
இன்றைய போர்ச்சூழல் பதற்றம் காரணமாக உலகம் முழுவதும் எரிசக்தி பற்றாக்குறை குறித்து பேசப்படும் நிலையில், உத்தரப் பிரதேசத்தின் ஹர்தோய் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் தொழில் முனைவோர் ஒருவர் தினமும் 2.4 டன் அளவில் பயோகேஸ் (CBG) உற்பத்தி செய்யும் திட்டத்தை உருவாக்கியுள்ளார்.
29 வயதான ஆதி உபேந்திர திவாரி, இங்கிலாந்தில் MBA பட்டம் பெற்றவர். இவர் ஹர்தோய் அருகிலுள்ள பைலமாவ் கிராமத்தில் இந்த பயோகேஸ் ஆலையை அமைத்துள்ளார். இந்த ஆலை குறித்து மாவட்ட தொழில் துணை ஆணையர் ஹர்ஷ் பிரதாப் சிங் கூறுகையில்,
“இந்த ஆலை மூலம் தயாரிக்கப்படும் வாயு, CNGக்கு மாற்றாக பயன்படுத்தப்படுகிறது. மேலும், இது PNG வடிவில் வீட்டு தேவைகளுக்கும் பயன்படும்,” என்றார்.

மாட்டுச் சாணம், கரும்பு 'ப்ரெஸ் மட்' (press mud) மற்றும் விவசாயக் கழிவுகள் போன்றவற்றைப் பயன்படுத்தி இந்த வாயு தயாரிக்கப்படுகிறது. இதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிசக்தி உற்பத்தி செய்யப்படுகிறது. ஆதி உபேந்திர திவாரி கூறுகையில்,
“நான் 2022-ஆம் ஆண்டு இங்கிலாந்தின் லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் MBA முடித்தபின், நாட்டின் அதிகரித்து வரும் எரிசக்தி தேவைக்கு தீர்வு காண வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்தத் திட்டத்தைத் தொடங்கினேன். 2024-ஆம் ஆண்டு ஆலை அமைத்து, 2025 செப்டம்பரில் உற்பத்தி தொடங்கியது,” என்றார்.
மேலும், “தற்போது தினசரி 2.4 டன் உற்பத்தி செய்து வருகிறோம். இதை விரைவில் 12 டன் வரை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்,” என்றும் அவர் தெரிவித்தார்.
ஹர்தோய் நகரத்தைச் சேர்ந்த திவாரியின் இந்த முயற்சி, நிலைத்த மற்றும் சுற்றுச்சூழல் நட்பு எரிசக்தி உற்பத்தியில் முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.