்கும், ஜனா வங்கியின் நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்த அவர், எஸ் பி லோஹியா மற்றும் அவரது மகள் ஸ்ருதி லோஹியா ஆகியோர் புதிய முதலீட்டாளர்களாக இணைவதை வரவேற்றார். அத்துடன் Khaitan & Co நிறுவனத்தின் சட்ட ஆலோசனைகளுக்கும் நன்றியை தெரிவித்தார்.

தேவையான ஒழுங்குமுறை அனுமதிகள் மற்றும் வழக்கமான நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்ட பிறகு இந்த பரிவர்த்தனை நிறைவு பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.