சோஷியல் மீடியா நிகழ்காலத்தில் நம் வாழ்வில் அன்றாட அங்கமாகிவிட்டது. சோஷியல் மீடியாக்களில் இல்லாதவர்கள் யாரும் இல்லை என்னும் அளவுக்கு மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைச் செய்திகளைப் பதிவிடவும், என்டெர்டெயின்களை பார்க்கவும், நண்பர்களுடன் தொடர்பில் இருக்கவும், இன்னும் பலவற்றிற்கும் அவற்றைப் பயன்படுத்துகிறார்கள். ஸ்மார்ட்போன்கள், இன்டர்நெட்டின் பயன்பாட்டால் சோஷியல் நெட்வொர்க் தளங்களின் எழுச்சி காரணமாக உலகளாவிய தகவல்தொடர்புக்கான ஒரு புதிய சகாப்தம் உருவாகியுள்ளது.
இந்த டிஜிட்டல் மாற்றம் இந்தியா போன்ற பன்மொழி மற்றும் கலாச்சாரம் கொண்ட நாட்டின் அதன் பன்முகத்தன்மை என்பது ஆரம்பத்தில் புறக்கணிக்கப்பட்டது. பெரும்பாலும் ஆங்கிலத்தை மையமாக கொண்ட சேவையே இந்த சோஷியல் நெட்வொர்க்கிங் தளங்கள் வழங்கி வந்தன. இந்த வெற்றிடத்தைக் கண்டு, இந்தியர்களின் பன்முகத்தன்மையை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட சோஷியல் நெட்வொர்க்கிங் தளம்தான் இந்த யூனிகார்ன் எபிசோடு. அதுதான் நாம் தினமும் பயன்படுத்தும் ‘ஷேர்சாட்’ (ShareChat).
ShareChat founders
ShareChat - மும்மூர்த்திகளின் முயற்சிகள்
சில வருடங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்கள் என்றால், ஃபேஸ்புக், ட்விட்டர் பின்னர் இன்ஸ்டாகிராம் என்றுதான் பலரும் நினைத்து வந்தனர். ஆனால், அந்த எண்ணம் இந்த மூவரை தங்களது யோசனையுடன் முயற்சித்துப் பார்ப்பதில் இருந்து தடுக்கவில்லை. ஐஐடி கான்பூரில் ஒன்றாக படித்த பானு சிங், அங்குஷ் சச்தேவ் மற்றும் பரீத் அஹ்சன் மூவரும் இணைந்து துவங்கியதுதான் இன்று நகரங்கள் அல்லாத இடங்களில் வாழும் இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைத்தளமான உருவாகியுள்ள ‘ஷேர்சாட்’.
ஷேர்சாட்டிற்கு பெரிய அறிமுகம் தேவையில்லை. வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்று ஒரு சாட்டிங் மற்றும் பொழுதுபோக்கு வலைதளம் தான் இது. இதில், பயனாளர்கள் தங்களது கருத்துகள், அவர்களின் தினசரிப் பதிவுகள் ஆகியவற்றை தங்களது மொழியில் பதிவு செய்து, மேலும் புது நண்பர்களைப் பெறலாம். ஷேர்சாட் பயணத்தை அறிந்துகொள்ளும் முன், அதற்கு வித்திட்ட முந்தைய 17 ஆண்டு பயணத்தை அறிவது அவசியம். மூலகர்த்தாக்களான அங்குஷ் சச்தேவ், பானு சிங் மற்றும் பரீத் அஹ்சன் நண்பர்களின் பயணம் 2012-ம் ஆண்டு ஐஐடி கான்பூரில் தொடங்கியது.
தொழில்நுட்பத்தை அடிப்படியாக கொண்டு படித்த இம்மூர்த்திகளுக்கு இயல்பிலேயே அதன் வழியாக வலைதளங்களை உருவாக்க வேண்டும் என்கிற எண்ணம் இருந்தது. அவர்களின் முதல் தயாரிப்பான ஒரு ரியல் எஸ்டேட் கண்டுபிடிப்பு தளத்தை உருவாக்க வைத்தது. ஆனால், அப்போது ரியல் எஸ்டேட்டுக்கு கான்பூர் சரியான சந்தை அல்ல என்பதை விரைவில் உணர்ந்த இவர்கள், அந்த யோசனையை விரைவாக கைவிட்டு குற்ற புள்ளிவிவரங்களை காட்சிப்படுத்தும் தரவு பகுப்பாய்வு தளத்தை உருவாக்கத் தொடங்கினர்.
இம்முயற்சியும் தோல்வியே. டெல்லி காவல்துறையின் பியூனிலிருந்து கமிஷனர் வரை சென்ற இம்மூவரும் காவல் துறையினரை தங்களின் தயாரிப்பை பயன்படுத்தும்படி கேட்டுப் பார்த்தனர், கெஞ்சிப் பார்த்தனர். ஆனால், எதுவும் வொர்க்அவுட் ஆகவில்லை. இப்படியாக 2015-க்குள் இவர்கள் பரிசோதனை முயற்சியாக செய்தது மட்டுமே 14 ஸ்டார்ட்அப் ஐடியாக்கள். அந்த 14-ம் பரிதாப தோல்வி. இத்தனை தோல்விகளுக்கு மத்தியில் இன்னொரு சங்கடம்.
கடைசி ஆண்டு படிப்பில் இருந்தவர்களுக்கு ஐஐடியில் பிளேஸ்மென்ட் (placement) ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் இந்த மூவருடன் பயின்ற பலரும் உலகின் டாப் கம்பெனிகளில் வேலைகளை பெற்றனர். இந்த மூவரை தவிர. ஐஐடி கான்பூரைச் சேர்ந்த ஒரு பையனுக்கு ஆரக்கிளில் ரூ.2 கோடி மதிப்புள்ள வேலை கிடைக்க, அது செய்திகளிலும் இடம்பெற்றது. இந்தச் செய்தி மூவரின் பெற்றோர்களையும் எட்டியது.
ஷேர்சாட் (ShareChat) ஐடியா
தங்கள் மகன்களுக்கு ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் அதிக சம்பளத்தில் வேலை கிடைக்கும், என நினைத்த பெற்றோர்களுக்கு மூவரும் கொடுத்த பதில் சொந்த ஸ்டார்ட்அப் மட்டுமே லட்சியம். 14 தோல்விகளுக்கு பிறகும் தங்களின் லட்சிய பாதையை அடைவது என மிக தீர்க்கமாக முடிவெடுத்து அதனை பெற்றோர்களிடமும் தைரியமாக சொன்ன மூவரும் கான்பூரில் இருந்து மும்பைக்கு இடம்பெயர்ந்தனர். இந்தியாவில் இருந்தே ஒரு சக்திவாய்ந்த தொழில்நுட்ப நிறுவனத்தை உருவாக்க வேண்டும் என்ற கனவே இந்த தைரியத்துக்கான முதல்படி.
மும்பை மாநகரம் அவர்களுக்கான வழியை ஏற்படுத்தி கொடுத்தது. அதுதான் ஷேர்சாட் ஐடியா. யுவர்ஸ்டோரியின் பியூச்சர் ஆப் வர்க் நிகழ்வில், அங்குஷ் தங்களின் 14 முயற்சிகள் தோல்வியுற்ற பிறகு எவ்வாறு ஷேர்சாட் யோசனை தங்களுக்கு வந்தது என்பதை ஒருமுறை வெளிப்படுத்தினார். 2014-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், அங்குஷ் மற்றும் பானு தங்களின் 13வது திட்டத்தை செயல்படுத்தத் துவங்கினர். ஒபினியோ என்னும் விவாதம் செய்யும் தளம் அது. ஃபேஸ்புக்கில் இருந்து ஒபினியோ தளத்திற்கு மக்களை எவ்வாறு அழைத்து வருவது என்பதை அறிய அங்குஷ், ஃபேஸ்புக்கில் நுழைந்தார். அப்போது நடந்ததை அவரே இவ்வாறாக விவரித்தார்...
“சச்சின் டெண்டுல்கர் ஃபேன் கிளப் என்ற ஒரு பக்கத்தை பார்த்தேன். அந்தப் பக்கத்தில் ஓர் அறிக்கை இருந்ததை கவனித்தேன். ‘சச்சின் வாட்ஸ் அப்’ குழுவில் நீங்களும் இணைய விரும்பினால், உங்கள் தொலைபேசி எண்ணை இங்கு பதிவிடவும் என்பதே அது. அந்த பதிவிற்கு 5,00,000 லைக்குகளும், 50,000 கமெண்டுகளும் இருந்தன. அந்த நேரத்தில், எனக்கு ஆச்சர்யத்தில் ஆழ்த்திய விஷயம், மக்கள் அவர்கள் தொலைபேசி எண்களை அங்கு பதிவிட்டதுதான். இவர்கள் யார், எதற்காக இதைச் செய்கின்றனர் என்ற கேள்வி என்னுள் எழுந்தது. அதன் பின்னர், ஆர்வமிகுதியில், அங்கிருந்து 1,000 தொலைபேசி எண்களை எடுத்து ஒரு குழுவிற்கு 100 பேர் என்ற கணக்கில் 10 வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்கினேன். இந்தக் குழுக்கள் அனைத்தும் சச்சினை மையமாகக் கொண்டவை,” என்கிறார் அங்குஷ்.
பின்னர், மதிய உணவிற்கு சென்றுவிட, திரும்பி வந்து பார்க்கையில் அங்குஷ் தொலைபேசி முழுவதும் நோட்டிபிக்கேஷன்களால் நிறைந்திருந்தது. அவர் உருவாக்கிய 10 குழுவில், குழுவுக்கு 100 என நோட்டிபிக்கேஷன்கள் வந்திருந்தன. மக்கள் அவரவர் மொழிகளில் சச்சின் பற்றிய தரவுகளை அனுப்பி இருந்தனர். அதாவது, இந்தியாவில் ஆங்கிலம் அல்லாத மொழிகளில் உள்ளடக்கத்திற்கு அதிக தேவை இருப்பதை இக்குழு உணர்ந்த தருணம் அது. அந்தத் தருணத்தில் உதயமானது தான் ஷேர்சாட் யோசனை.
ஷேர்சாட் வளர்ந்த கதை
2015ல் அதிகார்பூர்வமாக வெளியானது ஷேர்சாட். முதன்முதலாக கட்டமைக்கப்பட்ட ஷேர்சாட் ஒரு சாதாரண சாட் பாட்டாக மட்டுமே இருந்தது. அதில், நகைச்சுவை, வால்பேப்பர்கள் போன்றவற்றை அதன் பயனாளர்கள் பெறலாம். பயனாளர்கள் தங்களுக்கு ஒரு வால்பேப்பர் வேண்டும் என நினைத்தால், அதனை ஒரு கோரிக்கையாக சாட்பாட்டிடம் சமர்ப்பிக்கவேண்டும். அது அதனை அவர்களுக்கு அனுப்பிவைக்கும். இந்த சாட்பாட்டு’களில் சில மிகவும் கடினமானவையாக இருந்தன. அதில் ஒன்று பயனாளர்களுக்கு வேலைத் தேடி தர முயன்றது. எனவே, பயனாளர்கள் தங்களைப் பற்றிய தனித்தகவல்களை அதனிடம் கொடுக்கவேண்டும்.
ஆனால், யாருக்கும் வேலையோ அல்லது சேவைகளோ தேவைப்படவில்லை. அனைவருக்கும் ரிங்க்டோன்கள், வால்பேப்பர்கள், நகைச்சுவை மற்றும் வீடியோதான் தேவைப்பட்டது. முதலில் ஆங்கில மொழியை ஒரு தேர்வாக ஷேர்சாட் கொடுத்திருந்தது. ஆனால், தங்களுக்கு சரிவர புரியாவிட்டாலும், 80% பயனர்கள் அந்த மொழியை தேர்வு செய்தனர்.
“மக்கள் மனதில் ஒருவித நம்பிக்கையின்மை இருந்தது. இதற்கு முன்பு இணையத்தில் அவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். ஒரு செயலி ஆங்கிலத்தில் இருந்தால் அது தரம் வாய்ந்தது என்று எண்ணுகின்றனர். அதன் காரணமாக, அவர்களுக்கான மொழி தேர்வு இருந்தும் தவறான தேர்வை அவர்கள் செய்தனர்,” என்கிறார் அங்குஷ்.
இது மாதிரியான கிடைத்த ஆய்வுகளை மனதில் வைத்து, ஷேர்சாட் தங்கள் மூன்றாவது கட்ட செயலியை வெளியிட்டனர். இம்முறை அதில் ஆங்கிலம் என்ற தேர்வு இல்லை.
முதல் வருடத்தில் ஷேர்சாட்-டின் முழு கவனமும், பகிர்தலில் இருந்தது. ஷேர்சாட் கொடுக்கும் எந்த ஒரு விஷயமும் வாட்ஸ் அப்பில் பகிரப்படும் பொழுது அதில் எங்கள் அடையாளம் மற்றும் பெயர் இருக்கும்படி செய்தனர். அவ்வாறு அந்த அடையாளத்தை மக்கள் க்ளிக் செய்யும் பொழுது, ஷேர்சாட் செயலியை தரவிறக்கம் செய்யும் பக்கம் வரும்படி செய்தார்கள். விளம்பரம் செய்ய பணம் இல்லாததால் மக்களே இதனை தரவிறக்கம் செய்யும்படி பதிவுகள் ஷேர்சாட் லோகோவை இடம்பெறச் செய்து தங்களை தேடி வரவழைத்தனர்.
ஷேர்சாட் தொடங்கிய காலம், இணைய வேகம் மிகக் குறைவாக இருந்த காலம். 2G, 3G சேவைகள் தான் இருந்தன. இந்தச் சவாலை எதிர்கொள்ள அவர்கள் ஒரு நுட்பமான முடிவை எடுத்தனர். மிகக் குறைந்த வேகமான இணைய இணைப்பில் கூட, உள்ளடக்கத்தை உடனடியாகப் பார்க்கும்படி செய்தனர்.
ஜியோ இந்தியாவில் துவங்கும் முன்பு, ஷேர்சாட்டில் பகிரப்பட்ட பல விஷயங்கள் எழுத்துகளை மையமாகக் கொண்டவையே. வெறும் 20% மட்டுமே புகைப்படங்கள், ஒளி மற்றும் ஒலி தொடர்பானவை பகிரப்பட்டு வந்தன. ஆனால் ஜியோ காலம் துவங்கிய பின்பு அந்தக் கணக்கு தலைகீழாக மாறியுள்ளது. இப்பொழுது பகிரப்படுவது முழுவதும் புகைப்படங்கள் மற்றும் காணொலிகளே.
எல்லாம் சரி, வருவாய் முதலீடு இருந்தால்தானே கம்பெனியை டெவலப் செய்ய முடியும். முதல் 4 வருடங்களுக்கு, மூன்று பேரும் வருவாயைப் பற்றி யோசிக்கவே இல்லை. தங்கள் பயனர்களை அதிகரிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தினர். பயனர்கள் வர, வர முதலீடுகளும் வந்தன.
ஷேர்சாட்-டின் தாய் நிறுவனம் மொஹல்லா டெக், கூகுள், டைம்ஸ் குழுமம் மற்றும் டெமாசேக் ஹோல்டிங்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களிடம் இருந்து 300 மில்லியன் டாலர் அளவு நிதி திரட்டியது. இது தவிர ஷுன்வெய் கேபிடல், லைட்ஸ்பீட் வென்ச்சர் பார்ட்னர்ஸ், எஸ்.ஏ.ஐ.எப் கேபிடல், இந்தியா கோஷண்ட், மார்னிங்சைடு வென்சர் கேபிடல் ஆகிய நிறுவனங்களும் முதலீடு செய்த நிறுவனங்களில் குறிப்பிடத்தக்கது. ஜூன் 2022 வாக்கில், ஷேர்சாட் நிறுவனத்தின் மதிப்பு ரூ.40,000 கோடியை தாண்டி இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் முதன்மை சக்தியாக வளர்ந்தது.
ஏற்றமும் இறக்கமும்
கொரோனா சமயத்துக்கு முன்னதாக இந்தியாவில் கொடிகட்டி பறந்த செயலி டிக்டாக். சீன நிறுவனமான இதனை இந்திய அரசு தடை செய்ய 30 மணி நேரத்தில் ஷேர்சாட்-ன் தாய் நிறுவனமான மொஹல்லா டெக் உருவாக்கி வெளியிட்ட ஷார்ட் வீடியோ தள செயலி தான் ‘மோஜ்’ (Moj). டிக்டாக்கிற்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட மோஜ், மக்கள் மத்தியில் ரீச் ஆனது. ரீச், 60 மில்லியன் பயனாளிகள் என ஷேர்சாட் வாய் பேச்சில் தீவிரமாக இருந்தாலும் வருவாய் திரட்டுவதில் சுணக்கம் காட்டியது. மொஹல்லா டெக் 2019 நிதியாண்டில் ரூ.415 கோடி நஷ்டம் அடைந்தது.
2019-ல் தொடங்கிய சரிவு இன்னும் மீள முடியாமல் இருக்கிறது. எனினும், கடந்த இரண்டு வருடங்களாக ரூ.700 கோடிக்கும் மேல் வருவாயை பெற்று வருகிறது. என்றாலும் செலவீனங்கள் அதிகரிப்பதால் தொடர்ந்து நஷ்டத்திலேயே இயங்கி வருகிறது. இந்த நஷ்டம் காரணமாக ஒருகட்டத்தில் ஷேர்சாட் தனது ஊழியர்களில் 500 பேரை பணி நீக்கம் செய்தது.
இப்படி ஏற்ற இறக்கமாக சென்றாலும் இந்தியாவில் இருந்தே ஒரு சக்திவாய்ந்த தொழில்நுட்ப நிறுவனத்தை உருவாக்க வேண்டும் என்ற அந்த 3 இளைஞர்களின் தீராகனவுடன் வலுவான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற ஜாம்பவான்களுடன் போட்டிபோட்டுக் கொண்டு ஷேர்சாட் இன்னும் நம்பிக்கையோடு பயணித்து வருகிறது. இந்த வலைதளங்கள் வழங்காத 22 இந்திய மொழிகளில் பிரத்யேக உள்ளடக்க சேவைகளை வழங்கி புது புது ஐடியாக்களுடன் ஷேர்சாட் பயணித்து வருகிறது நம்பிக்கையுடன்.
வெற்றிக்கு ஒவ்வொருவரும் போராட வேண்டும். கடினமாக உழைத்தாலும் பல சமயங்களில் தோல்வியை சந்திக்கிறோம். ஆனால், விட்டுவிடாமல் முன்னேறிக்கொண்டே இருக்க வேண்டும். வாழ்க்கையில் தோல்வி அடைவது என்பது அனைவருக்கும் கடினமான ஒன்றுதான். தோல்வியே வெற்றிக்கு முதற்படி என்பதை போல், தோல்வி அடைந்தும் மீண்டு எழுந்து போராடுவதற்கு 14 தோல்விகளுக்கு பின் வெற்றி கண்ட இம்மூர்த்திகளுக்கு சொல்லித் தர வேண்டுமா என்ன?
மீண்டும் இவர்கள் மீண்டு வருவார்கள் என்பது அவர்களின் போராட்ட கதையே சான்று.