
குறைந்த அளவிலான ஒப்பந்தங்கள் மற்றும் அதிக மதிப்பிலான பரிவர்த்தனைகள் இல்லாதது உள்ளிட்ட காரணங்களினால் இந்திய ஸ்டார்ட் அப் சூழலில், ஆண்டு அடிப்படையில் மே மாதம், வென்சர் கேபிடல் நிதி (Venture Capital) 55 சதவீதம் குறைந்துள்ளது. ரேபிடோ, 240 மில்லியன் டாலர் திரட்டியதே கடந்த மாதம் நிகழ்ந்த ஒரே அதிக மதிப்பிலான பரிவர்த்தனையாக இருந்தது.
2026 மே மாதத்திற்கான மொத்த நிதி, 76 ஒப்பந்தங்கள் வாயிலாக 651 மில்லியன் டாலராக இருந்தது. 2025 மே மாதம் திரட்டப்பட்ட 1450 மில்லியன் டாலர் நிதியில் இது பாதி தான், என யுவர்ஸ்டோரி ஆய்வு தெரிவிக்கிறது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஸ்டார்ட் அப்கள் 993 மில்லியன் டாலர் நிதி திரட்டி இருந்தன.

மே மாத போக்குகள்:
விசி முதலீடுகள் குறைந்திருப்பது ஸ்டார்ட் அப் சூழலின் சவால்களை உணர்த்துகிறது. 2025ம் ஆண்டு ஜனவரிக்கு பிறகு, இந்த ஆண்டு மே மாதம் இந்திய ஸ்டார்ட் அப் சூழலுக்கான இரண்டாவது மிக குறைந்த நிதி மாதமாக அமைந்துள்ளது.
2025 ஜூலை மாதம் 621 மில்லியன் டாலர் திரட்டப்பட்டதே மிகவும் குறைந்த நிதியாக அமைந்தது. ஒப்பந்த எண்ணிக்கைகளும் குறைந்துள்ளன. மேலும், மே மாதம், 100 மில்லியன் டாலருக்கு மேல் ஒரே ஒரு பரிவர்த்தனை தான் நிகழ்ந்தது. ரேபிடோ நிறுவனம் இதை திரட்டியது. ஸ்கேபியா ($63 மில்லியன்) மற்றும் ஸ்கைரூட் ($60 மில்லியன்) ஆகிய இரு நிறுவனங்கள் மட்டுமே 50 மில்லியன் டாலருக்கு மேல் நிதி திரட்டின.

இந்த போக்குகள் இந்திய ஸ்டார்ட் அப் சூழலுக்கு ஏற்றதாக அமையவில்லை. முதலீட்டாளர்கள் இப்போது ஏஐ நுட்பம் மீது கவனம் செலுத்துகின்றனர். எனினும், இந்தியாவில் இந்தத் துறையில் அதிக நிறுவனங்கள் இல்லை. மேலும், பரந்த பொருளாதார காரணிகளும் இந்திய ஸ்டார்ட் அப்களுக்கான நிதியை பாதித்துள்ளது.
2026 மே மாதத்தில், ஆரம்ப நிலை நிறுவனங்கள் அதிக நிதி திரட்டிய நிலையில், அடுத்ததாக பிந்தைய நிலை ஸ்டார்ட் அப்’கள் வருகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக இதே போன்ற போக்கு நிலவுகிறது.
மே மாதம் மொபிலிட்டி ஸ்டார்ட் அப்கள் அதிக நிதி திரட்டின. இதற்கு ரேபிடோ அதிக நிதி திரட்டியது முக்கியக் காரணம். அடுத்த நிலைகளில் நிதி நுட்பம் மற்றும் விண்வெளி நுட்ப ஸ்டார்ட் அப்கள் வருகின்றன.

நகரங்களைப் பொருத்தவரை, பெங்களூரு அதிக நிதியை ஈர்த்தது. தில்லி என்சிஆர் மற்றும் ஐதராபாத் அடுத்த இடங்களில் உள்ளன. மூன்றாவது இடத்தில் ஐதராபாத் இருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது. ஏனெனில், மும்பை தான் முதல் மூன்று இடங்களில் பொதுவாக இருக்கும்.
ஸ்கைரூட்டின் அதிக மதிப்பிலான நிதி திரட்டியதால் ஐதராபாத்தை முன்னிலை பெற வைத்தது. ஆண்டின் பாதியை தொட உள்ள நிலையில், விசி முதலீடு போக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இல்லை என கருதப்படுகிறது. இந்திய ஸ்டார்ட் அப் சூழல் பலவித சாவல்களை எதிர்கொண்டு வருகிறது. இது தொடரும் நிலை உள்ளது. ஆண்டின் இரண்டாம் பாதி சிறப்பாக அமையும், என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆங்கிலத்தில்: திம்மையா பூஜாரி, தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan