
மற்றவர்களால் திருட முடியாத ஒரு சொத்து என்றால், அது கல்வி மட்டும்தான், அதனால்தான் பொருளாதாரத்தில் பின்தங்கி இருப்பவர்கள், தாங்கள் முன்னேற ஒரு கருவியாக கல்வியை மட்டுமே நம்புகின்றனர்.
அப்படிக் கல்வியை ஒரு கருவியாக்கி, வானத்தை வசப்படுத்தும் தனது முயற்சியில் வென்றிருக்கிறார் டீக்கடைக்காரரின் மகளான யோகேஸ்வரி. விருதுநகர் அருகே அரசு பள்ளியில் படித்த இந்த மாணவி, 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பயிற்சியில் கலந்து கொண்டு, தனது முதல் முயற்சியிலேயே, தேசிய அளவில் நடத்தப்படும் கடினமான தேர்வான JEE தேர்வில் தேர்ச்சி பெற்று, ஐஐடி பாம்பே-வில் விண்வெளிப் பொறியியல் படிக்க இருக்கிறார்.
உயரம் குறைந்த மாற்றுத்திறனாளி மாணவியான யோகேஸ்வரி, தமிழ் வழியில் கல்வி கற்ற போதும், குறுகிய காலத்தில் கிடைத்த பயிற்சியை தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி, இந்த சாதனையைப் படைத்திருக்கிறார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனுடன் மாணவி யோகேஸ்வரி
ஐஐடி தேர்வில் தேர்ச்சி பெற்ற டீக்கடைக்காரர் மகள்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள படந்தல் பகுதியைச் சேர்ந்தவரான யோகேஸ்வரியின் தந்தை டீக்கடை ஒன்றில் வேலை பார்க்கிறார். அவரது தாயார் பட்டாசு ஆலை தொழிலாளி. பொருளாதார ரீதியாக பின் தங்கிய குடும்பம் என்றாலும், தங்களது இரு மகன்கள் மற்றும் ஒரு மகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்பதில் யோகேஸ்வரியின் பெற்றோர் தெளிவாக இருந்துள்ளனர்.
யோகேஸ்வரியின் இரண்டு சகோதரர்களும் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டனர். விருதுநகர் மாவட்டம் படந்தல் அருகேயுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில்தான் பிளஸ் டூ வரை யோகேஸ்வரி கல்வி பயின்றார்.
ஆரம்பத்தில் படிப்பில் சராசரி மாணவியாகத்தான் யோகேஸ்வரி இருந்துள்ளார். 7ம் வகுப்பு படிக்கும்போது, அவருக்கு விண்வெளிப் பொறியியல் மீது ஆர்வம் வந்துள்ளது. ஆனால், அந்தப் படிப்பை எப்படிப் படிக்க வேண்டும், எந்தக் கல்லூரியில் சேர வேண்டும், அதற்கு என்னென்ன நுழைவுத்தேர்வுகள் எழுத வேண்டும் என்பது போன்ற எந்தவித திட்டமும் அவருக்கு இருக்கவில்லை. இருப்பினும், தொடர்ந்து அவர் நன்றாக படிக்க முயற்சித்து வந்துள்ளார்.

நான் முதல்வனும், காபி வித் கலெக்டரும்!
12ம் வகுப்பு வந்தபிறகும்கூட, யோகேஸ்வரிக்கு JEE தேர்வு பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை. அந்தச் சூழ்நிலையில்தான், தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட, ‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு யோகேஸ்வரிக்கு கிடைத்துள்ளது. அப்போதுதான் ஐஐடி-யில் சேர்வதற்கு எந்த மாதிரியான தேர்வுகளை எழுத வேண்டும் என்ற தெளிவும் அவருக்குக் கிடைத்துள்ளது.
அதன் தொடர்ச்சியக, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனுடன் மாணவர்கள் கலந்துரையாடிய, ‘கலெக்டருடன் ஒரு காபி’ (Coffee with Collector) நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார் யோகேஸ்வரி. இதுவும் அவரது மேற்படிப்புக்கான மற்றொரு கதவைத் திறக்கும் வாய்ப்பாக மாறியது.
‘கொஞ்சம் கடினமாக உழைத்தால் நமது கனவுகளுக்குச் சிறகுகள் முளைக்கும்’ என்ற வித்தையைத் தெரிந்து கொண்டார் யோகேஸ்வரி. அவரது விடாமுயற்சியின் பலனாக, நான் முதல்வன் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சிறப்புப் பயிற்சிக்குத் தேர்வானார். பிளஸ் டூ தேர்வு முடிந்தபிறகு, ஈரோட்டில் நடைபெற்ற 40 நாள் பயிற்சிகளில் அவர் கலந்து கொண்டார்.

முதல் முயற்சியிலேயே வெற்றி
எந்தவித தனியார் பயிற்சி வகுப்புகளுக்கும் செல்லாமல், நான் முதல்வன் திட்டத்தின்கீழ் மட்டுமே படித்து, நாட்டின் மிகவும் கடினமான நுழைவுத்தேர்வுகளில் ஒன்றாகக் கருதப்படும், JEE (Advanced) தேர்வில் சிறந்த தரவரிசையை பெற்று மற்றவர்களை அசர வைத்துள்ளார் யோகேஸ்வரி. பலர் ஆண்டுக்கணக்கில் பயிற்சி மேற்கொண்டு தயாராகும் இந்த தேசிய அளவிலான கடினமான தேர்வை, குறுகிய காலப் பயிற்சியில் வென்று காட்டியுள்ளார்.
ஆரம்பத்தில், என்னைப் பயிற்சிக்காக வீட்டிலிருந்து வெளியே அனுப்ப என் பெற்றோர் தயங்கினார்கள். ஆனாலும் கல்வியின் முக்கியத்துவத்தை அவர்கள் அறிந்திருந்தபடியால், துணிந்து என்னை பயிற்சிக்காக ஈரோடுக்கு அனுப்பி வைத்தனர்.
“இதில் குறிப்பிடத்தக்க மற்றொரு முக்கிய அம்சம், தமிழ் வழியில் பள்ளிக் கல்வி பயின்ற யோகேஸ்வரி, ஈரோட்டில் தரப்பட்ட பயிற்சியில் ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக் கொண்டு, தேர்வை எதிர்கொண்டதுதான். அதுவும் தனது முதல் முயற்சியிலேயே இந்தத் தேர்வில் அவர் வெற்றியும் பெற்றுள்ளார். இது அவரது அபாரக் கற்றல் திறனுக்கான சான்றாகவே பார்க்கப்படுகிறது.“
சாதனை
உயரம் குறைந்தவராக வளர்ச்சியில் மாற்றுத்திறனாளியாகக் கருதப்படும் யோகேஸ்வரி, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் (non-creamy layer of the Other Backward Classes community) மாற்றுத்திறனாளிகளுக்கானப் பிரிவில் 75வது இடத்தை பெற்றுச் சாதனைப் படைத்துள்ளார். இந்தச் சாதனைக்காக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், யோகேஸ்வரியை நேரில் அழைத்துப் பாராட்டியதோடு, தனது விருப்ப நிதி ஒதுக்கீட்டின் கீழ், அவருக்கு ரூ.5,000 நிதியுதவியும் வழங்கியுள்ளார்.
ஐஐடி பாம்பேயில் யோகேஸ்வரியின் கல்விச் செலவுகளுக்கு, தமிழ்நாடு அரசு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியையும், மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், யோகேஸ்வரியிடம் தெரிவித்துள்ளார்.
“நான் முதல்வன் திட்டம் ஏழை மாணவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். இந்தத் திட்டத்தை செயல்படுத்திய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மிக்க நன்றி. என்னைப் போன்ற ஏழைக் குழந்தைகளுக்கு இது ரொம்பவே உதவியாக உள்ளது. இந்தத் திட்டத்தில் என்னைப் பங்கேற்கச் சொன்ன விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது உயர்கல்விக்கான அனைத்து செலவையும் அரசே பார்த்துக் கொள்ளும் எனக் கூறியிருக்கிறார்கள். அதற்கும் மிக்க நன்றி,” என மகிழ்ச்சியுடன் கூறுகிறார் யோகேஸ்வரி.
வானத்தை எட்டிப் பிடிக்கும் தனது கனவில் பாதி தூரம் வந்து விட்ட யோகேஸ்வரி, விண்வெளிப் பொறியியல் துறையில் பட்டம் பெற்ற பிறகு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் சேர விரும்புவதாக விருப்பம் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்திலோ, உடல்நலக் குறைபாடுகளோ யாருடைய வெற்றிக்கும் என்றுமே தடைகல்லாக மாறமுடியாது. கல்வியின் பலனால் நிச்சயம் ஒருநாள் அவர்களுக்கு வானம் வசப்படும்! இதற்கு யோகேஸ்வரி போன்றவர்கள் வழிகாட்டிகள் என்பதில் சந்தேகமேயில்லை.
'ஐஐடி மெட்ராசில் சேரும் முதல் பழங்குடியின மாணவி' - இறந்த தந்தையின் கனவை நிறைவேற்றிய ராஜேஸ்வரி!