
யூனிபைட் பேமெண்ட்ஸ் இன்டர்பேஸ் என்னும் UPI மூலம் 2025 ஆகஸ்ட் மாதத்தில் வரலாற்றில் முதன்முறையாக 20.01 பில்லியன் பணப் பரிவர்த்தனைகளை பதிவு செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. தேசிய பரிவர்த்தனை கழகம் (NPCI) வெளியிட்ட தற்காலிக தரவுகளின்படி, ஒரே மாதத்தில் ரூ.24.85 லட்சம் கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகள் UPI மூலம் நடந்தேறியுள்ளன.
கடந்த ஜூலை மாதத்துடன் ஒப்பிட்டால், பரிமாற்ற எண்ணிக்கை 2.8% அதிகரித்து 19.47 பில்லியனிலிருந்து 20.01 பில்லியனாக உயர்ந்தது. இருப்பினும், பரிமாற்ற மதிப்பு ரூ.25.08 லட்சம் கோடியில் இருந்து 0.9% குறைந்து ₹24.85 லட்சம் கோடியாக உள்ளதாாகக் கூறப்படுகிறது. ஜூன் மாதத்தில் 18.40 பில்லியன் பரிவர்த்தனைகள் ரூ.24.04 லட்சம் கோடி மதிப்பில் நடைபெற்றிருந்தன.
ஆகஸ்ட் 2024ஐ விட இந்த ஆகஸ்ட் 34% பரிமாற்ற எண்ணிக்கையில் மற்றும் 21% மதிப்பில் வளர்ச்சி காணப்பட்டது. தினசரி 645 மில்லியன் பரிவர்த்தனைகளில் ரூ.80,177 கோடி தொகை பரிமாற்றம் கண்டுள்ளது. ஒரு பரிவர்த்தனையின் சராசரி மதிப்பு ரூ.1,243 ஆகக் குறைந்துள்ளது (ஜூலையில் ரூ.1,420). இது குறைந்த தொகைப் பரிவர்த்தனைகளின் வேகமான வளர்ச்சியைக் காட்டுகிறது.

2024 செப்டம்பர் மாதத்தில் 500 மில்லியன் தினசரி பரிவர்த்தனை மைல்கல்லை தாண்டிய பிறகு UPI வளர்ச்சி மெல்லமடைந்தது. 2025 முதல் பாதியில் மொத்த பரிமாற்ற மதிப்பு (TPV) வளர்ச்சி, 2024 இரண்டாம் பாதியுடன் ஒப்பிட்டால் 40% மட்டுமே இருந்தது. 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில், UPI வளர்ச்சி 23% ஆக இருந்தது, இது கிரெடிட் கார்டுகளின் 21% வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது குறைந்த வித்தியாசம் மட்டுமே.
ஏப்ரல் முதல் ஜூலை வரை ஆன்லைன் மார்க்கெட்பிளேஸ் மூலம் UPI செலவுகள் 55.76% உயர்ந்துள்ளன. ஏப்ரலில் ரூ.5,170.52 கோடியாக இருந்த செலவுகள், ஜூலை மாதத்தில் ரூ.8,053.72 கோடியாக உயர்ந்துள்ளன.
கடன் வசூல் ஏஜென்சிகள் மற்றும் சில்லறை விற்பனைக் கடைகள் முக்கிய இடங்களை பிடித்தன. மளிகைக் கடைகளில் UPI பரிவர்த்தனை ஏப்ரலிலிருந்து ஜூலை வரை 8% வளர்ச்சியடைந்து ரூ.64,881.98 கோடியாக உயர்ந்தது.
NPCI 2024-25 நிதியாண்டில் தனது வருமானத்தையும் இலாபத்தையும் அதிகரித்துள்ளது. தற்காலிக கணக்கெடுப்பின்படி, நிறுவனத்தின் நடைமுறைச்செயல்பாட்டு வருமானம் 18.95% உயர்ந்து ரூ.3,270 கோடியாக இருந்தது (இது 2024ம் நிதியாண்டில் ரூ.2,749 கோடி). வரிப்பிடித்தத்திற்குப் பிந்தைய உபரி (Surplus after tax) 41.73% உயர்ந்து ரூ.1,552 கோடியாக உள்ளது (இது 2024-ல் ரூ.1,095 கோடி).
NPCI ஒரு இலாப நோக்கமில்லாத நிறுவனம் என்பதால், அதன் வருமானத்தை ‘உபரி’ (surplus) என குறிப்பிடுகிறது, 'இலாபம்' (profit) என்று குறிப்பிடப்படுவதில்லை.